மீன்குருதி படிந்த வரலாறு

1

[ 1 ]

2008 ஜூன் 13 ஆம் தேதி நாகர்கோயில் கார்மல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒரு நிகழ்ச்சி ஒருங்கமைக்கப்பட்டிருந்தது. நண்பர் வறீதையா கன்ஸ்தண்டீன் அதன் ஒருங்கிணைப்பாளர். நெய்தல் என்னும் அமைப்பின் நிகழ்ச்சி. கடலோர மக்களை எழுதச்செய்வதற்கான ஒரு முயற்சியின் தொடக்கம் அது. அதில் நான் பேசினேன்.

எழுதப்போகிறவர்கள் என்னும் தலைப்பில் நான் அதில் பேசியது பிரசுரமாகியிருக்கிறது. அந்த உரையில் எழுத்துக்கான அடிப்படை மனநிலைகளை உருவாக்கிக்கொள்வது, எழுதுவதற்கான சில பயிற்சிகள், எழுத்துக்கு எதிரான சில போக்குகளைச் சுட்டிக்காட்டியிருந்தேன். மூன்று ஆப்தவாக்கியங்களைச் சொன்னேன். 1. சொல்லாதீர்கள், காட்டுங்கள் 2. கருத்தை கதைக்குள் சொல்லிவைக்காதீர்கள் 3 கதைவடிவங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்

அந்த அமைப்பிலிருந்து அதன்பின் பல எழுத்தாளர்கள் உருவாகிவந்தனர். அவர்களில் குறும்பனை பெர்லின் இன்று முக்கியமான படைப்பாளியாக எழுந்து வந்திருக்கிறார். வறீதையா கன்ஸ்தண்டீன் கட்டுரைகளையும் கதைகளையும் எழுதி ஓர் இயக்கமாகவே மாறிவிட்டிருக்கிறார்.
untitled

முதல் வினா, ஏன் நெய்தல்மக்கள் எழுதவேண்டும் என்பதுதான். அதனால் அவர்களுக்கு என்ன நன்மை? மிக எளிதான விடை, எழுதப்பட்ட சமூகமே இருக்கிறது என்பதே. ஒட்டுமொத்தமாகவே பார்க்கலாம், தமிழகத்தில் எந்தெந்த பகுதிகள் எழுத்தாளர்களால் எழுதப்பட்டுள்ளனவோ அவையே உண்மையில் பொதுவான மக்களால் அறியப்பட்டுள்ளன. உலக அளவிலேயே கூட எழுத்துக்கள் மூலம் அறியப்பட்ட நாடுகளே பரவலாகத் தெரிந்தவையாக உள்ளன.

இக்காரணத்தால்தான் பொருளியல் வளர்ச்சி வந்ததுமே நாடுகள் தங்கள் இலக்கியத்தை வளர்க்க, உலகமெங்கும் அதைக்கொண்டுசென்றுசேர்க்க பெருமுயற்சி எடுத்துக்கொள்கின்றன. இன்று சீனா அதற்காகச் செய்யும் பணிகள் பிரமிப்பூட்டுபவை. சிஙகப்பூரும் கொரியாவும் அதற்கிணையாகச் செயல்பட்டு வருகின்றன.

ஒருசமூகம் வெறும் மக்கள்த்திரளாக அல்லாமல் ஆவது அது தன்னைத் தொகுத்து முன்வைக்கும்போதே. அவ்வாறு தொகுத்துக்கொள்ள சில அடையாளங்கள் தேவையாகின்றன. அச்சமூகத்தின் பாரம்பரியம், நடைமுறையிலுள்ள சில பொதுவான பண்புநலன்கள் ஆகியவற்றிலிருந்தே அந்த அடையாளங்கள் கண்டடையப்படமுடியும். அவ்வடையாளங்களை அச்சமூகம் தானே தனக்குரியது என பொதுவாக ஏற்கவேண்டும். அதை அது தன்னுடையது என முன்வைக்கவேண்டும்.

இலக்கியம் மற்றும் கலைகள் மூலமே அவ்வடையாள உருவாக்கம் நிகழமுடியும். பழங்குடிச்சமூகங்கள் வரை தங்கள் நாட்டார்கலைகள் நாட்டாரிலக்கியம் வழியாகவே தங்களை தொகுத்து முன்வைக்கின்றன. ’நாங்களெல்லாம் இப்படிப்பட்டவர்கள்’ என எச்சமூகமும் சொல்லும் எந்த விஷயமும் கலையிலக்கியத்தால் தொகுத்தளிக்கப்பட்டதாகவே இருக்கும்.

