பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 1
“வெல்லற்கரியோர் என்று இப்புவியில் எவருமில்லை. விண்ணிழிந்து மண் நிறைத்த இறைவடிவங்கள் கூட. விரிகதிர் மைந்தா, தன்னால் மட்டுமே வெல்லப்படுபவன் நிகரற்றவன். தெய்வங்கள் அவனை மட்டும் நோக்கி புன்னகைக்கின்றன. ஆம். அவ்வாறே ஆகுக!” என்றான் சூதன். அவனைச் சூழ்ந்திருந்த விறலியும் சூதரும் ஒற்றைக் குரலில் இணைந்து “ஓம்! ஓம்! ஓம்!” என்றனர். தலைக்கு மேல் கைகுவித்து இசைக்கலங்களை தாழ்த்தி விழிகள் சரித்து அந்த ஓங்காரத்தில் உளம் கரைந்து சூதன் அசைவற்று நின்றிருந்தான்.
ஓரிரு கணங்களுக்குப்பின் பாடல் முடிந்ததை அவை உணர உடலசைவுகள் வழியாக இசைக்கூடம் உயிர்கொண்டது. இரு சிற்றமைச்சர்கள் பெருமூச்சு விட்டனர். கைகள் தழைந்து உடலுரசி விழும் ஒலியும் அணிகள் குலுங்கும் ஓசையும் கேட்டன. முதன்மை அமைச்சர் ஹரிதர் விழிகளைத் திருப்பி ஏவலரிடம் பரிசில்தாலங்களை கொண்டுவர ஆணையிட்டார். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் மெல்லொலிகள் எழுந்தன.
கர்ணன் அங்கிலாதவன் போல் அமர்ந்திருந்தான். ஹரிதர் அவனை நோக்கியபின் மெல்ல தொண்டை செருமி இருமுறை ஓசையெழுப்பினார். அவன் விழிப்புறவில்லை என்று கண்டபின் “அரசே” என்றார். அருகே தெரிந்தும் அணுகவியலா தொலைவிலிருக்கும் நீலமலைகளைப்போல அவனிருந்தான். “அரசே” என்றார் அவர். மூன்றாம் முறை குரல் எழுப்பியதும் திரைச்சித்திரம் உயிர்கொள்வது போல் அசைந்து சிவந்த விழிகளை மேலே தூக்கி “என்ன?” என்றபின், உடனே சொல் கொண்டு அனைத்தையும் உணர்ந்து “ஆம்” என்றான்.
“எங்கோ இருந்தேன்” என்றபின் தன் தோள் சரிந்த சால்வையை கைகளால் தொட்டான். அணுக்கன் அதை எடுத்து மடித்து அவன் தோளில் அமைத்து அதன் மடிப்புகளை நீவினான். கர்ணன் எழுந்து சூதனை நோக்கி கைகூப்பி “வணங்குகிறேன் சூதரே! இங்கு நானும் நீங்களும் பாரதத்தின் விழைவும் சேர்ந்து சமைத்த கதையொன்றை கேட்டேன். இது என்றும் இங்கு நிகழ்வதாக!” என்றான்.
சூதன் “மூன்றும் சந்திக்கும் இடத்திற்கே வாக் என்று பெயர். அதன் மேல் வெண்கலை உடுத்து விழிமணி மாலையும் அமுதகலயமும் ஏந்தி வீணை மீட்டி அமர்ந்திருக்கும் எழிலோள் அனைத்துமியற்றுபவள். சொல்வதெல்லாம் அவளே. சொல்லை அறிபவளும் அவளே. சொற்பொருளான அவளை பிரம்ம சொரூபிணி என்கின்றன நூல்கள்” என்றார். “அவள் வாழ்க!” என்றபின் கர்ணன் திரும்பி தன் ஏவலரை நோக்க பரிசுத்தாலங்களை நீட்டினர்.
மங்கலப்பொருட்களுடன் பொன்நாணயங்களும் பட்டும் வைக்கப்பட்ட பித்தளைத் தாலத்தை ஏவலர் கையிலிருந்து வாங்கி சூதனுக்கு அளித்தான். அவன் முகம் மலர்ந்து அதை பெற்றுக்கொண்டு தலைவணங்கி “அங்க நாட்டில் ஆணவம் மிக்க சூதனின் பேராசையும் தோற்றுப்போகும் என்பார்கள். நான் முற்றிலும் தோற்றிருக்கிறேன்” என்றான். கர்ணன் “கொடுப்பதனால் நிறையும் கருவூலம் இங்குள்ளது சூதரே” என்றபடி அடுத்த தாலத்தை முதிய சூதருக்கு அளித்தான்.
