இந்தியாவிலுள்ள பௌத்த, சமணத்தலங்கள் அனைத்தும் பெரும்பாலும் சிறப்பாகவே பேணப்படுகின்றன. அங்கு சுத்தமும் அழகும் தெரியும். முக்கியமான காரணம் பௌத்த சமணத்தலங்களில் பெருந்திரளாக மக்கள் வழிபடுவதில்லை என்பது. இன்னொன்று அவை மத்தியத் தொல்பொருள்துறையாலும் யுனெஸ்கோவாலும் பேணப்படுகின்றன
[போராப்புதூர் தூபி 1882ல் பழுபார்க்கப்படுகிறது]
இந்து ஆலயங்கள் பெரும்பாலும் அறநிலையத்துறை, மாநிலத் தொல்பொருட்துறை கையில் உள்ளன. ஆகவே இஷ்டத்துக்கு சூறையாடப்படுகின்றன. ஆலயங்களில் செய்யக்கூடாத சில உண்டு. திரும்பத்திரும்ப அதை எழுதிவருகிறேன்
1. அவற்றின் கட்டுமான அமைப்புக்கு அன்னியமான புறக்கட்டுமானங்களைச் செய்யக்கூடாது
2. செப்பனிடுவது என்றபேரில் வண்ணம் பூசுதல் போன்றவற்றைச் செய்யக்கூடாது
3 வழிபாட்டுக்காக அவற்றை மாற்றியமைக்கக் கூடாது
ஆனால் இந்து ஆலயங்கள் அனைத்திலும் இதுதான் நிகழ்கின்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆலயங்கள் சிதைக்கப்படுவதுபோல அனேகமாக உலகில் எங்கும் நிகழ்வதில்லை. நம் மகத்தான சிற்பங்கள் அடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்வதே ஐயத்திற்குரியது.
ஆனால் பொதுவாக தமிழ்மக்கள் இதைப்பற்றி அக்கறைப்படுவதில்லை. குறிப்பாக ஆலயவழிபாடு செய்பவர்கள். அவர்களுக்கு ஆலயம் என்பது ‘சாமி கும்பிடுவதற்கான’ இடம். சிலைகள் கல்பொம்மைகள். வணிக இடங்களாகவே ஆலயங்கள் தமிழகத்தில் பார்க்கப்படுகின்றன
இந்தியாவிலுள்ள சாஞ்சி, கயா போன்ற பௌத்த ஆலயங்களனைத்தும் நவீன காலகட்டத்தில் மறுபடியும் கட்டப்பட்டவை. குறிப்பாக சாஞ்சி மீட்டு எழுப்பப்பட்டது ஒரு அழகிய நிகழ்வு. சாஞ்சி எந்த செந்நிறக் கல்லில் கட்டப்பட்டதோ அதேகல் தேடிக்கொண்டுவரப்பட்டு இடிபாடுகளிலிருந்து மீட்டு எழுப்பப்பட்டது.
