தேவதச்சன் கடிதங்கள்

d d 1

 

ஜெ

அத்துவான வெளியின் கவிதை .. முதல் இரு பகுதிகளைப் படித்தேன் , சந்தேகமில்லாமல் ஜெ வின் 2016ன் மிகச்சிறந்த கட்டுரைகள் இவை. கற்பனைவாதம் , செவ்வியல் மற்றும் அன்றாடம் , யாப்பு என்னும் வடிவம் அல்ல அதன் பேசுபொருள் தான் மரபு வாசகர்களைத் திகைக்க வைத்தது என்கிற வரி முற்றிலும் புதிய அவதானிப்பு என எண்ணுகிறேன். ஒளியாலானதிற்கும் மேல் இது.

‘வாய்முதல் வாதம்’ ஒரு கவித்துவ நையாண்டி. தேவதச்சனின் உரையாடல் கலை பற்றிய கணக்கீடு துல்லியம் /அற்புதம். ஆம் இதன் நிழலை நாம் எஸ் ராவிடமும் யுவனிடம் கண்டிருக்கிறோம்.

இக்கட்டுரைகளை முன்வைத்து நமது கோவை கூடுகையில் முதல் நாள் ஒரு கலந்துரையாடல் நிகழ்ந்தால் நன்று.

கிருஷ்ணன்

*
அன்புள்ள ஜெ

தேவதச்சனின் கவிதைகளைப்பற்றிய இந்தக் கட்டுரைத்தொடர் மிகமிக உதவியாக இருந்தது. பொதுவாகக் கவிதைகளையே குறைவானபேர்தான் வாசிக்கிறார்கள். கவிதைபற்றிய விமர்சனங்களை அதைவிடக்குறைவானவர்களே வாசிக்கிறார்கள். கவிதை எழுதுபவர்கள் எதையும் வாசிப்பதில்லை என்பதும் கவிதைபோல எழுதுபவர்கள் நம்மிடையே பேஸ்புக் எழுத்தாளர்கள் அளவுக்கே அதிகம் என்பதும் வேறுவிஷயம்.

இந்தக்கட்டுரைகள் தேவதச்சனின் கவிதைகளை மட்டும் அல்ல, பொதுவாக கவிதைகளையே புரிந்துகொள்ள மிகமிக உதவியாக இருந்தன. நவீனக் கவிதைகள் என்பவை மிகச்சாதாரணமான விஷயங்களைப் பேசுபவையாக இருக்கின்றனவே என்ற கேள்விக்கு நீங்கள் சபரிநாதன் மண்குதிரை மூவருமே மிக விளக்கமாக பதில் சொல்லியிருந்தீர்கள். இங்குள்ள சாதாரணமானவற்றிலிருந்து மேலதிகமாக உள்ள முடிவின்மையை உணர்ந்துகொள்வதே நல்ல கவிதையின் முயற்சி என்பது ஒரு பெரிய திறப்பாக இருந்தது.

அருமையான கட்டுரைகள். எல்லாவற்றையும் இன்னொருதடவை புரிந்துகொள்ளவேண்டும்

சாமிநாதன்

 

அன்புள்ள ஜெ

சபரிநாதன் எழுதிய கட்டுரை மிகமுக்கியமான ஒன்று. சமீபத்தில் கவிதை பற்றி இப்படி ஒரு காத்திரமான கட்டுரையை வாசிக்கநேர்ந்ததில்லை. பொதுவாக கவிதைபற்றி எழுத ஆரம்பிக்கும்போதே மேலும் சிக்கலான மொழியை சூடிக்கொள்வதும் தேவையற்ற கலைச்சொற்களைப்போட்டுத் தாளிப்பதும்தான் வழக்கம். இவர் கச்சிதமாக டிஃபைன் செய்து அனைத்தையும் சொல்கிறார். டி.எஸ்.எலியட், ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் கட்டுரைகளை கல்லூரிநாட்களில் வாசித்திருக்கிறேன். அவை ஒருபக்கம் சட்டக்கட்டுரைகள் போலவும் இருக்கும் மறுபக்கம் மிகநுட்பமான அழகியலை கூர்மையாகச் சொல்லியும் இருக்கும். அந்த சாதனை இந்தக்கட்டுரையில் இருந்தது.

பொதுவாக ஒன்று சொல்வார்கள். இலக்கியவிமர்சனம் என்பது இலக்கியவாதிகளால்தான் செய்யமுடியும் என்பது. பிரிட்டிஷ் கவிதைவிமர்சனம் பெரும்பாலும் கவிஞர்களால்தான் செய்யப்பட்டது. அது சுவாரசியமாகவும் ஆழமாகவும் இருப்பதற்குக்காரணம் அதுதான். இந்த சபரிநாதன் ஒரு கவிஞர் என ஊகிக்கிறேன்

ஜெயராமன்

அன்புள்ள ஜெயராமன்

சபரிநாதன், மண்குதிரை இருவருமே கவிஞர்கள். தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். இணையத்தில் இருவரின் கவிதைகள் பல கிடைக்கின்றன [http://manalveedu.blogspot.in/p/blog-page.html]

ஜெ

 

அன்புள்ள ஜெ

சபரிநாதனின் கட்டுரையை நான்கு நாட்களாக அமர்ந்து வாசித்து முடித்தேன். கல்லூரிநாட்களுக்குப்பின் நான் வாசித்த முக்கியமான கட்டுரைகளில் இது ஒன்று. எல்லா கோணங்களிலும் தேவதச்சனை அணுகுகிறார். கூடவே நவீனக்கவிதை என்றால் என்ன என்றும் வரையறை செய்தபடியே செல்கிறார். நவீனக்கவிதையை ஒருவகையான நுணுக்கமான விளையாட்டாக அவர் கூறுகிறார். அதை கொண்டு தேவதச்சனைப்பார்க்கையில் நிறைய விஷயங்கள் தெளிவடைந்தன.

நன்றி

அருண்

 

முந்தைய கட்டுரைவெறுப்பும் கனிவும்
அடுத்த கட்டுரைநினைவுகூர்தல்