பழங்குடி வாழ்க்கையில் வாய்மொழி வரலாறுக்கும் நிகழ்த்துகலைக்குமெல்லாம் அந்த இடம் இருந்தது. ஆனால் நவீனச் சமூகங்கள் மேலும் மேலும் எழுத்துவடிவச் சமூகங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. எழுதப்படாதவை இல்லாதவை என்னும் நிலையை நோக்கி மானுடப்பண்பாடு சென்றுவிட்டது.

இலக்கியத்துள் எழுதப்படுபவை எந்த அளவுக்கு மக்களைச் சென்றடையும் என கேட்கலாம். நேரடியாகச் சென்றடைவதில்லை. அவை அடுத்த கட்ட எழுத்துக்குச் செல்கின்றன. வணிக எழுத்தாக மாறுகின்றன. சினிமாக்களாகின்றன. தொலைக்காட்சித் தொடராக ஆகின்றன. ஆழிசூழ் உலகின் பாதிப்புள்ள ஒரே ஒரு தொலைக்காட்சித் தொடர் போதும், மீனவர் வாழ்க்கை தமிழ்மக்களுக்கு அணுக்கமாக ஆகிவிடும். ஆனால் இலக்கியமே தொடக்கம்.

எழுத்து என்பது நிலைக்கச்செய்யும் ஒரு முயற்சி என்று சொல்லலாம். பண்பாட்டுக்கூறுகள் அமீபாக்கள் போல உருவற்று மிதந்தலைந்து ஒன்றை ஒன்று உண்டு ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன. எழுத்து அவற்றில் ஒரு காலத்தருணத்தை உறையச்செய்து சிலையாக்கி என்றென்றைக்கும் உரியதாக ஆக்கிவிடுகிறது.

ஜோ டி க்ரூஸின் ஆமந்துறை இன்னும் சில வருடங்களில் உருவற்று மாறும். அங்குள்ள வாழ்க்கையின் சுவடுகளே இருக்காது. ஆனால் அது தமிழிலக்கியப்பரப்பில் என்றும் இருந்துகொண்டிருக்கும். எவர் வேண்டுமென்றாலும் அங்கு சென்றுவாழ்ந்து மீளமுடியும்.

இவ்வாறு நிலைக்கச்செய்யப்பட்ட வாழ்க்கைச்சித்திரங்களும் ஒரு தொடராக ஆகின்றன. ஜோ டி க்ரூஸின் உலகம் குறும்பனை பெர்லினின் உலகம் வறீதையா கன்ஸ்தண்டீனின் உலகம் கிறிஸ்டோபர் அண்டனியின் உலகம் என இவ்வுலகங்கள் வழியாக ஒரு வரலாறு வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. அது ஒர் இணைவாழ்க்கை என்று சொல்லலாம்.

அடுத்த வினா ஒன்றுண்டு, இப்படி ஒவ்வொரு சமூகத்திற்கும் என தனித்தனியான இலக்கியங்கள் தேவையா? ஒட்டுமொத்தமாகத் தமிழிலக்கியம் என ஒன்று போதாதா? இப்படி தனித்தனியாக எழுதுவது அச்சமூகங்களைப் பிரிப்பதாக ஆகும் அல்லவா?

உண்மையில் இங்கிருப்பது இலக்கியம் மட்டுமே. அதில் ஒரு பகுதியே இந்திய இலக்கியம். அதற்குள் தமிழிலக்கியம்ள் அதற்குள்தான் வட்டார இலக்கியங்கள். இப்பிரிவினைகள் ஒரு படைப்பை குறிப்பாகப் புரிந்துகொள்வதற்கானவை மட்டுமே. அவற்றை இணையான படைப்புகளுடன் ஒப்பிட்டு நோக்கவும் அவற்றின் சமூகவியல்பின்னணியை அறியவும் அவ்வாறு பகுக்கப்படுகிறது. பொதுக்கூறுகளைக்கொண்டு அவை உலக இலக்கியம் என்றும் கருதப்படுகின்றன.

லா.ச.ராமாமிருதம் எழுதியது ஒருவகை வட்டார இலக்கியம்தன. அது ஸ்மார்த்த பிராமணர்களின் வழக்கில், அந்த வாழ்க்கைச்சூழலில் இருந்து எழுந்தது. அந்த அடையாளத்தை அது மீறவுமில்லை. ஆனால் அது தமிழிலக்கியத்தின் சாதனைகளில் ஒன்றும்கூட. தோப்பில் முகமது மீரான் எழுதியது இஸ்லாமிய இலக்கியம்தான். ஆனால் அதுவும் தமிழின் சாதனை.அதேபோன்றுதான் ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு. அது கடலோர வாழ்க்கையைச் சொல்லும் ஆக்கம். ஆனால் தமிழிலக்கியம். இலக்கியம்.

