பினாங்கு நகருக்கு வெளியே சுவாமி பிரம்மானந்த சரச்வதி அவர்களின் குருகுலத்தில் இருக்கிறேன். இயற்கையான சூழலில் நல்ல அறைகள் கொண்ட கட்டிடம். அனேகமாக தினமும் சுவாமியின் இலக்கிய நண்பர்கள் வந்துவிடுகிறார்கள். இங்கே அவர் வாரந்தோறும் கீதை வகுப்பு ஒன்றை நிகழ்த்துகிறார். நண்பர்களுடன் நவீன இலக்கியக் கூடல் ஒன்றையும் நடத்துகிறார்.
நேற்று காலை நண்பர்களுடன் கெடா என்ற இடத்தில் உள்ள புஜாங் சமவெளிக்கு போய் பழைய வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கச் சென்றேன். கெடாதான் கடாரம் என்று இங்கே பலர் நினைக்கிறார்கள். அந்த இடிபாடுகள் சோழர் காலத்தையவை என்றும் சொல்ல்ப்படுகிறது. மலேசிய அரசு ஆராய்ச்சி என்று எதுவுமே செய்யவில்லை. இடிக்காமல் வைத்திருப்பதே பெரிய விஷயம். சில கட்டிடங்களை பிற இடங்களில் இருந்து பெயர்த்து கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்.
அங்கிருந்த அருங்காட்சியகத்திலும் சரி தொல்லியல் பொருட்களிலும் சரி ஆராய்ச்சிக் குறிப்பு ஏதும் இல்லை. அந்த அமைப்புகள் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாமென ஒரு வரி மட்டும் எங்கோ இருந்தது. ஆனால் புராதன சுடுமண் கலயங்கள் குயவனின் சக்கரம் சரியாக உருப்பெறுவதற்கு முந்தைய காலத்தவை.
சோழர் கால கல்வேலைகளில் உள்ள நுட்பமோ சோழர்களுக்குரிய எந்த கலையடையாளங்களோ கற்சின்னங்களில் காணப்படவில்லை. காலத்தால் மேலும் ஆயிரம் வருடம் முந்தையவையாக தோன்றின. சொல்லப்போனால் அசோகர் காலத்தையவையாக இந்தியாவில் கானப்படும் புராதன பௌத்த கற்கட்டிடங்கள் போல் இருந்தன. தாமரை மற்றும் யானை போன்ற பௌத்த அடையாளங்கள். நிறைய புத்தர் சிலைகள். அவைகூட ஆரம்பகால தேரவாத பௌத்தத்துக்கு உரிய சிலைகள்.
வெளியே சென்று கட்டிட மிச்சங்களைப் பார்த்தேன். உள்ளீடுள்ள செங்கல் கட்டுமானங்கள். அவை பௌத்த தூபிகளின் அடித்தளங்கள் என்றே அவற்றின் அமைப்பு சொல்லியது.. வேறு எந்த சிற்ப மரபிலும் அப்படி மண்ணையும் செங்கல்லையும் குவித்து உள்ளீடுடன் கட்டும் மரபு இல்லை. கோயில்களின் அடித்தளங்களின் பௌத்த சைத்யங்கள் என்றே பட்டன. கிபி ஒன்று இரண்டாம் நூற்ற ¡ண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். கண்டிப்பாக சோழர் காலத்தையவை அல்ல. ஓர் ஆற்றின் கரையில் கடலோரமாக இருக்கும் இந்த மேடு ஒரு சிறிய துறைமுகமாகவும் வணிகமையமாக்வும் இருந்திருக்கலாம்.
மதியம் மலேசியச் சிறுகதையாசிரியர் கோ புண்ணியவான் வீட்டில் உணவு. மாலை எட்டுமணிக்கு தண்ணீர்மலை காந்திமண்டபத்தில் காந்தியும் இந்திய சிந்தனை மரபும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். 70 ஆண்டு பழைமையான கட்டிடம். அந்தசூழலிலேயே ஒரு வரலாறு இருந்தது. காந்தியின் அழியா நினைவும்.