‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 6

பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 3

அணியறை விட்டு கர்ணன் நடக்கத்தொடங்கியதும் சிவதர் அவன் பின்னால் சென்றபடி “தாங்கள் இத்தருணத்தில் இக்கோலத்தில் மூத்த அரசியைப் பார்ப்பது…” என்று நீட்டினார். “ஏன்?” என்றான் கர்ணன். “அரசணிக்கோலம் அவர்களை இன்னும் நிலையழியச் செய்யும்” என்றார். கர்ணன் “ஒற்றை ஆடை உடுத்து தோல் கச்சை அணிந்து தேரோட்டி என அவள் முன் சென்றால் உளம் மகிழ்வாளா?” என்றான். சிவதர் ஒரு கணம் தயங்கியபின் “ஆம், அவ்வண்ணமே எண்ணுகின்றேன்” என்றார்.

கர்ணன் நின்று “நானும் அதை அறிவேன்” என்றான். மீசையை நீவியபடி “சிவதரே, கோருபவர் அனைவருக்கும் கொடுக்க சித்தமாக உள்ளேன். ஆனால் ஆணையிடுபவர்க்கு அடிபணிவதில்லை என்றிருக்கிறேன்” என்றான். “இது ஆணையல்ல, மன்றாட்டு. அவர்களின் கண்களில் கண்ணீரைப் பார்த்தேன்” என்றார் சிவதர். “ஆம், அவளுள் எழுகையில் அது மன்றாட்டு. அவளுள் எழும் பிறிதொன்றின் ஆணை அது” என்றான் கர்ணன். பின்பு சில கணங்கள் தயங்கி நின்று சொல் தேர்ந்து “தோற்பதில்லை என்ற ஒற்றைச் சொல்லால் என்னை தொகுத்துக்கொண்டிருக்கிறேன் சிவதரே” என்றான்.

சிவதர் “நான் எண்ணியதை சொன்னேன்…” என்றார். “கொற்றவைக்கொடை நிகழட்டும். நாளை சென்று முதலரசியைப் பார்ப்பதே முறை. அவர்கள் சினந்து அடங்கியபின் சொல்லுக்கு செவிதிறக்கக்கூடும்.” கர்ணன் தயங்கியபின் “சற்று யவனமது அருந்த விரும்புகிறேன்” என்றான். “தாங்கள் இன்று மாலை அவை புக வேண்டியுள்ளது” என்றார் சிவதர். “மிகையாக அல்ல. இந்த ஒரு சிறு தருணத்தை கடப்பதற்காக மட்டும்” என்றான். சிவதர் ஒன்றும் சொல்லவில்லை. அவர் முகத்தில் உதடுகளுக்கு இருபக்கமும் ஆழமான மடிப்புகள் விழுந்தன.

கர்ணன் திரும்பி தன் தனியறைக்குச் சென்று பீடத்தில் அமர்ந்தான். சிவதர் தொடர்ந்து உள்ளே வந்து அருகே நின்றார். “யவனமது” என்றான் கர்ணன். “அரசே, இத்தருணத்தை தவிர்ப்பதே உகந்த வழி. தங்கள் உள்ளத்தை புண்படுத்தும் சொற்களை அவர் சொல்லக்கூடும்” என்றார் சிவதர். “ஆம். அதை நான் அறிவேன்” என்று கர்ணன் சொன்னான். சிவதர் மேலும் தயங்க கர்ணன் விழிசரித்து அசையாமல் அமர்ந்திருக்க சில கணங்கள் எடை கொண்டு குளிர்ந்து கடந்து சென்றன. பின்பு சிவதர் உடல் கலைந்து பெருமூச்சுடன் திரும்பிச் சென்று பொற்கிண்ணத்தில் யவனமதுவை எடுத்து வந்து அவனருகே வைத்தார்.

