கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

சமீபத்தில் ஒளியின் நிழல் (poor translation) படித்தேன். ஆயிரம் சொன்னாலும் அந்த நாவல் சொல்லும் வகையில் என்னால் காந்தியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த நாவல் காந்தியின் மூத்த மகன் ஹரிலாலுக்கும் காந்திக்கும் நடந்த பனிப்போர் பற்றியது. காந்தியின் குடும்ப வாழ்க்கை பற்றி இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா?

Bala

அன்புள்ள பாலா

நீங்கள் ‘காந்தியின் பிள்ளைகள்’ என்ற கட்டுரையை வாசிக்கலாம். மூன்று பகுதிகளாக அமைந்த அக்கட்டுரையில் விரிவான சித்தரிப்பு உள்ளது. ஒளியின் நிழல் மிகச் சாதாரணமான ஒரு வம்புநாவல். தமிழில் இத்தகைய குப்பைகள் மட்டும் உடனடியாக வந்துசேர்ந்து விடுகின்றன

ஜெ

காந்தியின் பிள்ளைகள் – 1

காந்தியின் பிள்ளைகள் – 2

காந்தியின் பிள்ளைகள் – 3

அன்பு ஜெ

உங்களுடன் தொடர்பு கொள்வது இது இரண்டாவது முறை.இந்த தளத்தில் உள்ள கட்டுரையை வாசித்து பல தமிழ் சொற்களையும், சிந்திக்கவும் அறிந்தேன்.அப்படி வாசிக்கையில் மனதில் சில குழப்பங்களும் வந்து குவிந்தது. முதலில், சைவ சித்தாந்தமும், தத்துவ ரீதியான ஆன்மிகமும், சித்தர் வாழ்க்கை முறை தொடர்பான கட்டுரையை படிக்கும் போது உங்கள் சுய வாழ்க்கை பழக்கங்களுடன் ஒப்பிட நேர்ந்தது. ஒருமுறை உங்களின் கும்பமேளா அனுபவ பகிர்வு கடிதத்தில் நீங்கள் “சிக்கன்” சாப்பிட்டேன் என்று எழுதி இருந்தீர்கள்.மேலும் சமீப கடிதத்தில் ஒரு மிருகம் உணவு கிடைக்காமல் நடை தளர்ந்து இறந்து போனதை தொலைகாட்சியில் கண்டு மன வேதனை பட்டதை எழுதி இருந்தீர்கள். இதை என்னுள் அசை போடும் போது இளகிய மனமும்,அறிவார்ந்த ஆன்மீக சிந்தனையும் கொண்ட ஜெவால் எப்படி புலால் உண்ண முடிந்தது என்று எனக்குள் கேட்டது.

மனிதனை ஆராயாதே அவனின் மகத்துவத்தை ஆராய்ந்து பார் என்கிறீர்களா!! அல்லது ஆன்மீகத்துக்கும் புலால் உண்பதற்கும் தொடர்பு இல்லை என்கிறீர்களா!!. அப்படி இருப்பின் வள்ளலாருக்கும், வள்ளுவருக்கும் புலால் பற்றி நீங்கள் கூறும் விளக்கம் என்ன!

இது, உங்களின் அறிவார்ந்த பதிலை கொண்டு நான் தெளிவு பெறவே தவிர, குற்றம் கண்டு பிடிக்க அல்ல.

அன்புடன்
கோபால் ஜெ
ஓவியன், போட்ஸ்வனா, சவுத் ஆப்ரிக்கா

அன்புள்ள கோபால்

ஏற்கனவே இந்த இணையதளத்தில் இதைப்பற்றிய விரிவான விவாதம் நடந்துள்ளது. அவற்றை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன் [ http://www.jeyamohan.in/?p=6190 ]

சைவ உணவுப்பழக்கம் என்பது இந்தியாவில் மட்டுமே ஒரு நம்பிக்கையாக பிரபலமாக உள்ளது. பிறபகுதிகளில் உள்ள ஞானிகள் தத்துவ மேதைகள் அசைவம் உண்டவர்கள் அல்லவா என்ற வினாவுடன் உங்கள் சிந்தனையை ஆரம்பிக்கலாம்.சுவாமி விவேகானந்தரும் அசைவம் உண்டவரே. இந்தக் கேள்விக்கு சுவாமியும் பதில் அளித்துள்ளார்

இந்தியாவின் மாபெரும் மூலநூல்களை இயற்றியவர்கள் பலர் அசைவம் உண்ட ஷத்ரியர்களே ஆவர். அது அவர்களின் தர்மம். ராமன் அசைவம் உண்டதை வான்மீகி ராமாயணத்தில் காண்கிறோம். காரணம் அவன் ஷத்ரியன். சைவ உணவு சார்ந்த சிந்தனைகள் பௌத்தமும் சமணமும் உருவாக்கி அளித்தவை

உயிர்க்கொலை செய்து உண்பதை நான் சரி என வாதிடமாட்டேன், என் தனிப்பட்ட மனநிலை அதுவே. எனக்கு அது என் சுவைப் பழக்கம் மட்டுமே. ஆனால் உலகமெங்கும் அது ஓர் உணவுப் பழக்கமாக சாதாரணமாக ஏற்கப் பட்டுள்ளது.

ஜெ

முந்தைய கட்டுரைபட்டாம்பூச்சி கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்