பகுதி ஒன்று : செந்தழல் வளையம் – 1
“செங்கதிர் மைந்தா, தன் நிழலால் துரத்தப்படுபவனுக்கு இருளன்றி ஒளிவிடம் ஏது? விழிமுனைகளன்றி பகையேது? ஆடியன்றி கூற்றமேது?”
பெரிய நீலநிறத்தலைப்பாகைக்கு மேல் இமயத்து நீள்கழுத்து நாரையின் வெண்பனியிறகைச் சூடி, இரு கைகளிலும் இலைத்தாளங்களை ஏந்தி, அவற்றின் நுனிகளை மெல்ல முட்டி நெஞ்சதிரும் உலோகத்தாளத்தை எழுப்பி, பொற்சலங்கை கட்டிய வலக்காலை முன்னால் வைத்து மெல்ல தட்டி, இமை தாழ்ந்த விழிகள் உள்ளூறிய சொற்சுனை நோக்கி திரும்பியிருக்க தென்புலத்துச்சூதன் பாடினான்.
அவனருகே முழவுடன் அமர்ந்த முதியசூதன் பொற்குண்டலங்கள் அசைந்தசைந்து கன்னங்களைத் தொட்டு விலக, உதடுகளை இறுக்கியபடி துடிப்பரப்பில் நின்றாடிய இருவிரல்களால் தாளமிட்டான். மறுபக்கம் சலங்கைக்கோலை கையில் ஏந்தி விரல்களால் அதை தாளத்தில் அசைத்தெழுப்பி கண்மூடி கொழுநனின் குரல் வழி சென்று கொண்டிருந்தாள் விறலி. அவர்களைச் சூழ்ந்திருந்த இசைக்கூடம் கங்கையின் இளம்காற்று உலாவ ஒளியுடன் விரிந்திருந்தது.
அங்கநாட்டுத் தலைநகர் சம்பாபுரியின் அரண்மனையில் ஆவணிமாதத்து பின்காலையில் அரசனாகிய கர்ணன் தன் அமைச்சர்களுடனும் அணுக்கர்களுடனும் அமர்ந்து சூதனின் சொற்களை கேட்டுக்கொண்டிருந்தான். சூதனின் கரிய கூர்முகத்தையும் அதில் உடைந்த கருங்கல்சில்லுகளின் நீரற்ற நீர்மையின் ஒளியையும் நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உதடுகள் செந்நிறப்பட்டாம்பூச்சியென சிறகடித்துப் பறந்து எழுப்பிய இசை அவனைச்சூழ்ந்து ரீங்கரித்தது.
அவனருகே முதன்மை அமைச்சர் ஹரிதர் அமர்ந்திருந்தார். சூதனின் சொற்கள் தன்னை அவிழ்த்து பிறிதொருவராக மாற்றுவதை அவரே பிறிதெங்கோ இருந்து நோக்கிக்கொண்டிருந்தார். சொற்கள் அவரைச்சூழ்ந்து தேன்சுமந்து ஒளிச்சிறகுகளுடன் ரீங்கரித்துச் சுற்றிவந்தன.
மலருள்ள மண்ணிலெங்கும் எழும் தேனீக்களனைத்தும் ஒற்றை இசையையே பாடுகின்றன. எங்கிருந்து தேன் வருகிறதோ அங்கிருந்து வருவது அவ்விசை. மலரூறும் தேன்களில் சிறுதுளியே தேனீக்களால் தொட்டு சேர்க்கப்படுகிறது. தேனில் முளைத்து எழுகின்றன புதிய தேனீக்கள். தன்னை இங்கு நிலைநிறுத்திக்கொள்ள தேனே உயிர்கொண்டு சிறகுபெற்று தேனீக்களாக எழுகிறது.
“சுடர்கதிர் சூடி விண்வழிச்செல்பவன்
மண்ணில்நிகழும் அனைத்தையும் அறிந்தவன்
சூரியன்! அனைத்துயிரும் விழிதூக்கி நோக்கும் தலைவன்
கொடுப்பதற்கென விரிந்த முடிவிலா பெருங்கைகள்
தொட்டு விழிநீர் துடைக்கும் ஒளிக்கதிர் விரல்கள்
காய்வதும் கருணையே என்றான கொற்றவன்
ஏழ்புரவி ஏறிவரும் எந்தை
வாழ்த்துக அவனை! வணங்குக அவனை!
