பகுதி ஆறு : மாநகர் – 1
தொல்நகர் அயோத்திக்கு செல்லும் வணிகப்பாதையின் ஓரமாக அமைந்த அறவிடுதியின் கல்மண்டபத்திற்குள் வணிகர்கள் கூடியிருந்தனர். நடுவே செங்கல் அடுக்கி உருவாக்கப்பட்ட கணப்பில் காட்டுக்கரியிட்டு மூட்டப்பட்ட கனல் சிவந்து காற்றில் சீறிக்கொண்டிருந்தது .அதன் செவ்வொளியின் மென்மையான வெம்மையும் கல்மண்டபத்திற்குள் நிறைந்திருந்தது. வெளியே மழைச்சாரல் சரிந்து வீசி காற்றில் சுழன்று மறுபக்கமாக சென்று மீண்டும் விழுந்தது. அதன் மேல் மின்னல் அவ்வப்போது ஒளிவிட்டு அணைந்தது.
வெளியே தாழ்வான கொட்டகைகளில் வணிகர்களின் அத்திரிகள் குளிரில் பிசிறிச் சிலிர்த்த தோல்பரப்புகளை விதிர்த்தபடி கழுத்துமணிகள் குலுங்க உலர்புல்லை தின்று கொண்டிருந்தன. அங்கும் சட்டிகளில் இட்ட அனலில் தைலப்புல்போட்டு புகைப்படலத்தை எழுப்பிக்கொண்டிருந்தார்கள். அடுமனையிலிருந்து சோளமாவு வேகும் மணத்துடன் மென்புகை நீர்த்துளிப் புதருக்குள் பரவி எழுந்துகொண்டிருந்தது.
நரைத்த தாடியும் பழந்துணித் தலைப்பாகையும் அணிந்த எளிய முதுவணிகர் தன் கையிலிருந்த பாளைப்பையை திறந்து உள்ளிருந்து பலாக்கொட்டைகளை வெளியே கொட்டி எடுத்து அனல்பரப்பிற்கு மேல் அடுக்கி வைத்தார். நீண்ட இரும்புக் கிடுக்கியால் அக்கொட்டைகளை மெல்ல சுழற்றி அனல்செம்மையில் எழுந்த பொன்னிற மென்தழலில் வெந்து கருக வைத்தார். தோல் வெடித்து மணம் எழுந்ததும் கிடுக்கியால் ஒவ்வொன்றாக எடுத்து நடுவே இருந்த மரத்தாலத்தில் போட்டார். சூழ்ந்திருந்தவர்கள் கை நீட்டி ஒவ்வொன்றாக எடுத்து தோல் களைந்து ஊதி வாயிலிட்டு மென்றனர்.
அருகே இருந்த கன்னங்கள் ஒட்டி மூக்கு வளைந்த மெலிந்த சாலைவணிகன் பலாக்கொட்டைகளை எடுத்து கற்சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த அர்ஜுனனிடம் கொடுத்தான். அதை வாங்கி ஒன்றை உரித்து வாயிலிட்டு மென்றபடி அவன் சுவரில் எழுந்து மடிந்திருந்த அவர்களின் பெரு நிழல்களை நோக்கிக் கொண்டிருந்தான். “இன்னும் பத்து நாட்கள்தான்… பெருமழை தொடங்கிவிடும். அதன் பின் எங்கிருக்கிறோமோ அங்கு நான்கு மாதம் ஒடுங்க வேண்டியதுதான்” என்றார் நரைத்த நீண்ட தாடிகொண்ட முதிய வணிகர். “இப்போது பருவங்கள் சீர் குலைந்துவிட்டன. வைதிகர் மூவனலுக்கு உண்மையாக இருந்த அந்த காலத்தில் எழுதி வைத்த நாளில் மழை பொழிந்தது. போதுமென்று எண்ணுவதற்குள் வெயில் எழுந்தது.”
“ஆம். இன்னும் பன்னிரண்டு நாட்கள் கழித்தே மழை வரவேண்டும். ஐங்களச்சுவடியில் கணித்து மழைக்கணியன் சொன்னது. அதை நம்பி என் மரவுரிப் பொதிகளை ஏற்றி வந்தேன். நல்லவேளையாக என் இளையவன் மெழுகுப் பாயை என்னிடம் கொடுத்து அனுப்பியிருந்தான். இல்லையேல் முதலீட்டில் பாதி இந்த மழையிலேயே ஊறி அழிந்திருக்கும்.. இதை அயோத்தி கொண்டு சென்று சேர்த்தேன் என்றால் இழப்பின்றி மீள்வேன்” என்றான். “இழப்பை பற்றி மட்டுமே வணிகர்கள் பேசுகிறார்கள். ஏனெனில் ஈட்டலைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்” என்று சுவர் ஓரமாக அமர்ந்திருந்த மெலிந்து கன்னங்கள் ஒட்டிய நாடோடி சொன்னான்.
அனைவரும் அவனை நோக்கினர். கரிப்புகை போல் தாடி படர்ந்திருந்த அவன் கன்னம் நன்றாக ஒட்டி உட்புகுந்திருந்தது. மெலிந்த உடலும் கழுகுமூக்கும் பச்சைக்கண்களும் கொண்டிருந்த காந்தார வணிகன் “அனைவருக்கும் வணிகர்கள் பொருள் ஈட்டுகிறார்கள் என்று காழ்ப்பு. அப்பொருளுக்குப் பின்னால் இருக்கும் கணக்கீட்டையும் இழப்பையும் துணிவையும் எவரும் அறிவதில்லை” என்றான். முதிய வணிகர் “ஆம், என்னிடம் கேட்பவர்களிடம் அதையே நான் சொல்வேன். நீங்கள் வணிகம் செய்யவேண்டாமென்று யார் சொன்னது? துணிவில்லாமையால் எண்ணம் எழாமையால் எல்லைமீற முடியாமையால் உங்கள் சிற்றில்லங்களுக்குள் ஒடுங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். சிறகு விரித்த பறவைக்கு கிடைக்கும் உணவு கூட்டுப் புழுவுக்கு கிடைப்பதில்லை” என்றார்.
