‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 7

பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 4

அங்க நாட்டிற்கு கர்ணன் குடிவந்தபோது சம்பாபுரியின் அரண்மனை வளாகத்திற்குள் குடியிருப்பதற்கு ராதை உறுதியாக மறுத்துவிட்டாள். அதிரதனுக்கு அதில் பெருவிருப்பிருந்தது. “இல்லை, ஒருபோதும் அங்கு நாம் குடியிருக்கப்போவதில்லை” என்று ராதை சொன்னபோது பதைக்கும் கீழ்த்தாடையுடன் அவளையும் கர்ணனையும் மாறி மாறி நோக்கியபின் “ஆம். அதுவே உகந்தது” என்றார் அதிரதன்.

“எங்களுக்கு சூதர்களின் குடியிருப்பிலேயே இல்லம் ஒன்றை ஒதுக்கு” என்றாள் ராதை. “ஆம். அங்கும் மாளிகைகள் உண்டல்லவா?” என்றார் அதிரதன். “மாளிகை தேவையில்லை. பிற குதிரைச் சூதர்களுக்கு நிகரான இல்லம் ஒன்று போதும்” என்றாள் ராதை. கர்ணன் “இல்லை அன்னையே. அரசரின் அன்னையும் தந்தையும் நீங்கள். உங்கள் பாதுகாப்பை நான் நோக்க வேண்டியுள்ளது. அரண்மனை வளாகத்திற்கு வெளியே நீங்கள் தங்குவது உகந்ததல்ல” என்றான்.

“ஆம், அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்” என்றார் அதிரதன். “அரண்மனை வளாகமென்பது முற்றிலும் பாதுகாப்பானது. மேலும் அங்கு நமக்கு ஏவலர்களும் இருப்பார்கள். நமது ஆணைகளை நிறைவேற்றுவார்கள். அரசவையில் நமது எண்ணங்களை நாம் சொல்வதற்கும் அதுவே உகந்தது. நாம் இங்கொரு பெரிய குதிரைப் படையை உருவாக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கிருக்கிறது. அதைப்பற்றி விரிவாகவே மைந்தனிடம் பேசியிருக்கிறேன். எப்படி என்றால்…” என்று அவர் தொடங்கியதும், ராதை உறுதியான குரலில் “நாம் அரசர்கள் அல்ல” என்றாள்.

“அல்ல. ஆனால் அரசரின் தந்தையும் தாயும்” என்றார் அதிரதன். “இல்லை, நாம் அரசரின் தந்தையும் தாயும் கூட அல்ல. நாம் இத்தனை தொலைவுக்கு அவன் ஏறி வந்த கலம் மட்டுமே. அதற்கு மேல் எதையும் நாம் கோரினோம் என்றால் இழிவடைவோம். இங்கு பிற சூதர்களுக்கு நிகரான இல்லத்தில் இதுவரை எந்த வாழ்க்கையை வாழ்ந்தோமோ அதையே நாம் வாழப்போகிறோம். பாதுகாப்பு என்பது நீ எனக்குச் சொல்லும் பொய் என்றறிவேன். நீ விழைந்தால் ஒற்றர் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்” என்றாள்.

கர்ணன் “அன்னையே…” என்று சொல்லத்தொடங்க அவள் கையை மறித்து “நான் சொல்வது ஏனென்று உனக்கு இப்போது புரியாது” என்றாள். “தங்களை அரண்மனையில் அமர்த்தாது அங்கு வாழ்வது என் உள்ளம் பொறுக்கும் செயல் அல்ல” என்றான் கர்ணன். “ஆம். நீ அங்கு இருப்பது ஒரு பெரும் துன்பமென்றே உணர்வாய். மைந்தனென இங்கிருக்கவே விழைவாய். ஆனால் அங்க நாட்டின் மணிமுடியை நீ விழைந்தே சூடினாய். இம்மணிமுடி அல்ல எந்த மணிமுடியும் பழுக்கக் காய்ச்சிய உலோகத்தால் ஆனதே. மணிமுடி சூடியவன் திரும்பிச் செல்ல இடங்கள் இல்லை” என்றாள் ராதை.

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்றான் கர்ணன். “அன்னையையும் தந்தையையும் கைவிட்டுவிட்ட கொடுமனத்தான் என்று என்னை சொல்வார்கள் அல்லவா?” என்றான். “ஐயுறுவார்கள், பின்பு தெளிவார்கள். ஆனால் பிறருக்காக ஓர் அரசன் எதையும் செய்யலாகாது. நாங்கள் இங்கு இருப்பது ஒரு செய்தி. இங்குள பிற சூதர்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள ஷத்ரியர்களுக்கும்” என்றாள் ராதை. அவள் சொல்ல வருவது அனைத்தும் அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. பெருமூச்சுடன் “ஆம்” என்றான்.

