மேல்நிலையாக்கம், கடிதங்கள்

அன்புள்ள ஜெ சார்,
வணக்கம்.
சிறுதெய்வம் என்று தாங்கள் “குலதெய்வத்தை” குறிப்பிடுகிறீர்கள் என எண்ணுகிறேன். குலதெய்வ வழிபாடு – என்னை போன்றோருக்கு மனநிறைவை தருகிறது. குறிப்பாக, காது குத்துதல், மொட்டை அடித்தல், திருமணத்திற்கு முன் பொங்கல் வைப்பது…..இப்படி.

குலதெய்வம், பலநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த குலம் சார்ந்த “தலைவன்/தலைவி” ஆக இருக்ககூடுமோ? என நான் எண்ணுவதுண்டு.

முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு பின் கடவுள்(பெருந்தெய்வம்) வழிபாடு என்பதே சரியாக இருக்குமோ?

கேரளாவில்/தென் தமிழகத்தில் எப்படி என்று தெரியவில்லை. வடதமிழகத்தில் குலதெய்வ வழிபாடு நிலை குலையாமல் இருக்கிறது என்பதை கண்டிருக்கிறேன். நாங்கள் கிராமத்துக்கு சென்றால், முன்னோர் சமாதிக்கும், பச்சையம்மன் கோவிலுக்கும் செல்லுவதை வழக்கமாக வைத்துள்ளோம்.

குலதெய்வம் தெரியாதவர்கள், திருப்பதி ஸ்ரீ வேங்கடசலபதியை – ஏற்றுகொள்வதுண்டு.

அன்புடன்,
காமராஜ் ம
(சம்யு அப்பா)

அன்புள்ள காமராஜ்

சிறுதெய்வம் என்றால் குலதெய்வம் மட்டும் அல்ல. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலையும்செய்யாத, பிரபஞ்ச அதிபனாக உருவகம்செய்யப்படாத எல்லா தெய்வங்களும்தான். அவை பலவகை. நீத்தார் வழிபாடு மூத்தார் வழிபாடு புனிதப்பொருட்கள் வழிபாடு குலச்சின்ன வழிபாடு என பலவகை உண்டு. உதாரணமாக சுடலைமாடன் போன்ற பல காவல்தெய்வங்கள் எவருக்கும் குலதெய்வங்களாக இல்லாமல் இருப்பதுண்டு, அவை சிறுதெய்வங்களே. அவை நம் பண்பாட்டின் அடித்தளமாக அமைகின்றன

பெருமாள் சிவன் போன்ற தெய்வங்கள் எவருக்கும் குலதெய்வங்கள் அல்ல. அவை பெருந்தெய்வங்கள்

ஜெ

அன்புள்ள ஜெ

நலமா?

உங்கள் மேல்நிலையாக்கம் கட்டுரை படித்தேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது. போன மாதம் நான் எனது மகனுக்கு சோறூட்டுதலுக்காக மேலாங்கோடு சென்றதும் அது பற்றி உங்களிடம் மின்னுரையாடியதும் ஞாபகம் வருகிறது.

11:37 AM me: எனது மகனுக்கு “சோறூகொடுப்பு”க்காக மேலாங்கோட்டுக்கு போனமாதம் வந்திருந்தேன். உங்கள் வீட்டுக்கு வந்து பல வருஷங்கள் ஆகிவிட்டது. நீங்கள் அந்நேரம் பெங்களூர் சென்றிருந்தீர்கள் அஜிதன் விஷயமாக அதனால் வந்து சந்திக்க முடியவில்லை. உங்களை நினைக்காமல் எப்போது பார்வதிபுரத்தை என்னால் கடக்க முடிவதில்லை. சந்திக்கணும்!11:38 AM jeyamohan_: sure melangodu is modernisednow11:40 AM me: ஆமாம் பலவருடங்களுக்கு பிறகு போகிறேன். என் மச்சம்பி கொச்சியில் இருக்கிறான் அவன் குருவாயூரில் கொடுக்கலாம் என்றான் நான் தான் கண்டிப்பாக மேலாங்கோடு தான் என்றேன். பீதியூட்டும் ஒரு சித்திரம் மேலாங்கோடு பற்றி என் மந்தில் சிறுவயதில் இருந்தது. இந்த முறை அது அழிந்து விட்டது அதற்காக் வருந்துகிறேன். காங்கிரீட்டையும்,எனாமல் பெயின்டையும், மின்சாரத்தையும் கொஞ்சம் வெறுக்கிறேன்.6 minutes11:47 AM jeyamohan_: ya..sad11:48 AM me: உங்களது “மாடன் மோட்சம்” தான் ஞாபகம் வந்தது!11:49 AM jeyamohan_: ya neeli is now aruLmiku neeli11:52 AM me: அருமனையில் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த “லெட்சியம்மன்” கோவில் இப்போ அருள்மிகு பத்ரகாளி அம்மன் ஷேத்ரம் ஆகிவிட்டது. குருதி கொடை இல்லை பூப்படை வாரல் இல்லை, நைவேத்யமும், பூஜைகளும் மட்டும் தான். நீங்கள் மாடன் மோட்சம் எப்போதோ எழுதி இருக்கிறீர்கள். ஆச்சரியம் தான் அது என் முன்னால் நடந்து கொண்டிரு