பிரம்மத்தின் சுடர்வெளி அலைத்தெழுந்த சிறுதுமி
பிரம்மம் என இங்கெழுந்தருளிய தேவன்
அவன் கனிக!
அவன் அருள்க!
அவன் அடி எங்கள் அறியாத்தலைமேல் பதிக!
ஓம் ஓம் ஓம்! ”
சூதனின் குரல் எழ அவனைச் சூழ்ந்தமர்ந்திருந்தவர்களின் இசைக்கருவிகள் அனைத்தும் பொங்கிப் பேரொலியாகி எழுந்து புலரியெனும் ஒலிக்காட்சியை சமைத்தன. முகில்கள் பொன்னணிய தளிர்கள் ஒளிகொள்ள பறவைகள் சிறகு சூட சுனைகளில் நகைமலர காலை விரிந்து நிறைந்தது.
மெல்ல காலடிவைத்து நடனமிட்டபோது சூதன் அவனே கதிரவனானான். கைகளை விரித்து ஒளிவிரிவை உருவாக்கினான். இமையாது நோக்கி எரிந்தபடி விண்ணில் ஒழுகினான். கீழே அவ்விழிகளை நோக்கி மலர்ந்த பல்லாயிரம் மலர்களாகவும் அவனே ஆனான். அவ்வொளி கொண்டு நகைமலர்ந்த சுனைகளானான்.
“சூரியனின் மைந்தா, இவ்வுலகாளும் விரிகதிர்வேந்தனுக்குரிய தீயூழ் என்னவென்றறிவாயா? அவன் தொட்டதெல்லாம் எதிரியாகி பின்நிழல் கொள்கின்றன. நிழல் கரந்த பொருட்கள் அனைத்தும் அவன் முகம் நோக்கி ஒளி கொள்ளும் விந்தைதான் என்ன? இங்குள அனைத்தையும் ஆக்குபவன் அவனென்றால் இந்நிழல்களையும் ஆக்குபவன் அவனல்லவா?”
“கிழக்கெழுந்து உச்சி நின்று புரந்து மேற்கமைந்து இருளில் மறைபவன் அவன். அவன் இன்மையுருக்கொண்டு இருப்பதன்றோ இரவு? இன்மையென இங்கிருந்து அவன் புரப்பதன்றோ இருள்? அவன் வாழ்க! எளிய உயிர்களுக்கு அன்னமும் இறகு கொண்டவைக்கு இன்பமும் எண்ணமெழுந்தவர்களுக்கு ஞானமும் நுதல்விழி திறந்தவர்களுக்கு பிரம்மமும் ஆகி நிற்கும் அவனை வாழ்த்துவோம்.”
“ஓம்! ஓம்! ஓம்!” என்றனர் அவனைச் சூழ்ந்திருந்த பிற சூதர். அவ்வொலி அவிந்ததும் எழுந்த அமைதியைக்கேட்டு கர்ணன் தன் இருக்கையில் மெல்ல அசைந்து கால்களை நீட்டினான். அவனுக்கு வலப்பக்கம் நின்றிருந்த அடைப்பக்காரன் சற்றே குனிந்து நீட்டிய வெற்றிலையில் சுருட்டப்பட்ட சுக்கையும் மிளகையும் வாங்கி வாயிலிட்டு மென்றபடி பொருள் வந்து அமையாத வெற்றுவிழிகளால் சூதனை நோக்கிக் கொண்டிருந்தான்.
“அணையா வெம்மை கொண்டு எழுந்த அனல்குலத்தோன் ஒருவனின் கதையுடன் இந்த அவைக்கு வந்தேன். துயிலற்றவன், அழிவற்றவன், காய்பவன், கனிபவன்” என்று சூதன் தொடர்ந்தான். சலங்கை கட்டிய கையைத் தூக்கி உரத்தகுரலில் “அடங்கா வெஞ்சினம் கொண்ட அவன் பெயர் பரசுராமன்” என்றான்.
