வெண்முரசின் அடுத்த நாவலை டிசம்பர் பத்தாம் தேதி தொடங்குவதாக அறிவித்திருந்தேன். ஆனால் நடுவே பலவகையான பணிச்சுமைகள். விஷ்ணுபுரம் விருதுவிழா முதன்மையாக. தேவதச்சனைப்பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டியிருந்தது. அத்துடன் கீதைப்பேருரைக்கான தயாரிப்புகள். ஆறாம்தேதி கோவைக்குச் சென்றபின் நேற்றுத்தான் நாகர்கோயில் வந்தேன்.
என்ன எழுதுவதென்று தெரியாமல் தத்தளிப்பு இருந்தது. அதுவே வரட்டும் எனக் காத்திருந்தேன். கீதை உரைகள் அதன் எதிர்வினைகள் ஆகியவற்றிலிருந்து என்னை விடுவித்துக்கொண்டபோது மெல்ல முளைகள் மேலெழுந்தன. இந்நாவல் எப்படியோ கர்ணனை மையமாகக் கொண்டது. ஆகவே ‘வெய்யோன்’ என தலைப்பிட்டிருக்கிறேன். ஆனால் பலவகையிலும் பொருள்வளரும் தன்மைகொண்டது இது
கம்பனும் குழந்தையும் வெளிவந்தபோதே வெண்முரசின் தீவிர வாசகர்கள் பலர் அடுத்தநாவல் கர்ணனைப்பற்றியது என ஊகித்தனர் என்பது மிகப்பெரிய ஆச்சரியம். எனக்கு அது தெரிந்திருக்கவில்லை. கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி என்ற வரி அவர்களுக்கு கர்ணனை நினைவூட்டியது, அர்ஜுனனின் அம்பு கர்ணனுக்குள் திரௌபதியைத் தேடுவதுபோலப் பட்டது.
”உங்க மனசிலே கர்ணன்தான் சார்” என்று அவர்கள் சொன்னபோது ஆச்சரியமாக “அப்படியா?” என்று கேட்டேன். ஆனால் மெல்ல நானே அது உண்மை என உணர்ந்தேன். இன்று எழுதத்தொடங்கிவிட்டேன்.’
’வெய்யோன்’ வரும் இருபதாம்தேதிமுதல் வெளிவரத்தொடங்கும். அதற்குள் ஒரு பத்து அத்தியாயங்களாவது முன்னால்சென்றிருக்கவேண்டும். விஷ்ணுபுரம் விழா வருகிறது.