“நீ படைக்கலம் ஏந்தி அரசனுக்காக போரிட்டு மண் வென்றாய். பரிசிலாக மண்ணை பெற்று மன்னன் ஆனாய். உனக்குப் பின்னால் அஸ்தினபுரியின் படைப்பெருக்கு இருக்கும் வரை இங்குள்ள ஷத்ரியர்கள் உன்னை எதிர்க்க முடியாது. உன்னைப்பணிந்து ஆணை பெற அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். படைக்கலத்துக்குப் பணிவது அவர்களுக்கு இழிவும் அல்ல. ஆனால் நாங்கள் இன்னும் ஷத்ரியர்கள் ஆகவில்லை. மைந்தா, இந்நகரில் நாற்குலத்தாரின் நீங்காக் காழ்ப்பு மேல் அமர்ந்துதான் நீ அரசாளப் போகிறாய் என்றுணர்” என்றாள் ராதை.

“ஆமாம். இதையே நானும் சொல்ல எண்ணினேன். இந்நகரில் நான் எங்கு சென்றாலும் எனக்குப் பின்னால் ஏளனக் குரல்களையே கேட்கிறேன். நேற்று கூட ஒருவன் அரண்மனையின் அணிக்கட்டிலில் நான் குதிரைச் சாணியை கரைத்து பூசி அந்நறுமணத்தில் துயில்வது உண்மையா என்று என்னிடம் கேட்டான்” என்றார் அதிரதன். ராதை விழிகளில் சினத்துடன் அவரை நோக்கி “நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டாள். “குதிரைச் சாணி எனக்கு நறுமணம்தான். அதை இழிமணம் என்பவன் அஸ்வமேதம் என்பதே அரசனின் இறுதி வெற்றி என்பதை அறியாத மூடன் என்றேன்” என்றார் அதிரதன்.

கர்ணன் நீள்மூச்சுடன் “தங்கள் ஆணை அன்னையே” என்று சொல்லி தலைவணங்கினான். ராதை “ஆனால் சூதர்கள் நடுவே எங்கள் மனை தனித்திருக்க வேண்டும். அவர்களில் ஒருவராக பொதுநோக்குக்கும் ஒருபோதும் அவர்களில் ஒருவரல்ல என்று தனிநோக்குக்கும் தெரியும் வண்ணம்” என்றாள். மெல்லிய புன்னகையுடன் “அவ்வாறே” என்றான் கர்ணன். எழுந்து அவன் திரும்புகையில் “மைந்தா” என்றாள் ராதை. “விருஷாலி உன் மனைவி. அவள் சூதருக்கன்றி பிறருக்கு அரசியாக முடியாதென்று அறிந்திருப்பாய்.”

“அது எப்படி?” என்று அதிரதன் இடையே புகுந்தார். “இவன் நமது மைந்தன். இவன் அங்க நாட்டுச் செங்கோலை ஏந்த முடியுமென்றால் இவன் இடப்பக்கம் அமர்ந்த அவள் ஏன் மணிமுடி சூடி அமரமுடியாது?” கர்ணன் “தந்தையே, அங்க நாட்டு மணிமுடி அவைக்களத்தில் எனக்கு சூட்டப்பட்டது. எதிர்ப்பின்மையால் மட்டுமே நான் அரசன் என்று இங்கிருக்கிறேன். எதிர்ப்பு உருவாவதை நான் விழையவும் இல்லை. அம்மணிமுடி சூட்டப்பட்டதும் நான் ஷத்ரியனானேன். ஷத்ரியர்கள் சூதப்பெண்களை மணக்கலாம். அவர்களுக்கு அரசிப்பட்டம் சூட்ட நெறிகள் ஒப்புவதில்லை. ஐங்குலத்தார் அவள் முன் பணிய மாட்டார்கள்” என்றான்.

“அவளை அழைத்துக்கொண்டு அருகமரச்செய்து ஒரு ராஜசூய வேள்வியை நிகழ்த்து. எவர் பணியவில்லை என்று பார்ப்போம்” என்றார் அதிரதன். “ராஜசூய வேள்விக்கு ஐம்பத்தாறு நாடுகளின் அரசர்களும் வரவேண்டுமல்லவா? எவர் வருவார்?” என்றான் கர்ணன். “அப்படியென்றால் அதற்கு முன் ஒரு அஸ்வமேத வேள்வியை நிகழ்த்து. ஐம்பத்தாறு நாட்டு மன்னர்களையும் உனக்கு அடிபணிய வை” என்றார்.

கர்ணன் நகைத்து “செய்வோம். அதற்கு இனியும் நெடுநாள் இருக்கிறது. அதுவரை பொறுப்போம்” என்றான். “அதற்குத்தான் நான் உன்னிடம் மிகப்பெரும் திட்டம் ஒன்றை சொன்னேன். குதிரைகள் விரைந்து பெருகுவதற்கான வழிமுறை ஒன்று என்னிடம் உள்ளது. நான் அவைக்கு வருகிறேன். அதை விளக்குகிறேன்” என்றார் அதிரதன். “அவன் இங்கு வரும்போது அதை விளக்கினால் போதும்” என்றாள் ராதை. அவர் “ஆம், இங்கு கூட நாம் பேசிக்கொள்ளலாம்” என்றார்.