நாடோடி “நான் அதைத்தான் சொன்னேன். வணிகர்களிடம் பேசினால் எவரும் வணிகம் செய்யத் துணிய மாட்டார்கள். உழைத்து அலைந்து இழப்புகளை மட்டுமே அவர்கள் அடைவதாக சொல்வார்கள்” என்றான். மூலையில் அமர்ந்திருந்த கொழுத்த மாளவத்து வணிகன் “இவன் வணிகத்தில் தோற்றுப்போன ஒருவன் என்று எண்ணுகிறேன்” என்றான். நாடோடி சிரித்தபடி “வணிகத்தில் தோற்கவில்லை. ஈடுபட்ட அனைத்திலும் தோற்றுவிட்டேன். தோல்வி ஒரு நல்ல பயிற்சி. வெற்றி பெற்றவர்களிடம் சொல்வதற்கு ஏராளமான சொற்களை அது அளிக்கிறது” என்றான். சிரித்தபடி முதிய வணிகர் பலாக் கொட்டைகளை எடுத்து அவன் முன்னால் இருந்த கமுகுப்பாளைத் தொன்னையில் போட்டு “உண்ணும்” என்றார்.
நாடோடி “இது உங்களுக்கு எங்கோ கொடையாகக் கிடைத்திருக்கும். அன்புடன் அள்ளிக்கொடுக்கிறீர்கள்” என்றான். முதியவணிகர் “விடுதியில் உமக்கு உணவளித்தார்களா?” என்றார். “என்னிடம் சில நாணயங்கள் இருந்தன” என்றான் நாடோடி. “என் உணவுக்குரியதை ஈட்டும் திறன் எனக்கு உள்ளது” என்றான். “கதை சொல்வீரோ?” என்றான் ஒருவன். “இல்லை, நான் என் அனுபவங்களை சொல்பவன். நாடோடியாக என் செவியில் விழுந்த செய்திகளையே விரித்துரைக்க என்னால் முடியும். அவற்றை விரும்பிக் கேட்பவர்களும் இருக்கிறார்கள்” என்றான்.
முதியவணிகர் “அப்படியானால் சொல்லும். இந்தக் கல்மண்டபம் எவரால் கட்டப்பட்டது? சிறுவனாக எந்தையுடன் இதே பாதையில் வணிகத்திற்காக வந்துளேன். அப்போதும் இதே போன்று தொன்மையாகவே இக்கல்மண்டபம் இருந்தது” என்றார். நாடோடி “இது அயோத்தியை ஆண்ட ராகவராமனால் கட்டப்பட்டது” என்றான். “அத்தனை தொன்மையானதா?” என்றான் இளவயதினனான தென்வணிகன். கரிய நிறமும் அடர்த்தியான புருவங்களும் கொண்டிருந்தான். “ஆம், கல் மண்டபங்கள் எளிதில் சரிவதில்லை. அத்துடன் இது மண்ணில் இயற்கையாக எழுந்த பாறையைக் குடைந்து கூரைப்பாறைகளை அதன்மேல் அடுக்கிக் கட்டப்பட்டது. இன்னும் சிலஆயிரம் வருடங்கள் இருக்கும்” என்றான் நாடோடி.
“ராகவராமன் அரக்கர்குலத்தரசன் ராவணனைக் கொன்ற பழிதீர கங்கை நீராட்டு முடித்து மீண்டபோது இவ்வாறு நூற்றெட்டு மண்டபங்களை கட்டினான். அதோ உங்களுக்குப் பின்னால் அந்தத் தூணில் அதற்கான தடயங்கள் உள்ளன” என்றான். வணிகர்கள் விலகி அந்தத் தூணை பார்த்தனர். அதில் புடைப்புச் சிற்பமாக ஏழு மரங்களை ஒற்றை அம்பால் முறிக்கும் ராமனின் சிலை இருந்தது. “எத்தனையோ முறை இம்மண்டபத்தில் அமர்ந்திருக்கிறோம். இதுவரை இதை பார்த்ததில்லை” என்றான் குள்ளனான வணிகன். நாடோடி “வந்து அமர்ந்ததுமே அன்றைய வணிகக் கணக்கை பேசத்தொடங்குகிறீர்கள். பிறகெப்படி பார்க்க முடியும்?” என்றான்.
“ஒற்றை அம்பில் ஏழு மரங்களை முறித்தான் வில்திறல் ராமன். நீங்கள் எல்லாம் ஒற்றைக்காசில் ஏழு உலகங்களை வாங்க முயலும் பொருள்வலர் அல்லவா?” என்றான் நாடோடி. “அதில் எங்களுக்கு பெருமைதான்” என்றான் குள்ளன். “நாடோடி, நீ பல நாடுகள் சென்றிருப்பாய். ஒவ்வொன்றும் தங்களுக்குள் எப்படி இணைக்கப்பட்டுள்ளன? சொல்!” என்றார் முதுவணிகர். நாடோடி “நானறிந்தவரை பசியாலும் போராலும்” என்றான். “மூடா, இந்த பாரதவர்ஷத்தின் மேல் ஒன்றை ஒன்று முட்டி மோதும் கிளைகளென ஷத்ரியர்கள் உள்ளனர். அடியில் ஒன்றோடொன்று பின்னி விரிந்திருக்கும் வேர்களென நாங்கள். வணிகத்தால் கொழிக்கிறது பாரதவர்ஷம்” என்றார் முதுவணிகர்.
