அனந்தம் அரவிந்தம்

1

இரு கட்டுரைகளை இன்று வாசித்தேன். ஒன்று நண்பர் அரவிந்தன் கண்ணையனுடையது. அமீர்கானும் சகிப்பற்ற இந்தியாவும். வழக்கம்போல நல்ல மொழியில் திட்டவட்டமான கருத்துக்களுடன் அந்தக் கருத்துக்களுக்கு வர உதவிய அதைவிட திட்டவட்டமான முன்முடிவுகளுடன் அந்த முன்முடிவுகளை உருவாக்கிய அதைவிட திட்டவட்டமான காழ்ப்புகளுடன் எழுதப்பட்ட கட்டுரை. எனக்கு அரவிந்தன் கண்ணையனிடம் பிடித்ததே இந்த உறுதிதான். அனேகமாக அமெரிக்காவிலேயே உறுதியான கருத்து கொண்டவர் அவர்தான் என நினைக்கிறேன்

இத்தகைய உறுதிகள் பொதுவாக மனிதர்களுக்குரியவை அல்ல, அவதாரங்களுக்குரியவை. கொஞ்சநாளில் நாடுதறியமேரிக்கர் என்னும் இனம் உருவாகி அதன் முதன்மை குருவாக அரவிந்தன் கண்ணையன் மதிக்கப்படுவார் என்றும் காலப்போக்கில் சாமியாகி அவர் கோயிலில் அவருக்கு கொஞ்சமும் பிடிக்காத இட்லி நைவேத்யம் செய்யப்படும் என்றும் அஞ்சுகிறேன்

அதைப்பற்றி பேசும்போது நண்பர் அதற்கு அனந்தகிருஷ்ணன் எழுதிய ஃபேஸ்புக் மறுப்பை அனுப்பினார். இதுவும் அதேபோல மிகநல்ல ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது மகிழ்வளித்தது. கால்நடுவே புகுந்து அடிதவறச்செய்யும் நடையை ஆங்கிலத்தில் எத்தனை அழகாக உருவாக்கமுடிகிறது! The amazingly tolerant Aravindan Kannaiyan என்னும் சொல்லாட்சிக்காகவே இன்று முழுக்க சிரித்துக்கொண்டிருந்தேன். எதிர்காலத்தில் ஸ்ரீமத் அரவிந்தன் கண்ணையாஸ்வாமி ஆலயத்தில் சுவாமி சூலாயுதத்தோடு எல்க் வாகனத்தில் எழுந்தருளி அனந்தகிருஷ்ணாசுர வதம் செய்தாலும் ஆச்சரியமில்லை.

அமீர்கான் நல்ல வணிகர். சினிமாக்கள் வரும்போது அவர் இம்மாதிரி ஒரு நாலுவரியை போட்டுவிடுவது நல்லதுதான். ஏனென்றால் அவரது சினிமாக்களின் வணிகத்தில் 70 சதமும் இஸ்லாமியநாடுகளில் நடக்கின்றன. பாகிஸ்தான் முதல் துருக்கி வரையிலான மண்ணில் மூன்று கான்களும்தான் பெரிய நாயகர்கள் என்பதை சினிமா தெரிந்தவர்கள் அறிவார்கள். ஆகவேதான் இந்தியாவில் கான்கள் நட்சத்திரங்கள்.

அங்குள்ள ரசிகர்களுக்காக தாங்கள் ஒன்றும் முழு இந்தியர்கள் அல்ல என்ற செய்தியை அளிக்கவேண்டிய இக்கட்டு அவர்களுக்குண்டு. அதை நாம் அனுதாபத்துடன் மட்டுமே பார்க்கவேண்டும். அதேமூச்சில் இஸ்லாமியநாடுகளின் அற்புதமான சகிப்புத்தன்மை பற்றியும் அவர்கள் ஒன்றும் சொல்லிவிடமுடியாததையும் நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.

அதை திறம்பட பற்றிக்கொண்டு அவருக்கு எதிராக தெருவில் குச்சிகளுடன் இறங்கி அவர் சொன்னதை உலகமீடியாவுக்கு முன் நிகழ்த்திக்காட்ட நூற்றைம்பது பேர் கொண்ட அதியதிதீவிர இந்துத்துவக்குழுக்களும் நம்மிடையே உண்டு. அவர் இப்படிச்சொல்லாவிட்டால் அவர்களுக்கும் ஊடகக்கவனம் கிடைக்க வழியில்லை. இந்தியாவின் இந்தத் தேசியக்கலைநிகழ்ச்சியை இந்தியவணிகத்தையும் இந்தியாவின் சர்வதேச அரசியல்தேவைகளையும் இஷ்டப்படி கையாள எவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என் அனுமதிக்கும் அளவுக்கு பரந்தமனம் கொண்டவர்கள் நாங்கள்