“பிருகு குலத்தவன். பார்க்கவ ஜமதக்னியின் இளையமைந்தன். எண்ணமெனச் சென்று தைக்கும் அம்புகள் கொண்டவன். என்றும் தளராத வில்லேந்தியவன். கூற்றுத்தெய்வத்தின் செந்நாவென விடாய்கொண்ட மழுவை சூடியவன். களைகட்டு பைங்கூழ் பேணியவன். குருதிவேள்வியில் குலம்தழைக்கும் அமுதை எழச்செய்தவன். அவன் வாழ்க!” அவனைச்சூழ்ந்திருந்த சூதர் “வாழ்க! வாழ்க!” என ஓசையிட்டனர்.
மாமுனிவனுக்கு மனைவியான அவன் அன்னை ரேணுகை முன்பொரு நாள் கணவனுக்கு காலைவேள்விக்கு நீர்கொணரச் சென்றாள். குனிந்தமர்ந்து மணல்கூட்டி உளம்குவித்து மாமங்கலத்தின் வல்லமையால் குடம் சமைக்கும் நேரம் தன் நெஞ்சென தெளிந்தோடிய நதியில் விண்ணில் விரைந்த ஒரு கந்தர்வனின் நிழலை கண்டாள். அவள் அள்ள அள்ளக் கலைந்தது நதி மணல். ஆயிரம் காலடிகள் பதிந்த மணல். அவற்றை அழித்தோடிய நதியே காலமென்றறிந்த மணல். அன்றுகாலை எழுந்த புத்தம்புதுமணல்.
கலம்திரளாமை கண்டு அவள் திகைத்து எழுந்தாள். விழிதூக்கி கந்தர்வன் சென்ற வழியை நீலவானில் ஒரு வண்ணத்தீற்றலென கண்டாள். முதிரா இளமகளென தன்னை உணர்ந்து ஒரு கணம் புன்னகைத்தாள். பின்பு அஞ்சி உளம் கலுழ்ந்தாள்.
அழுத கண்களுடன் ஈரநெஞ்சை இருகைகொண்டு பற்றி கால்பின்ன நடந்தாள். அந்த நிழல் அவளுள் கரந்து உடன் வந்தது. இல்லம் மீண்டு தன் கணவன் முன் ஒவ்வொரு மணலும் விடுதலை கொண்டுவிட்ட தனது நதியைப் பற்றி அவள் சொன்னாள். ஒன்றென இணைக்கும் ஒன்றை அவள் இழந்துவிட்டாள் என்று உணர்ந்து சினந்தெழுந்த ஜமதக்னி முனிவர், தன் மைந்தரை நோக்கி அவள் தலை கொய்யும்படி ஆணையிட்டார். கொழுநரென மைந்தரெனச் சூழ்ந்த அவைநடுவே தனித்து கண்ணீர் வழிய நின்றாள் பெண்.
சினம் மேலும் மூள “செய்க இக்கணமே!” என்றார் தந்தை. இயலாது என கை நடுங்கி நெஞ்சுலைந்து பின்னகர்ந்தனர் மைந்தர். அவர்களில் இளையோனோ தந்தையின் சொல்லை ஏற்று “அவ்வண்ணமே” என்றுரைத்து வாளை உருவி அன்னை முன் வந்து நின்றான். கையில் எழுந்த வாளுடன் அவள் விழிகளை ஒரு கணம் நோக்கினான். தன் உள்ளத்தை அவ்விழிகளில் இருந்து பிடுங்கி கனவுக்குள் புதைவுக்குள் முடிவிலிக்குள் அழுத்தினான். மின்னலென சுழன்ற அவன் வாள் அவள் தலை கொய்து குருதி தெறிக்க மீண்டது.
