டீக்கடை இலக்கியம்

1

அப்துல் ஷுக்கூர் என்னும் நண்பர் கேரளத்தில் கண்ணனூர் அருகே பெடையன்னூர் என்னும் கிராமத்தில் ஒரு சிறிய டீக்கடை நடத்துகிறார். சென்ற பத்தாண்டுக்காலமாக தொடர்ச்சியாக மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை தன் டீக்கடையில் இலக்கியக்கூட்டங்களை நடத்திவருகிறார்.

வரும் டிசம்பர் 13 அன்று என்னுடைய மலையாளநூல்களைப்பற்றி ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். என்னைக்கூப்பிட்டு தன் செயல்பாடுகளைச் சொல்லி பேசவரும்படி அழைத்தார். ‘பயணச்செலவோ தங்குவதற்கு விடுதிகளோ ஏற்பாடு செய்ய முடியாது. சாப்பாடு மட்டும்தான். என் செலவில் நடத்துகிறேன். கொஞ்சம் புத்தகம் விற்கும். அந்த பணத்தை மருத்துவச்செலவுகளுக்கு பணம் தேவைப்படும் எழுத்தாளர்களுக்குக் கொடுப்பேன்” என்றார்

அவரது வடகேரள முஸ்லீம் மலையாளம் அற்புதமானது. ‘வந்நீனி, போயீனீ’ வகை. அதைக்கேட்க உற்சாகமாக இருந்தது. பழைய காசர்கோடு நாட்கள் திரும்புவதுபோல. 12 ஆம் தேதி நானும் நண்பர்களும் ஒரு காரில் கிளம்பி ஊட்டியைச்சுற்றிக்கொண்டு மலைப்பயணமாகச் சென்று 13 ஆம் தேதி கண்ணனூர்  விழாவில் கலந்துகொள்ளவிருக்கிறோம்.

சொல்லப்போனால் டீக்கடையைவிட இலக்கியத்திற்குச் சிறந்த மேடை எது?

 

முந்தைய கட்டுரைரத்தத்தை துடைக்கும் தாள் : தேவதச்சனின் அழகியல் -’கார்த்திக்’
அடுத்த கட்டுரைகீதை கடிதங்கள் -6