போராப்புதூரும் அப்படி மீட்கப்பட்ட பௌத்த ஆலயம்தான். போராப்புதூரில் சுற்றிவரும்போது சாஞ்சியை நினைத்துக்கொண்டிருந்தேன். அதற்குக் காரணம் அதன் சுழல்வட்டங்களில் சுவர்களில் உள்ள புடைப்புச்சிற்பங்கள். சாஞ்சியில் புடைப்புச்சிற்பங்கள் மிக அழகியவை. அன்றாடவாழ்க்கையின் காட்சிகள் நிறைந்தவை அவை. போராப்புதூர் சிற்பங்களிலும் புத்தரின் வரலாறும் அன்றைய வாழ்க்கைநிகழ்ச்சிகளும் கலந்து செதுக்கப்பட்டுள்ளன
இந்த சிற்பவெளியை எவரும் ஓரிருநாளில் முழுமையாக பார்த்து பதிவிடமுடியாது. பார்த்தபடியே செல்லும்போது அனிச்சையாக உள்ளத்தில் பதியும் சித்திரங்கள்தான் மிச்சம். மாயாதேவியின் கனவில் புத்தர் வெள்ளையானையாக வந்தது அனேகமாக அனைத்து பௌத்த ஆலயங்களிலும் உள்ள சிலை
அதேபோல நோய் மூப்பு மரணம் ஆகியவை மூன்று மானுடவடிவில் புத்தருக்குக் காட்சியளித்தமையும் புகழ்பெற்ற சிற்பம்தான். புத்தரைச் சந்திக்கவரும் மக்கள் கொண்டுவரும் காணிக்கைகளில் பலாப்பழம் இருக்கிறது. சாரிபுத்தருக்கும் புத்தருக்குமான விவாத அரங்கில் அவை பதற்றத்தில் இருவரையும் பார்க்கிறது
லும்பினி வனத்தில் புத்தர் அளித்த பேருரை. பிம்பிசாரனின் வேள்விமண்டபத்தில் பலியாகச் சென்ற ஆடுகளை மீட்டல் என அறிந்த நிகழ்ச்சிகள் அழகிய சிற்பங்களாக வந்தபடியே இருந்தன
அத்துடன் நுணுக்கமான பல தகவல்கள். மீண்டும் மீண்டும் வரும் தேர்கள் அனைத்திலும் அடியில் அதிர்வுதாங்கிகளான வில் அமைப்பு இருக்கிறது. மரக்கலங்களில் மாலுமிகள் கடலோடும் சிலையில் மரக்கலம் பாய்களுடன் துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ளது. பாய்களை திருப்பும் வடங்கள் கூட தெளிவாக உள்ளன.
அக்காலத்தில் இங்கு நிறையவே யானைகள் இருந்திருக்கவேண்டும். யானைகளின் உடல்மொழி அழகாக வந்திருக்கிறது. தியான புத்தரின் சிலைகளில் உள்ள கைமுத்திரைகளில் இந்தியாவிலுள்ள தர்ம அறம் அறிவிறுத்தல் முத்திரை, மண் தொடுகை முத்திரை அறவாழி சுழற்றும் முத்திரை போன்றவை உள்ளன. பல புதிய முத்திரைகளும் காணப்படுகின்றன
ஜாவாவை ஆண்ட ஸ்ரீவிஜன அரசின் சைலேந்திர வம்சத்தின் அரசர்களால் ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தோனேசிய பௌத்தக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டது இது. இந்திய, தாய்லாந்து, பர்மிய கட்டிடக்கலையின் கலவை இந்தப்பாணி.
ஜாவாவில் இந்தியாவின் ஆதிக்கம் கிறிஸ்துவுக்கு முன்னரே இருந்துள்ளது என்றாலும் கிபி ஐந்தாம் நூற்றாண்டுவாக்கில் குப்தர் காலத்தில்தான் அது வலுப்பெற்றது. குப்தர்காலத்தில்தான் இந்து மதமும் இந்து கட்டிடக்கலையும் இங்கே வலுவாக வேரூன்றின. அந்தச்செல்வாக்கை இந்த தூபியிலும் காணலாம்.
இந்த தூபியின் அடியிலுள்ள வட்டங்கள் பௌத்தத்தின் கொள்கைப்படி திருஷ்ணை [உலகாசை] யினால் ஆன உலகை காட்டுகின்றன. அதற்கடுத்தவை மேலே உள்ல வியனுலகை காட்டுகின்றன. கடைசியில் சூனிய உலகும் அதன் உச்சியில் மகாதர்மமான பெருந்தூபியும் உள்ளது
ஜாவாவின் இந்து பௌத்தப் பண்பாடுகள் அழிந்து பதினான்காம் நூற்றாண்டில் இந்து இஸ்லாமியமயமானபோது போராப்புதூர் முழுமையாகக் கைவிடப்பட்டது. மறக்கப்பட்டது. இந்தத் தீவை ஆண்ட போர்ச்சுக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் இதைப்பொருட்படுத்தவில்லை. காலின் மக்கின்ஸியின் கடும் முயற்சியால் இது உலகளாவத் தெரியத்தொடங்கியது.