அவர்கள் ஒவ்வொருவரும் பொன்னைக்கண்டு உவகைகொண்டனர். விறலிக்கு தாலத்தை அளித்தபோது அவள் அதை பெற்றுக்கொண்டு தலைவணங்கி “இங்கு பரிசில் பெற்றபின் சூதர்கள் ஓராண்டுகாலம் பிற மன்னரை விழி கூர்ந்து நோக்குவதில்லை என்பார்கள். நாங்கள் இன்னும் மூன்றாண்டு காலம் எங்களுக்காக மட்டுமே பாடவேண்டும் போலுள்ளது” என்றாள்.
கர்ணன் நகைத்து “பாடலுக்குப்பின் சூதனை மன்னன் புகழவேண்டுமென்பதுதான் மரபு” என்றான். அமைச்சர்களும் மெல்ல சிரித்தனர். கர்ணன் கொடுத்ததில் நிறைவுகொள்ளாமல் திரும்பி ஏவலரை நோக்கியபின் தன் நெஞ்சிலிட்ட ஆரத்தை கழற்றி சூதனுக்கு அணிவித்தான். சூதன் திகைத்து பின் நெகிழ்ந்து “இது அரும்பொருள் அரசே” என்றான்.
“தாங்கள் இங்கு பாடியது அரிய பாடல் சூதரே. ஒன்றையொன்று கவ்வி விழுங்க முயலும் மூன்று பாம்புகளின் கதை என்று தோன்றியது” என்றான் கர்ணன். “தாங்கள் நடித்த கதை” என்றாள் விறலி. “ஆம். ஆனால் பரசுராமரை நான் சந்திக்கும்போது என்னை ஒரு சூதன் என்றே சொன்னேன். பிராமணன் என்று அல்ல” என்றான் கர்ணன்.
சூதன் விழிகள் மின்ன “கதைகள் தெய்வங்களால் உருவாக்கப்படுகின்றன. நினைவுகளை அவற்றுக்கு படையலாக்க வேண்டும்” என்றான். கர்ணன் சிரித்து “ஆம். அவ்வாறே ஆகுக!” என்றபின் “நானே கூட என்றேனும் என் உண்மைக்கதையை கதைதெய்வத்திடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் போலுள்ளது” என்றான்.
“உண்மை என ஒன்றுள்ளதா என்ன? இங்கு எது எஞ்ச வேண்டுமென்பதே உண்மையென்றும் உருக்கொள்ள வேண்டும். அது சொல்லன்னையால் வகுக்கப்படுவது” என்று சூதன் சொன்னான். “நன்று சூழ்க!” என்றபின் “இங்கு தங்கி உணவுண்டு களியாடி நிறைந்தபின் உங்கள் ஊர் அழைப்பதை உணர்ந்து மீளுங்கள் சூதர்களே” என்றான் கர்ணன். “அவ்வண்ணமே” என்றான் இசைச்சூதன். அவர்கள் மீண்டும் வணங்கி புறம் காட்டாது விலகிச் சென்றனர்.
“தாங்கள் அவன் பாடலை கேட்கவே இல்லையென்று தோன்றியது” என்றார் ஹரிதர். “செவிகளால் கேட்கவில்லை” என்றான் கர்ணன். சிலகணங்களுக்குப்பின் “அச்சொற்கள் முற்றிலும் மறைந்து அவர் உருவாக்கிய நிகருலகில் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். எத்தனை அரியது, ஒரே வாழ்வை பலமுறை மீண்டும் வாழமுடியும் என்பது! ஒவ்வொரு முறையும் அது மேலும் வளர்ந்து மலரும் கனியும் கொண்டிருக்கும் என்பது” என்றபின் திரும்பி அணுக்கரான சிவதரிடம் “இன்றென்ன செயல், சொல்லும்” என்றான்.
சிவதர் “கலிங்கநாட்டு வணிகர்கள் சிலர் வந்துள்ளனர். சுங்க முறைமையில் அவர்களுக்கு சில குறைகள் சொல்வதற்குள்ளன. கருவூலக் காப்பாளர் அஜபாலர் கணக்குகளை தங்களிடம் கூறுவதற்கு விழைகிறார். தாங்கள் உச்சிப்பொழுது உண்டு ஓய்வெடுத்து வெயில் மயங்கும்போது அவைக்கு வந்தால் அந்திக்குள் அவை முடிவுறும். அந்தியில் இன்று கொற்றவை ஆலயத்திற்கு செல்வதாக இருக்கிறீர்கள்” என்றார். “இன்றென்ன அங்கு?” என்றான் கர்ணன். “இது ஆவணிமாத கருநிலவு. கொற்றவைக்குரிய நாள். குருதி பலி கொடுத்து படைக்கலங்களை கூராக்கி செம்மலர் மஞ்சளரி கொண்டு அன்னையை வழுத்தும் வழக்கமுண்டு” என்றார் ஹரிதர்.
