‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 5

பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 2

தன் தனியறைக்குள் நுழைந்ததும் கர்ணன் உடலை நீட்டி கைகளை மேலே தூக்கி முதுகை வளைத்தான். அவன் உடலுக்குள் எலும்புகள் மெல்ல சொடுக்கிக் கொள்ளும் ஒலி கேட்டது. பெருமூச்சுடன் திரும்பி இரு கைகளையும் இடையில் வைத்து முதுகை சற்று திருப்பி அசைத்தபடி வாயிலருகே நின்ற அணுக்கரிடம் “நீராட்டறைக்குச் சொல்க!” என்றான். அவர் “ஆணை” என தலைவணங்கினார்.

அரண்மனையின் அந்த அறை அவனுக்காக தனியாக அமைக்கப்பட்டது. சம்பாபுரிக்கு அவன் வந்த மறுவாரமே அரண்மனையில் அச்சுவரில் இருந்த சாளரம் வெட்டி விலக்கப்பட்டு வாயிலாக்கப்பட்டு உயரமான குடைவுக் கூரையுடன் கூடிய அகன்ற அறையொன்று கட்டப்பட்டது. கீழே பதினெட்டு பெருந்தூண்களின் மேல் அது நின்று கொண்டிருந்தது. அந்த அறைக்குள் மட்டுமே முற்றிலும் நிமிர்ந்து நிற்க முடியும். அதற்குள் வந்ததுமே அங்கு உடல் நீட்ட முடியுமென்னும் எண்ணம் வந்து அவனைத் தொடும். உள்ளே நுழைந்த ஒருமுறையேனும் கைகளை தலைக்கு மேல் தூக்கி உடல் நீட்டி சோம்பல் முறிக்காமல் அவன் இருந்ததில்லை.

சிவதர் “தாங்கள் உச்சிப்பொழுதில் உணவருந்தவில்லை” என்றார். “ஆம். ஆனால் நீராடிவிட்டு அருந்தலாம் என்றிருக்கிறேன்” என்றான். அணுக்கர் தலைவணங்கினாலும் அவர் விழிகளில் இருந்த வினாவைக் கண்டு புன்னகைத்தபடி அருகே வந்து அவர் தோளில் கைவைத்து குனிந்து புன்னகையுடன் “அத்தனை சொற்கள் சிவதரே. ஒவ்வொன்றும் கடந்த காலத்திலிருந்து வந்தவை. அவற்றை நன்கு கழுவி மீண்டெழாமல் இந்நாளை நான் முன்னெடுக்க முடியாது” என்றான்.

சிவதர் “ஆம்” என்ற பின் சிரித்து “தாங்கள் புன்னகையுடன் அக்கதையை கேட்டீர்கள். பரசுராமர் என்றால் மழு எடுத்திருப்பார்” என்றார். கர்ணன் “ஆம். சூதர்களை கொல்வதற்காக பின்னும் சில முறை பாரதவர்ஷத்தை அவர் சுற்றி வரவேண்டியிருக்கும்” என்றான். அணுக்கர் உரக்க நகைத்து “மரங்களை வெட்டி வீழ்த்தலாம். நாணல்களை யாரால் ஒழிக்க முடியும்? அவை பல்லாயிரம் கோடி விதைகள் கொண்டவை” என்றார்.

கர்ணனும் நகைத்துவிட்டான். பின்பு எண்ணமொன்று எழ திரும்பி சாளரத்தை பார்த்தபடி இடையில் கைவைத்து சில கணங்கள் நின்றான். அவன் முகம் மலர்ந்தபடியே சென்று உதட்டில் ஒரு சொல் எழுந்தது. “அரிய உவமை சிவதரே. நாணல்களை இப்போது என் அகக்கண்ணில் கண்டேன். சின்னஞ்சிறிய உடல் கொண்டவை. ஆனால் அவற்றின் விதைக் கதிர்கள் மிகப்பெரியவை. அவை முளைத்ததும் வாழ்வதும் அவ்விதைக்கதிர்களை உருவாக்குவதற்கு மட்டும்தானா?” என்றான். “அது உண்மைதானே” என்றார் சிவதர். “நாணல்களின் விதைகள் காற்றில் நிறைந்துள்ளன. கையளவு ஈரம் போதும். அங்கு அவை முளைத்தெழுகின்றன.”