தமிழ்வாழ்க்கை என நாம் அறியும் இந்த பெரிய பரப்பு என்பது புனைவிலக்கியத்தால் உருவாக்கப்பட்டது. அதில் சில பகுதிகள் சொல்லப்படாதவை. அவை சொல்லப்படும்போதே தமிழ்வாழ்க்கையில் அவை இடம்பெறுகின்றன. மீனவர் வாழ்க்கை அதிலொன்று. பல சிறிய சமூகங்கள் பேசப்படாதவை. ஆனால் மிகப்பெரிய சமூகமான மீனவர்கள் அப்படி கண்ணுக்குத்தெரியாதவர்களாக ஆனது ஒரு வியப்புதான்.

மீனவர்கள் வாழும் நிலம் தமிழின் மையநிலத்திலிருந்து மிக அன்னியமானது. அங்கே அவர்கள் மற்ற மக்களுடன் பெரிய தொடர்பின்றி நூற்றாண்டுகளாக வாழ்கிறார்கள். அவர்களின் மதமும் பெரும்பான்மை மதத்துடன் உரையாடலற்றது. ஆகவே அவர்கள் இன்று அறியப்படாத துண்டிக்கப்பட்ட சமூகம்தான்.

சில ஆண்டுகளுக்கு முன் நான் கடல் என ஒரு படத்திற்காக எழுதினேன். அப்படம் வெளிவந்தபோது எழுந்த முக்கியமான விமர்சனம், அது ‘அன்னியமாக’ இருக்கிறது என்பது. பிரபல இதழ்களின் விமர்சனங்களில்கூட அந்த வரி இருந்தது. கிறிஸ்தவத்தின் எளிய செய்திகள்கூட தமிழ்மக்களுக்குத் தெரியவில்லை. மீனவர்களின் பெயர்கள் மிக அன்னியமாக இருந்தன.

அப்போது என் நண்பர் சிறில் அலெக்ஸ் எழுதினார். ‘மீனவர் வாழ்க்கையும் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. மீனவர்களும் தமிழர்கள்தான். அவர்கள் அன்னிய வாழ்க்கை வாழும் அன்னியர்களாக எப்படி ஆனார்கள்?’ .இதுதான் நிலைமை. இந்நிலைமையை மாற்ற இலக்கியத்தால், கலைகளால்தான் முடியும். அதற்கானத் தேவை இன்றுள்ளது. அவ்வகையில் ஜோ டி குரூஸ் ஒரு மாபெரும் தொடக்கம்.

இவ்வாறு இலக்கியப்பதிவு உருவாகத் தொடங்கும்போது சில உடனடிச்சிக்கல்கள் எழுகின்றன. அவற்றை அச்சமூகங்கள் எதிர்கொள்ளும் சற்று எரிச்சலும் வன்முறையும் ஒதுக்கலும் கொண்டதாக ஆகிறது. இலக்கியப்பதிவு என்பது நேரடியான பெருமிதவரலாறு அல்ல. அது விமர்சன வரலாறாகவே இருக்கமுடியும்.

இலக்கியப்படைப்பாளி நேற்றைய குலப்பாடகனின் மனநிலை கொண்டவன் அல்ல. அவன் அச்சமூகத்தின் கல்விகற்ற, உலகப்பிரக்ஞை கொண்ட பிரஜை. ஆகவே அவன் கடுமையான விமர்சனங்களும் நிராகரிப்புகளும் கொண்டவன். இலக்கியவாதிக்கு அந்த உரிமை இருக்கிறது என்பதை பழைமையான மனநிலைகொண்ட சமூகங்கள் அறிந்திருப்பதில்லை.

ஆகவே அவை விமர்சனங்களைக் கண்டு கொந்தளிக்கின்றன. அவை உருவாக்கும் ஒற்றைப்படையான பெருமிதவரலாறு மட்டுமே எழுத்தாளனாலும் எழுதப்படவேண்டும் என வற்புறுத்துகின்றன. பெருமாள் முருகனுக்கு நிகழ்ந்தது இதுவே.

இன்னொன்று, இலக்கியம் என்பது ஒருவகையில் எழுத்தாளன் உருவாக்கும் அந்தரங்க வரலாறே. அந்த எழுத்தாளனின் ஆளுமையிலிருந்து அதைப்பிரித்தறிய முடியாது. அவனுடைய சொந்த வாழ்க்கைநோக்கு அதை கட்டமைத்திருக்கும். அதை பொதுச்சமூகம் புரிந்துகொள்வதில்லை.

