அன்புள்ள ஜெயமோகன்,
உங்கள் கீதை உரைத் தொகுப்பினைப் படிக்க ஆவல். “The Bhagavad Gita: A Biography” by Richard Davis எனும் நூலுக்கு மதிப்புரை எழுத முற்பட்ட போது உங்கள் தளத்திலுள்ள கீதை பற்றிய பதிவுகள் அந்நூலைப் புரிந்துக்கொள்ள உதவியது. அதை என் மதிப்புரையிலும் சுட்டிக் காட்டியே எழுதினேன்.
http://contrarianworld.blogspot.com/2014/12/the-bhagavad-gita-biography.html
கீதை வர்ணாசிரமத்தை போதிக்கிறது என்று எழுதிய வாசகரின் கடிதத்திற்கு உங்கள் பதிலின் கடைசிப் பத்தி சுவாரசியமானது. அதற்கு முன், கீதை வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிப்பதை டேவிஸ் சுட்டிக் காட்டிய இடம் “நீ வேறொருவனின் கடமையை அவனை விடச் சிறப்பாக செய்வதை விட உன் கடமையைப் பாதி சரியாகச் செய்வதே மேல்”. டேவிஸ் பிறகு அதே கிருஷ்ணன் “என்னுள் தஞ்சம் புகுந்த யாவரும், பெண்கள், வைஷ்யர்கள், சூத்திரர்களும்” உய்விக்கலாம் என்று கூறியதையும் மேற்கோள் காட்டுவார்.
இப்போது உங்கள் கடைசிப் பத்தி. இன்று கீதையைக் கொலை நூல் என்று நிறுவுவதில் முதலிடம் வீரமணிக்கல்ல சுவாமிக்கும், குருமூர்த்திக்கும் தான். அவர்கள் இருவருமே கீதையைக் கேட்ட அர்ச்சுனன் குழப்பம் நீங்கி கொலை புரிந்தான் அதுவே இன்றைய தேவை என்று பேசியதை இணையத்தில் பார்த்தும், படித்தும் அதிர்ச்சி அடைந்தேன்.
டேவிஸின் புத்தகம் மிக அருமையாக எழுதப்பட்ட ஒன்று. அப்புத்தகம் கீதை எனும் புத்தகத்தின் வாழ்க்கை வரலாறு அவ்வளவே. அந்தளவில் டேவிஸ் “அரவிந்தர், விவேகானந்தர் முதல் திலகர் வரை, காந்தி முதல் வினோபா பாவே வரை நவீன இந்தியாவின் சிற்பிகள் அனைவருக்குமே கீதை மகத்தான ஞானநூலாக ஆகி வழிகாட்டியது எப்படி?” என்பதற்கு பதில் கண்டிருப்பார். உங்கள் பார்வையில் வேறு திறப்புகள் கிடைக்கும். படிக்கக் காத்திருக்கிறேன்.
டேவிஸ் தொடாத கோணம், “நாராயணகுரு, சகஜானந்தர் முதல் நித்யசைதன்ய யதி, முனி நாராயணப்பிரசாத் வரை வரை அது எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வந்த ஞானிகளின் குரலாக ஆக முடிந்தது? பாரதி, குவெம்பு முதல் ஜெயகாந்தன் வரையிலான எழுத்தாளர்களுக்கு அது எப்படி மெய்ஞானநூலாக அமைந்தது?”
எங்கே மீண்டும் நேருவை சாடி விடுவீர்களோ என்று பயந்தேன். நல்ல வேளை அப்படி ஏதும் சொல்லவில்லை. நேருவுக்குப் பகவத் கீதை ரொம்பப் பிடித்த நூல்.
மனதுக்கும் அறிவுக்கும் மிக நெருக்கமான ஒரு விஷயத்தைப் பற்றி உரையாற்றும் போது ஒரு பேருரைக்கான மேடை ஜோடனைகள் இல்லாது போயினும் உரை சிறப்பாகவே அமையும். நியூ ஜெர்ஸியில் அப்படி நிகழ்ந்ததை நேரில் கண்ட அனுபவம்.
அன்புடன்
அரவிந்தன் கண்ணையன்
***
அன்புள்ள அரவிந்தன்,
கீதையில் வர்ணம் குறித்த வரிகள் வருகின்றன. அவை சாதி குறித்தவை என்று கொண்டாலும்கூட கீதையின் ஒட்டுமொத்த தத்துவ விவாதத்தில் அவை துளியிலும் துமி. அவற்றின் அடிப்படையில் கீதை கட்டமைக்கப்படவும் இல்லை. அது நெறிநூல் அல்ல. தத்துவநூல், உருவகமாகப் பேசுவது.
ஒரு பேச்சுக்கு அது பெண்களை இரண்டாம் நிலையில் வைக்கிறது என்றால்கூட அதைச்செய்யாத கடந்தகால நூல் எது? மதம் எது? மானுடரை பிறப்படிப்படையில் பிரிக்காத சென்றகால பண்பாடு எது? மதம் எது? கீதையை அந்த ஒருசில வரிகளின் அடிப்படையில் நிராகரிக்கலாமென்றால் சென்றகாலச் சிந்தனைகளை அள்ளி குப்பைக்கூடையில் போட்டுவிட்டு மாவோ போல தன்னிலிருந்து புதியதாக ஆரம்பிக்கவேண்டும்.
கீதை அதன் தத்துவ விவாதத்தில் இன்றும் நீடிக்கக்கூடிய ஒரு தரிசனத்தை முன்வைக்கிறது என்றே நான் நினைக்கிறேன். விவேகசூடாமணிக்கு உரை எழுதிய நடராஜ குரு ஓர் இடத்தில் ‘இங்கே சங்கரர் சொல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது’ என்கிறார். அதுவே என் வழியாகவும் இருக்கும்.
ஜெ
***