அதை கையில் ஏந்தி சில கணங்கள் அதை நோக்கிக் கொண்டிருந்தான். பின்பு விழி தூக்கி “செம்மது! குருதியைப்போல” என்றான். அவர் “ஆம்” என்றார். “நான் நஞ்சருந்துவதுபோல் மதுகுடிப்பதாக சூதன் ஒருவன் களியாடினான்” என்றபடி அதை மூன்று மிடறுகளாக குடித்துவிட்டு இதழ்களை ஒற்றியபின் ஏப்பம் விட்டான். கைகளை மார்பின் மேல் கட்டி தலை குனிந்து சில கணங்கள் அமர்ந்திருந்தான். அவன் குழற்சுருள் ஒன்று நெற்றியில் நிழலுடன் ஆடியது. தலை நிமிர்ந்து “விருஷாலி கர்ணனின் அரசி அல்ல. சூதனாகிய வசுஷேணனின் துணைவி” என்றான். கோப்பையை எடுத்து அதில் மது எஞ்சியிருக்கிறதா என்று நோக்கியபின் கவிழ்த்து வைத்தான். “எளிய தேரோட்டி மகள். இவளுக்காக ஏனித்தனை எண்ணம் கொண்டிருக்கிறேன்?”

சிவதர் அவ்வினா தன்னுடன் அல்ல என்று அசையாது நின்றார். “ஏனென்றால் அவளது வலியையும் நானறிவேன். அவள் ராதை. உருமாறி என்னைத் தொடரும் முலைப்பால். இவள்…” கைசுட்டி மிக அருகே என எவரையோ குறித்து பின் தயங்கி அந்தக் கோப்பையை எடுத்து நோக்கி நீக்கிவைத்து “இவள் வேறு. இவள் தருக்கி நிமிர்ந்த அரசி… இவளும் என்னை தொடர்பவள். கருவறைக்குருதி” என்றபின் தொடைகளில் தட்டியபடி எழுந்து “எனக்கு வேறு வழியில்லை” என்றான். “நான் அவளிடம் சென்றாக வேண்டும். அது என் கடன் சிவதரே.”

சம்பாபுரியின் மைய அரண்மனைக்கு தெற்காக அமைந்திருந்தது விருஷாலியின் மாளிகை. முன்பு அது அரசர் சத்யகர்மரின் பிறகுலத்து மனைவியருக்கு உரியதாக இருந்தது. அதன் கீழ்த்தளங்களில் சேடியரும் மேலே விருஷாலியும் அவளது செவிலியரும் குடியிருந்தனர். மைய அரண்மனையிலிருந்து மூன்று முறை திரும்பி அம்மாளிகையை அடைந்த நீண்ட இடைநாழி மரப்பட்டை கூரையிடப்பட்டிருந்தது. கர்ணன் அதில் நடந்தபோது பின்உச்சி வேளையின் சாய்ந்த வெயிலில் தூண் நிழல்கள் சவுக்குகள் போல அவன் உடலை அறைந்து வளைந்து பதிந்து விலகின.

அவனுக்குப் பின்னால் நடந்த சிவதர் மெல்லிய குரலில் “மூன்று முறை தங்கள் வருகையை அறிவித்து ஏவலரை அனுப்பினேன்” என்றபின் ஒரு சில சொற்களுக்கு தயங்கி “ஒவ்வொரு முறையும் மேலும் சினம் கொள்கிறார்கள்” என்றார். கைகளை பின்னுக்கு கட்டி தலையைக் குனித்து முதுகில் பேரெடை ஒன்றை சுமந்தவன் போல கர்ணன் நடந்தான். மரப்படிகளில் குறடுகள் ஒலிக்க ஏறி இடைநாழியின் இறுதித் திருப்பத்தை அடைந்தபின் சிவதரை நோக்கி திரும்பி “நன்று” என்று புன்னகைத்தான். அவர் தலை வணங்கி “அவ்வண்ணமே” என்ற பின் “தங்கள் ஆணை வரும்போது அவை கூட ஒருங்கு செய்வேன்” என்றார். தலையசைத்து கர்ணன் நடந்து விருஷாலியின் மாளிகையை அணுகினான்.

