காந்தி, ஒரு கடிதம்

ஜெ,

ராஜ் மோகன் காந்தியின் “மோகன் தாஸ்” படித்துக் கொண்டிருக்கிறேன்.. முன்பொரு முறை மிக மேலோட்டமாக இப்புத்தகத்தைப் படிக்கும் போது இது வெறும் தகவல் களஞ்சியம் என்றே தோன்றியது.. இதை விடவும் அருண் காந்தியின் “கஸ்துர்பா” மிக நல்ல புத்தகம் என்றே சொல்வேன்..
ஆனால் இம்முறை ராஜ்மோகனின் எளிய சொற்கள் வடிக்கும் காந்தி, மருதுவின் கோட்டோவியம் போல மிக அழகான தரிசனம் தருகிறது..

சமணமும் வைணவமும் கலந்த நோக்கு என்பது மிக லாஜிக்கலான வாதம்.. அதுவும் அந்தச் சமண முனி புத்லி பாய்க்கு வாங்கிக் கொடுத்த வாக்குறுதிகள்.. அதை தாண்டியும் காந்தியின் வாழ்க்கை முறை மிகவும் வியப்பு ஊட்டுகிறது.. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து தான் தோற்ற மும்பையில் மீண்டும் ப்ராக்டீஸ் துவங்கி, ஒரு பங்களாவில் குடியேறி, ரயிலில் முதல் வகுப்பு பாஸ் வாங்கி (சில சமயம் அந்த வாழ்க்கைத் தரத்தை பெருமையாகவும் எண்ணி..) செட்டில் ஆகும் காந்தி, சில மாதங்களிலேயே மீண்டும் தென் ஆப்பிரிக்காவுக்குச் செல்கிறார்.. வேறு யாராக இருந்தாலும் மும்பையில் நாலு பங்களா வாங்கி தொழிலதிபராகி செட்டில் ஆகி இருப்பார்கள்.. அப்படி ஆகாமல் அவரைச் செலுத்திய அந்த பெரும் சக்தியே கடவுள் என்று தோன்றுகிறது.. திலகரோ.. நேதாஜியோ தலைஎடுத்திருந்தால், இந்தியாவில் ரத்த ஆறு ஓடியிருக்கும்.. வன்முறையை விட மிதப் போக்கின் பின் சென்ற இந்தியப் பொதுஜனங்களின் மன நிலையும் சமணத் தாக்கம் தானோ? காந்தியின் அறப் போர் வெள்ளையரோடு மட்டுமல்ல.. வன்முறையோடும், அவ்வழியை உபதேசித்த இந்தியத் தலைவர்களோடும் கூடத் தான் என்று தோன்றுகிறது.. (இன்றும் குஜராத்தில் சமணம் மிகப் பெரும் மதம்.. ஆனால் அதன் ஆன்மா அழுகி விட்டது போல எனக்குத் தோன்றுகிறது.. குஜராத்தில் வியாபார நோக்கமாக நான் பயணம் செய்து சந்திக்கும் நபர்கள் அனைவருமே சைவ உணவுக் காரர்கள்.. பலர் சமணர்கள்.. ஆனால் மதம் பற்றிய பேச்சுக்களில் அவர்கள் கண்களில், வார்த்தைகளில் தெரியும் வன்முறை அச்சமூட்டக் கூடியது.. )

நம் கண் முன்னே இலங்கையில் வன்முறை வழியினால் ஓடிய ரத்த ஆறும், அவ்வழியின் தோல்வியும், காந்தியின் தேவையையும்.. மனிதனின் பொறுமையின்மையையும் மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறது..

மிக அருமையான உரை.. நன்றி..

பாலா..

முந்தைய கட்டுரைஇரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைமலேசியாவில் இருந்து திரும்பினேன்