அங்க நாட்டுக்கு அவர்கள் வந்தபோது அரண்மனைகள் விரிவாக்கி கட்டப்பட்டன. சூதர் தெரு நடுவே முதன்மையாக இருந்த வீடு ஒன்று விரிவாக்கி சீரமைக்கப்பட்டு அதில் அதிரதனும் ராதையும் குடியேறினார்கள். அரண்மனைக்குத் தெற்காக குலமிலா அரசியர் மாளிகை நெடுங்காலமாக கைவிடப்பட்டிருந்தது. அதை செம்மையாக்கி விருஷாலி குடியமர்த்தப்பட்டாள். தனக்கென அமைந்த மாளிகை அவளை களிப்புறச் செய்தது. ஆனால் சிலநாட்களிலேயே அது சம்பாபுரியின் அரசிக்குரிய மாளிகையல்ல என்று அவள் உணர்ந்துகொண்டாள்.

ராதையும் அதிரதனும் சூதர் தெருவில் குடியேறியது முதற்சில நாட்கள் வரை சம்பாபுரியில் நாவுலாச் செய்தியாக இருந்தது. அவர்களின் இழிபிறப்பும் சிறுமைக்குணமும் அதிலிருப்பதாக அதைச் சொல்லி வம்பில் பழுத்த மூத்தோர் சாவடிகளிலும் திண்ணைகளிலும் கோயில்முகப்பிலும் அமர்ந்து அலர் எடுத்தனர். ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் அன்னையை காணவந்தான். தன் புரவியையும் அணித்தேரையும் அவிழ்த்து அவ்வில்லத்து முற்றத்தில் கட்டிவிட்டு அன்னை அருகே அமர்ந்து அவள் உடலில் தோள் சாய்த்து கைகளை மடிசேர்த்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். சில நாள் இரவுகளில் வந்து அவள் மடியில் தலைவைத்துப் படுத்து நகையாடினான். நாள் செல்லச் செல்ல அவ்வலர் கூர்மை இழந்தது.

ராதை தன் உறுதியாலேயே சூதர் தெருவில் இருக்கிறாளென்று நிலை நாட்டப்பட்டது. அது அச்சத்தால் என்றனர் வம்பர். இல்லை அக்குலத்திற்கு உரிய உள இழிவால் என்றனர் முதியோர். ”எவ்வண்ணம் ஆயினும் தன் எல்லையை அவள் உணர்ந்திருப்பது நன்று” என்றனர் ஷத்ரியர். ”சூதர் பெண்ணை மூதரசி என்று வணங்கும் தீயூழ் நமக்கு அமையாதது குலதெய்வங்களின் கருணையாலேயே” என்றனர் படைவீரர். ”தெய்வங்கள் இவ்வெண்ணத்தை அவள் நெஞ்சில் எழச்செய்தன” என்றனர் வைதிகர்.

என்றும் அவர்களைப்பற்றிய விலக்கம் அங்கர்களிடமிருந்தது. அங்க நாட்டுக்கு அரசனாக சம்பாபுரிக்கு கர்ணன் தன் இரு துணைவியருடன் வரப்போகும் செய்தி வந்த முதலே நகரம் கலைந்து முழங்கத்தொடங்கியது. இருளிலும் அதன் பேச்சுக் குரல் எழுந்த கார்வை நகரை மூடியிருந்தது. ஒவ்வொருவருக்கும் உரைப்பதற்கும் சினப்பதற்கும் ஏதோ ஒன்று இருந்தது. “என்னதான் இருந்தாலும் அவன் சூதன். ஸ்மிருதிகள் சொல்கின்றன, பிறப்பை செயலால் வெல்லலாம் என்று. ஆனால் முற்றிலும் வென்றவர் என்று எவரும் இல்லை என்பதே புராணங்களின் படிப்பினை. ஏனெனில் செயல்களை அம்மனிதன் இயற்றுகிறான். பிறப்பை இயற்றியது விண்ணளக்கும் தெய்வங்கள். பிரம்மன் ஆணை” என்றார் முதியவர் ஒருவர்.

சாவடியில் இருந்த முதியோர் தலையாட்டினர். அவர்கள் நடுவே பேரகலில் மூன்று திரிச்சுடர்கள் அசைந்தன. அவர்களின் நிழல்கள் மண்டபத்தின் மேற்கூரையில் கூடி ஆடின. “அவன் முதல் மனைவி சூதப்பெண். அஸ்தினபுரியின் தேரோட்டியாகிய சத்யசேனனின் மகள். அவளுக்கு கிருதி என்று இளமைக்காலப்பெயர். மணமுடிப்பது வரை சத்யசேனை என்று அழைக்கப்பட்டாள். சூதர் குல வழக்கப்படி இவனை கை பிடித்தபின் இவன் இயற்பெயரைக்கொண்டு விருஷாலி என்ற பெயர் பெற்றிருக்கிறாள்” என்றார் ஒரு முதியவர்

இன்னொருவர்” நிமித்திகரே சொல்லுங்கள், இந்நகரை சூதனும் சூதப்பெண்ணும் ஆள அடிபணிந்து இங்கு வாழப்போகிறோமா?” என்றார் மீசைபழுத்த முதியபடைவீரர். “ஏன், பாரதவர்ஷத்தை இளைய யாதவன் கைப்பற்றினால் இங்குள்ள அத்தனை ஷத்ரியர்களும் அவன் அரியணைக்கீழ் தலைவணங்கித்தானே ஆகவேண்டும்? அறிக, பொன்னும் பெண்ணும் மண்ணும் வெல்பவருக்குரியவை” என்றார் நிமித்திகர்.