இரு முன்கால்களையும் ஊன்றி அமர்ந்திருக்கும் புலி போல் தெரிந்தது மாளிகை. புலிக்கால்களெனும் முகப்புத் தூண்களுக்கு நடுவே பதினெட்டு படிகள் ஏறி முன்னம்பலத்தை அடைந்தன. அப்பால் திறந்திருந்த பெருவாயில்கதவில் சீனத்து இளஞ்செந்நிற பட்டுத் திரைச்சீலைகள் காற்றில் ஆடின. இரண்டடுக்கு மாளிகையின் முகப்பு உப்பரிகையில் புலிவிழிகள் போல் இரு சாளரங்கள் சுடர்விட்டன. திறந்த வாயென ஒரு வாயில் செந்நிறத்திரைச்சீலையுடன் திறந்திருந்தது. மேலே ஏறிச்செல்வதற்கு முன்னம்பலத்தின் இருபக்கமும் வளைந்து மடிந்து ஏறிய படிகள் இருந்தன.

மாளிகையை அணுகிய கர்ணன் படிகளில் சற்றே ஓசையிட காலெடுத்து வைத்து ஏறினான். தொன்மையான முகப்புத் தூண்கள் யானைக்கால்கள் என கருமைகொண்டிருந்தன. சில நாட்களுக்கு முன் எதற்காகவோ கட்டப்பட்ட மாவிலைத் தோரணம் பழுத்து நுனி காய்ந்து சுருண்டு தொங்கி காற்றில் ஆடியது. மரத்தரையை அன்றுகாலையும் தேன்மெழுகாலும் மரப்பிசினாலும் மெழுகி பழகிய முரசுத்தோல் என பளபளக்கச் செய்திருந்தனர்.

அவன் வருவதை நெடுந்தொலைவிலேயே மாளிகையின் விழிகள் பார்த்துவிட்டன என்று அவன் அறிந்தான். ஆயினும் முன்னம்பலத்தில் அவனை எவரும் வரவேற்கவில்லை. அரைவட்ட அம்பலத்தின் நடுவே இடையில் கைகளை வைத்தபடி சில கணங்கள் நின்றுவிட்டு வலப்பக்கமாக திரும்பி தொன்மையான தடித்த பலகைகளாலான படிகளில் குறடுகள் ஓசையிட்டு அரண்மனையின் அறைகளுக்குள் எதிரொலிகளை நிரப்ப சீராக அடிவைத்து மேலேறிச் சென்றான்.

அரைவட்ட இடைநாழி போல அறைகளை இணைத்துச்சென்ற உப்பரிகையில் திறந்திருந்த ஏழு சாளரங்களிலும் இளஞ்செந்நிறத் திரைச்சீலைகள் காற்றில் நிலையழிந்து கொண்டிருந்தன. மேலே வடமொன்றில் தொங்கவிடப்பட்டிருந்த பட்டு நூலால் பின்னப்பட்ட சீனத்து மலர்க்கொத்து காற்றில் குலுங்கி மெல்ல சுழன்றது. எங்கோ தொங்கவிடப்பட்ட சிறு வெண்கல மணிகள் சிணுங்கிக் கொண்டிருந்தன. மாளிகை முற்றிலும் அமைதியிலிருந்தது.

அவன் உப்பரிகையை ஒட்டிய இடைநாழியில் நடந்து விருஷாலியின் அறை நோக்கி சென்றபோது உருண்ட பெருந்தூணுக்கு அப்பால் பாதி உடல் மறைத்து நின்றிருந்த முதிய செவிலி தலைவணங்கி “அங்க மன்னரை வாழ்த்துகிறேன்” என்றாள். கர்ணன் நின்று தலையசைத்தான். அவள் மேலும் குரல்தாழ்த்தி “அரசி இன்று உடல் நலமின்றி படுத்திருக்கிறார்” என்றாள். கர்ணன் விழிதூக்கியதும் “உடல் கொதிக்கிறது. தலை நோவு மிகுந்துள்ளது. விழிதிறந்து ஒளி நோக்க இயலவில்லை. உள்ளறை இருளில் முகம் புதைத்து படுத்திருக்கிறார்கள். இன்று எவரையும் சந்திக்க விழைவில்லை என்று அறிவித்தார்கள்” என்றாள்.