“தொலைதூரத்து பழங்குடிகளைக் கூட தேடிச் செல்கின்றன வேர்கள். மறைந்துள்ளவற்றை அறிந்து அங்கு உப்புதேடிச்சென்று கவ்வுகின்றன. பாரதவர்ஷத்தில் நாங்கள் தொட்டு நிற்காத எப்பகுதியும் இங்கில்லை. தென்னகத்தின் நாகர்தீவுகள் கூட வணிகத்தால் பின்னப்பட்டு விட்டன. நாங்கள் கொண்டு வரும் பொருளின் மேல் வரிவிதித்துதான் அஸ்தினபுரியின் மாளிகைகள் எழுந்தன. மகதத்தின் கோட்டைகள் வலுப்பெறுகின்றன. இந்திரப்பிரஸ்தம் கந்தர்வர்களின் மாயநகரம் என மேலெழுந்து கொண்டிருக்கிறது” என்றார். “நாங்கள் இந்நாட்டின் குருதி. அதை மறவாதே!”
“இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றிருக்கிறீரா?” என்றான் இளையவன். “பலமுறை” என்றான் நாடோடி. கொழுத்த வணிகன் “இன்று கட்டி முடியும் நாளை கட்டி முடியும் என்று ஒவ்வொரு முறையும் சொல்கிறார்கள். கட்டக் கட்ட தீராது விரிந்து கொண்டே இருக்கிறது அது. மண்ணில் அதற்கிணையான பெருநகரங்கள் மிகக் குறைவாகவே இருக்குமென்று எண்ணுகிறேன்” என்றான். காந்தார வணிகர் “பாஞ்சாலத்து அரசியின் கனவு அது. இப்போதே அதை அறிந்து யவன நாட்டிலிருந்தும் பீதர் நாட்டிலிருந்தும் சோனக நாட்டிலிருந்தும் வணிகர்கள் தேடி வரத்தொடங்கிவிட்டனர். இன்னும் சில நாட்களில் அந்நகரம் பொன்னால் அனைத்தையும் அளக்கும் பெருவணிகபுரியாக மாறிவிடும்” என்றான். “அரசியின் இலக்கு அதுதான்” என்றான் குள்ளன்.
“துவாரகையை அமைக்கும்போது வணிகத்திற்கென்றே திட்டமிட்டு அமைத்தார் யாதவர். கடல்வணிகர்களையும் கரைவணிகர்களையும் அழைத்து பேரவை கூட்டி அமரவைத்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து அதை சமைத்தார். துறைமுகம் அங்காடிகள் பண்டகசாலைகள் பணியாளர் குடியிருப்புகள் ஆகியவை அனைத்தும் ஒற்றை இடத்தில் அமைந்த பெருநகர் பாரதத்தில் அது ஒன்றே. பாஞ்சால இளவரசி பெரிதாக ஏதும் உய்த்துநோக்கவில்லை. துவாரகையைப் போலவே மேலும் பெரிதாக இந்திரப்பிரஸ்தத்தை படைத்துள்ளார். அங்கு கட்டப்பட்டுள்ள சந்தை வளாகம் எந்தப் பெருவணிகனும் தன் அந்திக் கனவில் காண்பது” என்றார் முதுவணிகர். “ஆம்” என்றார் காந்தாரர்.
“இந்திரப்பிரஸ்தத்திற்கு மட்டுமே உரிய தனித்தன்மையென்பது பொன்வணிகமும் பொருள் சொற்குறிப்பு வணிகமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாது என்று அறிந்தது. அங்காடியின் நடுவே அதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள அத்தனை வணிகநிலைகளில் இருந்தும் சில காலடிகளில் நடந்து பொன் வணிகனையோ சொல்வணிகனையோ அணுகிவிட முடியும். பொருளை பொன்னாகவும் பொன்னை சொல்லாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இங்கு பத்தாயிரம் பொன் மதிப்புள்ள பொருளை விற்று செல்வத்தை பத்தே நாட்களில் தாம்ரலிப்தியில் சேர்த்துவிடமுடியும்” என்றார் கொழுத்த வணிகர். “பாரதவர்ஷமே இந்திரப்பிரஸ்தத்தை எண்ணி பொறாமை கொண்டிருக்கிறது” என்றான் இளைஞன்.
காந்தாரர் “ஆம், மகதத்திற்கு நான் சென்றிருந்தேன். அரசர் அவைக்கு என்னை அழைத்துச் சென்றனர். காந்தாரப் பெருவணிகன் என்று என்னை அறிவித்ததுமே ஜராசந்தர் இந்திரப்பிரஸ்தத்திற்கு சென்றிருக்கிறீரா என்றுதான் கேட்டார். அவர் என்ன எண்ணுகிறார் என்று நான் ஐயம் கொண்டேன். இந்திரப்பிரஸ்தத்தை புகழ்ந்து அவ்வவையில் பேசினால் என் தலை நிலைக்காது என்றறிந்தேன். இகழ்ந்துரைத்தால் பொய்யுரைப்பவனாவேன். எனவே அதன் அனைத்து சிறப்புகளையும் சொல்லி ஆனால் வணிகர்கள் அந்நகரை மிகை வரிகளுக்காகவும் காவலரின் ஆணவத்திற்காகவும் அரசியின் கட்டின்மைக்காகவும் வெறுப்பதாகவும் சொன்னேன்” என்றார். வணிகர்கள் “ஆம் ஆம், அது நன்று” என்றனர்.