கர்ணன் “உண்மை. இந்த நிலத்தை புல்லும் நாணலுமே ஆள்கின்றன” என்றான். சிவதர் தலைவணங்கி வெளியே சென்றார். அந்த அறைக்குள் மட்டும் தான் உணரும் விடுதலை உணர்வுடன் கர்ணன் கைகளை பின்னால் கட்டியபடி சுற்றி வந்தான். பன்னிரு பெரிய சாளரங்களால் தொலைவில் தெரிந்த கங்கைப் பெருக்கை நோக்கி திறந்திருந்தது அவ்வறை. வடக்கிலிருந்து வந்த காற்று அறைக்குள் சுழன்று திரைச்சீலைகளையும் பட்டுப்பாவட்டாக்களையும் அலைப்புறச்செய்து தெற்குச் சாளரம் வழியாக கடந்து சென்றது. அவன் உடலிலிருந்து எழுந்து பறந்த சால்வை இனியதோர் அசைவை கொண்டிருந்தது.

தன்னுள்ளத்தில் நிறைந்திருந்த இனிமையின் பொருளின்மையை மீண்டும் மீண்டும் உணர்ந்து கொண்டிருந்தான். அது ஏன் என்று தன் உள்ளம் ஆழத்தில் அறிந்திருப்பது நெடுநேரத்திற்குப்பின் தெற்குச் சாளரத்தின் அருகே சென்று படபடத்துக் கொண்டிருந்த திரைச்சீலையை கையால் பற்றி நிறுத்தியபோது ஒரு மெல்லிய உளத்தொடுகை என உணர்ந்தான். ஆழத்தில் தெரிந்த முள்ளொன்று பிடுங்கப்படுகையில் எழும் வலியும் அதன் பின் எழும் இனிய உளைச்சலும்தான் அது. ஆம், என்று அவன் தலை அசைத்தான்.

அங்கிருக்கையில் எவராலோ பார்க்கப்படுவது போல் உணர்ந்தான். அதை அவன் வியப்புடன் உணர்ந்திருக்கிறான். அங்க நாடெங்கும் அத்தனை விழிகளும் அவன் மீதே குவிந்திருந்தன. ஒரு விழியையும் அவன் உணர்ந்ததில்லை. அந்தத் தனியறைக்குள் வருகையில் மட்டும் ஏதோ ஒரு நோக்கால் அவன் தொடரப்பட்டான். ஒருவரென்றும் பலரென்றும் இன்மையென்றும் இருப்பென்றும் தன்னை வைத்து ஆடும் ஒரு நோக்கு.

சிவதர் வந்து வாயிலில் நின்று “நீராட்டறை சித்தமாக உள்ளது அரசே” என்பது வரை அவன் சீரான காலடிகளுடன் உலவிக் கொண்டிருந்தான். சிவதரின் குரல் கேட்டதும் நின்று பொருளற்ற விழிகளை அவர் புறம் திருப்பி “என்ன?” என்றான். எப்போதும் அவன் தன்னுள் சுழன்று கொண்டிருப்பவன் என்பதை சிவதர் அறிந்திருந்தார். மாபெரும் நீர்த்துளி போல தன்னுள் தான் நிறைத்து ததும்புவது மத்தகம் எழுந்த மதவேழத்தின் இயல்பு.

கர்ணனின் நடையில் இருந்த யானைத்தன்மையை சூதர் அனைவரும் பாடியிருந்தனர். ஓங்கிய உடல் கொண்டு நடக்கையிலும் ஓசையற்று எண்ணிய இடத்தில் எண்ணியாங்கு வைக்கப்படும் அடிகள். காற்று பட்ட பெருமரக்கிளைகள் போல் மெல்லிய உடலசைவுகள். நின்று திரும்புகையில் செவி நிலைத்து மத்தகம் திருப்பும் தோரணை. சிறுவிழிகள். கருமை ஒளி என்றான ஆழம் கொண்டவை அவை. அவனை நோக்குகையில் சித்தம் அங்கொரு யானையையே உணரும் விந்தையையே சிவதர் எண்ணிக் கொண்டிருந்தார். சூதர்கள் பாடிப்பாடி அவ்வண்ணம் ஆக்கிவிட்டனரா என்று வியந்தார்.

