நகரம்! நகரம்!

மனுஷ்யபுத்திரன் எனக்குத் தீபாவளி வாழ்த்து அனுப்பியிருந்தார். பல வகையிலும் இந்த தீபாவளி எனக்கு முக்கியமானது, அஜிதனும் சைதன்யாவும் வீட்டிலேயே இருந்த தீபாவளி இது. நான் அவரைக் கூப்பிட்டு பேசிய போது அவரது சமீபத்திய கவிதை ஒன்றைக் குறிப்பிட்டேன். எம்டன் குண்டு போட்டபோது கிளம்பியது போல மொத்தச் சென்னையே ஊரைவிட்டுக் கிளம்புவது பற்றிய கவிதை அது

அவர் எனக்கு கடிதமெழுதியிருந்தார்

mq

அன்புள்ள ஜெயமோகன்,

நீண்ட நாளைக்கு பிறகு உங்களிடம் பேசியது மனதிற்கு நன்றாக இருந்தது. ஒரு கவிதையை நான் குறிப்பிட்டதும் சட்டெனெ அதன் சாரத்தை தொட்டு திறந்து நீங்கள் பேசியது மனக்கிளர்ச்சி தந்தது. இதுதான் அந்தக் கவிதை.

அன்புடன்
மனுஷ்ய புத்திரன்

1

தீபாவளியைத் தேடி

பண்டிகைகள்
எப்போதும்
எங்கோ தொலைவில் இருக்கும்
ஒரு ஊரில் இருக்கின்றன

தீபாவளிக்கு முந்தைய நாளில்
தீபாவளியைத் தேடிசெல்பவர்கள்
நகரத்தை விட்டு
பெரும் வெள்ளமாக
வெளியேறிக் கொண்டிருந்தார்கள்

பேருந்துக்காக காத்திருப்பவர்கள்
ரயிலுக்காக காத்திருப்பவர்களின் முகங்களில்
எல்லையோரங்களில் காத்திருக்கும்
அகதிகளின் நிழல்கள் விழுகின்றன

ஒரு புதுமணத் தம்பதி
தங்கள் முதல் தீபாவளிக்கு
ஊருக்குச் செல்வதற்காக
டிக்கட் கவுண்டரின் முன்
வாடிய முகத்துடன்
நின்று கொண்டிருக்கின்றனர்

அப்பா வந்துருவேன்
அப்பா வந்துருவேன்
என்று யாரோ ஒருவன் பதைப்புடன்
அலைபேசியில் சொல்லிக்கொண்டே
அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான்

தெற்கிலிருந்து
இந்த நகரத்திற்கு வந்த ஒருவன்
ஒரு சிறிய கைப்பையுடன்
இரவெல்லாம் பேருந்தில்
நின்று கொண்டே பயணம் செய்கிறான்

ஒரு பண்டிகையைத் தேடி
எல்லா திசையிலும்
மக்கள் சாரை சாரையாக
சென்று கொண்டிருக்கிறார்கள்

பண்டிகைகள் நாம் இருக்கும்
இடத்திற்கு வந்து விடாது
நாம் தான் அதை தேடிப் போக வேண்டும்
நாம் எந்த நிலங்களை விட்டு வந்தோமோ
எந்த முகங்களை விட்டு வந்தோமோ
அங்குதான் பண்டிகைகள்
குடியிருக்கின்றன

தீபாவளிக்கான ஒரு சிறப்பு ரயிலில்
கூட்டம் பிதுங்கி வழிகிறது
அந்த ரயில் மாற்று பாதைகளில்
வெகு நேரமாக சென்றுகொண்டிருக்கிறது
யாரோ ஒருவன்
’ இந்த ரயில் போய்ச்சேருவதற்குள்
தீபாவளி முடிந்து விடும்”
என்று முணுமுணுக்கிறான்

நானும் அந்த ரயிலில்தான்
போய்க்கொண்டிருக்கிறேன்
எனது பண்டிகை காத்திருக்கும்
ஊர் என்று எனக்கு எதுவும் இல்லை

எனது பண்டிகைகள்
என் பால்யத்தில் இருக்கின்றன
அதுவரைக்கும் இந்த ரயில் போகுமா
என்றும் எனக்குத் தெரியவில்லை

*

அவர் எழுதிய நல்ல கவிதைகளில் ஒன்று இது. இதிலுள்ள உலகளாவிய தன்மைதான் காரணம். உலகமே நகரங்களில் மையம் கொள்கிறது. அத்தனைபேரும் தங்கள் இளமைகளை, பாரம்பரியத்தை, ஆழ்மனதை கிராமங்களில் விட்டுவிட்டு நகரங்களுக்குக் குடியேறுகிறார்கள். அங்கே நகரெமெனும் மாபெரும் இயந்திரத்தின் பகுதிகளாகிறார்கள். தானியங்கிப் பட்டைகள் அவர்களை கொண்டு செல்கின்றன.