திகைத்து விலகிச் சுழன்று விழுந்துருண்டு கூந்தல் பரப்பி தரையில் கிடந்த அவள் தலையில் விழிகள் இறுதி நோக்கை சிலைச்செதுக்கென மாற்றிக்கொண்டிருந்தன. தெறித்த குருதி அரைவட்டமென, செவ்வரளி மாலைச் சுழலென குடில்சுவரிலும் நிலத்திலும் படிந்திருந்தது. உடல் விதிர்த்து சுவரோடு முதுகொட்டி நின்று நடுங்கிக்கொண்டிருந்தனர் பிற உடன்வயிற்றோர்..
அவன் தந்தை கைநீட்டி வந்து தோள்தழுவினார். “மைந்தா! நீ வென்றாய். இங்குள ஒவ்வொரு உயிரும் தெய்வங்களிட்ட தளைகளால் ஆனது என்றுணர்க! மீனுக்கு நீரும், புழுவுக்கு வளையும், மானுக்கு நிலமும், குரங்குக்கு மரமும், பறவைக்கு வானும் எல்லைகளாக வகுக்கப்பட்டுள்ளன. மானுடனுக்கோ அச்சங்களும் ஐயங்களுமே எல்லையை சமைக்கின்றன” என்றார் தந்தை.
“ஒவ்வொரு தளையாக வென்று, தானெனும் இறுதித் தளையை அறுத்து அப்பால் செல்பவனுக்குரியது இங்கென திகழ்ந்து எங்குமென காட்டி அங்கிருக்கும் அது எனும் உண்மை. இப்புவியில் மானுடர் எவரும் கடக்க முடியாத தளையொன்றை இன்று கடந்தாய். இனி இவ்வண்ணமே ஆகுக உன் பயணம்” என்று தலைதொட்டு வாழ்த்தினார். “உன் நெறியில் சென்று குன்றாச்சிறப்பை அடைக. விண்நோக்கி உதிர்க”
“ஆணை, தந்தையே” என்று தலைவணங்கி குருதிவழிந்து கருமை கொள்ளத் தொடங்கிய வாளுடன் அவன் திரும்பிச் சென்றான். “அந்த வாள் உன்னுடன் இருக்கட்டும்” என்று தந்தை அவனுக்குப் பின்னால் ஆணையிட்டார் “ஏனென்றால் அதுவே இனி உன் பாதை. வேதமல்ல வெங்குருதியே இனி உன்னைச்சூழ்ந்திருக்கும். ஓம் அவ்வாறே ஆகுக”.
தயங்காத காலடிகளின் ஓசை சீரான தாளமென தன்னைச் சூழ்ந்திருந்த காற்றில் இலைமுகில்குவைகளுக்கு மேல் முட்டி எதிரொலிக்க நடந்து ஆற்றை அடைந்தான். அந்த வாளை நீரில் அமிழ்த்தி முழந்தாளிட்டு அமர்ந்து கழுவத்தொடங்கினான். கரைந்து கரைந்து செந்நிறம் கொண்டது நீலத்தெளிநீர். அவ்வாள் ஒரு குருதிக் கட்டியென செம்புனல்பெருக்கை எழுப்பியது. அதன் ஆணிப் பொருத்துகளுக்குள்ளிருந்து ஆழ்புண் என குருதி ஊறி வருவது போல் இருந்தது. கை நகங்களால் சுரண்டியும் மென் மணல் கொண்டு உரசியும் அவன் கழுவக் கழுவ குருதி பெருகி வந்தது.
பின் ஏதோ எண்ணி அவன் விழி தூக்கி நோக்கியபோது அப்பெருநதி செங்குருதியின் அலைப்பெருக்கென விழிநிறைத்து சென்று கொண்டிருக்கக் கண்டான். அஞ்சி எழுந்து மூன்றடி பின்னால் நடந்து பதறும் கைகளுடன் நின்றவன் நோக்கில் அச்செம்பரப்பில் எழுந்தது அவள் நிழல். அவ்விறுதி நோக்கின் அழிவிலாக் கணம்.
பதறி கைநீட்டி “அன்னையே!” என்று அவன் கூவினான். “அன்னையே, நீயா? நீதானா” அவள் முகம் கொண்ட சிலைப்பை உணர்ந்து “அன்னையே, என் சொற்களைக் கேள், என் துயரை அறி, என் தனிமை உணர்.” ஆனால் வெங்கதிரோன் புதல்வனே, நம் நிழல் நம் சொற்களை கேட்பதில்லை. நம் தொடுகையை உணர்வதில்லை.