“நான் பார்க்கிறேன்” என்றான் கர்ணன். அவள் மேலும் தாழ்ந்த குரலில் “எவரையும் பார்க்க விழையவில்லை என்று சொன்னார்கள்” என்றாள். “சரி” என்றபடி கர்ணன் நடந்தான். அவள் பின்னால் சிற்றடி வைத்து ஓடிவந்து “அரசே, அரசி தங்களைப் பார்ப்பதற்கு சற்றும் விருப்பமில்லை என்றார்கள்” என்றாள். கர்ணன் “இது புதிதல்ல. அவளிடம் நான் பேசிக் கொள்கிறேன்” என்றபடி விருஷாலியின் அறை நோக்கி சென்றான். மூச்சுப்பதைப்புடன் ஓடி வந்த செவிலி “தங்களை உள்ளே விடக்கூடாதென்று எனக்கு ஆணை” என்றாள்.

கர்ணன் இடையில் கைவைத்து நின்று அவள் விழிகளை நோக்கி “ஆணையா?” என்றான். அவள் விழிதாழ்த்தி “ஆம்” என்றாள். “அரசியின் சொற்களை திரும்பச் சொல்” என்றான். “அவர் நான் ஓய்வெடுக்கிறேன், இத்தருணத்தில் அரசரோ பிற எவருமோ என்னை சந்திப்பதை நான் விழையவில்லை, எவர் வரினும் என் அறை வாயிலுக்கு அப்பால் நிறுத்து, இது என் ஆணை என்றார் அரசே” என்றாள். பெருமூச்சுடன் “நன்று” என்றான் கர்ணன். “அங்க நாட்டு அரசியின் ஆணை எவரையும் கட்டுப்படுத்துவதே. அவ்வண்ணமே ஆகட்டும். அரசியிடம் நான் வந்துள்ளேன் அவரது மறு ஆணைக்காக காத்திருக்கிறேன் என்று உரை” என்றபின் திரும்பி நடந்து இடைநாழியின் வலப்பக்கமாக திறந்திருந்த சிற்றறைக்குள் சென்று அங்கிருந்த சிறுபீடமொன்றில் அமர்ந்தான்.

அவனுடைய பேருடலுக்கு அது மிகச்சிறிதாக இருந்தது. அதை இழுத்து அருகிருந்த சாளரத்தின் அருகே போட்டு வலத்தோளை சாளரத்தில் சாய்த்து கையை சாளரத்தின் வழியாக வெளியே நீட்டி விழிகளை அப்பால் ஒளிகொண்டிருந்த வானை நோக்கியபடி அமைத்து இருகால்களையும் நீட்டி அமர்ந்தான். அவனைத் தொடர்ந்துவந்த செவிலி தவிக்கும் கைகளுடன் அருகே நின்று அவனை நோக்கினாள். திரும்பிச்செல்வதா நிற்பதா என அவள் உடல் ஒவ்வொரு கணமும் ஊசலாடியது.

6

சற்று நேரம் கழித்தே அவன் அவள் நிற்பதை உணர்ந்தான். திரும்பி “நான் இங்கு அமர்ந்திருக்கலாகாது என்று அரசி ஆணையிடவில்லையல்லவா?” என்றான். “ஆம்” என்றாள். “அப்படியென்றால் நீ அரசியின் ஆணையை மீறவில்லை. நானும் அதை தலைகொண்டிருக்கிறேன். பிறகென்ன? நான் இங்கிருப்பதை அரசியிடம் அறிவி” என்றான். “அவ்வண்ணமே” என்று அவள் புறம் காட்டாது விலகினாள். பெருமூச்சுடன் அவன் தன் உடலை எளிதாக்கிக் கொண்டான்.

மது அருந்திவிட்டு வந்தது நன்று என்று தோன்றியது. மது காலத்தை நெகிழச்செய்கிறது. எண்ணங்களின் இடையே உயவுப்பொருளாகிறது. இடைநாழியில் நடக்கையிலேயே அவன் குருதிப்பாதைகளில் குமிழிகள் நுரைத்தன. அவன் நெஞ்சின் தாளம் தளர்வுற்றது. உளச்சொற்கள் அந்த சீர்தாளத்தை தாங்களும் அடைந்தன. விரிந்த வெளியின் செம்மண் பாதையில் நடக்கும் எடைமிக்க எருமைகள் போல எண்ணங்கள் மெல்ல காலடி எடுத்து வைத்து சென்றன. துயில் வந்து விழிகளை தளர்வுறசெய்வது போல் உணர்ந்தான். உதடுகள் மெல்ல தளர்ந்து வாய் திறக்க மடியிலிருந்த இடது கை சரிந்து விழுந்து பீடத்தை உரசி தொங்கத்தொடங்கியது.