1975 முதல் 1982 வரை இந்தத் தூபியை இடிபாடுகளிலிருந்து மீட்டு மீண்டும் கட்டி எழுப்பும் பணி நடைபெற்றது. நடுவே எரிமலைத்தாக்குதல் நடந்தாலும் மீண்டும் 2006 முதல் செம்மையாக்கப்பணிகள் நடைபெற்று முழுமையாகியிருக்கின்றன. இந்தோனேசியாவின் முதன்மையான சுற்றுலாத்தலம் இதுவே
போராப்புதூர் என்னும் பெயர் கீழைநாடுகளுக்கான பிரிட்டிஷ் ஆட்சியாளர் சர் தாமஸ் ராஃபிள்ஸால் அவரது ஜாவா வரலாற்று நூலில் சொல்லப்படுகிறது. இப்பெயர் எப்படி உருவானது என்று தெரியவில்லை. புதூர் என்னும் சொல் இவ்வாலயத்தைக் குறிக்க கையாளப்படுகிறது. கண்டி என்பது பொதுவாக ஆலயங்களைச் சுட்டும் இந்தோனேசியச் சொல். புதூர் என்பது தமிழ்ச்சொல்லின் மருவு ஆக இருக்கலாம்
ஜாவா மொழியிலுள்ள பழமையான பௌத்த சுவடியான ம்பு பிரபஞ்சா என்னும் பிக்கு எழுதிய பயணக்குறிப்பில் இந்த ஊர் புதூர் என்று குறிப்பிடப்படுகிறது. நாகரக்ரீடாகமா என்று இங்கிருந்த பௌத்த மையம் சொல்லப்படுகிறது. 1365 ஆம் ஆண்டு எழுதப்பட்டது இது.
இந்த பௌத்த நிலையத்தை கட்டியபோது ஸ்ரீவிஜயப்பேரரசை ஆண்ட மன்னர்கள் பௌத்தர்களாக இருக்கவில்லை. பௌத்தமதமும் இந்துமதமும் இணையாக ஒரேசமயம் பின்பற்றப்பட்டன என்று நம்ப இடமிருக்கிறது. கல்வெட்டாதாரங்களின் படி ஒரே அரசால் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் பரம்பனான் இந்து ஆலயங்களும் இந்த பௌத்த தூபியும் கட்டப்பட்டன.
இதைக்கட்டிமுடிக்க 75 ஆண்டுகளாகியிருக்கின்றன. மேலைநாட்டு அறிஞர்கள் எப்படி இந்து அரசன் பௌத்த ஆலயத்தைக் கட்டமுடியும் என்னும் குழப்பம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்தியாவிலும் ஒரே அரசர்கள் இந்து பௌத்த சமணத்தலங்களைக் கட்டியிருப்பதைக் காணலாம். அதை வெள்ளையர்களின் மதநோக்கு புரிந்துகொள்ள மறுக்கிறது.
போராப்புதூர் பலநூற்றாண்டுக்காலம் எரிமலைச்சாம்பலிலும் புதர்க்காடுகளிலும் புதைந்து மறைந்து கிடந்தது. இந்த இடத்தைப்பற்றிய அச்சமூட்டும் கதைகள் ஜாவா மக்களின் பழங்குடிநம்பிக்கைகளுக்குள் உருவாகின. இங்குள்ள தீயசக்திகளால் பாதிக்கப்பட்ட அரசர்களைப்பற்றிய கதைகள் ஏராளமாக உள்ளன
ராஃபிள்ஸ் இப்படி ஒரு புராதன கட்டுமானம் புதையுண்டிருப்பதைப்பற்றி கேட்டறிந்தார். 1814ல் அவர் இதை தேடிக்கண்டுபிடிக்கும்படி டச்சு பொறியாளரான எச்.சி கார்னியலிஸுக்கு ஆணையிட்டார். அவர் இருநூறு ஊழியர்களுடன் வந்து காட்டை வெட்டி புதர்களை எரித்து எரிமலைச்சாம்பலை அகற்றி இந்த தூபியை மீட்டெடுத்தார்.
