ஜெ
தேவதச்சனின் ஒரு குறிப்பிட்ட வகையான கவிதைகளையே அதிகமும் விமர்சகர்கள் எழுதியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர் அன்றாட வாழ்க்கையைப் பாடிய கவிஞர். அது சரிதான். ஆனால் அன்றாட வாழ்க்கையைப் பாடுவதற்கான காரணம் என்ன? ஒரு கவிதையில் கவிஞன் என்னவாக தன்னை வைத்துக்கொள்கிறான் அல்லது என்னவாக நடிக்கிறான் என்பது மிகமுக்கியமானது. தேவதச்சன் ஒரு சாமானியனாக தன்னை முன்வைத்துக்கொள்கிறார்
சாமானியனுக்கு தத்துவம் இல்லை. பிரபஞ்சம் இல்லை. வாழ்க்கை மட்டும்தான் உள்ளது. சின்ன வாழ்க்கை. சிறிய சொப்பனங்கள். அதெல்லாம் உண்மைதான். கூடவே அவனுடைய சென்ஸ் ஆஃப் ஜஸ்டிஸும் மிகவும் சின்னது. அது இன்னும் முக்கியமானது. அவன் அதை ஒரு முட்டை ஓட்டை பஸ்ஸிலே கொண்டுபோவது போல பத்திரமாகக் கொண்டுபோகிறான். அந்தச் சித்திரத்தை தேவதச்சனின் பல கவிதைகள் அளிக்கின்றன.
இது முக்கியமான விஷயம். சமகால மனிதனின் கையாலாகாத தன்மையை சுட்டிக்காட்டிய கவிதைகள் அவை. சீற்றத்துடன் சுட்டிக்காட்டாமல் தன்வயமாகச் சுட்டிக்காட்டியவை. ஆகவே அவை சமகால ஆவணங்கள் என்றே சொல்லமுடியும்
என் நூற்றாண்டு
துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது.
படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது.
தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
என் டிரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்
எனக்கு மிகவும் பிடித்த தேவதச்சன் கவிதை இது. எல்லா இடத்திலும் பஸ் நகர்ந்துவிடுகிறது. காலம் நகர்ந்துவிடுகிறது. எல்லா இடத்திலும் இல்லாமலிருப்பதே சாமானியனின் சவால். சும்மா கண்ணுக்குத்தெரியாமல் ‘கம்முன்னு’ இருந்துவிடுதல். அதைத்தான் அவன் ஒரு யோகமாகப் பயிற்சி செய்கிறான் இல்லையா?
அவனுடையது வாழ்க்கை இல்லை. வாழ்க்கையை ஒத்திப்போட்டு உரிய காலகட்டத்தை முடித்து கடந்துபோதல் மட்டும்தான். இருபத்தொன்றாம் நூற்றாண்டை சட்டுபுட்டு என்று முடித்துக்கொள்ளுதல்தான் அவனுடைய ஒரே வழி
சாமிநாதன்