நம்முடன் உரையாடி நம் குரல் கேட்காதிருக்கும் தெய்வங்கள்தான் எத்தனை இரக்கமற்றவை! சொல்லால் தொடப்படாதவைதான் எத்தனை தொலைவிலுள்ளவை! சொல்லுக்கு அப்பால் உள்ள அனைத்துமே பேருருக் கொண்டவை அல்லவா? சொல்லைச் சிறிதாக்கும் முடிவின்மையாக எழுபவை அவை.
அறுந்து விழுந்த மணிமாலையென மொழி கீழே விழுந்து சொற்கள் உருண்டு மறையக்கண்டு நின்ற அவன் தீ பட்ட காட்டுவிலங்கென ஊளையிட்டபடி திரும்பி மரக்கூட்டங்களிடையே ஓடினான். சாட்டையெனச் சுழன்று அவனை அறைந்தன காட்டுக் கொடிகள். முனைகூர்ந்து அவனை கீறிச்சென்றன முட்செடிகளின் கூருகிர்கள். நாகமென வளைந்து அவன் கால் சுற்றி இழுத்து நிலத்திட்டன வேர்ப்பின்னல்கள். சினந்தெழுந்து அவனை அறைந்தது நிலம். அவனது ஒரு குரலை வாங்கி ஆயிரம் நிழல்மடக்குகளுக்குள் சுழற்றி நகைப்பொலியாக மாற்றி அவனை சூழச்செய்தது கருணையற்ற அக்காடு.
ஏழு நாட்கள் அவன் ஓடிக் கொண்டிருந்தான். இறுதிவிசையும் இழிந்து அகன்றபின் இல்லையென்றான கால்களுடன் தளர்ந்து மடிந்து அவன் விழுந்த இடத்தில் இருந்த சிறு சுனையில் எழுந்திருந்தன அணையா விழித்தழல்கள். சொல்லெனும் பொருளெனும் உணர்வெனும் ஒழுக்கு தீண்டா இரு வெறும் கூர் முனைகள்.
இரு கைகளையும் ஊன்றி தலை தூக்கி “அன்னையே! அன்னையே! அன்னையே!” என்றவன் அங்கு அமர்ந்து கதறி அழுதான். “ஒன்று உரை. தீச்சொல்லிட்டென்னை சுடு. இப்புவியில் ஒரு புழுவாக, ஏதுமின்றி காலத்தில் உறைந்த பாறையாக, எவர் காலிலும் மிதிபடும் புழுதியாக என்னை ஆக்கு. அன்றி விழி திறந்து என் ஒரு சொல்லை கேள். அங்கிருந்து வெறும் நோக்கென என்னைச் சூழும் இப்பெரும் வதையை விடு. உன் முலையமுதை அருந்தியவன் நான். இன்று உன் பழியூறிய நஞ்சை நாடுகிறேன்.”
“கருக்குழியில் என்னை வைத்து இரு காலிடைக் குழியில் ஈன்று முலைக் குழியிலெனை அழுத்தி இப்புவிக்களித்தாய் நீ. உன் குருதியில் எழுந்த குமிழியென்பதால் நான் உனக்கு கட்டுப்பட்டவன். அன்னையே! அதனாலேயே நீ எனக்கு கட்டுப்பட்டவளும் கூட. சொல்! என்ன செய்ய வேண்டுமென எனக்கு ஆணையிடுகிறது உன் ஊமைவிழியிணை? எதன் பொருட்டு நீரெலாம் விழிதிறந்து என்னை நோக்குகிறாய்?” ஆயிரம் கோடி நாவுகளாக மாறி அவன் சொற்களை படபடத்தது காட்டின் இலைப் பெருவெளி. அதைச்சூழ்ந்திருந்தது மாற்றிலாத அமைதி.