நீராட்டறை வாயிலை அடைந்ததும் அங்கு காத்து நின்றிருந்த சுதமரும் பிராதரும் தலைவணங்கி “அங்க நாட்டரசருக்கு நல்வரவு. வெற்றியும் புகழும் ஓங்குக!” என்று வாழ்த்தியபோது கர்ணன் திரும்பி சிவதரிடம் “எனது ஆடைகள் ஒருங்கட்டும்” என்றான். அவர் “எவ்வரண்மனைக்கு?” என்றார். கர்ணன் ஒரு கணம் தயங்கிவிட்டு, “முதல் அரண்மனைக்கு” என்றான்.

சிவதர் ஆம் என்பது போல் தலையசைத்தபின் “ஆனால் இன்று தாங்கள் கொற்றவை ஆலயத்துப் பூசனைக்கு பட்டத்தரசியுடன் செல்லவேண்டும் என்பது அரச முறைமை” என்றார். கர்ணன் “அறிவேன்” என்றான். “என்னுடன் இளையவளே வரமுடியும். இளையவள் முடிசூடி வர எளிய சூதப்பெண்ணாக உடன்வர விருஷாலிக்கு ஒப்புதல் இல்லை. ஆகவே கிளம்புவதற்கு முன் அவளைச் சென்று பார்த்து சில நற்சொற்கள் சொல்லி மீள வேண்டியவனாயிருக்கிறேன்” என்றான். “ஆம், அது நன்று” என்றார் சுதமர். “அமைச்சரிடம் கூறிவிடுங்கள்” என்றபின் கர்ணன் தன் மேலாடையை பிராதரிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றான்.

மருத்துவரான சசாங்கர் திரும்பி மெல்லிய குரலில் “யானை நீராட்டு இது. சற்று நேரமெடுக்கும் சிவதரே. அமைச்சரிடம் சொல்லிவிடுங்கள்” என்றார். அச்சொல் முதலில் சிவதரை திகைக்க வைத்து பின்பு நகைக்க வைத்தது. “ஆணை” என்றபின் புன்னகையுடன் அவர் திரும்பி நடந்தார்.

சசாங்கர் முன்னால் ஓடி கர்ணனிடம் “தாங்கள் ஆவி நீராட்டு கொண்டு பல நாட்களாகின்றன அரசே” என்றார். “வெந்நீராட்டுதான் ஒவ்வொரு நாளும் நிகழ்கிறதே” என்றான் கர்ணன். “நீராட்டுகள் அனைத்தும் தோலை கழுவுபவை. ஆவி நீராட்டு தோலுக்குள் கரந்த அழுக்குகளை வெளிக்கொணர்ந்து கழுவுவதற்கு” என்றார். “நன்று” என்றபடி கர்ணன் கைதூக்கி நிற்க, பிராதர் அவன் ஆடைகளை களைந்தார்.

கர்ணன் “சசாங்கரே உள்ளத்தின் அழுக்குகளை வெளிக்கொணரும் நீராட்டு என ஒன்று உண்டா?” என்றான். “உண்டு” என அவர் புன்னகையுடன் சொன்னார். “அதை இறைவழிபாடென்பார்கள். உகந்த தெய்வத்தின் முன் உள்ளும் புறமும் ஒன்றென நிற்றல், கண்ணீரென ஒழுகி கரந்தவை வெளிச்சென்று மறையுமென்பார்கள்.”

கர்ணன், “என் தலைக்குமேல் தெய்வங்களில்லை சசாங்கரே” என்றான். “தலைக்கு மேல் தெய்வங்கள் இல்லாத சிறு புழு கூட இங்கு இல்லை அரசே. தாங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள்” என்றார் சசாங்கர். “ஆம், உணர்ந்ததில்லை. அந்த தெய்வம் தன்னை காட்டட்டும்” என்றபடி கர்ணன் சிறு பீடத்தில் அமர பிராதரும் அவரது உதவியாளரும் லேபனங்களை எடுத்து அவன் உடலில் பூசத்தொடங்கினர். அவர்களின் தொடுகை அவன் இறுகிய தசைகளை நெகிழச் செய்தது.

சசாங்கர் எப்போதும் என அவன் முன் நின்று அவ்வுடலை தன் விழிகளால் மீள மீள உழிந்தார். நிகரற்ற பேருடல். முழுமையின் அழகு. பிறந்திறந்த பல கோடி உடல்கள் கொண்ட கனவின் நனவாக்கம். ஒவ்வொரு தசையும் எவ்வண்ணம் இருக்க வேண்டும் என்று அவர் கற்ற நூல்கள் சொல்லுமோ அவ்வண்ணமே இருந்தது. உறை பிளந்தெடுத்த காராமணியின் உயிர்ப் பளபளப்பு. நகங்கள் கரிய சிப்பி ஓடுகளின் ஒளி கொண்டவை. எங்கோ எவரோ இவ்வுடல் கண்டு கண்ணேறு அளித்திருக்க வேண்டும். அவன் இடத்தொடையில் அந்த ஆறா வடு ஓர் ஊமை விழியென திறந்திருந்தது.