கர்ணன் “ஆம்” என்றான். “நள்ளிரவு ஆகிவிடும் பூசனை முடிந்து அரண்மனை மீள்வதற்கு. எனவே நாளை காலை நிகழ்வுகளேதும் இல்லை. பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து அங்கநாட்டின் ஐந்தன்னையர் ஆலயங்களிலும் மரபுப்படி பூசனை முடிந்து மீண்டால் நாளை உச்சிப்பொழுது வரை நீங்கள் ஓய்வெடுக்கலாம். நாளை மாலை அஸ்தினபுரியிலிருந்து அரசரின் தூதன் இங்கு வந்து சேர்வான் என்று எதிர்பார்க்கிறேன். அவனை மந்தண அறையில் தாங்கள் சந்திக்கிறீர்கள். அதன் பின் அந்தியில் பொதுப்பேரவையில் அவன் கொண்டு வரும் செய்தியை முன் வைக்கிறோம். அவை கருத்தை தேர்ந்தபின் அரசமுடிவு எடுக்கப்படும்” என்றார் ஹரிதர்.
பேசியபடி அரண்மனையின் இடைநாழிகள் வழியாக அரண்மனையை அடைந்தார்கள். கர்ணன் தலைகுனிந்து கைகளை பின்னால் கட்டி நீண்ட கால்களை நீரில் நீட்டுவதுபோல வைத்து மெல்ல நடந்தான். அவனை நோக்கியபடி சென்ற சிவதரின் உள்ளம் அறியாததோர் எழுச்சிக்கு ஆளாகியது. தன் விழிகள் நிறைந்து பிடரி மயிர்ப்பு கொள்வதை உணர்ந்து அவர் விழிகளை திருப்பிக்கொண்டு நடைதளர்த்தினார்.
ஆரியவர்த்தத்தின் ஐம்பத்தாறு நாடுகளில் ஒன்றான அங்கநாட்டின் தலைநகர் சம்பாபுரி அங்கம் நாடாக உருவாவதற்கு முன்னரே வணிக மையமாக எழுந்தது. அதை தன் நாட்டின் தலைநகராக்கிய பேரரசர் லோமபாதன் கங்கையின் கரையில் கட்டிய அரண்மனை அது. நாற்பத்திரண்டு அறைகளும் மூன்றடுக்குகளும் கொண்ட மரத்தாலான மாளிகை அறுநூறு ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்தது. அதைச் சூழ்ந்து இணைப்பு மாளிகைகள் பதினெட்டு எழுந்தன.
முதல் மாளிகையின் அமைப்பை ஒட்டியே இணைமாளிகைகள் அமைக்கப்பட்டன. அங்க நாட்டினர் அனைவரும் செம்புநிறமும் கூரிய முகமும் உயரமற்ற உடலும் மெலிந்த சிறுகால்களும் கொண்டிருந்தனர். மகதத்தின் பேருடல்கொண்ட ஜரர்கள் அவர்களை கொக்குகள் என்று கேலிசெய்தனர். அங்கர்களுக்கு பெரியதாக இருந்த அரண்மனை கர்ணனுக்கு சிறியதாக இருந்தது. ஒவ்வொரு வாயிலிலும் குகைக்குள் நுழைவது போல அவன் செல்ல வேண்டியிருந்தது. ஒவ்வொரு உத்தரத்தையும் விழிமுனையால் உணர்ந்து தலை குனிய வேண்டியிருந்தது. சில இடங்களில் கூரை முகடுகளே கூட அவன் தலை தொட்டன.