விழிப்புக்கும் ஆழ்துயிலுக்கும் அப்பால் எங்கோ இருப்பின் நெடுஞ்சரடின் நுனி நெளிந்து தவித்தது. அங்கிருக்கிறோம் என்ற உணர்விருந்தது. ஆனால் உள்ளம் மறைந்த தன்னிலை ஒரேசமயம் எங்கெங்கோ இருந்தது. அஸ்தினபுரியில், காம்பில்யத்தில், கோதாவரியின் பெருக்கின் கரையில், அங்க நாட்டில்… குளம்படி ஓசை கேட்டு திரும்பி நோக்கினான். கரிய பளபளப்புடன் புரவி ஒன்று அறைவாயிலைக் கடந்து உள்ளே வந்தது. புரவியா? படிகளில் அது எப்படி ஏறியது? அந்த எண்ணம் ஒரு பக்கம் எழுந்தபோதும் மறுபக்கம் அவன் இயல்பாக அதை நோக்கினான். சீராக வெட்டப்பட்ட குஞ்சி முடிகள் வலப்பக்கமாக சரிந்து கழுத்தசைவில் மெல்ல உலைந்தன. தோளிலும் விலாவிலும் முடிப்பரப்பு மெழுகிடப்பட்டது போல் மின்னியது.

புரவியின் கருவைர விழிகளை அணுக்கமென அவன் கண்டான். “எப்படி மேலே வந்தாய்?” என்று அவன் கேட்டான். புரவி பெருமூச்சுடன் தலை குனிந்து உடலை மெல்ல ஒசித்து ஒதுங்கியது. “மூடா” என்று அன்னையின் குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினான். ராதை உள்ளே வந்து புரவியின் முதுகில் அறைந்தாள். “அறிவுடையவன் செயலா இது? நீ அரசன். மாளிகைக்கு மேல் புரவி வந்தது என்று தெரிந்தால் உன்னை என்னவென்று எண்ணுவார்கள். அரசனுக்குரியதை செய். விளையாட்டுச் சிறுவன் என்று இன்னமும் இருக்கிறாயா?” என்றபடி திரும்பி ”யாரடி அங்கே? இதை இழுத்துச் செல்லுங்கள்” என்றாள்.

“எப்படி வந்தது மேலே?” என்று அவன் கேட்டான். “என்னை கேட்கிறாயா? மூடா! மதுவருந்தி சித்தம் மழுங்கிவிட்டதா உனக்கு?” முதியசெவிலியும் இன்னொரு இளம்சேடியும் ஓடி வந்தனர். முதியவள் “நாங்கள் தடுத்தோம் அன்னையே. எங்களை மீறி மேலே வந்துவிட்டது” என்றாள். “இழுத்துச் செல்லுங்கள்” என்றபடி ராதை அதன் தோளிலும் கழுத்திலும் கைகளால் அறைந்தாள். அவர்கள் அதன் கழுத்தைப்பற்றி உந்தி வெளியே கொண்டு சென்றனர்.

அவர்கள் மறைந்ததும் ராதை ஒரு முறை எட்டிப்பார்த்துவிட்டு கதவை மூடி அவனருகே வந்து “இங்கு ஏன் அமர்ந்திருக்கிறாய்? நீ என்ன அன்னையைத் தேடும் சிறுவனா? அங்க நாட்டுக்கு அரசன். பாரதவர்ஷத்தின் பெருந்திறல் வீரன். சென்று அவளை எழுப்பு. ஒரு முறை இவ்வண்ணம் இங்கு அமர்ந்திருந்தால் எப்போதும் இவள் வாயிலில் நீ அமர்ந்திருக்க நேரும். இதை இன்றல்ல, என்று இவள் நம் இல்லத்துள் நுழைந்தாளோ அன்றே சொன்னேன்” என்றாள். கர்ணன் ஏதோ சொல்வதற்காக வாய் திறந்தான். நாக்கு சோர்ந்து பற்களுக்குள் கிடந்தது. அவனுள் எழுந்த சொல் அதை உந்த, இரையுண்ட மலைப்பாம்பு போல் நெளிந்து மீண்டும் விழுந்தது.

