அன்புள்ள ஜெ,
எதையோ தேடியபோது அக்னிஹோத்திரம் இராமானுஜதாத்தாச்சாரியர் எழுதிய இந்து மதம் எங்கே போகிறது என்ற கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைத்தது. ஓரிரு பக்கங்கள் அதன் சுமாரான ஆங்கில மொழி பெயர்ப்பை இணையத்தில் படித்தேன். அதில் மனு சாஸ்திரம் எப்படி மக்களைக் கொச்சைப்படுத்தி வைத்துள்ளது என்ற விளக்கங்கள் உள்ளது. இதனை நீங்கள் படித்துள்ளீர்களா ? இதன் தமிழ் வடிவம் இணையத்தில் கிடைக்கவில்லை. இராமானுஜ தாத்தாச்சாரியர் மற்றும் அவரது இந்த நூலைப் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன ?
அன்புடன்
சேகர்
அன்புள்ள சேகர்
எந்த ஒரு அறிவுத்தளத்திலும் வெறுப்புநூல் [hate book] என்னும் ஒரு வகைமை உண்டு. பல்வேறுவகையில் உளம்திரிந்தவர்கள் எழுதுபவை அவை. அவற்றில் மிகத்தீவிரமான அறிவார்ந்த உழைப்பும் தர்க்கக்கூர்மையும் வெளிப்படுவதும் உண்டு. அவற்றை வாசிப்பதும் விவாதிப்பதும் மிகப்பெரிய வீண்வேலை. அத்தனை சிந்தனைகளைப்பற்றியும் அவ்வாறு ஏராளமான வெறுப்புநூல்கள் வந்துள்ளன என்பதை நீங்கள் காணலாம். அவற்றை அடையாளம் காண்பதென்பது அறிவுவளர்ச்சியின் ஒரு முதிர்வுநிலை.
வெறுப்புநூலின் இயல்புகளை இவ்வாறு வகுத்துச் சொல்வேன்
1. அது கருத்தியல்செயல்பாட்டை ஒரு சதிவேலை என்று வகுத்துக்கொள்ளும். சதிகளை மட்டுமே எங்கும் காணும். ஏனென்றால் அதுவே ஒரு சதிவேலையில்தான் ஈடுபட்டிருக்கிறது.
மாறாக உலகமெங்கும் கருத்துக்கள் தன்னிச்சையாக எழுந்து மாபெரும் முரணியக்கம் வழியாக வளர்ந்து செயல்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் கருத்துச்செயல்பாடு என்னும் பெரும் இயக்கத்தில் ஒரு பங்களிப்பை ஆற்றுகின்றன. ஒரு கருத்தை மறுப்பது வேறு அதன் இருப்பையே மறுப்பது வேறு. ஒரு கருத்து சிலரின் சதிவேலையால் மட்டும் உருவாகி வரலாற்றில் நீடிக்கும் என நினைப்பவர்களுக்கு சிந்தனை என்பதே அறிமுகமாகவில்லை என்றே பொருள்
2. அது எதிர்க்கும் தரப்புகளை சில சிறுபுள்ளிகளாகக் குறுக்கும். எளிமைப்படுத்தும்.
ஒரு தரப்பை அதன் முழுமையான ஊடுபாவுகளுடன் கருத்தில்கொள்ளத் தொடங்கினாலே அதன் வரலாற்றுப்பங்களிப்பை நாம் அங்கீகரிக்கத் தொடங்குவதைக் காணலாம். அதை நமக்கு வசதியான ஒரு சில புள்ளிகளாகச் சுருக்கிக்கொண்டால் வெறுப்பை கக்கவும் முழுமையாக நிராகரிக்கவும் நமக்கு வழியமைகிறது. வெறுப்பாளர்கள் எப்போதுமே ‘ஒண்ணுமே இல்லீங்க, தோ இவ்ளவுதான்’ என்று சொல்வதைக் கவனிக்கலாம்
3.விசித்திரமான, அரைகுறையான தர்க்கங்களை அது உருவாக்க்கிக் கொள்ளும்
பலசமயம் இந்தத் தர்க்கங்கள் நம்மை வியப்பிலாழ்த்தும். அவற்றின் விசித்திரம் காரணமாகவே நம் நினைவிலும் நீடிக்கும். ஆனால் வெறுப்பின் வழி குறுக்குப்பாதைகளால் ஆனதென்பதனால் அவர்களால் தங்களுக்குரிய தர்க்கங்களை எளிதில் கண்டடையமுடியும். பெரும்பாலும் அது ‘உள்நோக்கம் கண்டடைதல்’ என்ற அளவிலேயே இருக்கும். ‘உனக்குத்தெரியாது, எனக்குத்தெரியும்’ என்பதே அதன் தோரணை]
4 சொல்லிச்சொல்லி அது இறுதியாக கருத்தியலின் மிகமிகக்குறுகலான ஓர் இடத்திற்குள் சென்று நிலைகொள்ளும். அங்கு நின்றபடி வெளியுலகை வெறுப்புடன் நோக்கும்
வெறுப்பு என்பது விலக்கும் நோக்கு கொண்டது. விலக்குதல் என்னும் செயல்பாடு இறுதியில் நான் மட்டும் என்றே சென்று நிற்கும். நம்மூர் மாவோயிஸ்டுகளையே பாருங்கள். சகமாவோயிஸ்டுகள்கூட அவர்களுக்கு எதிரிகள்தான். தங்கள் குறுங்குழுவே இறுதி உண்மைக்குக் குத்தகை கொண்டிருக்கிறது என்பார்கள்.
அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியாரின் நூலை நான் வாசித்தேன். சிலசமயம் சிரிப்பாகவும் பலசமயம் எரிச்சலாகவும் இறுதியில் பரிதாபமாகவும் உணர்ந்தேன். உறுதியாக அவரைவிட இந்துமதத்தை, ஏன் வைணவத்தையே நான் அறிவேன். அவரை ஓர் அறிவிலி என்று சொல்ல எனக்கு ஐயமே இல்லை.
ஏன் அவரது சொற்களை நீங்கள் கருத்தில்கொள்கிறீர்கள்?சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, போன்ற சொற்களால். அல்லவா? அவை மரபுவழிவந்த சில வகையான ஆசாரங்களையும் கல்விமுறைகளையும் குறிக்கிறது.இன்றைய சூழலில் அவற்றுக்கு ஒரு மதிப்பும் இல்லை, அவரைப்போன்ற பிற நாலைந்துபேரால் அளிக்கப்படுபவை அவை. நம்மூர் கலைஞர், பேராசிரியர், பேரறிஞர்,தந்தை போன்ற வெறும் சொற்கள்.
இதே வகையான பட்டங்கள் கொண்ட இன்னொரு கிழம் வந்து தீண்டாமையையும் மானுட ஏற்றத்தாழ்வையும் ஆதரித்துப் பேசத்தொடங்கினால் என்ன செய்வீர்கள்? அது கற்ற கல்வியின் போதாமையை உணர்வீர்கள் அல்லவா? ஆனால் அதே கிழம் உங்களுக்குச் சாதகமாகப் பேசும்போது அந்தப் பட்டங்கள் முக்கியமானவை ஆகிவிடுகின்றன இல்லையா?
நம் மரபான மதக்கல்வி தனக்குரிய சில தனித்த அறிதல்முறைகளைக் கொண்டது. அவற்றை நவீன இந்தியவியல் பொருட்படுத்தியே ஆகவேண்டும். ஆனால் அதற்கு மிகமுக்கியமான ஒரு குறைபாடு உண்டு. அது இந்துமெய்யியலை, இந்திய மெய்யியலை ஒட்டுமொத்தமாக அணுகும் சிந்தனையையோ அதற்கான கருவிகளையோ அளிப்பதில்லை. தன் சிந்தனைப்பள்ளியை அன்றி பிற அனைத்தையும் மறுக்கும் நோக்கையே உருவாக்குகிறது.
அதற்காக அது ஓர் அரைகுறை அறிவையே உருவாக்கி அளிக்கிறது. இன்றைய சூழலில் மரபான மடங்களில் இருந்து எவரும் வேதங்களையோ உபநிடதங்களையோ தரிசனங்களையோ முழுமையான பார்வையுடன் அணுகமுடியாது. தங்களுக்குரிய பகுதிகளை வெட்டு எடுத்து விளக்கிக்கொள்ளும் கல்வி அது. எதிர்தரப்புகளை திரித்தும் வெறுத்தும் அறிந்துகொள்வதனால் மாற்றே இல்லாத அறிதலாக அது இருக்கும்.
அரைகுறைக் கல்வி அறியாமையைவிட ஆபத்தானது.அந்த மத நம்பிக்கை மூர்க்கமாக ஆகும்போது அது வெறுப்பாக ஆகிறது. நிராகரிக்க குறுகிக்குறுகி தானற்ற அனைத்தையும் வெறுக்கும் நிலைக்குக் கொண்டுசெல்கிறது.இந்த வைணவரின் மனநிலைகொண்ட சைவர்களையும் நீங்கள் நெடுகிலும் பார்க்கலாம். இவர்கள் ஒரு ஆழமான அறியாமை இருளில் இருக்கிறார்கள். இவர்களிடம் பேசுவதற்கு பெந்தெகொஸ்தே ஆசாமிகளிடம் பேசுவது மேல்.
அக்னிஹோத்ரம் அந்த இடத்தில் நின்றுகொண்டு மேலும் மேலும் உளத்திரிபு அடைந்தபடியே சென்றிருக்கிறார். எங்கெங்கோ திரண்ட கசப்புகள் அரைகுறைப்புரிதல்கள் உதிரிவரிகள் அவரை ஆட்டிப்படைக்கின்றன. மீண்டும் பரிதாபத்திற்குரிய மனிதர் என்றே சொல்லத்தோன்றியது.
அவரைப்போன்றவர்களைப் பார்க்கையில்தான் கிரிஃபித், மோனியர் விலியம்ஸ், மாக்ஸ்முல்லர், கார்பே, கீத், குந்தர் போன்ற மாபெரும் இந்தியவியலாளர்களை நன்றியுடன் நினைக்கத் தோன்றுகிறது. அவர்கள் இந்துமெய்யியலை முழுமையாக அணுகும் நோக்கை, கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளி அறியும் தர்க்கத்தை, நமக்கு உருவாக்கி அளிக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும். நமது குருநாதர்கள் அவர்கள்.
மற்றபடி அக்னிஹோத்ரம் அவர்களின் நூலின் கருத்துக்கள் உதிரிவரிகளின் திரித்தல்கள் ,அரைகுறை புரிதல்கள், வெறுப்பு உமிழ்தல்கள் மட்டுமே அவரது நூல் நக்கீரன் வாசகர்களுக்குரியது. அவர்கள் வாசிக்கட்டும். அறிவில் ஈடுபாடுகொண்டவர்கள் அதில் வாசிக்க ஏதுமில்லை
ஜெ