அரண்மனையின் எப்பகுதியிலும் அவன் தலை குனிந்தே நடந்தான். அதுவே ஆழுள்ளத்தில் அமைந்து அவ்வரண்மனைக்குள் இருக்கையில் எல்லாம் அவன் தலை சற்று குனிந்தே இருந்தது. அமர்கையிலும் அந்தத் தலைவளைவு எஞ்சியது. விண்ணிலிருந்து வந்த தேவனை நோக்கி பேசுவது போல் அவன் அமைச்சரும் குடிகளும் தலை தூக்கி விழிஎழுப்பி அவன் முகம் நோக்கினர். அவனும் மைந்தரை நோக்கும் தந்தை போல் இடையில் கை வைத்து உடல் சற்று வளைத்து புன்னகையுடன் அவர்களை நோக்கினான். அரண்மனையில் அத்தனை இருக்கைகளிலும் அவன் நிறைந்து கவிந்தான். அவன் அமர்ந்திருக்கையில் அரியணை கண்ணுக்கு மறைந்தது. செங்கோல் அவன் கையில் முழக்கோலென தோன்றியது.
அவன் உயரம் அங்க நாட்டினர் அனைவரையும் எவ்வகையிலோ நிலையழியச்செய்தது. அவன் முன் பணிந்தவர்கள் தங்கள் இடம் மீண்டதும் உளம் சீறினர். “மானுடனுக்கெதற்கு இத்தனை உயரம்? பிறரைவிட எழுந்த தலை கொண்டவன் அது உருவாக்கும் ஆணவத்திலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. இச்சூதன்மகன் தான் ஷத்ரியன் என்று நடிக்கிறான். விண்ணவன் என்று எண்ணிக்கொள்கிறான்” என்றனர் படைவீரர். ஏவலர் “மானுடர் எவரையும் நோக்குவதில்லை அவன் விழிகள். அவனுள் குடிகொண்டுள்ள குருதிதேர் தெய்வம் எண்ணுவதென்ன என்று மூதாதையரே அறிவர்” என்றனர்.
நகர்முனையில் துடி தட்டிப் பாடிய பாணன் “அறிவீர் தோழரே! அள்ளி அள்ளிக் கொடுக்கிறான் அங்க மன்னன். பாரதவர்ஷத்தின் முடி மன்னர் எவரும் அவனளவு கொடுப்பதில்லை என்கிறீரே, கேளுங்கள். அவன் தான் அறிந்து அதை கொடுக்கவில்லை. அவன் கைகள் இரு மடங்கு பெரியவை. அள்ளிக் கொடுத்தால் அது இருமடங்காகிறது. அவன் கொடையாளி என்பது அவன் விழைவல்ல. அவனை ஆக்கிய தெய்வங்களின் ஆணை” என்று பாடியபோது கூடி நின்றவர்களில் முதியவர் இதழ்களுக்குள் கரந்த சொற்களில் “அத்தெய்வத்தை ஆணவம் என்றுரைப்பர்” என்றார். அப்பால் நின்ற ஒருவர் “குடிப்பிறப்பில் இழந்ததை கொடைச்சிறப்பில் அடைய எண்ணுகிறான்” என்றார்.
அவர்களின் உள்ளம் ஒலித்தது போல் எழுந்த அச்சொற்களை அப்பெரும் கூட்டத்தினர் அனைவரும் கேட்டனர். அதைக்கேட்க விழைந்த செவிகள் ஓசைக்குள் திறந்திருந்தன. “கொடுத்து விடாய் தீராது துடிக்கின்றன அவன் கைகள். கொடுத்ததை எண்ணி வருந்தி மேலும் கொடுக்க எழுகிறது அவன் உள்ளம்” என்றான் சூதன்.
“ஆம், அது அங்கத்தின் செல்வம். தேரோட்டிமைந்தன் அள்ளிக்கொடுத்தால் அது குறைவுபடாது” என்றான் வேலேந்தி நின்ற வீரன் ஒருவன். சூதன் திரும்பி அவனை நோக்க கூட்டமும் அவனை நோக்கி திரும்பியது. அங்கு ஆழ்ந்த அமைதிகண்டு குழம்பிய வீரன் சிவந்த முகத்துடன் “இவ்வுண்மையைச் சொல்லி கழுவேறினால் நான் என்குலத்தின் தெய்வம். அச்சமில்லை” என்றான்.
“அவன் கால்கள் நீண்டவை. அவன் நடக்கையில் நாம் உடன் ஓடுகிறோம். அவன் செல்லும் தொலைவுக்கு நாம் சென்று சேர மேலும் காலம் தேவைப்படுகிறது” என்றார் சிற்றமைச்சர். “உள்ளத்தின் தாளம் கால்களால் அமைக்கப்படுகிறது என்பதை உணருங்கள். யானை என நடையிலேயே விரைகிறான். அவன் எண்ணங்களும் அவ்வண்ணமே விரைவு கொண்டுள்ளன” என்றனர் நிமித்திகர். “இளையவனின் ஆடைகளை எடுத்தணிந்து கொண்ட வளர்ந்த தமையன் போல் இவ்வரண்மனையும் இதன் அரியணையும் அவனுக்குமுன் தோன்றுகின்றன” என்றனர் சூதர்.