நான் கிறிஸ்தவ மதமாற்றலுக்கு ஆதரவானவன் அல்ல. அழகியல் மற்றும் வரலாற்று உணர்வுடன் இந்து கோவில்களையும் இந்து தெய்வங்களையும் பார்க்கிறேன். செல்கிறேன். வெறும் பக்தி மட்டும் அல்ல. ஆனால் என்னை வருத்தமுற செய்கிற விஷயம் முன்னேற்றம் என்கிற பெயரில் பழைய கோவில்களை எந்த அழகியல் உணர்வோ வரலாற்று உணர்வோ இல்லாமல் மறுகட்டுமானம் செய்கிறார்கள். வண்னமயமான எனாமல் பெயின்ட் அடித்த காங்கிரீட் கட்டிடங்களாக இன்று நிறைய கோவில்கள் மற்றப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு எங்களூர் லெச்சியம்மன் கோவில் இன்று கலர்ஃபுல் காங்கிரீட் காளி கோவிலாக மாற்றப்பட்டுள்ளது. வாயில் பற்கள் நெரிபட உக்கிரமாக‌ நிற்கும் , களிமண்ணால் செய்த சுடுமண் அம்மன்கள்களை தூக்கி வீசிவிட்டார்கள். கருங்கல்லால் ஆன பத்ரகாளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கருவறை கட்டி விட்டார்கள். பூசை செய்து, துள்ளி , வருடம் தோறும் பூப்படை வாரும் கிருஷ்ணம்மா அம்மச்சியை கருவறைக்குள்ளே இப்போது அனுமதிப்பதில்லை. மேல்புறத்திலிருந்து ஒரு அய்யர் வருகிறார். கடந்த ஏழெட்டு வருடங்களாக பூப்படை வாரலோ குருதி கொடையோ இல்லை. சின்ன வயதில் நான் மத்தியான நேரங்களில் கூட லெச்சியம்மன் கோவிலை கடக்கும் போது உள்ளுக்குள் ஒருவித பயம் படரும் ஆனாலும் காய்ச்சல் வந்த்தால் அந்த லெச்சியம்மன் தான் காப்பாற்றுவாள் என்று அம்மா சொல்லுவாங்க. இன்று அந்த கோவிலை பாக்கும்போது அது எனது லெச்சியம்மன் கோவில் இல்லை என்கிற உணர்வே வருகிறது. அழகியல் உணர்வோ, வரலாற்று உணர்வோ இல்லாத ஒரு கும்பல் இன்று கமிட்டி என்கிற பெயரில் முட்டாள்தனமான காரியங்களை செய்கிறது. கிறிஸ்தவத்துக்கு மாற்று என்பது சர்சை போலவே காங்கிரீட்டில் கோவில் கட்டுவதோ, நாங்களும் நாகரீகமாகி விட்டோம் என்கிற பெயரில் உண்மையான சடங்குகளை கை விட்டு “சாந்தமாக” காட்டுவதோ இல்லை. நமது ஆழ்மனத்தில் கிடக்கும் உக்கிரத்தில், குருதியில், துள்ளலில், சுடுமண்ணில் ஒரு வரலாற்று சங்கிலியும், ஆழமான அழகியல் உணர்வின் தொடர்ச்சியும் உள்ளது. அதை வெட்டிவிட்டு முன்னேற்றம் என்கிற பெயரில் சாந்த படுத்துவதோ, அழகியல் உணர்வற்ற மாற்றங்களோ அந்த சங்கிலியை வலுக்கட்டாயமாக உடைக்கும் முயற்சி தான். என் மனம் ஒரு பழங்குடி இந்துவினுடையது. பழைய‌ வழிபாட்டு முறைகளும் எனக்கு முக்கியம் என்று நினைக்கிறேன்.

அன்புடன்
சந்தோஷ்


http://ensanthosh.wordpress.com/

அன்புள்ள சந்தோஷ்

ஆமாம், நீங்கள் சொல்லும் உணர்வே எனக்கும். என் குலதெய்வக்கோயிலும் கான்கிரீட்டால் கட்டப்பட்டு அருள்மிகு ஆகிவிட்டது. அது ஓர் இழப்பு.