கிளைகளுக்குள் சீறிச் சுழன்றது அவன் நெடுமூச்சு. நுரைத்துப் பெருகி நிறைந்து ஒவ்வொன்றாய் உடைந்து எஞ்சி இறுதித் துளியும் உலர்ந்து மறைந்தது சொல்வெளி. சற்று துயின்று உணர்ந்து எழுந்தபோது அவன் நெஞ்சிறுகி வைரம் பாய்ந்திருந்தது. “ஆம், உணர்கிறேன். நீ பேச முடியாது. நம் இரு உலகங்களுக்கு நடுவே பாய்கிறது இன்மையின் பெருநதி. இங்கு ஆற்றுவன முடித்து அச்செயல் அனைத்தையும் கடந்து அங்கு நான் வரும்போது உன்னிடம் சொல்ல என ஒரு சொல் கரந்து இவ்வுள்ளத்தில் வைத்துளேன். அதுவரை நீ என் நிழல். இரவில் என்னைச் சூழும் இருள். என் சொற்களை உண்ணும் ஆழம்.”
மீண்டு வந்த மைந்தன் பிறிதொருவனாக இருந்தான். அவன் சொற்கள் நுண்மை கொண்டன. எப்போதும் தனிமையை நாடினான். எரியணையா வேள்விக்குளமாகியது அவன் உள்ளம். அதன் வெம்மையில் உருகிய பொன்னெனச் சுடர்ந்தது அவன் உடல். கற்றவை எல்லாம் கனன்று மறைந்தன. தானன்றி பிறிதற்ற தனிமையை சூழநிறுத்தி தன்னை எரித்தான்.எரியோன் மைந்த, தழல் தானிருக்குமிடத்தில் தான்மட்டுமே என எண்ணும் தகைமைகொண்டது.
ஐந்தழல் நடுவே அமர்ந்து தவம்செய்து தன்னை உதிர்க்க அவன் எண்ணியபோது ஜமதக்னியின் தவக்குடிலில் நுழைந்து அவர் வழிபட்ட காமதேனுவை கவர்ந்து சென்றான் மாகிஷ்மதியை ஆண்ட ஹேஹய மாமன்னன் கார்த்தவீரியன். ஆயிரம் கையுடையோன். பாரதவர்ஷத்தை தன் கொடுங்குடைக்கீழ் நிறுத்தி ஆண்ட திறலுடையோன். யாதவர்குலத்து எழுந்த முதல்பெருமன்னன்.
தன் தந்தையைக் கொன்ற அரசனை, அவனைக் கொன்று நெறிநிலைநாட்ட அஞ்சிய ஷத்ரியகுலத்தை வேரோடு அழிக்க வஞ்சினம் பூண்டான். கடுந்தவம் கொண்டு கங்கைசூடியவனை வரவழைத்து வெல்லற்கரிய மழுவைப்பெற்றான். “அறம் அறியாதோர் மாய்க! புத்தறம் இப்புவியில் எழுக! இப்படைக்கலம் மழுங்கி கூரழிவதுவரை கொற்றவர்களை அழிப்பேன். என் சொல்வாழும் புது மன்னர்குலத்தை படைப்பேன்” என்று சூளுரை கொண்டான்.
குருதியாடும் கொடுஞ்சினமொன்றே அவன் குணமென்று இருந்தது. அவன் விழிபட்ட விலங்குகள் உடல் சிலிர்த்து அஞ்சி ஓலமிட்டு விலகி ஓடின. தர்ப்பைப்புல்லில் அவன் கைபட்டால் அனல் பற்றி எழுந்தது. மூவெரி எழுப்பி அவன் வேள்வி செய்யவில்லை. விண்ணவருக்கும் நீத்தோருக்கும் கடன் எதையும் கழிக்கவில்லை. நெய் உண்டு நெளிந்தாடும் வேள்வித்தீயே அவன் உயிர்.. அவன் உண்ணும் ஒவ்வொன்றும் அவி.