“அவன் அமர்ந்திருக்கையில் அங்கநாட்டு அரியணை சிறுக்கிறது. அதன் செங்கோலும் களிக்கோலாகிறது. அம்மணிமுடி ஒரு கணையாழி போல் குறுகுகிறது” என்று சூதர்கள் பாடப்பாட அங்க நாட்டு மக்கள் உளம் சுருங்கினர். “இது பலியின் மைந்தர் அங்கரால் அமைக்கப்பட்ட நாடு. அனகாஃப்ரூ அமர்ந்த அரியணை. திரவீரதர் ஏந்திய செங்கோல். தர்மரதர் ஆண்ட அரண்மனை. இந்தச் சாலையில் சதுரங்கரும் பிருதுலாக்ஷரும் யானைமேல் சென்றிருக்கிறார்கள். பிருஹத்ரதரும் பிருஹன்மனஸும் செங்கதிர்க்கோலேந்தி ஆண்டிருக்கிறார்கள். இங்குவிழும் சூரியக்கதிர்கள் அறியும் ஜயத்ரதரையும் விஜயரையும் திருதவிரதரையும். மாமன்னர் சத்யகர்மரின் தீயூழால் அவர் வீழ்ந்தார். இந்தச் சூதன்மகன் கோல்கொண்டான்” என்றார் விழிகளிழந்த முதியவர்.
“அஸ்தினபுரிக்கு அடைப்பப் பணி செய்து சூதன் மகன் அடைந்த செல்வம் இது. கூட்டரே, இங்கு காற்றை உண்டு உண்டு உடல் உப்பி உருப்பெருக்கும் பச்சோந்தி போல் தன் ஆணவத்தால் வீங்கி இவன் அமர்ந்திருக்கிறான். சிறுவளைக்குள் புகுந்து அங்குள நாகத்தை விழுங்கி உடல் பெருத்து வெளியேற முடியாதிருக்கும் ராஜநாகம் போல் இவன் அழிவான்” என்றாள் அருகே நின்ற காது தழைந்த முதுமகள். அவள் மகள் அருகே நின்று ஏதோ சொல்ல “விலகிச்செல்லடி… எனக்கென்ன அச்சம்? என் முலை வயிற்றை எட்டிவிட்டது. சுடுகாட்டில் என் மரம் பழுத்துவிட்டது” என்றாள் அவள்.
ஆனால் நகருலாவிற்கு பொன்படாமணிந்து கொன்றைமலர் பூத்த குன்றென எழுந்த பட்டத்து யானை மேலேறி அமர்ந்து அவன் வருகையில் பெண்டிரும் குழந்தைகளும் களிக்கூச்சலிட்டபடி பாய்ந்து முற்றங்களுக்கும் உப்பரிகைகளுக்கும் வந்து செறிந்தனர். தடுத்த அன்னையரின் கைகளை தட்டி அகற்றி தங்கள் நிலைமறந்து கை தூக்கி கூச்சலிட்டனர். நெஞ்சழுத்தி கண்ணீர் சோர விம்மியழுது தூண்களிலும் தோள்களிலும் முகம் புதைத்தனர். ஒருவரை ஒருவர் தழுவி உடல்சிலிர்த்தனர். சிறுவர் களிவெறி கொண்டு கை தூக்கி ஆர்ப்பரித்தனர்.
“கருநிறத்தில் கதிரவன் எழக்கண்டோம்” என்றனர் பெண்டிர். “அவன் காதில் அணிந்த குண்டலங்கள் இரு விண்மீன்கள். அவன் மார்பணிந்த பொற்கவசம் அந்திச்சூரியன்” என்றனர் கன்னியர். திண்ணையில் அமர்ந்திருந்த முதியவர் நடுங்கும் உடல் திரட்டி எழுந்து கண் மேல் கைவைத்து “குண்டலம் என்கிறார்கள், கவசம் என்கிறார்கள், இவர்களின் கண் மயக்கா? களிகொண்ட உளமயக்கா?” என்றனர். “ஒளிசுடர்ந்து இதோ கண்முன் செல்கிறது கவசமும் குண்டலமும். அதைக் காணும் நோக்கில்லையென்றால் அவை கண்களல்ல, காழ்ப்பென்னும் திரை மூடிய புண்கள் ” என்று சீறினர் கன்னியர்.
