மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்கட்கு,
தங்கள் வலைத்தளத்தில் வரும் அனைத்துப்பதிவுகளையும் கடந்த இரண்டாண்டுகளாக வாசித்து வருகிறேன். தங்கள் சிறுகதைத்தொகுப்பு நூல்(ஊமைச்செந்நாய்), அறம் சிறுகதைகள், விஷ்ணுபுரம் (பாதி நூல்), வெண்முரசு (மழைப்பாடல்-16 வரை – தாமதமாகத்தொடங்கி தினமும் தொடர்ந்து மும்மூன்று இடுகைகள் வீதம்) வாசித்து வருகிறேன். திரு. நாஞ்சில் நாடன் அவர்கள் தம் கட்டுரைத்தொகுப்பொன்றில், ”ஜெயமோகன் அவர்கள் தமிழுக்குக்கிடைத்த கொடை” என்று குறிப்பிட்டிருந்ததை ஒவ்வொரு நாளும் உளமார உணர்ந்து வருகிறேன்
.
தங்கள் இன்றைய உள்ளீடான, ”கம்பனும் குழந்தையும்” ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் ஒப்பீடு. முப்பதாண்டு காலத்துக்குமுன் படித்த ஒரு நூலைப்பற்றிய கூர்ந்த, கருத்துத்துளிகளுடன், கம்பனின் வரிகளில் வாசகனின் மனம்விரியும் காப்பியக்கூறுகளைத் துல்லியமாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள். அசாத்தியமான வாசிப்பு, படைப்புப் பணிகளுனூடே வாசகர்களுக்கு(அவர்களின் வினாக்களை அலட்சியப்படுத்தாமல்) தெளிந்த சிந்தனையில் வடிந்த எழுத்துக்களால் பதில் அளிக்கும் தங்களுக்கு நாங்கள் என்றென்றும் கடன்பட்டுள்ளோம்.
அன்புடன்
அறிவழகன்.
ஜெ,
“அந்த நுட்பத்தை நிகழ்த்துகிறான் தமிழ்த் தெய்வம் சன்னதம் கொண்டெழுந்த நாவினன்”
உம்மிலும் தமிழ் சன்னதம் கொண்டெழுகின்றதையா.
நன்றிகளுடன் வணங்குகின்றேன்.
டில்லி துரை.
*
அன்புள்ள ஜெமோ
கம்பனும் குழந்தையும் அபாரமான கட்டுரை. அவ்வப்போதுதான் இப்படி புதிய கட்டுரைகளை வெளியிடுகிறீர்கள். அதிலும் கடைசி வரியில் உள்ள நுணுக்கமான நக்கல். அபாரம்
சாமிநாதன்
*
அன்புள்ள ஜெ
கம்பனும் குழந்தையும் ஒரு முக்கியமான கட்டுரை. இந்தியாவில் கம்பன் காளிதாசன் போன்ற பெருங்கவிஞர்கள் ஏன் பக்திக்கவிஞர்களாக அறியப்படவில்லை என்பதற்குப் பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் ஒரு நல்ல வரி சொல்லுவார். கம்பனும் காளிதாசனும் பக்தி என்று சொல்லி ஒரு காவியத்தருணத்தை ஒற்றைப்படையாக ஆக்குவதில்லை. அவர்கள் அந்தக் காவியமுகூர்த்தத்தை விரித்துவிரித்து பெரிசாக்குகிறார்கள். அங்குள்ள எல்லாமே பெரியதாகிவிடுகின்றன. தெய்வம் மட்டும் அல்ல தீயசக்தியும் அதேபோல மகத்துவமானதாக ஆகிவிடுகிறது. தீயசக்தியும் தெய்வமே என்று கொண்டால் மட்டுமே அந்தப்பெருநிலையில் மட்டுமே நம்மால் காவியகர்த்தனின் பக்தியை உணரமுடியும். இல்லையேல் அத்துவிட்டு மீறிவிட்டான் என்றுதான் நினைப்போம். அதை அழகாகச் சுட்டியிருந்தீர்கள்
செல்வராஜ்