“ஜராசந்தர் முகம் மலர்ந்து ஆம், வெற்று ஆணவத்தின் விளைவு அது என்றார். கையை பீடத்தில் அறைந்தபடி நோயில் எழுந்த கொப்புளம் போன்றது அது, நெடுநாள் நீடிக்காது என்று உறுமினார். நான் தலைவணங்கி நீடிக்கும் என்றேன். அவர் கண்கள் மாறுவதை கண்டவுடனே அது பாண்டவர்களின் நகரமாக இருக்க வேண்டும் என்பதில்லையே… மகதத்தின் தொலைதூரக் கருவூல நகரமாகவும் இருக்கலாமே என்றேன். சிரித்து ஆம் அது மகதத்திற்குரியது, சரியாகச் சொன்னீர் என்றார். நான் தேனீ உடல்நெய் குழைத்து தட்டுக்களைச் சமைத்து கூடு கட்டி தேன் சேர்ப்பதெல்லாம் மலைவேடன் சுவைப்பதற்காகவே என்றேன். ஜராசந்தர் சிரித்து என்னை பாராட்டினார்” என்ற காந்தாரர் சிரித்து “அரசர்கள் புகழ்மொழிகளுக்கு மயங்குவது வரை அவர்கள் நம் அடிமைகளே” என்றார்.
வணிகர்கள் உரக்க நகைத்தனர். இளைஞர் “பரிசில் பெற்றீரா?’ என்றான். சற்று கூடுதலாக அரசியல் பேசிவிட்டோம் என்ற உணர்வை அடைந்த காந்தார வணிகர் தவித்து திரும்பி அர்ஜுனனை பார்த்தார். சொற்களை கட்டுப்படுத்துவதற்காக உதடுகளை அழுத்தும் பழக்கத்தை கொண்டவர் என்பது சிறிய உதடுகளை ஒன்றுடன் ஒன்று அழுத்தி சிவந்த கோடாக அவற்றை மாற்றிக்கொண்டதிலிருந்து தெரிந்தது. அர்ஜுனன் அவர் விழிகளை பார்க்காமல் நிழல்களை நோக்கியவாறு அமர்ந்திருந்தான். இளம்வணிகன் கொழுத்த வணிகனின் பார்வையைக் கண்டபின் பலாக்கொட்டையை எடுத்து அர்ஜுனன் முன்னால் இருந்த கமுகுப்பாளை தொன்னையில் போட்டபின் “தாங்கள் எங்கு செல்கிறீர்கள்?” என்றான்.
அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. “அயோத்திக்கா?” என்றான் குள்ளன். “இல்லை. அயோத்தியிலிருந்து நேற்று கிளம்பினேன்” என்றான் அர்ஜுனன். பின்பு “இந்திரப்பிரஸ்தத்திற்கு” என்றான். கொழுத்த வணிகனின் கண்களில் சிறிய ஐயம் வந்தது. “தங்களைப் பார்த்தால் படைவீரர் போல் இருக்கிறதே?” என்றான். “படைவீரனாக இருந்தேன்” என்றான் அர்ஜுனன். “வில்லவர் போலும்” என்றார் முதுவணிகர். “ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். அவர்கள் அனைவரும் அவனைப்பற்றி ஐயம் கொள்வது தெரிந்தது. “நான் சிவதீக்கை எடுத்து அனைத்திலிருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன்” என்றான் அர்ஜுனன்.
“படைக்கலங்கள் எடுப்பதில்லையா?” என்று இளைஞன் கேட்டான். “படைக்கலம் எடுப்பது எங்களுக்கு பிழையல்ல. ஆனால் என் பொருட்டு அல்லது என் குலத்தின் பொருட்டு அல்லது என் நாட்டின் பொருட்டு படைக்கலம் எடுப்பதில்லை.” “பிறகு எவருக்காக?” என்றார் காந்தார வணிகர். “எளியோருக்காக” என்றான் அர்ஜுனன். “எளியோர் என்றால்…?” என்றார் முதியவர். “அறத்தை கோர உரிமை கொண்டவர்கள்” என்றான் அர்ஜுனன். “அறத்தை எவரும் கோரலாமே?” என்றார் அவர்.
அர்ஜுனன் “வணிகரே, விவாதிக்கும் தோறும் கலங்குவதும் முதற்பார்வையில் தெளிந்திருப்பதும் ஆன ஒன்றே அறம் எனப்படும்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டனர். முதுவணிகர் “இப்போது திருடர்கள் வந்து எங்களை தாக்கி எங்கள் பொருள்களை கொள்ளை கொண்டு சென்றால் நீர் படைக்கலம் எடுப்பீரா?” என்றார். “மாட்டேன். அது உங்கள் வணிகத்தின் பகுதி. உங்கள் பொருளில் ஒரு பகுதியைக் கொடுத்து காவலரை அமர்த்திக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்த நாடோடியை ஒருவர் தாக்கினார் என்றால் படைக்கலம் எடுப்பேன்” என்றான் அர்ஜுனன்.
