கடிதங்கள்

1
அன்புள்ள அய்யா !
நான் தங்களின் வாசகனாவேன், தற்பொழுது பணி நிமித்தமாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறேன். தங்களின் சமீபத்திய வருகையின் போது தங்களை சந்திக்க வாய்ப்பு அமையாமல் போய்விட்டது  பணிச்சூழலின் காரணமாக.
தங்களிடம் நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் அதீதமாக உள்ளது.
ஆனால் ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மை அதனை ஒத்திப் போட்டே வந்திருக்கின்றது. இருப்பினும் கடந்த 8 வருடங்களாக எழுத நினைத்த ஒரு அறிமுகக் கடிதத்தை எழுதிவிட்ட ஒரு திருப்தி உண்டாகிறது.
 இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்.
நன்றி
இராமநாதன்
(Attached : சமீபத்தில் நான் வசித்து வரும் Pasir Ris பகுதி நூல் நிலையத்தினை புத்தாக்கம் செய்து திறப்பு விழா நடத்தப்பட்டது. தமிழ் நூல்களின் எண்ணிக்கை குறைவென்றாலும் நம் ஊரோடு ஒப்புநோக்க சிறப்பாகவே நிர்வகிக்கின்றனர். அங்கே கர்வத்துடன் நான் கண்ட காட்சியை புகைப்படமாக தங்களுக்கு இணைத்துள்ளேன்.)
அன்புள்ள இராமநாதன்,
நன்றி
நான் இப்போது மிதமிஞ்சிய பணிச்சுமையுடன் இருக்கிறேன். எனவே என்னால் எல்லா கடிதங்களுக்கும் விரிவான பதிலை எழுதமுடியவில்லை. ஆனாலும் கடிதங்கள் என்னை ஊக்குவிக்கின்றன. எழுத்து என்பது முகம் தெரியா பெருந்திரளை நோக்கிப்பேசுவது. கடிதங்கள் அங்கிருந்து வரும் எதிர்வினைகள். அவை நம்பிக்கை ஊட்டுபவை
நன்றி மீண்டும்
ஜெ
அன்பிற்கினிய  ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.பலமுறை உங்களுக்கு கடிதம் எழுத நினைத்திருந்தும் என்ன பெரிதாக எழுதிக்கிழித்துவிடப்போகிறோம் என நினைத்து தவிர்த்திருக்கிறேன்.ஒரு நல்ல கடிதம் எழுதி என்னத்தையாவது நிரூபித்துவிடவேண்டும் என தவிர்த்திருந்தேன்.ஆனால் கடைசியில் என்னென்னவோ நினைத்து நினைத்து அதெல்லாம் மறந்து இன்றைய
நாள் இந்தக்கடிதமாக மலர்ந்ததை மகிழ்வோடு நினைத்து சிரித்துக்கொள்கிறேன்.

 

வெண்முரசு வரிசை ஆரம்பித்த இரண்டாம் மாதம் முதல் (ஆனந்த விகடனில் உங்கள் வெண்முரசு பற்றிய சுருக்கப்பட்ட பேட்டி வழியாக) உங்கள் தளம் எனக்கு ஒரு விரியும் வெளியாக இருந்துகொண்டிருக்கிறது.

 

 

நான் ஒரு சாதாரண மனிதன்…. இலக்கியத்திற்கும்…
லேகியத்திற்கும்….என்ன பெரிய வித்தியாசம் எழுத்தைத்தவிர என்றெண்ணிய சாமானிய சபிக்கப்பட்ட (ஒருவகையில் புண்ணியம் செய்த…) தலைமுறையைச்
சேர்ந்தவன்.

 

 

இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை….. அடிமேல் அடி வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாக நத்தைவேகத்திலாவது போய்ச்சேர்ந்து விடலாம் என்று எண்ணும் அளவுக்கு வந்துவிட்டேன்.

 

 

உங்கள் அறிமுகம் ‘சுரா-நினைவின் நதியில்’ புத்தகத்தின் மூலமாக ஏற்பட்ட நாள் நினைவில் வருகிறது…. நான் உங்கள் புத்தகத்தை படிப்பதை என் அப்பா பார்த்துவிட்டு சொன்னது இன்னும் காதுகளில் உள்ளது…

 

 

” …….ஒரு நூறு பேருக்கு மேல இந்த புத்தகதையெல்லாம் எவனும் படிக்க மாட்டான்….. தலவாணி சைஸ்ஸுக்கு எழுதுவானுங்க….. படிக்கிறவனுக்கு ஒன்னும் புரியாது……பேரப்பாரு சுரா…..எறா….ன்னுட்டு…….”