ஆகவே அது இலக்கியத்தில் அவர்கள் அறிந்த புறவய வரலாற்றைத் தேடி அது இல்லாதது கண்டு வரலாற்றுத்திரிபு என கொந்தளிக்கிறது. ஜோ டி குரூஸ் அதற்காகத்தான் அவரது ஊர்க்காரர்களால் வெறுக்கப்பட்டு விலக்கப்பட்டார்.

இலக்கியம் உருவாக்குவது ஒற்றைப்படையான ஒரு வரலாற்றுச்சித்திரம் அல்ல. அதை விவாதச்சித்திரம் என்று சொல்லலாம். ஜோ டி குரூஸ் எழுதுவதும் குறும்பனை பெர்லின் எழுதுவதும் கிறிஸ்டோபர் ஆண்டனி எழுதுவதும் ஒன்றுடன் ஒன்று முரண்படும் வரலாறுகள். ஒன்றோடொன்று பின்னி நிரப்பும் வரலாறுகளும்கூட.

அவ்வாறு உருவாகும் ஒட்டுமொத்த வரலாறே மீனவர் வாழ்க்கையாக இருக்கும். அதுவே தமிழிலக்கியத்தின் ஒரு முக்கியமான ஊடுசரடாக ஆகும். அதுவே தமிழ்வரலாற்றை நிரப்பும்

கிறிஸ்டோபர் எழுதிய துறைவன் அத்தகைய வலுவான ஒரு படைப்பு. இதுவரை வந்த கடலோர நாவல்களில் ஐயத்திற்கிடமின்றி ஆழிசூழ் உலகுதான் சிறந்தது. துறைமுகம் ஒரு பெரும்படைப்பே. அவ்விரு ஆக்கங்களுக்கு அனைத்துவகையிலும் நிகராக நிற்கும் படைப்பு இது. தமிழுக்கு ஒரு கொடை.

2

[ 2 ]

ஜஸ்டின் திவாகர் அவரது கட்டுரை ஒன்றில் நெய்தல் படைப்பாளிகளின் பட்டியல் ஒன்றை அளித்திருக்கிறார். அவரது நோக்கில் நெய்தல்நிலப் படைப்பாளிகளின் முதல்புள்ளி கோவளத்தைச் சேர்ந்தவரான மரியஜான் காலிங்கராயர் . இவர் எழுதிய செண்பகராமன் பள்ளு மீனவர் வாழ்க்கையைச் சொல்லும் முதல் இலக்கிய ஆக்கம். அடுத்தது உவரியைச்சேர்ந்தவரான வலம்புரி ஜான். கிட்டத்தட்ட ஐம்பது நூல்களை வலம்புரி ஜான் எழுதியிருக்கிறார்.

ஜஸ்டின் திவாகர் சமகால மீனவச் சமூக எழுத்தாளர்களின் ஒரு விரிந்த பட்டியலை அவரது கட்டுரையில் அளிக்கிறார். பலகோணங்களில் எழுதப்பட்டவை இக்கட்டுரைகள். பொதுவாக கத்தோலிக்கச் சார்பு கொண்டவை இவ்வெழுத்துக்கள் என்றால் கத்தோலிக்கரை மிகக்கடுமையாக விமர்சிக்கும் இந்துத்துவ நோக்கு கொண்ட ஜோ.தமிழ்ச்செல்வனும் இப்பட்டியலில் இருக்கிறார். இவர்கள் உருவாக்கும் ஒரு விரிந்த விவாதவெளியே கடலோர எழுத்து. அதன் ஒட்டுமொத்தமே கடலோர வாழ்க்கை.

ஆ.தாமஸ் (புத்தன்துறை),

ஜோ டி குருஸ் (உவரி)

வறீதையா கான்ஸ்தந்தின்(பள்ளம் துறை)

சி.பெர்லின்(குறும்பனை)

அரிமா வளவன் (உவரி

தொ. சூசைமிக்கேல் (பள்ளம்துறை)

ம.சேவியர் (உவரி)

ஜோ.இவாரியஸ் பர்னாண்டோ (இடிந்தகரை)

ஜெயசீலன் கர்வாலோ (வேம்பார்)

ஜோ.தமிழ்ச்செல்வன் (மண்டைக்காடு புதூர்]

பீட்டர்ராயன் (இடிந்தகரை),

எஸ். எ.ஆர். பரதராஜ்(கன்னியாகுமரி),

பா.மரியதாசன் (ஏர்வாடி)

இதயநேசன்(மூக்கையூர்)

அ.அருள்தாசன் (பள்ளம்)

அருள் எழிலன்(புத்தன் துறை)

நேவிஸ் விக்டோரியா(வேம்பார்)

ஜெபமாலை ஆராச்சி(கன்னியாகுமரி)

ஜஸ்டின் திவாகர்(பொழிக்கரை)