சீனாவில் புத்தாண்டு நாளன்று மொத்தச் சீனாவுமே நகரங்களை உதறி கிராமங்களுக்குச் சென்றமையால் அங்குள்ள முப்பத்தாறு பட்டை கொண்ட நெடுஞ்சாலையில் ஆறுமணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது என்று செய்தி வந்தது. சென்னையும் தீபாவளி சமயத்தில் அப்படியே திகைத்து விடுகிறது. நெடுஞ்சாலைகள் உறைந்து நின்று கூச்சலிடுகின்றன.

அது லௌகீகத்திலிருந்து, நிகழ்காலத்திலிருந்து ஒரு தீடீர் விழித்தெழல் தான். இழந்து வந்த ஒன்றை நோக்கிய பாய்ச்சல். நனவுக்கும் ஆழ்மனதுக்கும் நடுவே ஓடுகின்றன நெடுஞ்சாலைகள், ரயில்பாதைகள்.

ஆனால் காலம் முன்னால் தான் செல்லும். திரும்பிச் செல்ல அதற்குத் தெரியாது. திரும்பிச் சென்ற இடங்களில் அவர்கள் அறிந்த எதுவும் இருப்பதில்லை. அது அவர்களுக்கும் தெரியும். ஆகவே ஊருக்குச் சென்றதுமே செயற்கையாகக் கொண்டாடுகிறார்கள். அது இரண்டு நாளைக்குத் தாங்கும். அதன்பின் மீண்டும் நகரம்

சென்னையில் வெள்ளம் என்று கேட்டதும் நேற்று சிங்கப்பூரிலிருந்து நண்பரும் கவிஞருமான நெப்போலியன் கூப்பிட்டார். ‘அண்ணன், மழையப்பாத்தீங்களா? இந்த மழைக்குப் பின்னாடி நம்ம ஜனங்க கொஞ்சம் முழிச்சுக்குவாங்க. சின்ன ஊர்களுக்கெல்லாம் ஒரு விடிவு வரும். அமெரிக்காவிலயோ சிங்கப்பூர்லயோ சம்பாதிச்சத முழுக்க சென்னையில வீடா கட்டி இன்வெஸ்ட் பண்ணாம அவங்கவங்க ஊர்களுக்கும் போலாம்னு தோணிடும்’

நெப்போலியன் புதுக்கோட்டைக்காரர். அவரது நம்பிக்கையை என்னால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. சென்னை ஒரு மாய இயந்திரம். அது எவரையும் விடுவதில்லை. கவர்ந்திழுக்கும், உட்கார்த்தி வைத்திருக்கும். அது உலகியலின் மாயை. பண்டிகைகள் எல்லாம் இனிய பகற்கனவுகள்

mt [எம்.டி]

எர்ணாகுளம் உருவாவதற்கு முன்னால் மலையாளிகளுக்கு மெட்ரோபாலிடன் நகரம் என்றால் சென்னைதான். மலபார் முன்பு சென்னை மாகாணத்தின் பகுதியாக இருந்ததும் காரணம்.எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி 1967 ல் வெளிவந்த ‘நகரமே நன்றி’ என்னும் படம் சென்னை என்னும் மாயத்தின் மிகச்சரியான சித்தரிப்பு. அதன் வாய்ப்புகள், அதன் வசீகரம், அறியாமலேயே அது பறித்துக்கொள்ளும் இறந்தகாலமும் கனவுகளும்…

படத்தின் இரு பாடல்களை மீண்டும் கேட்டேன். ‘நகரம் நகரம் மகாசாகரம்’ ஜேசுதாசின் குரல். துயரம் நிறைந்த பாடல். சென்னையில் தன்னை இழந்த மலையாளக் கிராமத்தானின் தனிமையின் இசை. இன்னொரு பாடல் ஜானகி பாடிய ‘மஞ்ஞணி பூநிலாவு’. தான் இழந்த கேரளத்தின் நிலத்தைப் பற்றிய ஓர் இனிய கனவு.

மீண்டும் ஹமீதின் கவிதை. அதை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து பத்து கவிஞர்களுக்கு அனுப்பினேன். ‘அது மலபார் எக்ஸ்பிரஸ் பற்றிய கவிதை. மலையாள இலக்கியத்தில் அதைப் பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. அது நகரத்துக்குக் கொண்டு செல்லும். திரும்பக் கொண்டு வராது’ என்றார் ஒரு மூத்த கவிஞர்.

புதுமைப்பித்தனின் சுப்பையா பிள்ளையின் காதல்கள் கதையில் பிள்ளையவர்கள் ஒவ்வொரு நாளும் எக்மோர் சென்று நெல்லை எக்ஸ்பிரஸைப் பார்த்துவிட்டு பெருமூச்சுடன் திரும்பச் செல்வதை நினைத்துக் கொண்டேன்.

உலகம் முழுக்க மக்கள் நகரங்களில் தேனடைகள் போல அப்பியிருக்கிறார்கள். அவ்வப்போது ஓர் உலுக்கல். விழித்துக் கலைந்து அலை பாய்ந்து திரும்ப அடைகிறார்கள்.