“இன்று இங்கிருக்கும் நம்மை வெல்லலாம். நம் கடந்தகாலத்தை எப்படி வெல்வான் அவன்? அவன் இங்கு வந்து இவ்வரியணையை கைப்பற்றலாம். அரண்மனையில் வாழலாம். ஆனால் இந்நகரெங்கும் நிறைந்திருக்கும் மூதாதை தெய்வங்களை அவன் எங்ஙனம் வழிபட முடியும்? குறித்துக் கொள்ளுங்கள்! இங்கு வந்தபின் அவன் ஒரு மழையையும் பார்க்கப்போவதில்லை. நமது குழந்தைகள் உணவின்றி அழியும். நமது குலங்கள் சிதறும். அதுதான் நடக்கப்போகிறது” என்றார் வேளாண்குடிமூத்தவர்.

“அவன் அரசனாகலாம். நிகரற்ற வில்வீரன். தோள் வலிமை கொண்டு இந்நகரை வென்றவன். களத்தில் முடி சூட்டப்பட்டபோதே அவன் ஷத்ரியனாகிவிட்டான். அது நூல்முறையே. ஆனால் ஷத்ரியனாகிய அவன் எங்ஙனம் அச்சூதப்பெண்ணை மணந்தான்?” என்றார் பட்டுச்சால்வை போர்த்திய வைதிகர். குரல்கள் “ஆம், உண்மை” என்றன.

சுவர்மூலையில் இருட்டில் கரிய மரவுரியைப்போர்த்தி தலைப்பாகை அணிந்து அயல்நாட்டு வணிகனைப்போல் அவன் அமர்ந்திருந்தான். “அவனை பேரழகன் என்கிறார்கள். சூதனும் மனைவியும் அவனை பெற்றெடுக்கவில்லை. கங்கையில் கண்டெடுத்தனர். பாரத வர்ஷத்தின் பெருங்குடிகளில் எங்கோ பிறந்து கைவிடப்பட்ட மைந்தன் அவன்” என்றார் ஒரு முதியவர். “ஆம், அவன் யாரென்று ஒரு பேச்சு எங்கும் உள்ளது” என்றார் இளையவர். மூத்தவர் “அந்தப்பேச்சு இங்கு வேண்டாம். அஸ்தினபுரியின் ஒற்றர் இல்லாத அவை என்று ஏதும் பாரதவர்ஷத்தில் இல்லை” என்றார். கூட்டம் ஓசை அடங்கியது. இருவர் இருளில் அமர்ந்திருந்த அவனை திரும்பி நோக்கினர்.

7

முதியவர் “தாங்கள் எந்த ஊர் அயலகத்து வணிகரே?” என்று கேட்டார். “நான் மகதன்” என்றான் கர்ணன். அதன்பின் மீண்டும் சாவடியில் சொல் எழவில்லை. அவர்கள் நடுவே ஏற்றி வைத்திருந்த அகல் விளக்கில் ஒருவன் எண்ணெய் கொண்டுவந்து ஊற்றினான். அதன் சுடர் துடித்து மேலெழுந்தது. ஒருவர் பெருமூச்சுவிட்டார். “அரசர்களை தெய்வங்கள் பகடைகளாக்கி ஆடுகின்றன. அரசர் நம்மை வைத்து ஆடுகிறார்கள்” என்றார்.

“முன்பும் அங்க நாட்டில் மழைபொய்த்த கதை உள்ளது. அன்று லோமபாத மன்னர் விபாண்டக முனிவரின் மைந்தர் ரிஷ்யசிருங்கரை கொணர்ந்து இங்கு அவர் தூய கால்கள் படும்படி செய்தார். மான்விழி கொண்ட முனிவரின் குருதியிலிருந்து நம் அரச குலம் கிளைத்தது. ரிஷ்யசிருங்கரின் மைந்தர் சதுரங்கருக்குப்பின் ஏழு தலைமுறைக்காலம் இங்கு குளிர்மழை நாள் பொய்க்காது நின்று பெய்தது என்கிறார்கள் முன்னோர். இன்று இவன் காலடிகள் இங்கு படப்போகின்றன” என்று பெரியதலைப்பாகை கட்டிய வணிகர் சொன்னார். இளையவன் ஒருவன் “ஒன்று கேட்கிறேன், அவர் இங்கு வந்து நன்மழை பெய்ததென்றால் அவர் குலம் உகந்ததென்று ஏற்பீரோ?” என்றான்.