மையலுடன் “அவன் மேனிவண்ணம் சூரியச்சுடர்வட்டம் நடுவே எழுந்த நீலநிறம்” என்றனர். “அவன் கைகள் சுடரைச்சூழ்ந்த கருநாகங்கள். அவன் கால்கள் சுடரேந்திய திரிகள்.” அவன் ஒருபோதும் அவர்களின் நனவுகளில் நுழைந்ததில்லை. அவன் முதற்காட்சி விழித்திரையில் விழுந்த கணமே அவர்கள் சென்றமைந்த கனவில் ஆண் என, தேவன் என, தெய்வம் என அவன் மட்டுமே அமைந்த அவ்வுலகில் கிழக்கெழுந்து மேற்கணையும் கதிரோனென சென்று மறைந்தான்.
அவனைப்பற்றி ஒரு சொல் சொல்லவும் இளம்பெண்கள் ஒப்பவில்லை. சூதன் மகன் என்றொரு குரல் எங்கேனும் எழுந்தால் புலியெனச்சீறி “ஆம். சூதன் மகனே. ஏனெனில் இளஞ்சூரியனைக் கருவுறும் கருப்பை சூதப்பெண்ணின் தவத்தால்தான் அமைந்தது. மண்ணுக்கும் பொன்னுக்கும் உடல் திறக்கும் ஷத்ரிய இழிபெண்கள் அவனை கருக்கொள்ளும் தகுதியற்றவர்கள்” என்று கூவினர். “என்ன பேசுகிறாய்?” என்று அன்னையர் சினந்தால் “ஆம், அதைத்தான் பேசுவேன்… இந்நகரில் கன்னியர் அனைவருக்கும் அவனே காதலன்” என்றனர்.
அவைகூடி சொல்லாடுகையில் அவனை ஆணவம் கொண்டவனென்று முதியவர் சொல்ல உள்ளறைக் கதவை ஓசையுடன் திறந்து கூடத்திற்கு வந்து அவை நடுவே நின்று அவிழ்ந்த கூந்தலும் நீர் சோரும் விழிகளும் தழைந்த மேலாடையுமாக மெய்நடுங்க குரல் உடைய “ஆம், ஆணவம் கொண்டவர், ஐயமே இல்லை… இம்மண்ணில் ஆணவம் என்று ஒன்று தான் வாழ உகந்த இடம் தேடி அலைந்து அவரை கண்டு கொண்டது. அவரன்றி ஆணவம் அமரும் அரியணை பிறிதேது உள்ளது இப்புவியில்?” என்றாள் ஒருத்தி.
“சூதன் மகனுக்கு சொல்லெடுக்க வந்தவளே, குலமில்லையோ உனக்கு?” என்று முதுதாதை சுடுசொல்லெடுத்தால் “உங்கள் இழிசொற்களே அவர்முன் விழுந்து நெளிகின்றன. சிற்றுயிர்களைக் காய்வது சூரியனின் இயல்பு” என்றாள். “நாணிலியே, செல் உள்ளே” என்று அவளின் தந்தை குரல் எழுப்ப்ப “ஆம், நாணழிந்துளேன். விண்ணில் எழும் கதிரவன் முன் இதழ் விரியாத மலர் இங்கு ஏதுமில்லை” என்று மேலும் சினந்து சொன்னபின் அள்ளி தலைமயிர் சுழற்றிக் கட்டி ஆடை விரித்து திரும்பி ஆணவ நடையுடன் உள்ளே சென்றாள்.
“இப்பெண்கள் அனைவரும் அவன் மேல் பித்து கொண்டுள்ளனர்” என்றார் கண்களில் பாலாடையென காலம் படிந்த முதியவர். “அது இயல்பே. பேரழகென்பது ஆணுக்குரியது என்பதை அவன் காட்டினான் என்றல்லவா சூதர்கள் சொல்கிறார்கள்?” என்றார் அவர் மைந்தர். “சூதன் மகனில் எங்ஙனம் வந்தது இப்பேரழகு!” என்று ஒரு பின்குரல் ஒலித்தது.
“அது சூரியனின் பேரழகு. இப்புவியில் அழகெனப்படுவது அனைத்தும் அவன் அழகே. அவன் ஒளியை பெறுவதன் அளவே அழகை அமைக்கிறது. அவனை அள்ளித்தேக்கும் கலை அறிந்ததனாலேயே கற்கள் வைரங்கள் என்றாயின. மலர்கள் கொள்ளும் வண்ணம் அவனுடையது. நீரின் ஒளி அவனுடையது. கனியின் மென்மையும் கற்பாறையின் வன்மையும் அவனுடையதே” என்றார் அருகே இருந்த சூதர்.
