கீதை உரை: கடிதங்கள் 7

gita-104

கீதை உரை-1 : பிடுங்கி நட்ட ஆலமரம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மெனிடம் என்ன எதிர்பார்க்கப்படுமோ அதைத்தான் ஜெ தன் கீதை உரையின் முதல் நாளில் நிகழ்த்தியிருக்கிறார்-கீதையைப் பற்றிய விவாதத்திற்கு , புரிதலுக்கும் அடிப்படையான ஒரு தளத்தை, சமகால பின்புலத்தில் கட்டமைத்திருக்கிறார். இனிவரும் கீதை சார்ந்த எந்த விவாதமும் இந்த அடிப்படை வரலாற்றுப் பின்புலத்தின் மீதே நிற்க முடியும் என்று தோன்றுகிறது.

இந்த வரலாற்றுப் பார்வை சார்ந்த தளத்தை அமைப்பதை ஜெ மிக விரிவாகவே செய்திருக்கிறார் , classical x modern , factual x figurative, subjective time x objective time, puranic x historic என்ற தளங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை மிகத் தெளிவாக வரையறுக்கிறார். அதே சமயம் அப்படி வரையறுக்காமல் போனதால் நேர்ந்த புரிதல் பிழைகளையும் குழப்பங்களையும் சுட்டிக் காட்டுகிறார்.

கால ஓட்டத்தில் மொழி பரிணமிக்கிறது, அறிவுத்துறைகள், தொழில்நுட்பம் பரிணாமம் கொள்கின்றன, விழுமியங்கள், சிந்தனைமுறைகள் என்று அனைத்துமே மாறுகின்றன. ஆனால் இவையனைத்தும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் இயங்குபவை, மேலும் மேலும் விரிவாக்கிக்கொண்டும், செறிவாக்கிக்கொண்டும் செல்ல முடிபவை. ஆனால் எல்லையற்ற விஷயங்களைப் பேசும், எல்லாக் காலங்களுக்குமான ஞானத்திற்கும் அதை ஏந்தி நிற்கும் வடிவங்களுக்கும் இவ்வகைப் பிரிணாமம் நிகழ்வதில்லை. ஏனெனில் அவை தம்மளவிலேயே முழுமைகொண்டு விடுகின்றன, பல ஆயிரம் ஆண்டுகாலம் மனித ஆழ்மனம் உள்ளுணர்வால் உணர்ந்தும் திரண்டும் மானுடம் முழுவதற்குமான ஞானமாய் கனிந்து வந்த அவற்றின் பரிணாமம் என்பது அதை நாம் எப்படி சமகாலத்தில் உள்வாங்குகிறோம் என்பதில் தான் உள்ளது.

ஜெ இந்த உரையில் நிகழ்த்திக் காட்டியிருப்பது இதையே. கீதையை பல நூறு ஆண்டுகள் பழமையான் ஒரு context டிலிருந்து முன்நகர்த்தி நவீனத்துவம் வழியாக சமகால சிந்தனை, மொழி, தத்துவ, சமூக என்று அணைத்தும் முயங்கும் ஒரு பரப்பில் கட்டமைக்கிறார். பல நூறு ஆண்டுகாலம் பழமையான ஒரு ஆலமரத்தை பாழடைந்த இடிபாடுகள் நிறைந்த ஒரு பள்ளத்திலிருந்து பிடுங்கி எடுத்து ஒரு ஊரின் நடுவிலிருக்கும் பெரும் ஏரியின் ஓரத்தில் நடுவதைப்போல கீதையை சுற்றி சமகாலத்தன்மையுள்ள ஒரு construct அமைக்கிறார். பிடுங்கி நடப்படும் ஆலமரம் அதுவாகவேதான் இருக்கிறது ஆனால் அது இப்பொழுது நம் வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் ஒன்றாக, நம் அன்றாட வாழ்க்கையை அதன் நிழலும், குளுமையும் வருட நெருக்கமாக தழைத்து நிற்கிறது .