கூட்டம் ஒருகணம் அமைதியடைய முதியவர் ஒருவர் “பெரியவர் அவையில் குரலெடுக்க உனக்கென்ன தகுதி? யார் நீ?” என்றார். “இங்கு அமர்ந்து சொல் கேட்க உரிமையுண்டென்றால் சொல்லெடுக்க உரிமையில்லையா?” என்றான் அவன். “எழுந்திரு! விலகு மூடா” என சினந்தார் பெரியவர். “உன் தந்தையை கையிலேந்தி நிலா காட்டியவன் நான். என்னிடம் வந்து நீ சொல்கோக்கிறாயா?” அவன் “வேண்டுமென்றால் உங்களை நான் தூக்கி நிலா காட்டுகிறேன்” என்றான். சில இளைஞர் நகைக்க முதியவர் தன் கைக்கோலை எடுத்தார். அருகே இருந்த இன்னொரு முதியவர் “சொல்மீறுவது இளையோருக்கு கேளிக்கை… நீங்கள் நிலையழியலாமா? விடுங்கள்” என்றார்.

“விருஷாலியை அவன் எப்படி மணக்க ஒப்புக்கொண்டான்?” என்றான் ஒருவன். “கல்லாதவள். அவைநெறி அறியாதவள். அழகியும் அல்ல என்றனர்.” வணிகர் “அவள் தந்தை சத்யசேனர் இவன் தந்தை அதிரதனின் குதிரைக் கொட்டடித்தோழர். எப்போதோ அவர் மகளை தன் மகனுக்கு கொள்வதாகச் சொல்லி கொட்டைப் பாக்கொன்று வாங்கி வாயிலிட்டிருக்கிறார். தன் சொல் பிழைக்கலாகாது என்று சொல்லி சினந்து கண்ணீர் விட்டிருக்கிறார். மைந்தனால் மீறமுடியவில்லை. அன்னையின் ஆணை உடனிருக்கையில் செய்வதற்கொன்றுமில்லை” என்றார்.

“அஸ்தினபுரியில் சத்யசேனன் இப்போதும் தேரோட்டுகிறானா என்ன?” என்றார் கிழவர். “ஆம், இப்போதும் தேர் ஓட்டுகிறார். குதிரைச் சாணியை தன் தலையில் அள்ளிக் கொண்டு கொட்டுகிறார். உடலெங்கும் வழிந்த சாணிச் சாறுடன் நீராடுவதற்கு நடந்து செல்கிறார்” என்றார் இன்னொருவர். அந்த அவை அச்சொற்களை ஒரு தீச்சொல் என எதிர்கொள்ள அனைவரும் அமைதியடைந்தனர். எவரோ இருமும் ஒலி கேட்டது

“அங்க நாட்டவரே, நல்லூழ் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் அரசு குதிரை மணம் கொண்ட இளவரசன் ஒருவனால் எதிர்காலத்தில் ஆளப்படப்போகிறது” என்றான் அப்பால் அமர்ந்திருந்த நாடோடி. “வாயை மூடு! இத்தகைய நச்சுச் சொற்கள் பேராற்றல் கொண்டவை. இவற்றை நாம் எவ்வண்ணம் சொன்னாலும் இது நம் விழைவென்று இருள் சூழ்ந்திருக்கும் தெய்வங்கள் எண்ணக்கூடும். ஒன்று அறிக! சொல்லப்பட்ட அனைத்தும் நிகழ்ந்தே தீரும்” என்றார் நிமித்திகர். கர்ணன் இருளுக்குள் புன்னகைத்துக் கொண்டு தன் உடலை மேலும் ஒடுக்கிக் கொண்டான்.

சத்யசேனரின் மகளை அவனுக்கு மணமுடிப்பதாக அதிரதன் வாக்களித்ததை அவனிடம் அவர் சொன்னபோது முதலில் எளியதோர் களியாட்டென கடந்து செல்லக்கூடியதென்றே அவன் எண்ணினான். “என்ன சொல்கிறீர்கள் தந்தையே? சூதர்குலத்துப் பெண்ணா?” என்றான். பெரும் சினத்துடன் நீர் நிறைந்த கண்களுடன் “அவை நடுவே நீ என்னைத் தழுவினாய். என்னை தந்தை என்று அவர்களிடம் சொன்னாய். ஆனால் மணிமுடி கிடைத்து அரசருடன் அவை அமரத் தொடங்கிய சில மாதங்களில் உன் உள்ளம் மாறிவிட்டிருக்கிறது. இன்றென்றால் நீ என்னை உன் அவைக்கு கொண்டு செல்லமாட்டாய். என் உடலின் குதிரைச் சாணி மணம் உன்னை அருவருப்படையச் செய்கிறது” என்றார்.