 

 

ஆனால் கடைசியில் அவரும் உங்கள் புத்தகத்தை திருட்டுத்தனமாக படித்துவிட்டுத்தான் வைத்தார். இன்று பரலோகத்தில் இருக்கும் அவர் நான் உங்கள் புத்தகங்களை காசு போட்டு வாங்குவதையும் வலைத்தளத்தில் பழிகிடப்பதையும் நினைக்கும்போது வருகிற சிரிப்பை எந்தவகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

 

 

வெண்முரசு இன்றைய எனக்கானது அல்ல என்பதை நான் மழைப்பாடல் முடிந்து வண்ணக்கடல் தொடங்கிய போது உணர்ந்து கொண்டேன். இது நாளைய எனக்கானது. வளர்ந்த எனக்கானது….. இது முழுதும் திறக்க காத்திருப்பதைத்தவிர வேறுவழியில்லை என்பதை உணர்ந்தேன்.

 

 

ஆனாலும் என்னுடைய மனதிலும் வெண்முரசு ஓசை ஒலிக்கவே செய்கிறது… நுண்ணிய
சப்தங்களைத்தவிர……

 

 

காண்டீபம் மனதிற்கு ஏனோ மிக நெருக்கமாக இருந்தது…. காரணம்தான் தெரியவில்லை….. காண்டீபம் படிக்கும்போது அர்ச்சுனனின் வாழ்வு செதுக்கப்பட்ட விதம் ஏனோ கர்ணனைப்பற்றி எண்ணச்செய்தது.

 

 

கர்ணணுக்கும் இப்படி ஒரு கதை… அவன் வீரத்தை….அவன் வில்திறனை… அவன்  போர்க்களங்களை…. அவன் இழப்புகளை… அவன் பெற்ற பயிற்சிகளை …. சொல்ல முடியுமே…. ஏன் யாரும் சொல்லவில்லை என எண்ணிக்கொண்டிருந்தேன்…..அறிவித்துவிட்டீர்கள்…….

 

 

எழுதப்படும்போதே புராணமாகிக்கொண்டிருக்கும்…..(இந்த இடத்தில் என்ன வார்த்தை சரியாக வரும் என்று தெரியவில்லை…அதனால் புராணம்..) வெண்முரசுக்கும், அதை எழுதும் உங்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

 

 

2013-ல் நீங்கள் ஆற்றிய அறம் அறக்கட்டளை சுதந்திர தின உரை…. மற்றும் குறுந்தொகை…மற்றும் கீதை உரைகளுக்காக நன்றிகள். கண்திறந்தது என்று சொல்லலாம்…… திறந்தே வைத்துக்கொள்ள விரும்புகிறேன்…… நிறைய படிக்கவும்…. நிறைய நிறைய கேட்கவும் வேண்டும் போலிருக்கிறது…

..

வேலை செய்யும் இடங்களில் எப்பொழுதும் Unproductive Work தான்…. அந்த வேதனைக்கு இன்று இலக்கியம் மயிற்பீலியாக இருப்பதை உணர்கிறேன். ..
தாமதமாக புரிந்து கொண்டாலும்  நானும் புரிந்து கொள்வதை நினைத்து உங்களை ஆசானாக அமர்த்தி அழைத்தமையை எண்ணி மகிழ்கிறேன்.

 

ஏதும் திட்டமிட்டோ தீர்மானித்தோ எழுதவில்லை…. திறந்துவிட்டேன்…..

..

வாழ்த்துக்கள்.

பிரபு செல்வநாயகம்.

 

அன்புள்ள பிரபு

 

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? ஒரு தொடக்கம் எப்போதுமே கிளர்ச்சியூட்டுவது. எந்தக்கலைக்குள்ளும் நுழையும்போது ஏற்படும் பரவசத்திற்கு நிகரே இல்லை. வாசிப்பில் நுழைந்த நாட்களில் நான் ஒவ்வொரு நூலையும் கண்டு அடைந்த கிளர்ச்சியை நினைவுகூர்கிறேன்.

 

வாசிப்பு எதை அளிக்கிறதோ இல்லையோ, உலகியல் வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு முறையும் அடையும் சலிப்பையும் சோர்வையும் அற்புதமாக நிறைவுசெய்யும்.