“ஏன்?” என்றான் ஒருவன். “இப்புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இங்கு வாழும் உரிமை உள்ளது. வலியதே வாழும் என்றால் அறம் அழியும் என்றே பொருள். மேலும் அவரிடம் படைக்கலம் என்று ஏதுமில்லை. படைக்கலமின்றி இவ்வுலகின் முன் வந்து நிற்பவனுக்கு இங்குள்ள அறம் அந்த வாக்குறுதியை அளித்தாக வேண்டும்.” நாடோடி புன்னகைத்து “பாரதவர்ஷம் முழுக்க அலைந்து திரிந்தவன் நான். ஒரு தருணத்திலும் படைக்கலம் எடுத்ததில்லை. எங்கும் எனக்காக எழும் ஒரு குரலும் ஒரு படைக்கலமும் இருப்பதை பார்க்கிறேன். அறம் இங்கு அனைத்து இடங்களிலும் கண்ணுக்குத் தெரியாமல் உள்ளது. அருகே உள்ள கைகளை அது எடுத்துக் கொள்கிறது” என்றான்.
“இந்திரப்பிரஸ்தத்தில் தங்களுக்கு யார் இருக்கிறார்கள்?” என்றான் கொழுத்த வணிகன். “யாருமில்லை. எங்கும் எவரும் இல்லை” என்று அர்ஜுனன் சொன்னான். “ராகவராமனை எண்ணி இங்கு வந்தேன். செல்லும் வழியில் சற்று முன் இந்திரப்பிரஸ்தத்தைப் பற்றி நீங்கள் பேசுவதை கேட்டேன். ஆகவே அதைப் பார்க்கலாம் என்று எண்ணினேன். அங்கு செல்லும்வரை இவ்வெண்ணம் மாறாதிருக்குமெனில் இந்திரப்பிரஸ்தத்தை காண்பேன்.”
இளையவணிகன் “இந்திரப்பிரஸ்தத்தில் பாண்டவர் ஐவரில் மூவரே உள்ளனர். இளையபாண்டவர் அர்ஜுனர் காட்டு வாழ்க்கைக்கென கிளம்பிச் சென்றுவிட்டதாக சொன்னார்கள். மாவலியாகிய பீமன் பெரும்பாலும் காட்டிலேயே வாழ்கிறார். தருமர் அரியணை அமர்ந்து அரசாள்கிறார். நகுலனும் சகதேவனும் அரசியின் ஆணைகளை உளம்கொண்டு நகர் அமைக்கிறார்கள்” என்றான். “அர்ஜுனன் காடேகும் கதைகளை நான் கேட்டுள்ளேன்” என்றான் அர்ஜுனன்.
“அவருடைய காடேகலைப்பற்றி அறிய பல காவியங்கள் உள்ளன. பலவற்றை சூதர் பாடிக் கேட்டிருக்கிறேன். அவர் உலூபியையும் சித்ராங்கதையையும் சுபத்திரையையும் மணங்கொண்டு திரும்பிய கதையைச் சொல்லும் விஜயப்பிரதாபம் ஒவ்வொருநாளும் வளர்ந்துகொண்டே போகும் காவியம்” என்றார் முதியவர். “சுபத்திரை மணத்தில் அது முடிகிறது அல்லவா?” என்றார் காந்தார வணிகர். “இல்லை, அதன்பின்னரும் எட்டு சர்க்கங்கள் எழுதப்பட்டுள்ளன. சதபதர் எழுதி முடித்த இடத்திலிருந்து தசபதர் என்னும் புலவர் தொடர்ந்து எழுதியிருக்கிறார்” முதுவணிகர் தொடர்ந்து சொன்னார்.
“இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டையின் வாயிலை விஜயர் சுபத்திரையுடன் சென்றடைந்தபோது எட்டுமங்கலங்கள் கொண்ட பொற்தாலத்துடன் திரௌபதி அவர்களை வரவேற்க அங்கு நின்றிருந்தாள் என்று கவிஞர் சொல்கிறார்” என்றார் கிழவர். “சரிதான், சூதர் ஏன் சொல்லமாட்டார்? அவர்களின் கதைப்பெண்கள் களிமண்ணைப் போன்றவர்கள். அள்ளி தங்களுக்கு பிடித்த வகையில் புனைந்து கொள்ள வேண்டியதுதான். நமக்கல்லவா தெரியும் என்ன நிகழ்ந்திருக்கும் என்று!” என்றார் காந்தாரர். கொழுத்த வணிகன் தொடையில் அடித்து வெடித்து நகைத்தான்.
“திரௌபதி கோட்டை வாயிலுக்கு வந்திருப்பாள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதை நகரே நோக்கிக் கொண்டிருக்கும். ஆனால் அக்கண்களில் அனல் எரிந்து கொண்டிருக்கும். அவ்வனலை ஒரு வேளை அர்ஜுனன் கூட பார்த்திருக்க மாட்டான். சுபத்திரை அறிந்திருப்பாள்” என்றான் இளைய வணிகன். “ஆம் ஆம்” என்றபடி கொழுத்த வணிகன் உடலை உலைத்து நகைத்தான். “சுபத்திரை இப்போது இந்திரப்பிரஸ்தத்தில்தான் இருக்கிறாளா?’’ என்று குள்ளன் கேட்டான். “ஆம். அங்குதான் இருக்கிறாள். இந்திரப்பிரஸ்தத்தை அவளும் விட்டுக்கொடுக்கமாட்டாள். அவளுக்கு மைந்தன் பிறந்திருக்கிறான் என்றார்கள். அவனுக்கு அபிமன்யு என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் பிறவிநன்னாள் சடங்குகளுக்கு மரவுரி விற்கச் சென்றிருந்தேன். மக்கள் இன்னும் அந்நகரில் முழுமையாக குடியேறவில்லை. ஆயினும் பெருவிழா அது.”
