உயிர்மை நிகழ்ச்சி

அன்புள்ள ஜெ.மோ,

நலமா?

எஸ் ரா தளத்தில் நீங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறீர்கள் என்று இருக்கிறதே – http://sramakrishnan.com/view.asp?id=452&PS=1
நீங்கள் உண்மையிலேயே கலந்து கொள்கிறீர்களா?

உங்களை மிகவும் இழிவுசெய்து அவமதித்த உயிர்மை/ஹமீது/பிரபஞ்சன் கும்பல் பங்குபெறும் ஒரு நிகழ்ச்சி இது. உங்கள் நண்பர் ஷாஜிக்காக நீங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறீர்கள் என்று சமாதானம் சொல்லப் பட்டால் கூட, அது உங்கள் வாசகர்கள் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும், வருத்தமளிக்கும் விஷயமாக இருக்கும், நான் உட்பட :(((

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜெ

கடந்த பல மாதங்களாக உயிரொசை இதழ் உங்களை அவதூறுசெய்வதை முக்கிய வேலையாக கொண்டிருப்பதை அறிவீர்களா? உயிர்மை இதழை உருவாக்கியதில் நீங்கள் அளித்த பங்களிப்பு கூட மறந்துபோய் உங்களை சைக்கோ என்றும் கிறுக்கன் என்றும் வசைபாடுகிறது மனுஷ்யபுத்திரன் கும்பல். இந்நிலையில் நீங்கள் ஏன் உயிர்மை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறீர்கள்? அதிர்ச்சியாக இருக்கிறது

சிவா

அன்புள்ள நண்பர்களுக்கு,

உண்மை, கடந்த சிலமாதங்களாக உயிர்மையில் வெளியாகிவரும் வெறுப்பு மற்றும் அவதூறு பிரச்சாரங்களை பல நண்பர்கள் கவனத்துக்கு கொண்டுவந்தார்கள். அவற்றை வாசிக்கவேன்டியதில்லை என்பதே என்னுடைய முடிவு- பிற எழுத்தாளர்களுக்கும் நான் சொல்லும் வழி அதுவே, அவதூறுகளை வாசிக்காதீர்

இந்த விழா உயிர்மை வெளியிட்ட நூல் பற்றியது. அந்நூலில் பெரும்பகுதி நான் மொழியாக்கம்செய்தது. ஆகவே அவ்விழாவில் கலந்துகொள்ள நினைக்கிறேன்.

மேலும் ஷாஜி என்னுடைய நண்பர்- மிக நெருக்கமான நண்பர். என்னைப்பொறுத்தவரை நான் நண்பர்களுக்கு நிபந்தனை விதிப்பதில்லை. அவர்களை அப்படியே ஏற்பவன். அவர்களை எந்நிலையிலும் சார்ந்திருப்பவன். என் இதுவரையிலான இலக்கிய வாழ்க்கையில் என் பலநூறு நண்பர்களில் மூன்றுபேரிடம் மட்டுமே நானே நட்பை நிறுத்திக்கொண்டேன். அந்த எல்லையை அடைந்தபின். அது எனக்கு சரிவராது என உணர்ந்தபின். கண்டிப்பாக வெறுப்புடனும் கோபத்துடனும் அல்ல

ஆனாலும் அவர்களை நேரில் சந்திக்கும்போது நலம் விசாரிக்கவோ அவர்களுக்கு என்றாவது ஒர் உதவி தேவை என்றால் செய்ய நான் தயங்கியதில்லை. முன்னர் எனக்கு அது முடிந்ததில்லை என்பது உண்மை- இன்று எனக்கு கொஞ்சம் வயதாகிவிட்டது. பூசலை விட சமரசமே பிடிக்கிறது. சமீபத்தில் இயல் விருது விழாவிலும் சரி, மதுரை புத்தகக் கண்காட்சியிலும் சரி மனுஷ்யபுத்திரனை காண நேர்ந்தபோது நலம் விசாரித்து சில சொற்கள் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு அவர்கள் மேல் தனிப்பட்ட துவேஷம் ஏதுமில்லை என எனக்கே நிரூபித்துக்கொள்வதற்கான வழியும்கூட

மனுஷ்யபுத்திரன் அவரது அடிப்பொடிகள் மூலம் வெறுப்பை கக்குகிறார் என்றால் அது அவரது இயல்பு. ஒருவகையில் அது நல்ல வணிகம் தமிழில் . இங்கே இலக்கியம் என எதையுமே வாசிக்காமல், இலக்கிய வம்புகளை மட்டுமே வாசிக்கக்கூடிய பெரும் எண்ணிக்கையிலான வாசகர்கள் இருக்கிறார்கள். அதை அவர் நன்றாகவே அறிவார். இங்கே யார் எங்கே இலக்கியவாதியை வசைபாடினாலும் வந்து சேர்ந்துகொண்டு கூத்தடித்து மகிழும் பல நூறு வாசகர்கள் இருக்கிறார்கள்.

ஷாஜியின் கூட்டத்துக்குச் சென்று என் கருத்துக்களைச் சொல்ல எனக்கு தயக்கமேதும் இல்லை. ஆனால் உயிர்மை நிகழ்த்தும் ஒரு கூட்டத்துக்குச் செல்வேனா என்றால் மாட்டேன். அதனுடன் எனக்கு இனி எந்த தொடர்பும் இல்லை. என் வாழ்வில் இனி மனுஷ்யபுத்திரனுக்கு இடமில்லை

ஜெ

முந்தைய கட்டுரைஷாஜி கட்டுரை
அடுத்த கட்டுரைமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2