கடிதங்கள்

அன்புள்ள ஜெ
நான் ஒரு மன நல மருத்துவன்.தங்கள் இந்திய தத்துவ மரபும் காந்தியும் படித்து மகிழ்ந்தேன்.எரிக்ஸனின் gandhi ‘s truth ஐ விடத் தெளிவாகவும் இந்தியத்தன்மையுடனும் உள்ளது.எரிக்ஸனிடம் தரிசனம் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து
நன்றி
Dr.இராமானுஜம்

அன்புள்ள இராமானுஜம்
நன்றி

எரிக் எரிக்ஸன் உட்பட உள்ள மேலை உளவியலாய்வாளார்களின் சிக்கல்கள் அடிப்படையான மானுட எழுச்சிகள் காமம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமானவை என்ற அவ்ர்களின் குறுக்கல்தான் என நினைக்கிறேன். இன்னும் இருபது வருடங்களில் இந்த மூடநம்பிக்கையை மேலை அறிவியலே தூக்கி வீசிவிடும்என்பதே என் கணிப்பு. பரிணாமம் என்பதை மனித நுண்ணுணர்வின் அறவியலின் பரிணாமமாகவும் புரிந்துகொள்ள வேண்டிய காலம் வரும்

ஜெ

அன்புள்ள ஜெ.மோ.
//”சார் பெரிய ரைட்டர்!”//
படிக்கப் படிக்க சிரித்து மாளவில்லை. இத்தனை நாள் இக் கட்டுரையை எப்படி தப்பவிட்டேன் என்று தெரியவில்லை. அட்டஹாசம். ‘பெரிய ரைட்டரின்’ நண்பர் என்று சொல்லிக்’கொல்வதில்’ நானும் பெருமை அடைகிறேன்.
-வ.மு.முரளி

அன்புள்ள முரளி

நன்றி

பெரிய ரைட்டராக இருக்கும்போது உள்ள சிக்கலே அதை எப்படி பிறருக்கு தெரிவிப்பதென்பதுதான்

ஜெ

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
மிக ஆர்வத்தோடு இந்தக் குறுநாவலைப் படித்தேன். ஒரு சந்தர்ப்பம் பற்றியோ பொருள் பற்றியோ எழுத அந்தப் பொருள்பற்றி அனுபவம் அல்லது ஆராய்ச்சி இருப்பது அவசியம் என்பது என் கருத்து. அந்த வகையில் Arthur Hailey எனக்கு பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர். நீங்கள் இந்தப்பொருள் பற்றி இவ்வளவு அனுபவமுள்ளவற்போல் எப்படி எழுதுகிறீர்கள்? அந்த வகையில் பார்த்தால் விஷ்ணுபுரம் மாதிரி (நான் இன்னும் படித்ததில்லை.) சரித்திர நாவல்களை எழுத என்ன ஆராய்ச்சி செய்கிறீர்கள் என்று விளக்க முடியுமா?

நன்றி.
பாலா.

அன்புள்ள பாலா

ஆய்வைப்பொறுத்தவரை என் அனுபவ உண்மை ஒன்றுண்டு

ஒரு சூழல் குறித்து பொதுவான வாசிப்புக்கு பின்னர் எழுத ஆரம்பிக்க வேண்டும். எழுத்தின் போக்கில் என்ன தேவை உருவாகிறதோ அதை மேலும் மேலும் ஆராயலாம். வாசிப்பும் எழுத்தும் சேர்ந்து செல்வதே நல்லது. வாசித்து முடித்தபின் எழுத்து என்பது சாத்தியப்படாது

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
கிரியா பதிப்பகத்திற்கு என்ன பிரச்சினை? அபூர்வமான நல்ல நூல்களை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். கண்காட்சிக்கு செல்லும் ஒவ்வொரு பொழுதும் சென்று பார்க்கிறேன். அவர்களது பழைய பதிப்புகள் எதுவுமே இல்லை. சட்டமிடப்பட்டு காட்சிக்கு மட்டுமே வைத்திருக்கிறார்கள்.

பாலா

அன்புள்ள பாலா

க்ரியா இப்போது அதிக நூல்களை வெளியிடுவதில்லை. பெரும்பாலும் நிதியுதவிபெறும் நூல்களையே வெளியிடுகிறார்கள். ஒருகாலத்தில் அது ஒரு முன்னோடி பதிப்பகம். இன்று அதன் பணியை அது முடித்துவிட்டது, அவ்வளவுதான்

ஜெ

முந்தைய கட்டுரைஉயிர்மைகூட்டம் ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைபரப்பிசையை விமரிசித்தல் குறித்து…