எந்திரன் 2

 

 

1

அன்புள்ள ஜெ,

இன்று காலரைத் தூக்கி விடும் நாள் எனக்கு. பல நாட்களுக்கு முன்பே நீங்கள் இப்படத்தில் பணி புரிய போகிறீர்கள் என்று என் குடும்பத்தாரிடம் சொன்ன செய்தி இன்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஷங்கர் போன்ற ஒரு இயக்குனரின் படத்தில் கதை, திரைக்கதையில் உங்களின் பங்களிப்பு எவ்வளவு தூரம் இருக்கும் என்பது படம் பார்க்கையில் தெரியும் என்று நினைக்கிறேன்.

ஏற்கனவே விசும்பு தொகுப்பின் அனைத்துக் கதைகளும் அறிவியல் தமிழில் புது அத்தியாயத்தைத் துவக்கியவையே.(அந்த அத்தியாயம் அங்கேயே தேங்கி நிற்கிறது என்பது வேறு விஷயம்). ‘time travel’, ‘other dimensions’ போன்றவற்றை அனாயாசமாக உங்கள் கதைகளிலும், நாடகங்களிலும் (வடக்கு முகம் ஒரு உதாரணம்) கையாண்டு இருக்கிறீர்கள். எனவே எந்திரன் உண்மையிலேயே தமிழில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று நம்புகிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்

அன்புள்ள அருணாச்சலம்

நன்றி. பாபநாசத்தின் பெரிய வெற்றி அளித்த உற்சாகத்துக்குப் பின் இது இன்னொரு மகிழ்ச்சியான செய்தி

இயந்திரனில் என் பணிகள் முடிந்து பல மாதகாலம் ஆகிறது. சின்னச்சின்ன மெருகேற்றல்கள் மட்டுமே எஞ்சியிருந்தன.ஆர்னால்ட் ஷ்வாஸ்நெகர் நடிப்பதாக அனேகமாக உறுதியாகி இருந்தது. இறுதிநேரம் வரை முயன்றும் அதில் உள்ள சர்வதேச நிதிச்சட்டச்சிக்கல்களால் நடக்கமுடியாமல் போயிற்று.அக்ஷய்குமார் அந்த வலுவான எதிர்நாயகன் வேடத்தில் நடிக்கிறார். தமிழின் இன்னொரு பெரிய கதாநாயகனை எண்ணி உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் அது. பலமுகங்கள் கொண்டது.

உடல்நலம் நன்கு தேறி இருபடங்களில் ஒரேசமயம் ரஜினிகாந்த் நடிப்பது மிக உற்சாகமான செய்தி. அவருடைய குறும்பு வேகம் சினம் மூன்றுக்கும் இடமுள்ள கதாபாத்திரமாக சிட்டி மேலும் விரிவாகியிருக்கிறது.சங்கர் படங்கள் அவருக்கே உரிய தெளிவான ஆனால் சுருக்கமான திரைக்கதை அமைப்பு கொண்டவை. என் பார்வையில் அவரது மிகச்சிறந்த திரைக்கதை அந்நியன். அதைவிட இது ஒரு படி மேல் எனத் தோன்றுகிறது. வலுவான எதிர்நாயகன் காரணமாக எந்திரன் முதல் பகுதியைவிட தீவிரமானது.நான் எப்போதுமே ஜேம்ஸ் பாண்ட் வகை படங்களுக்கும் அறிவியல்புனைவு படங்களுக்கும் ரசிகன். என்னுள் உள்ள சிறுவனை உற்சாகமடையச்செய்த கதை. அதில் பங்கெடுத்தது நிறைவூட்டுகிறது.

இதழாளர்களும் நண்பர்களும் இதைப்பற்றி மேலும் என்னிடம் ஏதும் பேசவேண்டியதில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் இது முழுக்கமுழுக்க சங்கர் படம். நான் அதில் ஒரு பங்களிப்பை ஆற்றுபவன் மட்டுமேமுந்நூறுக்கும் மேற்பட்ட கடிதங்கள். பல கேள்விகள். இந்தத்தளம் சினிமாவுக்கானது அல்ல. ஆகவே இதைப்பற்றி இங்கு ஏதும் பேசப்போவதில்லை. வாழ்த்துத்தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

ஜெயமோகன்
அறிவியல் புனைகதைகள் தொகுப்பு

 

முந்தைய கட்டுரைசின்ன மலைகள் பெரிய கூழாங்கற்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : சார்வாகன்