“அர்ஜுனனுக்கு முன்னரே மைந்தர்கள் இருக்கிறார்களல்லவா?” என்றான் தென்திசை வணிகன். முதுவணிகர் “திரௌபதிக்கு முதல் மூன்று கணவர்களில் மூன்று மைந்தர்கள். தருமரின் மைந்தன் பிரதிவிந்தியன். பீமசேனரின் மைந்தன் சுதசோமன். அர்ஜுனனுக்குப் பிறந்த மைந்தன் சுருதகீர்த்தி. தந்தையைப் போலவே கருநிறம் கொண்டவன் என்கிறார்கள். அவன் கண்களைப்பற்றி சூதர் ஒருவர் பாடிய பாடலை சில நாட்களுக்குமுன் சாலையில் கேட்டேன். தந்தையின் விழிகள் வைரங்கள் என்றால் மைந்தனின் விழிகள் வைடூரியங்கள் என்று அவர் பாடினார்.”
கொழுத்த வணிகன் ஏப்பம் விட்டு “அரச குலத்தவர்கள் புகழுடன் தோன்றுகிறார்கள். சிலர் கடுமையாக உழைத்து அப்புகழை இழக்கிறார்கள்” என்றான். நாடோடி சிரிக்காமல் “ஆம், வணிகர்கள் பொன்னுடன் பிறப்பதைப்போல” என்றான். கொழுத்த வணிகன் “அவை மூத்தவர் ஈட்டிய பொருளாக இருக்கும்” என்றான். “எல்லாமே எவரோ ஈட்டியவைதான்” என்றான் நாடோடி. “பழியும் நலனும்கூட ஈட்டப்பட்டவையே. இவ்வுலகில் அனைவரும் சுமந்துகொண்டு வந்திறங்குபவர்களே.”
அர்ஜுனன் கால்களை நீட்டியபடி “இந்த மழை இன்றிரவு முழுக்க பெய்யும் என்று தோன்றுகிறது. நாம் படுத்துக் கொள்வதே நன்று” என்றான். இளைய வணிகன் “விடுதிகளில் மரவுரிகளை பேண வேண்டுமென்பது நெறி. மகதத்திலும் கலிங்கத்திலும் இந்திரப்பிரஸ்தத்திலும் அனைத்து விடுதிகளிலும் படுக்கை வசதிகள் உள்ளன” என்றான். “அயோத்தியில் என்ன அரசா உள்ளது? பழம்பெருமை மட்டும்தானே? இன்று சென்றால் சற்று முன்னர்தான் ராகவராமன் மண் மறைந்தான் என்பது போல் பேசிக்கொண்டிருப்பார்கள். சந்தையில் பொருட்களை விரித்தால் வாங்க ஆளில்லை. பொன் கொடுத்தாலும் கொள்வதற்கு பொருளில்லை” என்றார் காந்தாரர்.
“ஆம், மாளிகைகள் மழை ஊறி பழமை கொண்டுள்ளன. சற்று முன் அகழ்ந்தெடுக்கப்பட்ட கிழங்குகள் போல் உள்ளன அரண்மனைகள். அதையே அவர்கள் பெருமையென கொள்கிறார்கள். அயோத்தியில் ஒருவனுடன் பேசிப்பாருங்கள். ஒவ்வொரு அரண்மனையும் எத்தனை தொன்மையானது என்று சொல்வான். புதிய அரண்மனை ஏதுமில்லையா உங்கள் நகரில் என்றேன் ஒருவனிடம். சினந்து கூச்சலிடத் தொடங்கிவிட்டான்” என்றான் இளையவணிகன். “ஆனால் பழைய பொன் என ஏதுமில்லை அவர்களிடம்” என்றான் கொழுத்தவன்.
நாடோடி “நான் வெறும் கல் தரையிலேயே படுத்துத் துயில பழகிவிட்டேன். மரவுரி எனக்கு ஒத்துக் கொள்வதில்லை” என்றான். கொழுத்த வணிகன் “எனது மூட்டையில் ஒரு மரவுரி உள்ளது. வேண்டுமென்றால் அதை அளிக்கிறேன்” என்றான். அர்ஜுனன் “அளியும். நான் அதற்கு ஒரு வெள்ளிப்பணம் தருகிறேன்” என்றான். அவன் முகம் மலர்ந்து “நான் அதை பணத்திற்கு தரவில்லை. ஆயினும் திருமகளை மறுப்பது வணிகனுக்கு அழகல்ல” என்றபடி கையூன்றி “தேவி, செந்திருவே” என முனகியபடி எழுந்து பெருமூச்சுடன் தன் மூட்டையை நோக்கி சென்றான்.
மண்டபத்தின் மறு பக்கம் இருந்த கொட்டகையில் அவர்களின் வணிகப்பொதிகள் அடுக்கப்பட்டிருந்தன. காவல் வீரர்கள் அவற்றின் அருகே மரவுரி போர்த்தி வேலுடன் அமர்ந்து துயிலில் ஆடிக் கொண்டிருந்தனர். “சுபத்திரைக்கும் திரௌபதிக்கும் பூசல்கள் என்று சொன்னார்களே?” என்றான் இளைஞன். நாடோடி சிரித்து “எவரும் சொல்லவில்லை, நீர் சொல்ல விழைகிறீர். சொல்லிக் கேட்க விழைகிறீர்” என்றான். “இல்லை, சொன்னார்கள்” என்றான் அவன் சினத்துடன். “எங்கு சொன்னார்கள்? அப்படி ஒரு செய்தியை நான் கேட்டதில்லையே” என்றான் நாடோடி.
