தேவதச்சன் என்னும் பெண்கவிஞர்

deva1

அன்புள்ள ஜெ சார்

நான் தமிழ்க்கவிதைகளை தொடர்ச்சியாக வாசித்துவருபவள். கவிதைமேல் உள்ள ஆர்வம் இளமையிலேயே ஆரம்பித்தது. விகடன் சொல்வனம் வழியாக நல்ல கவிதைகளை வாசித்தேன். அவற்றைத்தேடித்தேடி வாசித்து என் ரசனையை வளர்த்துக்கொண்டேன். நிறைய கவிதைகளை வாசித்தாலும் எப்போதும் நல்ல கவிதைகளை தவறவிட்டுவிட்டேன் என்ற எண்ணமும் எனக்கு உண்டு.

தேவதேவனை நிறையவே வாசித்துள்ளேன். காரணம் நீங்கள் எழுதியதும் இணையத்தில் கிடைத்ததும். தேவதச்சனை வாசித்ததில்லை. அதில் எனக்கு வெட்கம் இல்லை. நான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதுதான் உண்மை. இப்போது இந்த விருது வழியாக அவர் திடீரென்று பூதாகாரமாக அறிமுகமாகியிருக்கிறார். ஒரே வாரத்தில் எல்லா தொகுப்புகளையும் வாசித்துவிட்டேன்

எனக்கு முதலிலே தோன்றிய எண்ணம் தேவதச்சன் என்பவர் ஒரு பெண் கவிஞர் என்பதுதான். இதைச்சொன்னால் அவரோ அவரது ரசிகர்களோ கோபித்துக்கொள்ளலாம். ஆனால் அவரது உலகம் அப்படித்தான் தோன்றுகிறது. பெரியபெரிய விஷயங்கள் எல்லாம் இல்லை. பெண்களைப்போல சின்ன விஷயங்கள்தான். பெரும்பாலான விஷயங்கள் வீட்டுக்குள்ளேயே நடக்கின்றன. வீட்டுக்குள்ளேயே அவை எல்லாவற்றையும் கண்டுகொள்கின்றன

கவிதைகளில் முக்கியமாக இருப்பவை பெண்கள், குழந்தைகள்,வீட்டுப்பொருட்கள் என்பதனால் இப்படித்தோன்றுகிறது என நினைக்கிறேன். பலூனுடன் குழந்தைகளிடம் விளையாடுவது, ஜெல்லிமீனைப்பார்த்துக் குதிப்பது எல்லாம் பெண்களின் உலகம். சைவ உணவுக்காரியைப்பற்றிய கவிதை பெண்களின் அக உலகம்.

இந்த அளவுக்கு எந்தக்கவிஞரும் பெண்ணுலகை எழுதியதில்லை. நம்மிடம் நல்ல பெண்கவிஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வீட்டைவிட்டு வெளியே போய் உலகை ஜெயிக்க நினைக்கிறார்கள். ஆகவே அவர்களின் பாஷை அறைகூவல் மாதிரி இருக்கிறது. பெரும்பாலான பெண்கள் திருப்தியாக வாழும் சின்ன உலகம் அவர்களால் எழுதப்படுவதேயில்லை. அந்த உலகத்தை தேவதச்சன் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்

என் வாசிப்பு சரியா என எனக்குத்தெரியவில்லை. ஆனால் இப்படி எனக்குத் தோன்றிக்கொண்டே இருக்கிறது.

பிகு

நல்ல தமிழ்க்கவிதைகளின் ஒரு மொத்தப்பார்வையை எப்படி அடைவது? அதற்கு நல்ல புத்தகம் உண்டா?

எம்

அன்புள்ள எம்

உங்கள் பார்வை பெருமளவுக்குச் சரியானதே. ஒரு புதிய கோணம்

ராஜமார்த்தாண்டன் தொகுத்த கொங்குதேர்வாழ்க்கை [தமிழினி] நவீனக்கவிதைகளில் முக்கியமான பெரும்பாலான கவிதைகளை ஒரே நூலில் அளிக்கிறது

ராஜமார்த்தாண்டனின் தமிழ்ப்புதுக்கவிதை வரலாறுநூலும் உதவியானது

ஜெ

முந்தைய கட்டுரைதான்சானியா -ஒருகடிதம்
அடுத்த கட்டுரைமழை கடிதங்கள்- 2