நீராட நதிக்கரைக்கு அவன் செல்கையில் நீர்ப்பரப்பு அனல் வடிவாவதை கண்டனர். அவன் உடலில் விழுந்த மழைத்துளிகள் உலை வெங்கலம் மீது பட்டவை போல பொசுங்கி வெண்ணிற ஆவியென மாறிச்சூழ்வதை அறிந்தனர். அவன் துயில்கையிலும் அவன் மழு துயிலாது அசைந்துகொண்டிருந்ததைக் கண்டு அஞ்சினர்.
கொலைகொள் பெருந்தெய்வமென அவன் எழுந்தான். முப்பெரும் கடல்சூழ் பாரதப்பெருநிலத்தை மும்முறை சுற்றிவந்தான். ஷத்ரிய குலங்களைக் கொன்று குருதியாடினான். அவர்களின் புரங்களை எரித்தழித்தான். குலக்கொழுந்துகளை கிள்ளி அகற்றினான். கொல்லும்தோறும் பெருகும் சினமும் வெல்ல வெல்ல எழும் வேட்கையும் கொண்டு அலைந்த அவன் விழைவதுதான் என்ன என்றறியாது தவித்தனர் முடிமன்னர். எதைக் கடக்க எண்ணுகின்றான்? எதைக் கொள்ள உன்னுகின்றான்?
“எரிகதிர் மைந்தா! தன்னைத் தொடரும் நிழலிலிருந்தல்லவா அவன் விரைந்தோடிக் கொண்டிருந்தான்? நிழலால் துரத்தப்பட்டவன் எத்தனை விரைவாக ஓடினால் தப்ப முடியும்? எத்தனை அரியணைகளில் அமர்ந்தால் வெல்ல முடியும்?”
சூதன் சொல்லி நிறுத்தியபோது விதிர்ப்புடன் மீண்டது அவை. முதன்மை அமைச்சர் ஹரிதர் திரும்பி அவனை நோக்கினார். அவன் அனைத்துப்பீடங்களிலும் களைத்து அமர்ந்திருப்பவனைப்போல கால்களை நீட்டி, கைகள் தளர இருப்பதே வழக்கம். அரியணையில்கூட அவ்வாறே தோன்றுவான்.
அமர்ந்திருக்கும் பீடங்களையெல்லாம் அரியணையாக்கியவன் என்று மாமன்னர் உபரிசிரவசுவைப்பற்றி சூதன் ஒருவன் பாடிய சொல்லை அவர் அறிந்திருந்தார். அரியணையையும் மஞ்சமாக்கியவன் என்று அவனை அந்தச்சூதன் பாடக்கூடும் என எண்ணியதும் அவர் புன்னகைசெய்தார். அவனுடைய உடலின் நீளமே அந்த அமர்வை அமைக்கிறது என அவர் அறிந்திருந்தார்.
நீள்மூச்சுடன் ஹரிதர் அவையை சூழநோக்கினார். அந்த கதையாட்டு அங்கே முடிந்தாலென்ன என்று தோன்றியது. அச்சொற்கள் சூடிய நெருப்பால் மெல்ல அவைக்கூடமே பற்றி எரியத்தொடங்குவதுபோன்ற உளமயக்கால் அவர் அமைதியிழந்தார். அருகே குனிந்த துணையமைச்சரிடம் ஒன்றுமில்லை என்று தலையசைத்தார்.
கர்ணனின் அணுக்கர் அவனிடம் குனிந்து ஏதோ சொன்னார். அவன் அச்சொற்களை கேட்கவில்லை. சூதன் கண்களைமூடி அசையாமல் நின்றிருக்க இளம் விறலி பின்னாலிருந்து மூங்கில் குவளையில் அவன் அருந்த வெய்யநீரை அளித்தாள். அதை வாங்கி அவன் மும்மிடறு அருந்திவிட்டு மீண்டும் தொடங்கினான். “வெய்யோன் மகனே, எரிதலே மாமனிதர்களை உருவாக்குகிறதென்று அறிக! எரியாது எஞ்சுவது தெய்வங்களுக்கு. எரிதலின் ஒளியே இவ்வுலகுக்கு.”
“ஓம் ஓம் ஓம்” என்றனர் சூழ்ந்திருந்தவர்கள். சூதன் தன் கதையை தொடர்ந்தான்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்