அவன் தோளைப்பற்றி உலுக்கி “எழு மூடா…” என்றாள் ராதை பல்லைக்கடித்தபடி. எடை கொண்டு சரிந்த விழியிமைகளைத் தூக்கி “அவள் என்னிடம் ஆணையிட்டாள்” என்றான். “அவள் யார் உன்னிடம் ஆணையிட? நீ அங்க நாட்டுக்கு அரசன். அவளோ எளிய தேரோட்டி மகள்” என்றாள். “அன்னையே, அதை நீங்களும் அறிவீர்களல்லவா?” என்றான் கர்ணன். ராதை ஒரு கணம் தணிந்து “அறிவதற்கென்ன?” என்றாள். “தந்தையும் அதை நன்கு அறிந்திருந்தார்” என்றான். “ஆம்” என்றாள் அவள். “அவளை நான் கைபிடிக்கையிலேயே அங்க நாட்டுக்கு மணிமுடி சூடியிருந்தேன்” என்றான் கர்ணன்.

ராதை சினத்துடன் விலகி “என்ன சொல்கிறாய்? உன்னை இவ்விழிவுக்கு நான் செலுத்தினேன் என்கிறாயா? உன் மேல் இவளை சுமத்தினேன் என்று குற்றம் சாட்டுகிறாயா? நினைவு கொள். இவளை மணக்க வேண்டுமென்று நான் ஒரு சொல்லும் சொன்னதில்லை” என்றாள். “சொல்லவில்லை, அன்னையே. சொற்களால் சொல்லவில்லை” என்றான் கர்ணன். பின்பு “நானே இவளை மணந்தேன். ஏனென்றால் நான் சூதனென்பதால். பருவம் வந்த விலங்கு துணைவிலங்கை தன் இனத்திலேயே தேடுவதுபோல… நானேதான் தேடிக்கொண்டேன்” என்றான்.

ராதை நினைத்திருக்காத கணத்தில் உளம் முறிந்து மெல்ல பின்னடைந்து தரையில் கால் மடித்து அமர்ந்து சுவரில் சாய்ந்தாள். கண்களில் வழிந்த நீருடன் “ஆம், நான் சொல்லவில்லை. ஆனால் நான்தான் உன்னை இவ்விழிவுக்கு தள்ளினேன். இவள் கைபிடிக்கும்படி உன்னை செலுத்தினேன்” என்றாள். கர்ணன் “அன்னையே” என்று சொல்லி கைதூக்க முயன்றான். ஆனால் அவன் உயிருக்குத் தொடர்பற்றது போல் தொங்கியது அது.

ராதை பெரும் விம்மல்களுடன் அழத்தொடங்கினாள். அவன் அவள் அழுவதை வெறுமனே நோக்கி நின்றான். “நான் பழி சூழ்ந்தவள். நெஞ்ச மிடிமையை வெல்ல முடியாத பேதை. இழிந்தவள். இழிபிறப்பென்பது எதனாலும் கடக்க முடியாத ஒன்றென்று அறிந்து கொண்டேன். என் பழி! என் பழி! என் பழி!” என்று கைகளால் தலையில் அறைந்து கொண்டாள் அவள்.

“அன்னையே…” என்றான் கர்ணன். கால்களை உந்தி “அன்னையே பொறுங்கள்” என்று எழுந்தான். அவன் அமர்ந்திருந்த பீடம் ஓசையுடன் சரிந்து தரையில் விழுந்தது. அதை ஒரு கணம் திரும்பி நோக்கிவிட்டு பார்த்தபோது அச்சிற்றறை ஒழிந்து கிடந்தது. வாயில் திறந்திருக்க திரைச்சீலை நெளிந்து கொண்டிருந்தது. ஓசை கேட்டு வந்து எட்டிப்பார்த்த செவிலி அவன் விழிகளை வினாவுடன் சந்தித்தாள். அவன் குனிந்து பீடத்தை தூக்க முயல அவள் ஓடி வந்து அதை சீர்படுத்தினாள். அவன் மீண்டும் அமரப்போக அவள் “முகப்புக் கூடத்தில் தங்களுக்குகந்த பெரிய பீடங்கள் உள்ளன அரசே” என்றாள்.