மருத்துவரும் நீராட்டறைச் சேவகரும் ஏவலரும் அனைவரும் அறிந்தது அது. அவர்களின் விரல்கள் அந்த வடுவை மெல்ல அணுகி வளைந்து சென்றன. சசாங்கர் அருகணைந்து அந்த வடுவின் விளிம்பில் தொட்டார். “இன்னமும் இங்கு வலி உள்ளதா அரசே?” என்றார். “வலி இல்லாத நாளை நான் அறிந்ததில்லை” என்றான் கர்ணன். “மருத்துவ நெறிகளின்படி இங்கு வலி இருக்க எந்த அடிப்படையும் இல்லை. நரம்புகள் அறுபட்டிருந்தாலும் அவை பொருந்தி ஒன்றாகும் காலம் கடந்துவிட்டது” என்றார் சசாங்கர். “ஆனால் வலியுள்ளது என்பதல்லவா உண்மை?” என்றான் கர்ணன்.

“வலி உள்ளது என்று தங்கள் உள்ளம் எண்ணுகிறது அல்லது தங்கள் ஆத்மா வலியை விழைகிறது” என்றார் சசாங்கர். கசப்புடன் சிரித்து “வெவ்வேறு வகையில் இதை அனைவருமே சொல்லிவிட்டனர். ஆனால் சில இரவுகளில் உச்சகட்ட வலியில் என் உடலே வில் நாணென இழுபட்டு அதிர்வதை நான் அறிவேன். என் உடலிலிருந்து பரவிய வலி இந்த அரண்மனைச் சுவர்களை இந்நகரை வானை நிறைத்து என்னை முற்றிலுமாக சூழ்ந்து கொண்டிருக்கும். வலியில் மட்டுமே உயிர்கள் முழுத்தனிமையை அறிகின்றன என்று அறிந்துளேன். அப்போது என் நீங்கா நிழலாக தொடரும் ஐயங்களும் கசப்புகளும் அச்சங்களும் கூட இருப்பதில்லை” என்றான் கர்ணன்.

சசாங்கர் “அவ்வலியின் ஊற்றை எப்போதேனும் தொட்டு நோக்கியிருக்கிறீர்களா அரசே?” என்றார். “இல்லை, வலியின்போது சிந்தனை என்பதில்லை. வலி என்பது எப்போதும் அதை தவிர்ப்பதற்கான தவிப்பு மட்டுமே” என்றான் கர்ணன். அவன் உடலை லேபனத்தால் நீவிக் கொண்டிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். “ஆம். அதை அனைவருமே சொல்வார்கள். ஆனால் வலியை எவ்வுள்ளமும் விழைகிறது” என்றார் சசாங்கர். புறக்கணிப்பாக கைவீசி “அது வீண்பேச்சு” என்றான் கர்ணன். “இல்லை, வலியை உள்ளம் விழைவதனால்தான் அத்தனை நாள் அது நினைவுக்கு வைத்திருக்கிறது. விலக்க விழைவனவற்றை நினைவிலிருந்தும் விலக்கி விடுவதே மானுட இயல்பு. வலியின் கணங்களை மறந்தவர் எவருமில்லை” என்றார் சசாங்கர்.

கர்ணன் தலையசைத்து மறுத்தான். “மருத்துவ நூலில் ஒரு கூற்றுண்டு. வலியோ இறப்போ பழியோ அழிவோ மானுடன் ஒரு கணமேனும் விரும்பிக் கோராமல் தெய்வங்கள் அருள்வதில்லை” என்றார் சசாங்கர். கர்ணன் “இத்தகைய சொல்லாடல்களில் சலிப்புற்றுவிட்டேன் சசாங்கரே” என்றான். “தேய்ந்த சொற்கள். புளித்து நுரைத்த தத்துவங்கள்.” சசாங்கர் “மானுடர் அனைவரும் அறிந்த உண்மையை எங்கோ எவ்வகையிலோ அனைவரும் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். எது ஒன்று சொல்லிச் சொல்லி தேய்ந்து சலிப்பூட்டும் சொல்லாட்சியாக மாறிவிட்டிருக்கிறதோ அதுவே அனைவருக்குமான உண்மை” என்றார்.