ஜெரால்டு ராயன்(வீரபாண்டியப் பட்டணம்)

அலங்காரப் பரதர்(தூத்துக்குடி)

சிறில் அலெக்ஸ்(முட்டம்)

கபிரியேல் மெல்கியாஸ்(பள்ளம்)

எஸ். டெக்லா (கூட்டப்புளி)

ஜவகர்ஜி (நாகர்கோவில்)

பீட்டர் ராயன்(இடிந்தகரை)

ஜே.பி. வெனிஸ் (கோவளம்)

இந்த நீண்டபட்டியலில் விடுபடல் குரூசு சாக்ரடீஸ். ஆரம்பத்தில் எழுதி பின்னர் வளைகுடா வாழ்க்கையில் மறைந்து மீண்டும் நாவல் வழியாக வருகையை அறிவித்திருக்கும் குருசு சாக்ரடீஸ் முக்கியமான படைப்பாளி.

இறுதியாக இப்பட்டியலில் கிறிஸ்டோபர் ஆண்டனியைச் சேர்க்கமுடியும். ஆனால் இவ்வியக்கத்தின் ஒட்டுமொத்த ஆற்றலையும் தன்னுள் கொண்டவர் என அவரை வகைப்படுத்துவேன். நவீன இலக்கிய அறிமுகமும் விரிவான விவாத அனுபவமும் கொண்டவர். ஏழாண்டுகளுக்கு முன் எனக்கு அறிமுகமானபோது நவீன இலக்கியம் பற்றிய மெல்லிய ஆர்வம் மட்டுமே அவரிடமிருந்தது. பின்னர் ஜோ டி குரூஸ் நாவல்கள் அவருக்கு தீவிரமான இலக்கிய வேகத்தை உருவாக்கின

கிறிஸ்டோபரின் ஒரு கடிதம் என் தளத்தில் 2010ல் வெளியானது. அதில் அவர் தன்னுடைய வறுமைமிக்க இளமைக்காலத்தைப்பற்றிச் சொல்லியிருந்தார். காய்ந்த மீன்களை பரப்பி அதன்மேல் பாய்விரித்து படுத்துக்கொள்ளும் குடில். அப்பா உருவாக்கிய கடன். கடும் உழைப்பில் படித்து அமெரிக்காவில் கணிப்பொறியாளனாகச் சென்றது. கடன்களை அடைத்து மீண்டது.

இன்னொரு கடிதத்தின் சித்திரம் அமெரிக்காவில் வேலைக்கான விசாவுடன் செல்லும்போது திருவனந்தபுரம் விமானநிலையத்தில் சாதிவெறியர்களால் அவமதிக்கப்பட்டது. பிடிவாதமாக அந்த அவமதிப்புகளைக் கடந்து தன் இலக்கை நோக்கிச் சென்றார் கிறிஸ்

அவரது அபாரமான உயிராற்றலை நான் அறிவேன். சவாலாக எடுத்துக்கொண்டு முழுமூச்சுடன் இறங்கிவிடுவது அவரது இயல்பு. ஆகவே நான் என் இணையதளத்தில் புதியவர்களின் கதைகள் என கதைகளைப்போடத் தொடங்கியபோது அவர் கதை அனுப்பியதைக் கண்டு ஆச்சரியப்படவில்லை. அவ்வரிசைக் கதைகளில் முக்கியமனாதாக அது இருந்தது. அறியப்படாத ஒரு கடல்வாழ்க்கையின் நுணுக்கமான சித்திரம்

என் தளத்தில் வெளியான இரு கதைகளுக்குப்பின் நாவல் எழுதப்போவதாக கிறிஸ் அறிவித்தார். என் வாசகர்குழுமத்தின் ஏழு நண்பர்கள் நாவல் எழுத முனைந்தனர். முடித்தவர் கிறிஸ் மட்டுமே. துறைவன் அவரது வெல்லும் விசைக்கு ஒரு அரிய சான்று

3

[ 3 ]

துறைவன் குமரிமாவட்டத்தில் கேரள எல்லையோரமாக அமைந்துள்ள கொல்லங்கோடு கடற்பகுதியில் நடக்கும் கதை. முதல் அத்தியாயம் பர்த்தலோமி கடலுக்குள் செல்வதன் சித்திரத்தை உயிர்ப்புடன் காட்டுகிறது. யானைக்கூட்டங்கள் போல கரையை அறையும் கடல். அதன்மேல் ஏறிச்செல்வது என்பது ஒவ்வொருநாளும் ஒரு வீரசாகசம். தொழில் அல்ல அது, போர். அந்தப்போரில் வீழ்வதும் மீள்வதும் கடலின் கையில் உள்ளது.