அவளை விலகிச் செல்லும்படி கைகாட்டிவிட்டு கர்ணன் அச்சிறு பீடத்திலேயே மீண்டும் தன் உடலை மடித்து சாளரத்தில் சாய்ந்து அமர்ந்தான். அவள் விலகிச் சென்று நுழைவாயிலில் திரும்பியபோது “அருந்துவதற்கு நீர் கொண்டு வா” என்றான். “நீரா?” என்று அவள் கேட்டாள். “மது உள்ளதா?” என்றான். “ஆம்” என்றாள் அவள். “யவனமது, செம்மது” என்றான். “அவ்வண்ணமே” என்று அவள் தலைவணங்கி பின்னகர்ந்தாள். பெருமூச்சுடன் கால்களை நீட்டி கைகளைத் தளர்த்தி மார்பில் கட்டிக் கொண்டான்.

அது கனவென்று அப்போதும் எண்ணத்தோன்றவில்லை. ஒவ்வொன்றும் அத்தனை தெளிவாக இருந்தது. உண்மையில் நனவில்கூட அத்தனை தெளிவு நிகழ்வதில்லை. நனவில் எவரும் ஒவ்வொன்றையும் அத்தனை முழுமையாக நோக்குவதில்லை. நனவில் காட்சிகளும் உணர்வுகளும் எண்ணங்களும் வெவ்வேறென பிரிந்திருப்பதில்லை.

கர்ணன் ராதையின் அழுகையை எண்ணிக்கொண்டான். ஒரு போதும் விருஷாலியைப் பற்றி ராதை அவனிடம் பேசியதில்லை. இயல்பான சில குறிப்புகளுக்கு அப்பால் எதையுமே சொன்னதில்லை. அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதே அரிது. ஏதோ ஓர் அகமூடியால் அவள் விருஷாலியை முழுமையாக தன்னிடமிருந்து அகற்றிவிட்டிருந்தாள்.

அவன் திரும்பி நோக்கியபோது கதவுக்கு அப்பால் செவிலி நின்றிருப்பதை கண்டான். அவளுடைய நிழலைத்தான் புரவி என எண்ணிக்கொண்டானா? சூதப்பெண். அவ்வண்ணம் எண்ணியபோது அவளுக்கும் ராதைக்கும் இடையே பல ஒற்றுமைகள் தெரியத்தொடங்கின. அதேபோன்ற ஒடுங்கிய நீள் முகம். உள்வாங்கிச் சுருங்கிய உதடுகள். கூர்தீட்டி ஒளிகொள்ளச்செய்தபின் எண்ணைபூசி அணையவைத்த வேல்முனைகள் போன்ற கண்கள்.

“அரசி ஏன் சினம்கொண்டிருக்கிறார்கள்?” என்றான். அவள் விழிகள் மாறியபோது உணர்ந்தான் அவளும் ஒரு ராதை என. அவன் உள்ளத்தை அவள் அறிந்துகொண்டுவிட்டாள். “நான் அறியேன்… தங்கள் அணுக்கரின் செய்தி வந்தபோது சினம் கொண்டார்கள்” என்றாள். “இல்லை, காலை முதலே சினம் கொண்டிருந்தார்கள்” என்றான் கர்ணன். “ஏன்?”  அவள் பேசாமல் நின்றாள். “சொல், இது அரசரின் ஆணை அல்ல. உன் மைந்தனின் கேள்வி” என்றான்.

அவள் “அரசே, இன்றுகாலை அரசி வாயுமிழ்ந்தார்கள்” என்றாள். கர்ணன் புரியாமல் “ஏன்?” என்றான். “அவர்கள் கருவுற்றிருக்கிறார்கள்.” கர்ணன் திகைத்து சிலகணங்கள் நோக்கியபின் எழுந்து “மருத்துவர்கள் சொன்னார்களா?” என்றான். “ஆம்… காலையில் மருத்துவச்சிகள் இருவர் வந்து நோக்கினர்.” கர்ணன் “அதை ஏன் உடனே எனக்கு சொல்லவில்லை?” என்றான்.  அவன் உடல் பதறிக்கொண்டிருந்தது. அதுதான் உவகையா? ஆனால் அது அச்சம்போல பதற்றம்போலத்தான் இருந்தது.