Social Anthropology – etymology – தர்க்க முறைமைகள் என்று பல்வேறு அறிதல் முறைகளை ஒருங்கினைத்து நாம் எளிதில் நிராகரிக்கமுடியாத, வலுவான ஊகங்களை முன்வைக்கிறார். கீதையின் காலம் பற்றியும் அது வேதாந்தத்தின் திரண்டு கனிந்து உச்சமாக பிரிணமித்திருப்பதையும், கீதை இடைச்செருகலா என்பது பற்றியுமான அனுமானங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகவே முன் வைத்திருக்கிறார். சுரேஷ் குறிப்பிட்டது போல ஒரு கறாரான ஆராய்ச்சியாளனுக்குரிய பார்வையிலேயே இந்த உரை இருந்தது.

ஜெ இவ்வுரைகளில் சொன்ன விஷயங்களை வேறு பல தருணங்களில் எழுத்திலும் பேச்சிலும் சொல்லியிருக்கிறார். ஆனால் அவையனைத்தையும் ஒருங்கிணைத்து திரட்டி ஒரு முழுமைப்பார்வையாக முன் வைக்கப்படும் போது அது இந்த உரைகளை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துபோய் விடுகிறது. மேலும் பலமுறை இவ்வுரைகளை கேட்பேன் என்றே நினைக்கிறேன். இந்த உரையின் ஒரு தருணத்தில் “இந்திய சிந்தனைமுறை” என்ற அரூபமான ஒரு விஷயத்தை கையாலே தொட்டுவிடக்கூடிய ஒரு உயிர்ப்புள்ள ஜீவனாகவே மீளுருவாக்கம் செய்து நம் கண்முன் நிறுத்திவிடுகிறார்.

ஜெ இங்கு முன் வைத்திருப்பது கீதையைப் பற்றி என்றாலும் கூட ஒரு வகையில் அவர் முன்வைத்திருப்பது காலத்தில் உறைந்த எவ்வகையான ஞானத்தையும் அது இருக்கும் படைப்பையும் கட்டி இழுத்து வந்து சமகால நோக்கில் நிறுத்தும் ஒரு முறைமையையே. இந்த அணுகுமுறையை நாம் கீதை என்றில்லாமல் பல மதம் சார்ந்த ஞானம் சார்ந்த பிரதிகளுக்கும் போட்டும் பார்க்கலாம் என்றே தோன்றுகிறது. ஜெ ஒரு வகையில் இந்தியவியலின் மேல் ஒரு “ஜெரால்டு டயமண்டை” நிகழ்த்தியிருக்கிறார். ஒரு புதிய தளத்தை அமைத்திருக்கிறார். அதை முதலில் கீதை மேல் போட்டுப்பார்த்திருப்பது சரியாகவே அமைந்து வந்துள்ளது. இதை ஒரு புதிய ஆரம்பமாகவே கொள்ளவேண்டும். இதே முறைமையில் வேறு பல படைப்புகளை ஜெ ஏன் revive செய்யக்கூடாது என்றும் தோன்றியது.

கார்த்திக்

அன்புள்ள ஜெ,

உங்கள் கீதை உரையை கேட்டேன். உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

என்னை போன்ற நிறைய பேர் குறிப்பாக இளைஞர்கள் கீதையைப் புராண கதையாகவும், அது ஒரு அறநூல் அல்லது அது நமக்கானது அல்ல வயதானவர்களுக்கானது என்ற எண்ணம் உள்ளது. அது எதனால் என்று சரியாக தெரியவில்லை. நீங்கள் கூறுவது போல் நமது கல்வி திட்டத்தினாலோ அல்லது நம்மை சுற்றி உள்ளவர்கள் கீதையை அவ்வாறு பார்ப்பதினாலோ இருக்கலாம்.

நான் வெண்முரசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து இந்த எண்ணம் மாறத்தொடங்கியது. உங்கள் உரை இன்னும் அதை தெளிவாக்கியது. நான் பல கேள்விகளுடன் வந்தேன். அனைத்திற்க்கும் விடை கிடைத்தது. இது எனக்கு கீதையையும், வெண்முரசையும் ஏன், எவ்வாறு அணுக வேண்டும் என்பதை புரிய வைத்தது. இந்த உரையும், வெண்முரசும் இன்னும் பலரை குறிப்பாக இளைஞர்களை சென்றடைய வேண்டும். அது அவர்களுக்கு ஒரு தேடலையும், தெளிவையும் தரும் என்பதில் ஐயம் இல்லை.