“இல்லை தந்தையே. தாங்கள் அறிவீர்கள், ஒரு அரசனின் கடமை என்னவென்று. நூல் நெறிகளின்படி நான் இன்று ஷத்ரியன். ஷத்ரியனின் முதல் மனைவி முடிசூடி அவன் இடப்பக்கம் அமரவேண்டியவள்” என்றான். “ஆம், அதனால்தான் சொல்கிறேன்” என்றபடி அதிரதன் இரு கைகளையும் விரித்து அவனை நோக்கி வந்தார். “சில நாட்களாகவே அஸ்தினபுரியில் என்ன பேசப்படுகிறது என்று நான் கேட்டிருக்கிறேன். அரசரின் துணைவி… அவளை நான் மூன்று முறைதான் பார்த்தேன். காசி நாட்டில் வெண்ணெய் மிகுதியால் தின்று கொழுத்து அவளே வெண்ணெயால் செய்யப்பட்டதுபோல் இருக்கிறாள். அவள் உனக்கு அரசமங்கையரை மணம் பேசிக் கொண்டிருக்கிறாள். கேகயத்திற்கும் அவந்திக்கும் மாளவத்திற்கும் விதர்பத்திற்கும் தூது சென்றிருக்கிறது.”

“ஆம், நான் அதை அறிவேன்” என்றான் கர்ணன். “அவ்விளவரசிகளில் ஒருத்தியை நீ மணந்தால் நான் வந்து அவள் முன் தலை வணங்கி வாழ்த்துரை கூறி நிற்கவேண்டும். அவள் வயிற்றில் மைந்தன் பிறந்தால் அதைத் தொடும் உரிமையாவது எனக்கு அமையுமா என்ன? இது என் ஆணை, உன் முதல் மனைவி என் குலத்துப் பெண்ணாகவே அமையட்டும். அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தை என் குலத்தில் பிறக்கும் குழந்தையாகவே இருக்கும்… அதற்கு நான் என் தந்தை பீனரதரின் பெயரைத்தான் இடுவேன்… இதில் எந்த மாற்றமும் இல்லை.”

“தந்தையே, தங்கள் சிறிய உலகில் நின்றுகொண்டு இதை சொல்கிறீர்கள். தாங்கள் ஆணையிட்டால் அங்க நாட்டின் மணிமுடியை நான் துறக்கிறேன். தாங்கள் விரும்பும் பெண்ணை மணக்கிறேன்” என்றான் கர்ணன். “சீ, மூடா! அங்க நாட்டின் மணிமுடியைத் துறப்பேன் என்று நீ சொன்னால் நான் அதை ஒப்புக்கொள்வேன் என்று எண்ணினாயா? இன்று நான் இதோ இந்தப் பட்டாடை அணிந்து தந்தப்பிடியுடைய சவுக்கேந்தி குதிரைக் கொட்டடிக்குச் சென்று பீடத்தில் அமர்ந்து பிறருக்கு ஆணையிடுகிறேன் என்றால் அது நீ சூடிய மணிமுடியால்தான். அதை இழக்க நான் ஒரு போதும் ஒப்பேன்.”

“இரண்டில் ஒன்று சொல்லுங்கள் தந்தையே” என்றான் கர்ணன். “நீ அங்கநாட்டு அரசனாக இருப்பாய். என் சொல் மாறாது சூதர்குலத்துப் பெண்ணை மணப்பாய்… இதுமட்டுமே நடக்கும்” என்றார் அதிரதன். ராதை “மணிமுடியை துறப்பது பற்றி எண்ணாதே மைந்தா. அது உன்னைத்தேடி வந்தது. அதைத் துறந்தால் உனக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இழிவே வந்து சேரும்” என்றாள். “பிறகு நானென்ன செய்வது? சூதப்பெண்ணை மணந்து நான் மணிமுடி சூட்ட முடியாது” என்றான் கர்ணன்.

“மணிமுடி சூட்ட வேண்டியதில்லை. அவள் என் மகளாக இவ்வில்லத்தில் இருக்கட்டும்” என்றாள் ராதை. “அறிவிலியே, வாயை மூடு. உன் சொல்கேட்டுத்தான் உன் மைந்தன் அறிவிழந்தான். அடேய் மூடா, உன்னைவிட நூறு மடங்கு பெரிய பேரரசை ஆள்பவன் இளைய யாதவன். அவனது முதல் குலமகள் யாதவப்பெண். முடி சூடி அவள் துவாரகையை ஆளவில்லையா?” என்று அதிரதன் கூவினார். “ஆம். ஆனால் யாதவர்களின் நகரம் துவாரகை. அங்கம் ஷத்ரியர்களின் நாடு” என்றான் கர்ணன்.

சொல்முட்டியபோது அதிரதன் மேலும் வெறிகொண்டார். நெஞ்சில் அறைந்து “அதை நான் அறிய வேண்டியதில்லை. நீ ஆண்மகன் என்றால் இளைய யாதவன் செய்ததை செய்து காட்டு. நான் உயிரோடிருப்பதென்றால் என் சொல்லும் என்னுடன் உயிரோடு இருக்கவேண்டும். சொல்லிறந்தபின் உயிர் வாழ, சடலமாக இருக்க விழையவில்லை” என்றார். “தந்தையே” என்று தணிந்த குரலில் கர்ணன் அழைத்தான். “ஆம் தந்தை… நான் இறந்தபின் ஒருபிடி நீரள்ளி கங்கையில் விடு. அதுபோதும் எனக்கு… போடா…” கர்ணன் “நான்…” என்று சொல்ல அவனை மறித்து “உன்னை நெஞ்சில் ஏற்றி நெறிசொல்லி வளர்த்தமைக்கு அந்தப் பிடிநீர் போதும் என கொள்கிறேன்… போடா… போடா” என்றார்.