சினத்துடன் விழிதூக்கி “அப்படியென்றால் இந்த வடுவை நான் விழைந்தே வலியாக்கிக் கொண்டிருக்கிறேன் என்கிறீர்களா?” என்றான் கர்ணன். “நீங்கள் விழையவில்லை” என்றார் சசாங்கர். “உங்கள் துரியவிரிவில் குடிகொள்ளும் ஆத்மன் விரும்பியிருக்கலாம்.” “எதற்காக?” என்றான் கர்ணன். ஏளனத்துடன் இதழ்கள் வளைய “வலியால் ஆன்மன் நீராடி தூய்மையடைகிறான் என்று மட்டும் சொல்லவேண்டாம். அதை நேற்றே ஒரு கவிஞர் சொல்லிவிட்டார். அவருக்கான பரிசிலையும் பெற்றுச் சென்றுவிட்டார்” என்றான்.

சசாங்கர் புன்னகையுடன் “இது புதியது” என்றார். “ஆத்மன் உணரும் ஒன்றுண்டு. அவன் அங்கு அமர்ந்திருக்கிறான். சுற்றிலும் அவன் காண்பதெல்லாம் அவனையே அவனுக்குக் காட்டும் ஆடிகளின் முடிவற்ற பெருவெளி. சிதறி சிதறிப் பறந்தலையும் தன்னைக் கண்டு அஞ்சி மீட்டு குவித்துக்கொள்ள அவன் தவிக்கிறான். அவனுக்கொரு மையம் தேவையாகிறது. அரசே, ஒவ்வொரு மனிதனும் தான் அடைந்த ஒன்றை மையமாக்கி தன் ஆளுமையை முற்றிலும் சுருட்டி இறுக்கி குவியம் கொள்ளச் செய்கிறான். விழைவுகளை, அச்சங்களை, வஞ்சங்களை, அவமதிப்புகளை, இழப்புகளை. இருத்தல் என்பது இவ்வகை உணர்வு நிலைகள் வழியாக ஒவ்வொரு உள்ளமும் உருவாக்கிக் கொள்ளும் ஒன்றேயாகும்.”

“ஆக, இவ்வடுவினூடாக நான் என்னை தொகுத்துக் கொண்டிருக்கிறேன் என்கிறீர்கள்” என்றான் கர்ணன். “இல்லை தொகுத்துக் கொண்டிருக்கிறீர்களா என்கிறேன்” என்றார் சசாங்கர் சிரித்தபடி.

ஏவலர் கைகாட்ட மெல்ல எழுந்து கரிய பளிங்கில் வெட்டப்பட்ட நீராட்டு தொட்டியில் இறங்கி உடல் நீட்டி கர்ணன் படுத்துக் கொண்டான். அவர்கள் அதை மரத்தால் ஆன மூடியால் மூடினர். அவன் தலை மட்டும் வெளியே தெரிந்தது அதன் இடுக்குகளின் வழியாக நீராவி எழுந்து வெண்பட்டு சல்லாத்துணி போல் காற்றில் ஆடியது. அவன் நீண்ட குழலை எண்ணெய் தேய்த்து விரல்களால் நீவிச் சுழற்றி பெரிய கொண்டையாக முடிந்தார் பிராதர். கர்ணன் கண்களை மூடிக்கொண்டு உடலெங்கும் குருதி வெம்மை கொண்டு நுரைத்து சுழித்து ஓடுவதை அறிந்தான். அவன் நெற்றியில் நரம்புகள் புடைத்தன.

5

சசாங்கர் “ஒவ்வொரு முறையும் இந்த வலியை அறிகையில் நீங்கள் இருக்கிறேன் என்று உணர்கிறீர்கள் அல்லவா?” என்றார். “என்றேனும் சில நாள் இந்த வலியின்றி இருந்திருக்கிறீர்களா?” கர்ணன் “ஆம்” என்றான். “என்ன உணர்ந்தீர்கள்?” என்றார் சசாங்கர். கர்ணன் தலையசைத்து “அறியேன். இப்படி சொல்லலாம், வலியின்மையை ஒவ்வொரு கணமும் உணர்ந்து கொண்டிருந்தேன்” என்றான். சசாங்கர் நகைத்தபடி “அதையே நானும் எண்ணினேன். வலியின்மை காலமென்றாகியிருக்கும். அக்காலத்தை கணக்கிட்டு சலித்திருப்பீர்கள். மீண்டும் அந்த வலி தொடங்கிய கணம் ஆம் என்று ஆறுதல் கொண்டு எளிதாகியிருப்பீர்கள். வலியின்மையால் இழுத்து முறுக்கப்பட்ட உங்கள் தசைகள் விடுபட்டு நீண்டிருக்கும்” என்றார்.