மெல்ல மெல்ல அவனுக்குரிய விழிகளும் சொற்களும் நகரில் பெருகின. “சூதன்மகன் அமர்ந்ததால் அங்கத்தின் அரியணை இழிவடைந்தது என்று மூத்தோர் நமக்குரைத்தனர். நாமும் அதை இக்கணம் வரை எண்ணியுள்ளோம். பாரதவர்ஷத்தின் ஷத்ரியர் அனைவரும் இளிவரலுடன் இந்நகரை நோக்குவதாக உளம் சோர்ந்திருந்தோம். ஆனால் இவன் இங்கு வந்த இத்தனை ஆண்டுகளில் எங்கும் வாழ்த்தொலிகள் மட்டுமே எழுகின்றன. புகழ்ச்சொற்கள் ஒன்றிலிருந்து நூறென முளைக்கின்றன” என்றார் வணிகர் ஒருவர்.
“அள்ளி அள்ளி கொடையளிக்கிறான். சூதர்கள் பாடாதொழிவார்களா என்ன?” என்றொருவர் சொல்ல, “இரு பெரும் கைகளால் அவன் அள்ளி அளித்தாலும் இப்போதிருப்பது போல் அங்க நாட்டுக் கருவூலம் என்றும் நிறைந்திருந்ததில்லை” என்றார் பிறிதொரு வணிகர்.
குலமன்றுகள் அங்காடிமுனைகள் குடித்திண்ணைகள் தோறும் அவனையே பேசிக் கொண்டிருந்தனர். “பழித்துரைக்கும் சொற்களெல்லாம் புகழ் மாலைகளென மாறி சென்றமையும் தோள் கொண்டவன்” என்று அங்காடியில் மதுவருந்தி முழவறைந்து பாடிய சூதன் ஒருவன் சொன்னான். சொல்லெழும் விசையில் அவன் உடல் உலைந்தாடியது.
“அறிவீர் வீணரே! குலமென்றும் குடியென்றும் முறையென்றும் நிறையென்றும் நீங்கள் அறிந்த சிற்றுண்மைகளைக் கொண்டு தொட்டறியும் சிறு பாறையல்ல அவன். சிறகசைத்து விண்ணாளும் வடபுலத்து வெண்நாரைகள் அறியும் இமயம். என் சொல் கேளுங்கள்! இங்கெழுந்துளான் தேவன்! இப்புவி இதுவரை அரிதாகவே பேரறத்தான்களை கண்டுள்ளது. கோசல ராமன் நடந்த காலடிச் சுவடுகள் இன்னும் இங்கு எஞ்சியுள்ளன. இவன் காலடிச் சுவடுகள் என்றும் இங்கு எஞ்சும்!”
கூடி நின்று கேட்டவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். “கலம்நிறைந்த கள் பேசுகிறதா அன்றி கைநிறைந்த பொன் பேசுகிறதா?” என்றார் ஒரு முதியவர். “பொன்கொண்டு பெற முடியுமா இப்பெருஞ்சொல்லை? அப்படி பெற முடியுமாயின் தங்கள் கருவூலத்தின் கதவுகளை திறக்க விழையாத மன்னர் எவர் உளர் இப்பாரதவர்ஷத்தில்?” என்றான் அருகே நின்ற ஒருவன்.
அச்சொல் காதில் விழுந்ததுமே சீறித்திரும்பிய சூதன் “என்ன சொன்னாய்? இழிமகனே, என் நாவில் உறைபவள் பரத்தை என்கிறாயா? நீ சுண்டிவிடும் பொற்காசுக்கு வந்து அவள் நடமிடுவாளென்று எண்ணுகிறாயா? உன் குலமகளை கேள், உன் நெஞ்சில் உறையும் பரத்தமை என்னவென்று அவள் சொல்வாள்” என்று கூவினான்.
“என்ன சொன்னாய்?” என்று அவன் சீறித்திரும்ப “ஆமடா, சொன்னேன். வெட்டு என் கழுத்தை. ஒருகணமும் சொல்லின்றி அமையாதவை என் சித்தமும் உதடுகளும். நீ வெட்டுகையில் சொல்லை இரண்டாக தறிக்கிறாய். விண்ணேறிச்சென்று சொல் உன் குலமூதாதையரிடம், சொல் ஒன்றைக் கொன்று புகழ்கொண்டேன் என்று…” என்றான் சூதன்.