அந்த முதற்காட்சியில் தான் சொல்லவிருக்கும் வாழ்க்கையின் சாராம்சமான ஒன்றை நிலைநாட்டிவிட்டு கிறிஸ் மேலே செல்கிறார். வேறெந்த தொழிலுடனும் மீன்கொள்ளுவதை ஒப்பிடமுடியாது. இது இறப்புடன் ஆடும் பகடை. மீனவர்களின் குணம் பண்பாடு அனைத்தையும் தீர்மானிக்கும் அம்சம் இது
எளிமையான நேரடி உரையாடல்கள் வழியாக இப்பகுதியின் சமூக அரசியல் சித்திரம் இரண்டாவது அத்தியாயத்திலெயே சொல்லப்பட்டுவிடுகிறது. மார்த்தாண்டவர்மா தன் எதிர்ப்பெண்களை மீனவர்களுக்கு அளித்ததில் தொடங்கி போர்ச்சுக்கல் ஆதிக்கம் ,மதமாற்றம், கத்தோலிக்க மதத்தின் பங்களிப்பும் சுரண்டலும் ,லூர்தம்மாள் சைமனின் சேவைகள், காமராஜர் காலகட்டம், எம்ஜியார் என ஒரு விரிவான கோட்டுச்சித்திரம் நாவலுக்கான அடித்தளத்தை அமைக்கிறது

இந்த ஓர் அத்தியாயத்திலேயே மீனவர்களின் அடிப்படைச் சிக்கலையும் கிறிஸ் சொல்லிவிடுகிறார். பாரம்பரியமான தொழில்நுட்பமும் கடலறிவும் உள்ளவர்கள். ஆனால் அவற்றை பரிமாறிக்கொண்டு வளர்த்தெடுப்பதற்கான ஒற்றுமை இல்லை. அவர்கள் சிறியசிறிய கிராமங்களாகப்பிரிகிறார்கள். கடலையும் கரையையும் பங்கிட்டுக்கொள்கிறார்கள். காமராஜர் விசைப்படகுக்கு மாறுவதைப்பற்றி அவர்களிடம் கேட்டபோது தங்கள் வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ள மறுத்து நிராகரிக்கிறார்கள். சில ஆண்டுகளில் இயந்திர வலைகள் கொண்ட மாபெரும் படகுகள் வந்து தங்கள் கடலைச் சுரண்டவிருப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

மிகவிரிவான மீன்பிடித்தகவல்களுடன் கதைசொல்லிச் செல்கிறார் கிறிஸ். பலசமயம் ஆசிரியரே நேரில் சொல்லும் விளக்கங்களாக அவை உள்ளன. ”நாளை காலையில் மீன்பிடிப்பதற்காக, இப்போதே இந்தக் கரைமடி வள்ளம் எதற்கு நங்கூரம் வைக்கவேண்டும்? இதற்கு ஒருசில காரணங்களுண்டு. அலை அதிகமாக இருப்பதினால், நாளை காலை சூரியன் உதிப்பதற்குமுன் கரையிலிருந்து வள்ளத்தை அலை கடந்து கொண்டுசெல்வதிலுள்ள சிக்கல். சில நேரங்களில் அலை வள்ளத்தை சேதப்படுத்திவிடும். இப்போது இந்த வள்ளம் அலையடிக்கும் பகுதியை கடந்திருப்பதனால் நாளை காலை தண்டு வலிப்பவர்கள் மட்டும் நீந்தி வந்தால் போதும்” என நாவல் விவரித்துச்செல்கிறது.

எந்த நாவலிலும் தகவல்களே அதன் புற உலகைக் கட்டமைக்கின்றன. தகவல்களை சீராகச் சொல்வதன் கலையே நாவல் என்றுகூடச் சொல்லலாம். அத்தகவல்கள் வழியாக வாசகன் உருவாக்கிக்கொள்ளும் ஒர் உலகில் வாழ்வதே நாவல் வாசிப்பின் இன்பம். நாவல் உருவாக்குவது ஓர் அகவுலகமும்கூட என்பதனால் அந்தத் தகவல்கள் அனைத்துமே படிமங்களும்தான். ஆசிரியரே உத்தேசிக்காமல்கூட அவை படிமங்களாகின்றன.

உதாரணமாக, இந்நாவல் முழுக்க மடிவலை ஒரு படிமம் போல வளர்ந்து செல்வதை வாசகன் காணமுடியும். மடிவலையின் பாரம்பரியம். அதை போர்ச்சுகீசியர்கள் கொண்டுவந்ததாக மாதாகோயில் பாதிரியார் உரிமைகொண்டாடுவது என ஒவ்வொன்றும் வரலாற்றுடன் அதை இணைத்து வளர்த்தப்டியே செல்கிறது.