இந்தியா சகிப்பற்ற மக்கள் கொண்ட நாடு என்றால் சகிப்புள்ள நாடு எது என்று அறிய நான் எப்போதும் ஆர்வம் கொண்டவன். அமெரிக்கா என்று சொல்லி அரவிந்தன் கண்ணையன் சிரிப்பு மூட்டுவதுண்டு என்றாலும் விடை வந்தபாடில்லை. எந்த ஒரு நாடும் பலவகை இனக்குழுக்கள் மதக்குழுக்கள் கொண்ட தொகுப்பாகவே இருக்கும். ஒரு குழு தன்னை ‘நாம்’ என உருவகிக்கையிலேயே பிறரையும் விலக்கி உருவகித்திருக்கும். அதற்கான தவறான புரிதல்கள், அவநம்பிக்கைகள், கசப்புகள் அவற்றால் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஆகவேதான் அமெரிக்காவில் பெரும்பாலும் ஆங்கிலேயரும் ஸ்பானியரும் சீனரும் இந்தியரும் இத்தாலியரும் கறுப்பரும் ஜமாய்க்கரும் தனித்தனிக்குடியிருப்புகளாக வாழ்கிறார்கள். கூந்தலுள்ள சீமாட்டி கொண்டை முடிக்கிறாள். நமக்கு அப்படியெல்லாம் வாழ இங்கே இடமில்லை. ஆகவே நெருக்கியடித்துக்கொண்டு வாழ்கிறோம். அருகே வாழ்பவர்களை சகித்துக்கொள்கிறோம். இப்படித்தான் இந்தியாவில் சகிப்புத்தன்மை உருவாகியிருக்கிறது. வேறெங்கும் இந்த அளவுக்கு இடநெருக்கடி இல்லாத காரணத்தால் இந்த அளவுக்கு சகிப்புத்தன்மையும் இல்லை.

1

பெரிய நாடு, ஏகப்பட்ட மக்கள்.. ஏகப்பட்ட வரலாற்றுப் பகைமைகள். ஏராளமான கசப்பான நினைவுகள். பங்குபோட இத்தனிக்கூண்டு இடம் இவ்ளவூண்டு வளம். ஆகவே இத்தனைபெரிய நாட்டில் எங்கோ ஒருமூலையில் எப்போதும் சாதிமதக்கலவரங்கள் நடந்துகொண்டிருந்தன. மெல்லமெல்ல தொழில்வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் உருவாகி இன்று சாதி,மதக்கலவரங்களே அரிதாகிவிட்டிருக்கின்றன.

ஆனால் இன,மத,மொழி,சாதி, வட்டார அரசியல் பேசும் அரசியல்வாதிகள் எங்கும் உள்ளனர். அந்தவிஷயத்தில் அமெரிக்கா தனிப்பெருமை கொள்ளமுடியாது. அவர்கள் கலவரங்கள் வழியாக வளர்பவர்கள். கலவரங்கள் இல்லாதபோது ஆங்காங்கே நிகழும் தனிநிகழ்வுகளை அவர்கள் கையிலெடுத்து அவையெல்லாம் கலவரங்களைவிட கொடுமையானவை என மீடியா வழியாக ஓலமிட்டு பற்றி எரியும் சித்திரத்தை உருவாக்கியாகவேண்டியிருக்கிறது. அமெரிக்க வலதுசாரிகளை நாம் கனிவுடன் புரிந்துகொள்கிறோம். அந்தக்கனிவை ஏன் இங்குள்ள இடதுசாரிகளுக்கும் நாம் அளிக்கக்கூடாது?

‘இனமதமொழிசாதிவட்டார’ உணர்வுகள் தூண்டப்பட்ட வரலாறுள்ள ஒரு நாட்டில் அதனுடனெல்லாம் தான் இல்லை என்று காட்டும் நிலை வருவதே ஒருவகை ஒடுக்குமுறை என்னும் கருத்து மனநிறைவளிக்கிறது. சிந்தனைக்குத்தான் எத்தனை சாத்தியக்கூறுகள்!

தேசப்பிரிவினை இஸ்லாமிய மத அடிப்படையில்தான் நிகழ்ந்தது. தீவிரவாதம் அல்லாஹு அக்பர் என்னும் கோஷத்துடன் தான் நிகழ்கிறது. இருந்தும் எவரும் இஸ்லாமியரை இங்கு வெறுக்கவில்லை. பிரித்துநிறுத்தவில்லை. டிக்கெட் வாங்கி அவர்களின் சினிமாக்களைப்பார்க்கிறர்கள். எழுத்தாளர்களாக கலைஞர்களாக அவர்களைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு எதிராக அரசியல்சிறுகுழுக்கள் அடாவடிகளில் இறங்கினால் அவர்கள்தான் பெரும்பான்மையினரின் கசப்பை பெறுகிறார்கள்.

இஸ்லாமியர்களின் பொருளியல் வளர்ச்சியோ சமூக இடமோ எவ்வகையிலும் மறுக்கப்படவில்லை. சிறுபான்மையினர் என்னும் சட்டபூர்வமான சலுகையும் உண்டு. வாக்கரசியல் செய்து தங்கள் சமூகத்தினரை அதிகாரம் நோக்கியும் கொண்டுசெல்லமுடியும்.

ஆனால் பிரிவினையையும் தீவிரவாதத்தையும் அவர்கள் தங்கள் மதத்தில் இருந்து பிரித்துக்கொள்ளவேண்டும், முக்கியமானவர்கள் அதை அவ்வப்போது சொல்லவும் வேண்டும் என எதிர்பார்ப்பதன் வழியாகவே பெரும்பான்மையினர் அவர்களை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கி உச்சகட்டமாகக் கொடுமைப்படுத்தி ஒடுக்கி ஆட்டம்போடமுடியும் என அரவிந்தன் கண்ணையன் சொல்கிறார். இப்படி ஒரு வழி இருப்பதை ஏன் இந்துத்துவர்கள் புரிந்துகொள்ளவில்லை என வியப்பு ஏற்படுகிறது

ஆனால் என்னவாக இருந்தாலும் அரவிந்தன் கண்ணையன் போன்றவர்கள் சிறந்த அங்கத எழுத்தாளர்களாக உருவாகி வருவதற்காகவாவது இந்தியா என்ற தேசம் கடலுக்கு இந்தப்பக்கம் இருந்தாகவேண்டும் அல்லவா?

முந்தைய கட்டுரைராஜராஜனும் சாதியும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73