மிக்க நன்றி.

அன்புடன்,
விஜி.

இனிய ஜெயம்,

சில மாதங்கள் முன்பு, போர்ட் லேன்ட் இல் கல்வி கற்க சென்று தங்கி இருக்கும் என் நண்பர் காரைக்குடி பிரபு வசம் பேசிக் கொண்டிருந்தேன். நித்யா எவ்வாறு அங்கு தன்னை ஸ்தரப்படுத்திக் கொண்டார் என வினவினேன். பிரபு நித்யாவின் தோழி டெபோரா வசம் பேசி தோழியின் சில அவதானங்களை சொன்னார். நித்யா செயல்பட்ட போதும் இன்று போலவே அன்றும் இந்திய மெய்யியல் மரபு குறித்து அங்குள்ளோருக்கு எந்த ஆர்வமும் இல்லை. அல்லது எதுவுமே தெரியவில்லை. நித்யாவே தனித்துவமான முறையில் அதிகாலை வகுப்புகளை உருவாக்கி காதுள சிறிய குழுக்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

சரியான சூழல் ஒன்று வாய்த்தது. குரு அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். அதுதான் வியட்நாமில் அமேரிக்கா நீதியை நிலை நாட்ட செயல்பட்ட காலம். எந்த சமானிய அமெர்க்கனும் தன் மேல் கவியும் போரை அறிந்தவன் இல்லை. ஆகவே அவனுக்கு அமேரிக்கா செய்யும் போர் என்பது கேளிக்கை. மற்றொரு எல்லையில் அதில் இருக்கும் மறுக்கவே இயலா அறப் பிழை அவனை தரிக்க இயலாமல் செய்கிறது. ஆக அவனுக்கு இந்த கேளிக்கையும் தேவை, தேசிய பெருமிதம் தேவை, அதே சமயம் அறமின்மை என்ற குற்ற உணர்விலும் விழக் கூடாது. அப்போதுதான் அவர்களுக்கு கீதை மேல் கவனம் குவிகிறது. கீதை என்ன சொல்கிறது என அறிய விழைகிறார்கள். யானையை பிச்சை எடுக்க வைப்பதைப் போல. கீதையைக் கொண்டு தங்கள் நிலையை நியாயப் படுத்திக் கொள்ள முனைந்திருக்கிறார்கள். இந்த சூழலில்தான் குரு அங்கு நுழைகிறார்.

நான் கையில் எது கிடைத்தாலும் அதை வாசிக்கத் துவங்கி விடுவேன். வாசிப்பின் துவக்கத்தில் கண்ணதாசன் எழுதிய கீதை உரை வாசித்தேன். இறுதியாக வையத்துள் எந்த கசவாளித்தனமும் செய்தது வாழ்வாங்கு வாழ்ந்து பலனை பகவான் காலடியில் சமர்ப்பித்து விட்டு போய்க்கொண்டே இரு எனும் ஞானத்தை அடைந்தேன். பின் வாசிப்பு வளர ஓஷோவின் கீதை உரை வரை வகை வகையான கீதை உரைகள் வாசித்து என்னது கீதை ,என்னத்துக்கு கீதை என்றே புரியாத நிலையை எட்டி இருந்தேன். அதில் ஓஷோ மட்டும் கொஞ்சம் அதிரடி. நூலின் துவக்கத்தில் கீதை இடை செருகல்தான் என நிறுவி இருந்தார். அவரது காலப் பின்னணி அடிப்படையில் மரபான கீதை ப்ரச்சங்கம் என்ற நிலையில் இருந்து கீதையை தனக்கே உரிய அதிரடி பாணியில் கீதையை உடைத்து வெளியே கொண்டு வந்திருந்தார். மிக மிக பின்னால் பிரபு வழியே நித்யாவின் அவதானிப்பின் படி பார்க்கையில் ஏன் விவேகானந்தரும்[செயல் முறை வேதாந்தம்] காந்தியும்[அனா சக்தி யோகம்] பாரதியும் கீதையை கையில் எடுத்தனர் என அறிந்தபோது மிக்க உவகை அடைந்தேன்.