எதிர்காலத்தில் விவசாயப் பண்ணைகளும் நகரங்களும் மட்டுமே உலகில் இருக்கும் என்றும், மக்களில் 90 சதவீதம்பேரும் பெருநகரங்களில் வாழ்வார்கள் என்றும் எதிர்காலவியலாளர்கள் சொல்கிறார்கள். இன்று அதன் அடையாளங்கள் தெரிகின்றன

இன்று இக்கவிதையை மீண்டும் மீண்டும் நினைக்கக் காரணம் மழை. எனக்குத் தெரிந்த பலர் சென்னையை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனால் வெளியேற முடியாமல் அனைத்து வழிகளும் மூடிக் கிடக்கின்றன.

இது இன்னும் கொடூரம். நனவை விட்டு வெளியேறும் வாயில்கள் அனைத்தும் மூடிவிட்டதென்றால் அதைவிடப்பெரிய கொடுங்கனவு ஏது?

1 [ பி.பாஸ்கரன்]

நகரம் நகரம் மகாசாகரம்
மகா சாகரம்

களியும் சிரியும் வேறே
செளியும் சுழியும் தாழெ
புறமே புஞ்சிரி சொரியும் சுந்தரி
பிரியான் விடாத்த காமுகி

ஸ்னேஹிக்குந்நு கலஹிக்குந்நு
மோஹபந்தத்தில் அடியுந்நு
நுரைகள் திங்ஙும் திரைகள் போலே
நர ராசிகள் இதில் அலையுந்நு

குதிச்சு பாயும் நகரியில் ஒரு
கூரை சமைக்குவது எங்ஙினெ ஞான்
பாராவார திரையில் என்னுடே
பவிழ தீவு தகர்ந்நாலோ

தமிழில்

[நகரம் நகரம் மாபெரும் கடல்
மாபெரும் கடல்

களியாட்டும் சிரிப்பும் வேறு
சேறும் சுழிப்பும் கீழே
வெளியே புன்னகை சொரியும் சுந்தரி
பிரியவிடாத காதலி

காதலிக்கிறாள் ஊடுகிறாள்
மோக பந்தத்தில் அடிமைப்படுகிறார்கள்
நுரை சிதறும் அலைகள் போல
மானுட குலங்கள் இதில் அலைகின்றன

விரைந்தோடும் நகரியில் எனக்கென
ஒரு கூரையை கட்டுவது எப்படி?
ஆழிப் பேரலையில் எனது
பவளத்தீவும் உடைந்திடுமோ?]

https://www.youtube.com/watch?v=88nH5WYXoWg

மஞ்சணி பூநிலாவு பேராற்றின் கரையிங்கல்
மஞ்ஞள் அரைச்சு வச்சு நீராடும்போள்

எள்ளெண்ணை மணம் வீசும் என்னுடே முடிக்கெட்டில்
முல்லைப்பூ சூடிச்ச விருந்நுகாரா

தனுமாசம் பூக்கைத மலர்சூடிவரும்போள்
ஞான் அங்ஙயே கினாவு கண்டு கொதிச்சிரிக்கும்

பாதிரா பாலைகள்தன் விரலிங்கல் பௌர்ணமி
மோதிரம் அணியிக்கும் மலர் மாசத்தில்
தாந்நியூர் அம்பலத்தில் கழகக்காரனேபோலே
தாமர மாலையுமாய் சிங்கம் எத்தும்போள்
ஒரு கொச்சு பந்தலில் ஒரு கொச்சு மண்டபம்
புளியிலக்கரமுண்டு கினவு கண்டேன்ன்

மஞ்சணி பூநிலாவு பேராற்றின் கரையிங்கல்
மஞ்ஞள் அரைச்சு வச்சு நீராடும்போள்


தமிழில்

[பனி அணிந்த பூநிலவு பேராற்றின் கரையில்
மஞ்சள் அரைத்து வைத்து நீராடும்போது

எண்ணெண்ணை மணம் வீசும் என் கூந்தலில்
முல்லைப்பூ சூடித்தந்த விருந்தினனே

மார்கழி மாதம் தாழம்பூ மலர்சூடி வரும்போது
நான் உங்களை கனவுகண்டு ஆசைப்பட்டிருப்பேன்

நள்ளிரவில் விரியும் பாலைமரத்தின் விரல்மலர்களில்
பௌர்ணமி மோதிரம் அணிவிக்கும் மலர் மாதத்தில்

தாநியூர் கோயிலில் பூசை செய்பவனைப்போல
தாமரை மாலயுடன் ஆவணி வரும்போது

ஒரு சிறிய பந்தலில் ஒரு சிறிய மண்டபத்தில்
புளியிலை கரை போட்ட புத்தாடையை கனவுகண்டேன்]

கவிதை பி பாஸ்கரன்
இசை கே ராகவன்

முந்தைய கட்டுரைசுனில் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்