கள்மயக்கு அளித்த உளஎழுச்சியில் அவன் உடல் அதிர்ந்தது. பறவைக்கூண்டுபோல எலும்புகள் புடைத்த தன் மார்பை முன்னுந்தி ஓங்கி அறைந்து கண்ணீருடன் அவன் கூவினான் “இங்கு அமர்ந்திருக்கிறான் என் தேவன்! இப்புவியமைத்த எந்த அரியணையிலும் அல்ல. விண்ணமைத்த பேரறத்தின் எரிகனல் பீடத்தின்மேல்.”
“ஆம், தெய்வங்களே கேளுங்கள். சொல்லெனும் பேயென என்னில் கூடிய சிறுமகளே நீ கேள். அள்ளி அள்ளி அவன் தந்த பொன்னால் அல்ல! பெருங்கைகளால் என் தோளணைத்து விழிகனிந்து அவன் சொன்ன சொல்லாலும் அல்ல! விண் தொட்டு மண் எட்டி அவன் அடைந்த பேருருக்கொண்ட அழகினாலும் அல்ல. அவன் கொடைகண்டு சினம்கொண்டு இழிசொல் உரைத்த இக்கடைமகனின் கீழ்மைகண்டும் அவனுள் நெகிழ்ந்த கருணையால். கருணையே பேரறம் ஆகுமென்று இம்மண்ணுக்குக் காட்டிய அவன் செயல்களால். இன்னுமிப் பாழ்புவியில் பேரறத்தான் ஒருவன் மண்ணில் காலூன்றி நிற்க முடியுமென்று காட்டிய அவன் இருப்பால். அவன் பாதப்புழுதி நான்.”
வலிப்பெழுந்ததுபோல் துடித்த முகத்துடன் அவன் அருகே வந்தான். “மடியில் பொன்பொதிந்து உள்ளத்தில் அச்சம் கரந்து நின்றிருக்கும் கடையா, அறிகிறாயா? ஏற்க மறுப்பாய் என்றால் சொல்! இக்கணமே இம்முழவின் கூர் விளிம்பால் என் கழுத்தறுத்து இங்கு விழுவேன்” என்று கூவியபடி அதை தூணில் அறைந்து உடைத்து கூரிய முனையை தன் கழுத்தை நோக்கி கொண்டு சென்றான்.
அக்கணமே அவன் அருகே நின்ற வீரனொருவன் பாய்ந்து அவன் கையை பற்றினான். “என்ன செய்கிறாய் மூடா? இங்கு பாணனின் குருதி விழுந்தால் நிலம் வறண்டு மடியும். எங்கள் குலம் அழிந்து மறையும்… என்ன செய்யவிருந்தாய்?” என்று பதறினான். கூடிநின்றோர் கூச்சலிட்டு அவனை பழித்தனர்.
கண்ணீர் வழிய கால்தளர்ந்து மண்ணில் அமர்ந்து நெஞ்சை கையால் அழுத்தி “இப்புவி ஒருபோதும் மாமனிதரை அறியமுடியாது. மானுட உள்ளங்களை மூடியிருக்கும் திரை அது. முடிவற்றவை அனைத்தையும் தங்கள் சிறுவிரல்களால் மட்டுமே எண்ணி எண்ணி அளக்க வேண்டுமென்ற இழிவை இங்குள ஒவ்வொருவர் மேலும் சுமத்திய படைப்புத் தெய்வம் எது? மானுடரே, சிறியோரே, ஒவ்வொரு முறையும் நாம் ஏன் தோற்கிறோம்? ஒவ்வொரு முறையும் பெருந்திரளெனப் பொருளழிந்து நாம் ஏன் இழிவை சூடிக் கொள்கிறோம்?” என்றான் சூதன்.
அவன் குரல் மூதாதையர் உறங்கும் காட்டிலிருந்து எழுந்த தொல்தெய்வமொன்றின் குரலென அந்தத் தெருநடுவே ஒலித்தது. “தெய்வங்களே! மாறாச்சிறுமையை மானுடம் மீது சுமத்தினீர்கள். அதைப்பார்க்கும் விழிகளை என் முகத்தில் அமைத்தீர்கள். கருணையற்றவர்கள் நீங்கள். சற்றும் கருணையற்றவர்கள்.” கைவிரித்துக் கதறி உடல் வளைத்து தெருப்புழுதியில் ஒருக்களித்து விழுந்து உடல்குறுக்கி அவன் அழத்தொடங்கினான்.