மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கங்கள். தாங்கள் நலமாக இருக்க என்றும் இறைவனை வேண்டுகின்றோம்.
சில மாதங்கள் ஆப்ரிக்கா(தன்சானியா) பணிக்கு சென்று விட்டதால் கடிதங்கள் எதுவும் முறையாக எழுத முடியவில்லை. நூறு கடிதங்களுக்கு மேல் எழுதி அவை தங்களுக்கு அனுப்பும் தரத்தில் இல்லாததால் அனுப்பாமல் வைத்து விட்டேன். மழைப்பாடலுக்கு பிறகு வெண்முரசு புத்தகங்கள் ஆப்ரிக்காவில் இருந்ததால் வாங்க இயலவில்லை. கடந்த வாரம் துபாய் திரும்பி விட்டேன். ஆனாலும் இணையத்தில் ஒரு நாள் கூட வெண்முரசு தவறுவது இல்லை.
தன்சானியா இந்தியர்கள் நிறைந்த நாடு. மிக மிக அழகு. ஆனாலும் பாதுகாப்புக்காக இரவில் நடமாட யாரும் அறிவுறுத்துவது இல்லை. மிக்க வறுமை. மசாய்மரா, செரெங்கட்டி, கட்டாவி, கிளிமஞ்சாரோ, கிட்டுலொ, மஹாலே தேசிய பூங்காக்கள் என்று வன உயிரின காப்பகங்கள் காடுகள் நிறைந்த நாடு.
நம் ரிலையன்ஸ் அங்கே எரிபொருள் துறையில் வேகமாக முன்னேறுகிறது. தொலைதொடர்பு துறை aircel கையில். பெரிய நிறுவனங்கள் அனைத்தும் இந்தியர்களுடையது. ஆப்ரிக்கா நீங்கள் இன்னும் செல்லவில்லை என்று அறிவேன். தன்சானியா ஒரு நல்ல தேர்வு.
என்றென்றும் தாழ்மையுடன்,
சரவணகுமார்
துபாய்.
அன்புள்ள சரவணக்குமார்
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?
நண்பர்கள் பலர் ஆப்ரிக்க நாடுகளில் உள்ளனர். காங்கோவில் மகேஷ், குருமூர்த்தி பழனிவேல் [நைஜீரியா] அனைவரிடமும் நான் வைக்கும் கோரிக்கை ஒன்ருண்டு
பொதுவாக ஆப்ரிக்கா பற்றி வெள்ளையர் எழுதிய பதிவுகளே நமக்குக் கிடைக்கின்றன. ஒன்று, அவை அவர்களின் நோக்கில் சொல்லப்படுபவை. இரண்டு, அவை நம் மக்களைப்பற்றுச் சொல்வதில்ல. நம்மவர் அங்கே செல்லும்போது தங்கள் மனப்பதிவுகளை , அனுபவங்களைத் தொகுத்து எழுதினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஆப்ரிக்காவிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவைதான் நமக்கு அதிகமாக இருக்குமெனத் தோன்றுகிறது
ஜெ