நித்யா சொல்கிறார். போர் என்பது இருக்கும் ஒன்று அழிந்து, புதிதாக ஒன்று பிறப்பது. [ அதாவது வளர்ச்சி என்பதன் சாரம் என்பதே வளர் சிதை மாற்றத்தின் மேல் தான் நிற்கிறது.போர் என்பது புதிய ஒன்று பிறப்பிக்க நிகழும் வளர் சிதை மாற்றத்தில் சிதைவின் பகுதி. ஆக போர் என்பது ஒருபோதும் மனித பிரக்ஞ்சயால் அளந்துவிட முடியாத ”பங்களிப்பு”] இந்த ஒன்று அழிந்து இன்னொன்று பிறக்கும் செயல்பாட்டில், [பால் தயிர் ஆவது போன்ற இந்த ஓட்டத்தில்] வரும் [க்ரே ஏரியா] சாம்பல் பகுதியில் சிக்கிக் கொள்ளும் மனத்துக்கு உரைக்கப் பட்டதே கீதை.

எனில் விவேகானந்தரும் காந்தியும் பாரதியும் ஏன் கீதையை நாடினர் எனப் புரிகிறது. விவேகானந்தர் கீதையை வெடிகுண்டு வேதாந்தம் என்கிறார். மிடிமைகள் மீது இந்த வெடிகுண்டை பற்றவைத்து வீசுங்கள் என்கிறார். ஆம் விவேகானந்தர் நமது பாரதப் பண்பாட்டில் ஒரு முக்கியமான சாம்பல் பகுதியில் நின்று இதை பேசுகிறார். நீதி வசப்பட்ட சட்ட அடிப்படயிலான இந்தியாவை உருவாக்கிய பிரிட்டிஷ் அரசு, வெளியேறுகையில் அந்த நீதி சட்டம் அனைத்தையும் எடுத்துக்கொண்டே வெளியேறியது. சட்டமும் நீதியும் அவன் பாட்டனின் கோமணம் அல்லவா. சட்டமற்ற வெளியில், காலில் குருதி சேறு அளய காந்தி கையில் கீதையுடன் நடந்தார். பாரதி தமிழ் இலக்கியத்தின் நல்லூழ் மிடிமையையும் அச்சத்தையும் கொன்று போக்க கீதையுடன் வந்தான்.

இந்த பிரும்மாண்ட வளர்சிதை மாற்றம் எனும் தரிசனத்தின் இருண்ட புள்ளியில் திகைத்து நிற்பவனுக்கே கீதை. நீங்கள் அடிக்கடி சொல்லும் கீதா முகூர்த்தம் எனும் தருணத்தை நான் இவ்வாறுதான் வரையறை செய்து கொள்கிறேன். உண்மையில் அனைவருக்கும் இந்த கீதா முகூர்த்தம் சாத்தியமா? அதை சாத்தியபடுத்தி பார்க்கும் முயற்ச்சியே வெண் முரசு என இப்போது தோன்றுகிறது. உங்கள் தளத்து கீதை உரை, விளக்கங்கங்கள், விவாதங்கள் பேச்சு எதையும் நான் இதுவரை வாசிக்கவில்லை. நீங்கள் இது வரை கீதை குறித்து செய்தது எல்லாம் சற்றே வெளியே தெரியும், கடலில் மிதக்கும் பனிப் பாறையின் நீட்டல் மட்டுமே. உங்களது ஆதாரமான களம் வெண்முரசில் இருக்கிறது. அங்கு உங்கள் அகத்திலிருந்து உரைக்கப்படப்போகும் கீதைக்காக காத்திருக்கிறேன்.

கடலூர் சீனு

கீதை உரைகள் அனைத்தும்

முந்தைய கட்டுரைஇரு எல்லைகள்
அடுத்த கட்டுரை‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2