நாவிறங்க “தந்தையே” என்றான் கர்ணன். “அச்சொல்லை நீ உளமறிந்து சொன்னாய் என்றால் தந்தையின் சொல் காப்பதே தனயனின் கடமை என்றுணர்ந்திருப்பாய். ராகவ ராமன் தந்தை சொல்லுக்காக அரசு துறந்து பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தான். ஆனால் நீ தந்தை ஆணையிடும் ஒரு பெண்ணின் கரம் பற்றுவதைத்தவிர்க்க  நூல்களை துணைக்கு அழைக்கிறாய். நாணில்லையா உனக்கு? இனி ஒரு சொல்லில்லை. இது என் ஆணை” என்றபின் பற்களைக் கடித்து உடல் நடுங்க சிலகணங்கள் நின்றபின் அதிரதன் திரும்பி நடந்து சென்றார்.

தளர்ந்து பீடத்தில் கால் மடித்தமர்ந்து கால்மேல் கைகளை வைத்து தலை குனிந்தான் கர்ணன். அவன் குழல்கற்றைகள் சரிந்து முகத்தை மூடின. இரு கைகளாலும் நெற்றியைத்தாங்கி சில கணங்கள் அமர்ந்தான். பின் தலை தூக்கி “அன்னையே, என்ன இது? இப்படி இவர் சொல்லாடி நான் ஒரு போதும் பார்த்ததில்லை” என்றான். “நானும் பார்த்ததில்லை. ஆனால் மானுடரில் இருந்து அறியாத மானுடர் எழுந்து வருவதை எப்போதும் அறிந்திருக்கிறேன். இன்று தெரிந்த இவர் விதையாக அவருள் எங்கோ இருந்திருக்கிறார்” என்றாள் ராதை.

“அன்னையே, நான் சொல்லும் முறைமைகள் உங்களுக்குப் புரிந்ததா?” என்றான். “ஆம் மைந்தா, நான் நன்கு அறிந்துளேன். இன்று இரவு அவர் வந்தபின் நான் அவரிடம் பேசுகிறேன்” என்றாள் அவள். “பேசுங்கள் அன்னையே. எவ்வண்ணமேனும் அதை சொல்லி அவருக்கு புரியவையுங்கள். சூதப்பெண்ணை மணக்கப்போகிறேன் என்று அஸ்தினபுரியின் அவை நின்று எப்படி சொல்வேன்? அதை பானுமதியிடம் சொன்னால் பாரதவர்ஷமெங்கும் ஷத்ரியப் பெண்களுக்காகத் தேடி எனக்கென தூதனுப்பியிருக்கும் அவள் எப்படி சிறுமை கொள்வாள்! எண்ணிப்பார்க்கவே இயலவில்லை.”

“நான் அறிவேன் மைந்தா. நான் உன் தந்தையிடம் உரைக்கிறேன்” என்றாள் ராதை. கர்ணன் தன்னுள் என “இந்த மணிமுடியை எக்கணம் நான் ஏற்க சித்தமானேன்? என் ஆணவ நிறைவுக்கு இது தேவைப்பட்டதா என்ன?” என்றான். “ஆணவத்தால்தான் வீரர்கள் உருவாகிறார்கள்” என்றாள் ராதை. “சிறுமைகளை சந்தித்து சலித்துவிட்டேன் அன்னையே. மீண்டும் ஒன்று என் முன் வருகையில் அஞ்சுகிறேன். நோயுற்றவனுக்கு சிறுமுள்கூட இறப்புருவாகத் தெரிவது போல” என்று கர்ணன் பெருமூச்சுவிட்டான். “இதை நான் எப்படி கடந்து செல்வேன் என்றே தெரியவில்லை.”

“இது உன் தந்தையின் சிறு நிலையழிவு மட்டுமே. பகற்கனவு காணும் எளிய மனிதர் அவர். நீ அறிவாய்,,எளிய மனிதர்களே மிகுதியாக பகற்கனவு காண்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அடைய இயலாதவையே இவ்வுலகில் அதிகம். அவரது பகற்கனவில் பல ஆயிரம் மடங்கு பேருரு கொண்டிருக்கக்கூடும். அவ்வண்ணமே அவர் வாழ்க்கை முடிந்திருந்தால் அதில் பிழை இருந்திருக்காது. அக்கனவுகளில் ஒன்று நனவாகியது. முடி கொண்ட மைந்தனின் தந்தையானார். அதை பொத்திப்பிடித்து அமர்ந்திருக்கிறார்” என்றாள் ராதை.