அதைச்சீரமைப்பதற்கான செல்வத்தை ராஃபிள்ஸ் பிரிட்டிஷ் அரசின் சார்பில் அளித்தார். அவ்வாறுதான் போராப்புதூர் உலகின் கண்ணுக்கு வந்தது. 1835ல் ஹார்ட்மான் என்பவர் மேலும் முயற்சி எடுத்துக்கொள்ள போராப்புதூர் முழுமையாக மீட்கப்பட்டது. மையத்தூபிக்குள் ஹார்ட்மான் ஆய்வுசெய்தார். அவர் அங்கிருந்து எடுத்தவை என்ன என்பது இன்றும் மர்மமாகவே உள்ளது. இன்று உள்ளே ஒன்றுமில்லை.
வெயில் எழத்தொடங்கியபோது திரும்பி வந்தோம். விடுதியில் எங்களுக்கு டீயும் அரிசிக்கேக்கும் சாப்பிடத்தந்தார்கள். காலையில் எழுந்த பசி, களைப்பு. அத்துடன் மனம் ஒருவகையாக நிறைந்து சலிப்பும் சோர்வுமான ஒரு கனவுநிலை.
திரும்பி யோக்யகர்த்தா வரும் வழியில் ஓர் உணவகத்தில் காலையுணவு சாப்பிட்டோம். காலையுணவுக்கே சைவம் கிடைப்பது கடினம். நான் நேராகவே பொரித்தமீனும் கோழியும் வெறும்சோறும் சாப்பிட்டேன். ராஜமாணிக்கம் துயரத்துடன் வெறும்சோறு சாப்பிட்டு ‘நல்லாத்தான் இருக்கு அண்ணா’ என்றார்
அருகே இருந்த மெண்டுட் என்னும் புத்தர் ஆலயத்தைப் பார்க்கச்சென்றோம்.ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம் உயரமான அடித்தளம் மீது ஒற்றைக்கோபுரத்தைச் சூடி நிற்கும் கல்கட்டுமானம்.
கல்வெட்டு ஆதாரங்களின்படி இது சைலேந்திர வம்சத்து அரசரான இந்திரரால் கிபி 824ல் கட்டப்பட்டது. அப்போது இதற்கு வேணுவனம் என்ற பெயர் இருந்திருக்கிறது. வேணு என்றால் மூங்கில். [திருநெல்வேலியின் புராணப்பெயர் வேணுவனம்]
பிரம்மாண்டமான கோயில் .86 அடி உயரமான கோபுரம் பத்தடி உயரமான அடித்தளம் மீது அமைந்துள்ளது.வடமேற்காக வாயில். படிகளை ஏறிச்சென்றால் பெரிய கருவறைக்குள் பத்தடி உயரமான பீடத்தின்மேல் தர்மசக்கரத்தை உருட்டியபடி பத்தடி உயரமான புத்தரின் சிலை அமர்ந்திருக்கிறது. வைரோசன புத்தர். பவமறுத்தருளி என்று தமிழ்.
இருபக்கமும் மின்சூடி என்னும் வஜ்ரபாணி போதிசத்வரும் அவ்வண்ணமேவந்தவர் என்னும் பொருள்படும் அவலோகிதேஸ்வரும் அமர்ந்திருக்கிறார்கள். அவலோகிதேஸ்வரர் சொல்லையும் வஜ்ரபாணி செயலையும் வெல்ல உதவுபவர்கள் என்பது பௌத்த நம்பிக்கை.