கர்ணன் கண்களை மூடியபடியே புன்னகைத்து “நன்றாக தொகுத்துவிட்டீர்கள் சசாங்கரே. தங்கள் குரலில் உள்ளது வலிக்கான பெருவிழைவு என்பதை உய்த்து அறிகிறேன். தங்களுக்கும் பெருவலி வரவேண்டுமென்று இத்தருணத்தில் நான் வாழ்த்த வேண்டுமா என்ன?” என்றான். சசாங்கர் நகைத்து “தேவையில்லை. நான் பிறரது வலியைக் கொண்டு என்னை தொகுத்துக் கொள்ள கற்றவன். ஆகவேதான் நான் மருத்துவன்” என்றார். கர்ணன் கண்களை திறக்காமலேயே உரக்க நகைத்தான்.

அவர்கள் அந்த மூடியைத் திறந்து கர்ணனை வெளியே தூக்கினர். வெம்மைகொண்ட கருங்கலம் போல் செம்மைகலந்து உருகி வழிவது போல் இருந்த அவன் உடலை மெல்லிய மரவுரியால் துடைத்தனர். பின்பு குளிர்நீர் தொட்டியில் அமரச்செய்து ஈச்ச மரப்பட்டையால் நுரை எழத்தேய்த்து நீராட்டினர். நறுஞ்சுண்ணத்தை அவன் கைமடிப்பிலும் கால் மடிப்பிலும் பூசினர். அவன் கூந்தலிழையை விரித்து நன்னீராட்டி அகில் புகையில் உலரவைத்தனர்.

சசாங்கர் களிமண்ணைப் பிசைந்து ஒரு சிற்பத்தை உருவாக்கி உலரவைத்து எடுப்பது போல அவனை அவர்கள் உருவாக்கி எடுப்பதை பார்த்து நின்றார். கைகளை நீவி உருவினர். கால்விரல்களை ஒவ்வொன்றாக துடைத்தனர். நகங்களை வெட்டி உரசினர். கர்ணன் தன் மீசையை மெல்லிய தூரிகையால் மெழுகு பூசி நீவி முறுக்கி வைப்பதை விழிசரித்து நோக்கியபடி கீழுதடுகளை மட்டும் அசைத்து “இந்த வடு மட்டும் இல்லையென்றால் உங்களுக்கு மருத்துவப் பணியின் பெரும்பகுதி குறைந்திருக்கும் அல்லவா?” என்றான்.

சசாங்கர் “முற்றிலும் மருத்துவப் பணியை நிறுத்தியிருப்பேன் அரசே” என்றார். “அப்போது ஒவ்வொரு மருத்துவனும் கனவில் ஏங்கும் முழுமை உடல் ஒன்றை கண்டவனாவேன். பின்பு எனக்கு எஞ்சியிருப்பது ஆடை களைந்து மரவுரி அணிந்து வடக்கு நோக்கிச் சென்று தவமிருந்து ஆசிரியனின் அடிகளை சென்றடைவது மட்டுமே.” கர்ணன் புன்னகைத்து “தெய்வங்கள் மருத்துவருக்கும் சிற்பிக்கும் அந்த வாய்ப்பை அளிப்பதில்லை” என்றான். “ஏனென்றால் அவர்கள் பருப்பொருளில் தங்கள் கனவை காணவேண்டியிருக்கிறது. கவிஞர்களுக்கு ஞானம் எளிது. கற்பனைக்கு இப்புவியில் பொருண்மையென ஏதும் தேவையில்லை.”

