இனிய ஜெயம்,
கட்சிகள் மற்றும் சில்லறை மக்களின் இடர்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
கிளம்பும் தன்னார்வலர் அனைவருக்கும் கடலூர் என்பதே முதல் இலக்காக இருக்கிறது. மாறாக கிளம்புகையில் சிதம்பரம், விழுப்புரம், குறிஞ்சிபாடி, பண்ருட்டி வட்டம் என சென்று சேரும் இலக்கை முன்பே முன்பே வகுத்துக் கொள்வது சிறப்பு.
தானே சுனாமி என இரு இடர்களிலும் எதுவும் கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்ட தலித் மக்கள் இப்போது குமுறிக் கிளம்பி இருக்கிறார்கள். தன்னார்வலர்களின் முதல் இலக்கு பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களாக இருப்பது சிறப்பு.
நிவாரணப் பொருட்கள் வரும் வாகனங்கள் முகப்பில் இருக்கும் ”நிவாரண பொருட்கள்” என்ற பதாகை இல்லாமல் வரவும். பெரும்பாலும் குடிசை பகுதிகளுக்குள் அதிகாலை நுழைவது சிறப்பு.
எல்லாம் போக எனது இடது சாரி தோழர்கள் வசம் பேசினேன். கடலூர் பண்ருட்டி விழுப்புரம் சிதம்பரம் என எங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆபிஸ் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த நிவாரண பணிக்கு வரும் பொருட்களுக்கும் நபர்களுக்கும் கட்சிக்காரர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் நடவடிக்கை நடக்கிறது.
அவர்களே தன்னார்வலர்களை நேரடியாக பாதுகாப்புடன் உண்மையாக பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு அழைத்து சென்று தன்னார்வலர்களே நேரடியாக நின்று பணி செய்ய உதவுவதாக வாக்களித்து இருக்கிறார்கள்.
அனைத்தும் மிக விரைவாக சீரடைந்து வருகிறது. வழமை போல சைலேந்திர பாபு அவர்கள் தனிப்பட்ட நண்பர்கள் குழுவுடன் இறங்கி, கட்சி அராஜகம், திருட்டு போன்றவற்றை கட்டுப் படுத்தும் தீவிரத்தில் இருக்கிறார்.
மழை இன்று இல்லாததால் மைய சாலை குழிகள் இன்றி சீரமைக்கும் பணி துவங்கப்பட்டு விட்டது.
தடை இன்றி இறுதி இலக்கு வரை நிவாரண பணிகள் சென்று சேர்ந்து வருகிறது..
இனிய ஜெயம் இதை தளத்தில் வெளியிட்டால் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்
கடலூர் சீனு