 

வாழ்த்துக்கள்

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் அய்யா அவர்களுக்கு.

நான் உங்களை தொடரும் குமுதம் வாசகன் என்று சொல்லலாம். ஆனால் உங்களை கண்டைந்த பிறகு குமுதமோ விகடனோ நான் தொடுவதே இல்லை. சொல்லப்போனால் சற்று சிந்தித்தாலே போதும் அப்புத்தகங்கள் படிப்பதற்கு விஜய் டி.வியின்  நிகழ்ச்சிகள் ஒன்றை விடாமல் பார்க்கலாம். அதனால் நான் விஜய் டீ.வி  கூட பார்ப்பதில்லை. எப்போதாவது மகாபாராதம் பார்ப்தோடு என் விஜய் டீ.வியின் இச்சை முடிவுக்கு வருகிறது.
இன்றைய காந்தியே நான் மீண்டும் மீண்டும் படிக்கும் தங்கள் புத்தகம். அதில் நான் அடைந்தது என்னவென்று என்னால் மேற்கோள் காட்டி எழுத முடியவில்லை. தாயார் பாதம்,யானை டாக்டர்,சோற்றுக்கணக்கு. இதனை படித்த பின்பு என் இருப்பை  நானே வெறுத்தேன், பின் ஏற்றேன். என்னுள் இருக்கும் தன்முனைப்பு அது வெளிப்படும் தருணங்களில் என் உள்நிலையால் சுட்டிகாட்ட படுகிறது.சிந்தனையில் மாற்றம் அடைந்திருக்கிறேன் செயல்களில் முயன்றுகொண்டிருக்கிறேன்.
வெள்ளை யானையில் நீங்கள் உருவாக்கிய ஏய்டன் போல. ஆனால் என்னிடம் அவனிடமிருந்த அதிகாரமில்லை. தற்கொலைக்கு செல்லும் தைரியமும் இல்லை. ஆம் அச்செயல் கூட எனக்கு சில சமயம் வீரமாக படுகிறது.
எனக்கு சிலசமயம் எழுத பிடிக்கிறது அப்படி பிடிப்பதற்கு காரணம் என நான் கருதுவது என் ஆழ்நிலைக்கு  நான் செல்வதாய்  உணர்வதால் .எழுதி முடித்த பின்பு அதனையும் யாராவது படிக்கவேண்டும் என்ற ஆசை மேலோங்குகிறது. சமைத்தது சாப்பிடத்தானே?அது சாப்பிட உகந்தது அல்ல என யாராவது சொல்ல வேண்டுமே.நண்பர்கள் தயாராக இல்லை அப்படியே படித்தாலும் நல்லா இருக்கு என்ற ஒருவார்த்தை. அவர்கள் முகமே சொல்லிவிடுகிறது அதன் அர்தத்தை.
இத்துடன் நான் புகைப்படம் என்ற தலைப்பில்  எழுதிய வடிவம் தெரியாத ஒன்றைஅனுப்பிஉள்ளேன் தாங்கள் அதை படித்து பார்த்து அவ்விதம்  நான் எழுதலாமா? வேண்டாமா?  எனக்கு வடிகாலாக நினைக்கும் என் எழுத்தை தொடர்வதா வேண்டாமா? எதையாவது அனுப்புங்களேன்.
                                     எதிர்பார்ப்புடன்
                                         மணிவாசகம்
அன்புள்ள மணிவாசகன்
நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
உங்கள் எழுத்தை வாசித்துப்பார்த்தேன். தொடர்ச்சியாக ஊக்கத்துடன் எழுத வாழ்த்துக்கள். மொழியை செறிவாகவும் தேவையான அளவுக்கும் பயன்படுத்த அறிந்திருக்கிறீர்கள்
பொதுவாக எழுதத்தொடங்கும்போது அருவமாக எழுதக்கூடாது. உருவகங்களை எழுதக்கூடாது. மிதமிஞ்சிய செறிவுடனும் சுழற்சிகளுடனும் எழுதக்கூடாது. தெளிவாக திட்டவட்டமாக நேரடியாக எழுதவேண்டும். அவ்வெழுத்து பழகி மெல்லமெல்ல அறியாது அமையும் செறிவும் சிக்கலும் அருவவடிவமும்தான் உங்களுக்குரியவையாக இருக்கும்
ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 1
அடுத்த கட்டுரைசமவெளியில் நடத்தல்