“மண்ணுக்கு வருகையில் தெய்வங்களும் கூட சிறியதோர் கறையைச் சூடியபடியே வருகின்றன. பழுதற்ற முழுதுடல் கொண்டவனென்று துவாரகையின் யாதவனை சொல்கிறார்கள். ஆனால் அவனுக்கும் ஒரு குறை உள்ளது” என்றார் சசாங்கர். “என்ன?” என்றான் கர்ணன். “அவனது இடது காலின் நகம். அது நூல்கள் வகுத்த நெறிமுறைப்படி அமையவில்லை. சற்றே வளைந்து நீண்டு அரைத்துயில் கொண்ட மானின் கண்கள் போல் உள்ளது என்கிறார்கள்.” கர்ணன் நகைத்து “அல்லது ஒரு முழுதுடல் அமையலாகாது என்ற உள விழைவு அவ்வண்ணம் ஒன்றை கண்டுகொள்கிறதா?” என்றான். “இருக்கலாம்” என்றார் சசாங்கர் சிரித்துக்கொண்டே.

நீராடி சிற்றாடை அணிந்தெழுந்து நின்ற கர்ணன் “நன்று சசாங்கரே, என் வலிக்கு மருத்துவம் இல்லை என்ற ஒற்றை வரியை ஒரு குறுநூல் அளவுக்கு விரித்துரைக்க உங்களால் முடிந்துள்ளது. ஆழ்ந்த மருத்துவப் புலமை இன்றி எவரும் அதை செய்ய இயலாது. இதற்கென்றே உங்களுக்கு பரிசில் அளிக்க வேண்டியுள்ளது நான்” என்றான். சசாங்கர் சிரித்தபடி “பரிசில் தேவையில்லை என்றொரு சூதன் சொன்னால் அச்சொல்லில் விரியும் அவன் உள்ளத்து அழகுக்காக பிறிதொரு பரிசிலை அவனுக்கு அளிப்பவர் நீங்கள் என்றொரு சூதனின் கேலிக்கவிதை உண்டு” என்றார். கர்ணன் புன்னகைத்தபடி “செல்கிறேன். மீண்டும் ஒருமுறை பார்ப்போம்” என்றபடி வெளியே சென்றான்.

சிவதர் அங்கே அவனுக்காக காத்து நின்றிருந்தார். “ஆடைகள் எடுத்து வைக்கப்பட்டுள்ளனவா?” என்றபடி கர்ணன் நடந்தான். “ஆம்” என்றார் சிவதர். அக்குரலில் இருந்த ஐயத்தைக் கண்டு “சொல்லுங்கள்” என்றான். “முதல்அரசியிடம் சென்று தாங்கள் வரவிருப்பதை சொன்னேன்” என்றார். கர்ணன் ஒன்றும் சொல்லவில்லை. “இன்றிரவு தனியாக துர்க்கை பூசைக்கு செல்லவிருந்தால் மட்டும் அங்கு சென்றால் போதும் என்றும் இல்லையேல் தங்களைப் பார்க்க விழையவில்லை என்றும் அரசி சொன்னார்கள்” என்றார் சிவதர்.

“முன்னரே நிலையழிந்திருந்தார்கள். மதுவருந்தியிருப்பார்களோ என ஐயுற்றேன். என்னை வெளியே போகும்படி கூச்சலிட்டார்கள். முறையற்ற சொற்களும் எழுந்தன. முதியசெவிலி பாரவி அரசி தங்கள் சொற்கள் என்று பலமுறை அடங்கிய குரலில் எச்சரித்த பின்னரே சொற்களைக் கட்டுப்படுத்திக் கொண்டார்” என்றார் சிவதர். “கொற்றவை பூசனைக்கு நான் இளையவளுடன் செல்வது இது முதல்முறை அல்ல” என்றான் கர்ணன். “ஆம், இன்று எவரோ எதையோ சொல்லியிருப்பார்கள் என எண்ணுகிறேன்” சிவதர் சொன்னார். “ஒவ்வொருநாளும் அன்று அவர்களிடம் பேசியவர்களைப்போல் ஆகிவிடுகிறார்கள்….”

கர்ணன் தன் அணியறைக்கு சென்றான். அங்கிருந்த அணிச்சேவகர்கள் அவனை அழைத்துச் சென்றனர். குறுபீடத்தில் அமர்ந்தபின் இருவர் அவன் கூந்தலை அணிசெய்யத்தொடங்கினர். இருவர் அவனுக்கு இடைக்கச்சையை சுற்றி அணிவித்தனர். சிவதர் “அவர் தன் ஆற்றலின்மையை உணர்கிறார். எடையற்றவை விசையால் எடைகொள்ள விழைகின்றன என்று ராஜ்யதர்மமாலிகையில் ஒரு வரி உண்டு. எளிய உள்ளங்கள் சினத்தையும் வெறுப்பையும் வஞ்சத்தையும் திரட்டி அவற்றின் விசையால் தங்களை ஆற்றல்கொண்டவையாக ஆக்கிக்கொள்கின்றன” என்றார். கர்ணன் “அவளை மேலும் தனிமைப்படுத்துகிறது அது” என்றான்.