சென்றதலைமுறை தந்தையர் அனைவருக்கும் மகன்களின் படிப்பே பெரும் சவால், கனவு. படிப்பு என்பது நவீன உலகுக்கான வாயில். பர்த்தலோமியின் கனவு ஆரோனை படிக்கவைப்பதுதான். எதைப்படிக்கவேண்டும், ஏன் படிக்கவேண்டும் என்றொன்றும் இல்லை, படிக்கவேண்டும் அவ்வளவுதான். அது அவனை கடலின் கட்டுகளிலிருந்து விடுதலைசெய்யும். அவர் திருவனந்தபுரம் சென்று பார்க்கும் ஒரு புறவுலகுக்கு அவனுக்கு ஒரு நுழைவுச்சீட்டை வாங்கியளிக்கும். அவ்வாறாக இது ஆரோனின் கதையுமாக ஆகிறது

இந்நாவல் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நுட்பமான விவாதம் மீனவர்களின் தொல்மரபுக்கும் அவர்கள் தழுவிக்கொண்ட போர்ச்சுக்கல் கத்தோலிக்கத்துக்குமான அணுக்கமும் விலக்கமும் கொண்ட உறவு. நாம் வெளியே இருந்து எண்ணுவதுபோல அது பூரணமான அடிமைப்படலாக இல்லை. புனித சவேரியார் தங்களை மதம் மாற்றியதாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆகவே மொத்தக் கடல்கரைக்கும் ஆசி உண்டு என நம்புகிறார்கள். ஆனால் தங்கள் பண்பாடு அடையும் மாற்றங்களையும் உணர்ந்திருக்கிறார்கள்.

பர்த்தலோமியோ என்னும் பெயரே உதாரணம். அதன் வேர்கள் என்னென்ன. தால்மியா என்னும் அராமிக் இனக்குழுவைச்சேர்ந்த வீரன் என்று பொருள். பைபிளிலிருந்து இத்தாலி வழி போர்ச்சுக்கலுக்குச் சென்ற பெயர். இந்தக்கடற்கரையில் அது பர்த்தலோமி ஆகிய் படத்தலமி ஆகிவிடுகிறது. இந்த திரிபின் பண்பாட்டு நுட்பங்கள் என்றே இந்நாவலை வரையறைசெய்துவிடமுடியும்.

ஒருவகை அரசற்ற பிராந்தியமாகவே கடற்கரை இருந்து வருவதை இந்நாவல் காட்டுகிறது. அதன்மேல் அரசின் கட்டுப்பாடு என்பது மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் 1700களில்தான் தொடங்குகிறது. போர்ச்சுக்கல் ஆதிக்கம் என்பது மத ஆதிக்கமே ஒழிய அரசு முறை அல்ல. இம்மக்கள் தங்களுக்கென ஒரு முறைமையை உருவாக்கிக்கொள்கிறர்கள். ஒருவகை பழங்குடி அரசு அது எனத்தோன்றுகிறது

”ஒவ்வொரு ஊரையும் மூன்று அல்லது நான்காக பிரித்திருப்பார்கள். அவற்றிற்கு கிழக்குக்கண்டம், நடுக்கண்டம், மேற்குக்கண்டம் என்று பெயர்கள் இருக்கும். இந்த பகுதிகளில் எந்த வள்ளம் முதலில் கடலில் இறங்குகின்றதோ அவர்களுக்கு முதலில் மீன்பிடிக்கும் உரிமை கொடுக்கப்படும். எனவே ஒரு ஊரில் மூன்று வள்ளங்கள் கடலில் ஒரே நேரத்தில், மூன்று கண்டங்களிலும், கரைமடி கொண்டு மீன்பிடிக்கலாம். இதை முதல்பாடு என்பார்கள். இதைப்போல இரண்டாம்பாடும், மூன்றாம்பாடும் நிர்ணயம் செய்யப்படும். இரண்டாம்பாடு உரிமை உள்ளவர்கள் முதல்பாடு கிடைத்த வள்ளம் கடலில் சென்று மடியை இறக்கியபின்னர் வள்ளம் கரையில் அணைந்த பிறகுதான் தண்டுவலித்து ஆழ்கடல் செல்லவேண்டும்”

இந்த வகையான அரசநெறிகள் அரசு என்னும் வன்முறை அமைப்பு இல்லாமல் நிலைநிற்கவேண்டுமென்றால் கடுமையான சமூகவிலக்குகள் வழியகாவே சாத்தியம். அதுவே அவர்களின் ஆற்றல். அதுவே அவர்களை கட்டுப்படுத்தி தேங்கவும் செய்கிறது. இந்த ஊர்க்கட்டுப்பாடு இன்றும் ஒரு பெரிய பிரச்சினை என பிற நெய்தல்நில எழுத்தாளர்களின் ஆக்கங்களிலிருந்து அறியமுடியும்.