“பூசலில்லாமல் இருக்குமா என்ன? சுபத்திரை இந்திரப்பிரஸ்தத்திற்குள் துவாரகையால் கொண்டு வந்து நடப்பட்ட செடி. நாளை அது முளைத்து கிளையாகி அந்நகரை மூடி நிற்கும். சுபத்திரையின் கொடிவழி முடிசூடும் என ஒரு நிமித்திகர் கூற்றும் உள்ளது. அதை திரௌபதியும் அறிந்திருப்பாள். பெண்ணுருக்கொண்டு இந்திரப்பிரஸ்தத்திற்குள் வந்த இளைய யாதவர்தான் அவள் என்றொரு சூதன் பாடினான்” என்றார் காந்தாரர். “அதனாலென்ன? திரௌபதியின் இனிய தமையன் அல்லவா இளைய யாதவர்?” என்றான் குள்ளன். “ஆம், அதில் ஏதும் ஐயமில்லை” என்றார் காந்தாரர். “அப்படி இருக்கையில் சுபத்திரையிடம் அவளது சினம் இன்னும் கூடத்தானே செய்யும்” என்றார் காந்தாரர்.
“ஏன்?” என்றான் இளைஞன். “உமக்கு இன்னும் மணமாகவில்லை. எத்தனை சொற்களில் சொன்னாலும் அதை நீர் புரிந்து கொள்ளப்போவதும் இல்லை” என்றார் முதிய வணிகர். குள்ளன் “ஆம் உண்மை” என வெடித்து நகைத்தான். மரவுரியுடன் உள்ளே வந்த கொழுத்த வணிகன் “தேடிப்பார்த்தேன், நான்கு மரவுரிகள் இருந்தன” என்றபின் “மூன்றை நான் பிறருக்கு அளிக்க முடியும். சிவயோகியிடமே பணம் பெற்றுக் கொண்டபின் வணிகரிடம் பணம் பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அது வணிகர்களுக்கும் மதிப்பல்ல” என்று சிரித்தான்.
குள்ளன் எழுந்து “அதைக் கொடும்” என்று வாங்கிக் கொண்டான். மெலிந்த வணிகர் “வெள்ளிப்பணத்திற்கு மரவுரியை ஒருநாளைக்காக எவரும் வாங்குவதில்லை. இரண்டு மரவுரியையும் கொடுத்தால் ஒரு பணத்திற்கு பெற்றுக்கொள்கிறேன்” என்றார். நாடோடி வெடித்துச் சிரித்து “இரு சிறந்த வணிகர்கள்” என்றான். “நீர் சொன்னது குழப்பமாக இருக்கிறது” என்றார் காந்தாரர். “சுபத்திரையின் மைந்தனுக்கு இந்திரப்பிரஸ்தத்தில் என்ன இடம்? அவன் அங்குள்ள இளவரசர்களில் இளையவன் அல்லவா?”
“இந்த அரசுக்கணக்குகள் நமக்கெதற்கு?” என்றார் ஒரு முதுவணிகர். “அஸ்வகரே, வணிகர்களுக்குத் தெரிந்த அரசியல் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அரசியலில் ஷத்ரியர்களைவிட இழப்பும் ஈட்டலும் வணிகர்களுக்கே. ஆம்… அதை அறிந்திருக்க வேண்டும். அதன் திசைவழிகளுக்கேற்ப நமது செலவுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதை நாம் வழிநடத்த முடியாது. எவ்வகையிலும் அதில் ஈடுபடவும் கூடாது” என்றார் முதிய வணிகர். “சுபத்திரை அருகநெறி சார்ந்து ஒழுகுகிறாள் என்று அறிந்தேன்” என்றார் காந்தாரர். “அவளது தமையன் அரிஷ்டநேமி ரைவத மலையில் ஊழ்கமியற்றுவதாக அறிந்தேன். ஒருமுறை துவாரகையில் அவரை நானே பார்த்துளேன். பிற மானுடர் தலைக்கு மேல் அவர் தோள்கள் எழுந்திருக்கும். ஆலயக்கருவறைகளில் எழுந்திருக்கும் அருக சிலைகளின் நிமிர்வு அவரிடம் உண்டு.”
“துவாரகையின் வாயிலை அவர் கடந்து செல்வதை நானே கண்டேன்” என்றார் அவர். “மணிமுடியையும் தந்தையையும் தாயையும் குலத்தையும் துறந்து சென்றார். அவரை கொண்டுசெல்ல இந்திரனின் வெள்ளையானை வந்தது. வானில் இந்திரவில்லும் வஜ்ரப்படைக்கலமும் எழுந்தன.” நாடோடி “கூடவே ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அழித்துச் சென்றார்” என்றான். “பெண் என்று சொல்லாதே. கம்சனின் தங்கையான அவள் இளவரசி. இளவரசியின் வாழ்க்கை எளிய மானுடப்பெண்களின் வாழ்க்கையைக் கொண்டு பொருள்படுத்தத் தக்கதல்ல. அவர்கள் கருவூலப்பொருட்கள். கவர்ந்து வரப்பட்டவர்கள். கவரப்படுபவர்கள்.”
அதுவரை பேசாது மூலையில் மரவுரி போர்த்தி அமர்ந்திருந்த வெண்தாடி நீண்ட முதியவணிகர் ஒருவர் “ராஜமதியின் வாழ்க்கை அழிந்ததென்று எவர் சொன்னது?” என்றார். “ஏன், அழியாமல் என்னாயிற்று? பழி எண்ணி எவரும் கொள்ளாத பெண் அவள். பிந்திய வயதில் அல்லவா அம்மணம் அவளுக்கு வாய்த்தது? தன் ஆண்மகன் கையில் ஒரு கங்கணம் கட்டப்படுவதற்கு அப்பால் அவளுக்கு நல்லூழ் அமையவில்லையே. அதை அறுத்தெறிந்து வெற்றுடலென அவர் நகர் விட்டுச் செல்லும் செய்தியை அல்லவா கேட்டாள்?” என்றான் நாடோடி.