“ஆம், நான் பலமுறை பலவகை சொற்களில் சொன்னேன். பட்டத்தரசியின்றி துர்க்கை பூசை நிகழும் வழக்கமில்லை என்று. சூதன் மகன் அரசாளும் வழக்கம் மட்டும் முன்பிருந்ததோ என்று கூவினார். நான் சொல்லெடுப்பதற்கு முன் ’சென்று சொல்லும் உமது சூரியன் மைந்தரிடம், செங்கோலல்ல குதிரைச் சவுக்கே அவர் கைக்கு இயல்பானதென்று’ என்றார். அதற்குப் பின் நான் அங்கு நிற்கவில்லை.” கர்ணன் “அது ஒரு புதிய சொல் அல்ல” என்றான். இதழ்கள் வளைய “என் தந்தை என்னிடம் எப்போதும் சொல்வதுதான் அது. குதிரைச்சவுக்கே ஒருவகை செங்கோல் என நம்புகிறவர் அவர்” என்றான்.

“தங்கள் தந்தையும் தங்களைப் பார்க்கும் விருப்பை தெரிவித்தார்” என்றார் சிவதர். “இன்றொரு நாள் இருவரையும் சந்திக்கும் உள ஆற்றல் எனக்கில்லை” என்றான் கர்ணன். கண்களை மூடிக்கொண்டு தன் உடலை அணியர்களுக்கு ஒப்புக்கொடுத்தான். தன் முன் முழுதணிக்கோலம் பூண்டு ஒளிபெற்று திரண்டு வந்த கர்ணனை நோக்கியபடி சிவதர் விழிவிரித்து நின்றார். இருண்ட வானில் முகில் கணங்கள் பொன்னணிந்து சிவந்து சுழல் கொண்டு புலரி என ஆவது போல! அந்த வரி முன்பொருமுறை தன் உள்ளத்தில் தோன்றியபோது இல்லத்தில் எவருமறியாது ஆமாடப்பெட்டிக்குள் கரந்திருந்த ஓலையில் அதை எழுதி அடுக்கி உள்ளே வைத்தார். எவருமறியாத வரிகளின் தொகுதியாக அந்தப்பேழை அவ்வறையிருளுக்குள் இருந்தது.

அமர்ந்திருக்கையிலும் வலக்காலை சற்றே முன் வைத்து நீள்கரங்களை பீடத்தின் கைப்பிடி மேல் அமர்த்தி மணிமுடி சூடியவனைப்போல் நிமிர்ந்து மறுகணம் எழப்போகிறவனைப்போல் உடல் மிடுக்குடன் அமர்ந்திருந்தான். அவர்கள் அவன் குழல் சுருளில் மணிமாலைகளை பின்னினர். கழுத்தில் மலர்ப்பொளி ஆரமும் நீண்ட நெருப்பு மணியாரமும் அணிவித்தனர். தோள்வளை சூட்டினர். இடையில் பொற்சல்லடமும் செறிசரமும் அணிவித்தனர். ஒருவன் குனிந்து அவன் கால்களில் பொற்கழல் பூட்டினான். கங்கணங்களை அவன் கைகளில் இட்டு பொருத்தை இறுக்கினர்.

ஒவ்வொரு அணியும் அவன் உடலில் அமைந்து முழுமைகொண்டது. சொல்லுக்குப் பொருளென தன்னை அணிக்கு அமைத்தது அவன் உடல். என்றோ ஏதோ பொற்சிற்பியின் கனவிலெழுந்த அவன் உடல் கண்டு அவை மண்நிகழ்ந்தன போலும் என்று எண்ணச்செய்தது அவற்றின் அமைவு. அணிபூட்டி முடிந்ததும் அணியர் பின்னகர தலைமைச் சமையர் புஷ்பர் தலைவணங்கி “நிறைவுற்றது அரசே” என்றார். அவன் எழுந்து கைகளை நீட்டி உடலை சற்று அசைத்தபடி ”செல்வோம்” என்றான்.

முந்தைய கட்டுரைநீ விரும்புவது….
அடுத்த கட்டுரைவெறுப்பின் குரல்