“சொல்லவேண்டியதில்லை என்றார்கள் அரசி” என்றாள் செவிலி. கர்ணன் உடலில் ஒவ்வொரு குருதிக்குமிழியாக அமையத் தொடங்கியது. “ஏன்?” என்றான். “அவர்களே சொல்லிவிடுவதாகச் சொன்னார்கள்.” கர்ணன் பெருமூச்சுடன் “அப்படியா?” என்றான். “நிமித்திகரை வரச்சொல்லி ஆளனுப்பினார்கள். நிமித்திகர் வந்து சந்தித்து பேசிக்கொண்டிருந்தார். என்ன பேசினார் என்று தெரியவில்லை.”

“என்ன தெரிந்துகொள்வதற்கிருக்கிறது அதில்?” என்றான் கர்ணன். “மைந்தன் அரசாளுவானா என்று கேட்டிருப்பாள். இல்லை என்று அவர் சொல்லியிருப்பார்.” செவிலி “இல்லை என நினைக்கிறேன்” என்றாள். கர்ணன் புருவம் சுருக்கி நோக்கினான். செவிலி “அவர்கள் என்னிடம் தன் மைந்தனுக்குரிய மணிமுடி இது என்றார்கள். அச்சொற்களைக் கொண்டு நான் உய்த்தறிந்தேன். மைந்தனுக்கு மணிமுடிசூட ஊழ் உள்ளது என்றே நிமித்திகர் சொல்லியிருக்கிறார்” என்றாள்.

“நான் அவரிடம் பேசுகிறேன்” என்றான் கர்ணன். ஆனால் மேலும் எண்ணம்குவிக்க அவனால் இயலவில்லை. மேலும் மதுவருந்தவேண்டும் என்றே தோன்றியது. “நான் அவளை சந்திக்கவிழைகிறேன் என்று சொல்… எனக்கு செய்தியை அறிவித்துவிட்டதாகவும் சொல்… நான் இப்போதே அவளை பார்த்தாகவேண்டும்” என்றான். அச்சொற்களைச் சொன்னதும்தான் தன்னை பதறவைத்தது அந்த விழைவே என அறிந்தான். “இக்கணமே நான் அவளை பார்க்கவேண்டும்…” என்றபோது அவன் குரல் இறங்கியது.

“ஆணை” என்று சொல்லி செவிலி சென்றதும் அவன் நிலையழிந்தவனாக அந்தச்சிறிய அறைக்குள் சுற்றிச்சுற்றி நடந்தான். மது கால்களை தளரச்செய்திருந்தது. ஆனால் மேலும் மேலும் என நா தவித்தது. செவிலி வந்து கதவோரம் நின்றாள். “சொல்” என்றான். “அவர்களுக்கு உடல்நலமில்லை என்றார்கள்” என்றாள் செவிலி. ஒருகணம் முழுக்குருதியும் தலைக்கேறியது. விரல்கள் விதிர்த்தன. சினத்தை கடந்துசென்று மெல்ல அமைந்தான். பெருமூச்சுடன் “நான் அவளை சந்திக்க மிகவும் விழைவதாகச் சொன்னாயா?” என்றான்.

“ஆம், முதலில் தங்கள் அன்னையைத்தான் சந்திக்க விழைவதாக அரசி சொன்னார்” என்றாள் செவிலி. “யாரை?” என்றதுமே கர்ணன் மீண்டும் சினம்கொண்டு “அன்னை இங்கு வரவேண்டும் என்றார்களா அரசி?” என்றான். “ஆம்” என்றாள் செவிலி. “நன்று, நீயே சென்று அன்னைக்கு செய்திசொல். அவர் வருவதுவரை நானும் இங்கேயே இருக்கிறேன்” என்றபடி கர்ணன் மீண்டும் பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டான்.

முந்தைய கட்டுரைதேவதச்சன் ஆவணப்படம்
அடுத்த கட்டுரைஅக்னிஹோத்ரம் கடிதங்கள்