“ஆம்” என்றார் முதுவணிகர். “நாம் அதை எப்போதும் எண்ணுவதேயில்லை.” முதியவர் “நான் அருகநெறியினன். நான் அறிவேன்” என்றார். “அத்தனை அணிகளையும் ஆடைகளையும் களைந்து துறவு கொண்டு நகர்விட்டுச் செல்வதற்கு நேமிநாதர் குருதி வெள்ளத்தை காணவேண்டியிருந்தது. அவர் சென்று விட்டார் என்ற செய்தி அறைக்கு வெளியே நின்ற சேடியால் சொல்லப்பட்டபோதே அவள் அனைத்தையும் துறந்தாள். அதை அறிவீரா?”
அனைவரும் அவரை நோக்கினர். “நேமிநாதர் நகர் நீங்கிச் செல்லும் செய்தியை அவளிடம் எப்படி சொல்வதென்று செவிலியரும் சேடியரும் வந்து அறைவாயிலில் நின்று தயங்கினர். சொல்லியே ஆகவேண்டுமென்பதால் முதியசெவிலி வாயிலில் நின்று மெல்லிய குரலில் சொல்லத்தொடங்கினாள். அவள் சொற்கள் முழுமை அடைவதற்குள்ளேயே ராஜமதி அனைத்தையும் உணர்ந்து கொண்டாள். தன் மெல்லிய குரலில் நன்று நிறைக என்று மட்டும் சொல்லி அணிகளை களையத்தொடங்கினாள். அனைத்து ஆடைகளையும் களைந்து மரவுரி அணிந்தாள். தன் தலைமயிரை கைகளால் பற்றி இழுத்து வெறுந்தலையானாள். அழகிய வாயை வெண்துணியால் கட்டிக்கொண்டாள்.”
“அரண்மனைக்குள் பதினெட்டுநாட்கள் வெறும் நீர் அருந்தி ஊழ்கத்தில் இருந்தாள். பின்பு கருக்கிருட்டில் எழுந்து தன் அன்னையிடம் நான் செல்ல வேண்டிய பாதை என்னவென்று அறிந்து கொண்டேன் என்றாள். என்ன சொல்கிறாய் என்று அன்னை கேட்டாள். அவர் ஊழ்கத்தில் இருக்கும் அக்குகைவாயிலின் இடப்பக்கம் நின்றிருக்க வேண்டிய யக்ஷி நான். என் பெயர் அம்பிகை என்று அவள் சொன்னாள். தன் தமையர்களை கண்டு விடைகொண்டு அரண்மனை வாயிலில் வந்து நின்றாள்” என்றார் அருகநெறி வணிகர்.
“காலை இளவெயில் எழுந்தபோது அரண்மனை வாயிலுக்கு ஓர் இளைஞன் வந்தான். கையில் வலம்புரிச்சங்கு ஒன்றை ஏந்தியிருந்தான். அவன் சங்கோசை கேட்டு அவள் இறங்கி அவனுடன் சென்றாள். அவன் யார் என கேட்ட அரசரிடம் தன் பெயர் கோமதன் என்றான். அவனுடன் கிளம்பி நகர் விட்டுச் சென்றாள்” என்றார் அருக நெறியினர். “அவர்கள் ரைவத மலைக்குச் சென்றனர். நேமிநாதர் ஊழ்கத்தில் அமர்ந்த அக்குகைக்கு இருபக்கமும் காவலென நின்றனர். அருகர்களுக்கு காவலாகும் யட்சனும் யட்சியும் மானுட உருக்கொண்டு வந்தவர்கள் அவர்கள்.”
“கதைகள்” என்றான் இளைஞன். முதிய வணிகர் “ஆனால் காதல்கொண்ட பெண்ணும் மாணவனுமன்றி எவர் ஊழ்கக்காவலுக்கு உகந்தவர்?” என்றார். இளைஞன் “அருக நெறியினருக்கு அருகர்கள் முடிவின்றி தேவைப்படுகிறார்கள். ஆலமரம் விதைகளிலிருந்து முளைத்தெழுவது போல் அனைத்து இடங்களிலும் அவர்கள் முளைத்தெழுகிறார்கள்” என்றான். நாடோடி. “இன்பங்களில் திளைக்கும் மானுடரின் குற்றவுணர்வு அது. எங்கோ சில தூயர் அவர்களுக்காக குருதியும் கண்ணீரும் சிந்தவேண்டும். அவர்களை தெய்வங்களென்று நிறுத்துவார்கள்” என்றான். இளையவன் “பலாக்கொட்டைகள் இருக்கின்றன. அனலிட வேண்டுமா? இப்போதே நடுசாமம் அணுகிக் கொண்டிருக்கிறது” என்றான். கொழுத்த வணிகன் “ஆம், கரியும் அளவுடனே உள்ளது. நாம் அதை வீணடிக்கவேண்டியதில்லை” என்றான்.
அர்ஜுனன் “ஆம், இந்த அனல் விடியும் வரைக்கும் போதும்” என்றபின் மரவுரியை சருகில் விரித்து அதன் மேல் கால் நீட்டி படுத்துக்கொண்டான். அனைவரும் சிறு குரலில் உரையாடியபடி படுத்துக்கொண்டனர். அர்ஜுனன் வெளியே பெய்யும் மழையை கேட்டுக்கொண்டிருந்தான்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்