போர்ச்சுக்கல் காரர்களால் அளிக்கப்பட்ட பெயர்தான் முக்குவர். அது அம்மக்களின் சாதிப்பெயர் அல்ல. மொசாம்பிக் நாட்டிலுள்ள முக்குவா அல்லது மக்குவா என்னும் இனக்குழுவினரின் பெயரை வாஸ்கோட காமா கேரளக்கடற்கரையில் கண்ட கரிய மக்களுக்கும் சூட்டினார். அவருடைய நோக்கில் அத்தனைபேருமே பண்படத காட்டுமிராண்டிமக்கள்தான்

போர்ச்சுக்கல்காரர்களை தங்கள் ரட்சகர்கள் என எண்ணும் அவர்களில் ஒருவனாகிய பெர்மன் சாமியாருக்குப் படிக்கையில் `தூவர்த் பர்போசா’வின் நூலில் அவர்களைப்பற்றி மிகக்கீழ்மையாக சித்தரிப்பதைக் கண்டு கொந்தளிப்படைகிறான்.

தங்களுக்கு மீட்பர்களாக வந்தவர்கள் உண்மையில் மிக இழிந்த எண்ணத்துடன், ஒரு பிணியாளனை குணப்படுத்தும் மனநிலையுடன்தான் அதைச்செய்திருக்கின்றனர், அவர்களுக்கு தங்கள் பாரம்பரியம், பண்பாடு பற்றி அறிதலோ மதிப்போ இல்லை என உணரும் நிலை அவர்களின் துயரமான தருணங்களில் ஒன்று. கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சாணார்களின் வரலாறு நாடார்களை இதேபோல கொந்தளிக்கச்செய்ததும் ஒப்பிடவேண்டிய வரலாறு.

மெல்லமெல்ல கடற்கரையின் மீன்பிடித்தல் பெருதொழிலாக மாறுவதை கிறிஸ் சொல்கிறார். மீன்குருதி என்னும் அத்தியாயம் ஒரு தனிக் கதையாக நிற்கும்தகுதி கொண்டது. மானுடரை நம்பும் அவர்களால் நேசிக்கப்படும் ஓங்கில் [டால்ஃபின்]கள் கொல்லப்படும்போது ஒரு யுகம் முடிகிறது. அந்தக்குருதியில் அடுத்த யுகம் பிறக்கிறது

ஒரு சின்னஞ்சிறிய நாவல் ஒருபக்கம் வரலாறு மறுபக்கம் தனிமனித வாழ்க்கையின் உணர்வுச்சிக்கல்கள் என மிகச்செறிவாக வளர்ந்து செல்வதை காண்கிறோம். மெல்ல விழித்தெழும் ஒரு சமூகத்தின் கதை இது. இரண்டு தலைமுறைகளின் சித்தரிப்பு. பர்த்தலோமி முதல் ஆரோன் வரையிலான ஒரு வாழ்க்கைப்பரிணாம

நாவலின் கதையை அல்லது முடிவை அல்லது சாரத்தை முன்னுரையில் சொல்லக்கூடாதென்று விதி உள்ளது. இந்த நாவலில் எவற்றை கவனம் கொள்ளவேண்டும் , எவற்றினூடாக இந்நாவலின் அகக்கட்டமைப்பைச் சென்றடையவேண்டும் என்று மட்டுமே இங்கே சொல்லியிருக்கிறேன்.

துறைவன் தமிழ் நாவல் உலகுக்கு ஒரு புதிய நல்வரவு. கிறிஸ்டோபர் தமிழில் தொடர்ந்து இயங்குவார் என்றும் தனக்குரிய இடத்தை நிறுவிக்கொள்வார் என்றும் நம்புகிறேன்.

எழுதப்போகிறவர்கள்

தென் தமிழக நெய்தல் படைப்பாளிகள் ஜஸ்டின் திவாகர்

சுனாமி பேரழிவின் குறிப்புகள்
ஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்கதமி

ஜோ டி குரூஸின் ஆழி சூழ் உலகு – கடலறிந்ததெல்லாம்

============================


கிறிஸ்டோபர் – கடலாழம் சிறுகதை

கடலாழம் கடிதங்கள் 1

கடலாழம் கடிதங்கள் 2

கடலாழம் கடிதங்கள் 3

முந்தைய கட்டுரைகிறிஸ்டோபர்
அடுத்த கட்டுரைதமிழ் ஹிந்து- பாராட்டுக்களும் கண்டனமும்