“அன்னையே, நான் அறிந்த நிலைமதியாளர்களில் ஒருவர் நீங்கள். நீங்கள் அறியாத மானுட உள்ளமில்லை. என் நெஞ்சில் நீங்கள் அறியாத ஒரு சொல்லும் இல்லை” என்றான். “நான் அவரிடம் சொல்கிறேன். அவர் அஞ்சுவது போல நீ ஷத்ரிய அரசி ஒருத்தியை அடைந்தால் அவளுக்குரிய அரசனாக உன்னை மாற்றிக்கொள்ள மாட்டாய். அரசன் என்று அமர்ந்து உன் தந்தையை அயலவன் என்று எண்ணவும் மாட்டாய். அதை அவரிடம் சொல்லி புரியவைத்தால் மட்டும் போதும்.” ராதை சிரித்து “ஆனால் எளியவர் என்றாலும் உன் தந்தை சொன்னதில் ஒரு சொல் உண்மை” என்றாள்.

“என்ன?” என்றான் கர்ணன் ஐயத்துடன். “பேருடல் கொண்டவர்கள் பெண்களுக்கு அடிமைகள் என்றார்” என்றாள் ராதை. கர்ணன் நகைத்து “அது என்ன முறை?” என்றான். “அவர் கண்டிருக்கிறார். என்னைப்போல் எண்ணி எண்ணி அறிபவரல்ல. கண்டதைக் கொண்டே இவ்வுலகை அறிந்தவர் அவர்.” சிரித்து “அவர் சொன்னதும்தான் அதை தெளிவுற நானும் கண்டேன்” என்றாள். “அன்னையே, நான் ஷத்ரிய அரசியின் செங்கோல்தாங்கியாக மாறுவேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?” என்றான் கர்ணன்.

ராதை “மாறினாலும் அதில் பிழையில்லை. ஒருவேளை நீ மணக்கும் ஷத்ரிய அரசி நீ இதுகாறும் கொண்ட இழிவுகள் அனைத்தையும் முற்றிலும் முடித்து வைக்கக்கூடும். அங்க நாட்டின் செங்கோலும் அவள் மணி வயிற்றில் பிறக்கும் மைந்தனும் உன்னை வரலாற்றில் ஷத்ரியனாக நிறுத்தக்கூடும். அதில் பிழையில்லை” என்றாள். “நான் தந்தையையும் தங்களையும் கைவிடுவேன் என எண்ணுகிறீர்களா?” என்றான் கர்ணன். “கைவிட மாட்டாய். அதை நான் அறிவேன். ஒரு போதும் என் மடியிலிருந்து நீ இறங்கி நடந்ததில்லை. எனக்கு எந்த ஐயமும் கவலையும் இல்லை” என்று ராதை சொன்னாள்.

“அந்த உறுதிப்பாடு ஏன் அவருக்கில்லை?” என்றான் கர்ணன். “ஏனென்றால் நான் அன்னையென உன்னை அறிகிறேன். அவர் ஆண்மகனென உன்னை அணுகி அறிகிறார்” என்றாள் ராதை. கர்ணன் கைகளை வீசி “இச்சொல்லாடல் எனக்கு சலிப்பூட்டுகிறது. அவரிடம் சொல்லுங்கள், வீண் அச்சத்தால் அலைக்கழிக்கப்படுகிறார். ஷத்ரிய அரசியை அடைந்தாலும் நாடாண்டாலும் நான் அவருக்கு மகன்” என்றான். ராதை “அவர் சொல்வதில் ஓர் உண்மை உள்ளது. அவர் மைந்தனென்றே நீ எப்போதும் இருப்பாய். ஆனால் உன் மைந்தர்கள் அவருக்கு பெயரர்களாக எப்போதும் இருக்க மாட்டார்கள். ஒரு சூதப்பெண்ணுக்கு பிறக்கும் மைந்தனே என்றும் அவர் பேர் சொல்ல இப்புவியில் வாழ்வான்” என்றாள்.

“அன்னையே…” என்றான் கர்ணன். “அது உண்மை. அதன் கூர்மையை நாம் பேசி மழுப்ப வேண்டியதில்லை” என்றாள் ராதை. “உன் தந்தையைப்போன்ற எளிய மனிதர்கள் நேரடியாக உண்மையைச் சென்று தொட்டுவிடுகிறார்கள். வாழ்நாளெல்லாம் அவர்கள் விட்டுக்கொடுக்கிறார்கள். விட்டுக்கொடுக்கமுடியாத ஒன்றின்மேல் அவர்களின் முழு உயிரும் கைகளாக மாறி பற்றிக்கொள்கிறது.” கர்ணன் மறுமொழி கூறவில்லை. அவன் சித்தம் சொற்குழம்பலாக கொதித்தது.

“செல்க! நான் அவரிடம் பேசி முடிவெடுக்கிறேன். நீ சூதர் மகளை மணக்க வேண்டியதில்லை” என்றாள் ராதை. பெருமூச்சுடன் “ஆம் அன்னையே. அவரிடம் என் இக்கட்டை சொல்லி புரியவையுங்கள். உங்களைத்தான் உங்கள் மைந்தன் நம்பியிருக்கிறேன்” என்றான் கர்ணன்.

முந்தைய கட்டுரைஇவ்விரவில் மௌனமாக உருகு…
அடுத்த கட்டுரைநுழைவாயில்