அதே சமயம் அது ஒரு திட்டமிட்ட அழிப்பு என்று சொல்வது ஒரு மோசடி என்பதே என் எண்ணம். அது இயல்பாக பல நூற்ராண்டுக்காலமாக இங்கே நடந்துவருகிறது. இந்த வேறுபாட்டை நாம் புரிந்துகொள்ள வேண்டும்

ஏன் கலையமைதியுடன் அது நிகழவில்லை என்றால் சம்பந்தபட்டவர்களுக்கு அந்த பிரக்ஞை இல்லை என்பதே.

என் வரையில் சிறுதெய்வங்கள் அந்த தனியடையாளங்களுடன் நீடிக்கவேண்டுமென்றே நன் விரும்புவேன். அதையே கடைப்பிடிப்பேன். ஆனால் அவற்றை உருமாற்றி மேல்நிலையாக்கம் செய்வதன்பின்னால் உள்ள சமூகவியலை மனநிலையை நான் புரிந்துகொள்கிறேன்

நீலி நீயாகவே இருக்கலாம் என்றே நான் அவர்களிடம் சொல்வேன். ஆனால் நீலி பராசக்தியாகவேண்டும் என விரும்பு மக்களுக்கு அதற்கான சமூகத்தேவைகள் உள்ளன

கடைசியாக ஒன்று, பெருந்தெய்வக்கோயில்களேகூட சற்றும் வரலாற்றுணர்ச்சியோ அழகுணர்ச்சியோ இல்லாமல் கான்கிரீட்டால் கட்டப்பட்டு பாத்ரூம் டைல்ஸ் ஒட்டப்பட்டு ஏஷியன் பெயின்ட் அடிக்கப்பட்டு சீரழிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் தஞ்சை போயிருந்தபோது பல சிலைகளுக்கு மேல் அன்டர்வேரை பெயின்டால் வரைத்நிருந்ததை கண்டேன். நம் மக்களின் அழகியல் அது…வருத்தப்படத்தான் வேண்டும்

ஜெ

அன்புள்ள ஜெ..

உங்களது அறிவுப் பூர்வமான தர்க்கங்கள் எனக்கு உவப்பாக இல்லை.. எங்களூர் முனியப்பனை இந்துப் பெருங்கடவுள்களுக்கு சைடு கிக் ஆகச் சொல்கிறது ஒரு தரப்பு..(மாடன் மோட்சம்..). ஜோதியில் ஐக்கியமான பின்பு அப்பிகளின் கதியை அந்த மாடனால் கூட மாற்ற முடியாது என்பதே உண்மை நிலை.. சாதிகளைக் களைந்து விடு.. ஆனால் மதத்தை களையாதே என்பதே சொல்லாமல் சொல்லப் படும் கருத்து.. இந்தி இந்தியனுக்கு மிக முக்கியம்.. இந்தி படித்தால் வேலை கிடைக்கும்.. இந்தி அதிக மக்கள் பேசும் மொழி.. எனவே இந்தி படிக்க veNdum என்று ஒரு வாதம் வந்த போது – ஏன் ஆங்கிலம் இந்தியை விட அதிகமாகப் பேசப் படும் மொழி.. அதைப் படித்தால் உலக அளவில் வேலை கிடைக்குமே என்று வாதித்த போது – நீ இந்தியன் அல்ல என்பதே பதில்.. நீ கருணாநிதியின் ஆள் enRu சொல்லப் பட்டது – நான் படித்த தேசிய மேலாண்மை கழகத்தில்.. (எனது வியாபரத் தேவைகளுக்காக நான் இந்தி படித்திருக்கிறேன்..)

நீங்கள் எல்லாம் காட்டு மிராண்டிகள்.. எங்கள் கடவுளை வழிபட வாருங்கள் என்று அழைக்கிறது இன்னொரு தரப்பு.. பணம் காசு சண்டே ஜெபம் என்றெல்லாம்.. அங்கு சென்ற பின்பும் சாதிகள் உண்டு.. கிறிஸ்டியன் நாடார்.. இந்து நாடார்..

இதையெல்லாம் விட கடவுளும் கிடையாது ஒரு மயிரும் கிடையாது என்று சொன்ன அந்த manithanai எனக்கென்னமோ மிகப் பிடித்திருக்கிறது..

பல்லாயிரம் ஆண்டு பண்பாட்டின் நீட்சியாக இருக்க வேண்டும் என்பது ஒரு வாதம்.. வெட்டித் தூக்கிப் போட்டுட்டு வேலையப் பாருங்கடா என்பது இன்னொரு வாதம் அவ்வளவே.. இதில் ஒருவரை ஒருவர் மாற்ற அறிவோ, பணமோ, ஆயுதமோ – எதை உபயோகித்தாலும் அது வன்முறையே..

பாலா

பாலா

நன் சொல்வது ஒரு சமூக-வரலாற்று நோக்கு. அதைத் தாண்டி உங்கள் தனிப்பட்ட நம்பிக்கையோ உணர்ச்சியோ இருக்குமென்றால் அது உங்கள் தனிப்பட்டக் கருத்து, வேறென்ன?

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2