கோயிலின் மேலே உள்ள சுற்றுப்பிரகாரத்தில் போதிசத்வர்களின் சிலைகள் சுவர்ப்புடைப்புகளாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. போதிசத்வ மைத்ரேயரின் சிலை ஜாவாவுக்கே உரிய தனித்துவம் கொண்டது. குழந்தைகளைக் காக்கும் தேவியான ஹரிதி என்னும் பௌத்தப்பெண் தெய்வத்தின் சிலை சுற்றுச்சுவரில் உள்ளது. இது ஜாவாவின் பௌத்த மரபில் முக்கியமான சிலை.
அருகே இருந்த புதிய பௌத்த மடாலயத்திற்குள் சென்றோம். சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்கும் இடம்தான். நுழைவாயிலின் இருபக்கமும் இரு கட்டிடங்களுக்குள் புத்தர்சிலைகள் இருந்தன. தாய்லாந்து கம்போடியா பர்மா பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தர்சிலைகள்.
பொன்னிறமான தியானபுத்தர்கள். படுத்தநிலையில் சயனபுத்தர்கள். சிறிய புத்தர் கோயில்கள் நான்கு இருந்தன. ஒவ்வொன்றிலும் கருங்கல்லிலும் வெண்கலத்திலுமான புத்தர்சிலைகள். காந்தாரத்தின் புகழ்பெற்ற பட்டினிபுத்தர் சிலையின் அதேயளவிலான கல்நகல் அங்கே இருந்தது
பார்த்தபடியே சென்றேன். ஓர் அறையில் பிக்குகள் உணவுண்டுகொண்டிருந்தனர். அப்பால் ஒரு சதுக்கத்தில் நின்றகோலத்தில் பெரிய புத்தர்சிலை. உண்மையில் நடந்தகோலம் என்று சொல்லவேண்டும். வட்டமான ஒரு மேடைமேல் தியானபுத்தர். அமைதியான தூய சூழல்.
நூலகம் ஒன்று கண்ணில்பட்டது. உள்ளே சென்று நூல்களைப்பார்த்தேன். தீக்கநியாயம் என்று வாசித்து எடுத்துப்பார்த்தேன். ஆங்கில எழுத்துக்கள், இந்தோனேசிய மொழி. எல்லா முக்கியமான பௌத்த நூல்களுக்கும் மொழியாக்கங்கள் இருந்தன
நூல்களைப்பார்த்துக்கொண்டிருந்தபோது பிக்குகள் கடந்துசென்றனர். ஒரு பிக்கு என்னிடம் ‘எந்த ஊர்?’ என்றார். “இந்தியா” என்றேன். “இவை எல்லாம் இந்தோனேசியமொழி நூல்கள்” என்றார். “ஆம் பார்த்தேன், அனைத்து நூல்களுக்கும் மொழியாக்கங்கள் உள்ளன” என்றார். “ஆம் எங்களுக்கு சர்வதேச பௌத்தப் பல்கலைகளுடன் தொடர்ச்சியான உரையாடல் உள்ளது” என்றார்.
”பௌத்தம் பற்றிய ஆர்வம் உண்டா?” என்றார். “ஆம், நான் பௌத்தத்தைக் கற்றுவருகிறேன்” என்றேன். பேச்சு தொடங்கியது. நித்யசைதன்ய யதியின் மாணவரும் இன்றைய குருகுலத்தலைவருமான முனி நாராயணப்பிரசாத் இலங்கையில் பௌத்த தத்துவ இயலில் ஆசிரியராக இருந்திருக்கிறார். அவரை பிக்கு தெரிந்துவைத்திருந்தார். அது எங்களை அருகருகே கொண்டு சென்றது.
பிக்கு இந்தியாவுக்கு பன்னிரண்டு முறை வந்திருக்கிறார். ஆனால் தென்னிந்தியாவில் பௌத்தத்தலங்கள் இருப்பதே தெரியவில்லை. நான் தென்னிந்தியாவில் உள்ள முதன்மையான தலங்களைப்பற்றிச் சொன்னேன். அமராவதி வரை புத்தர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவருக்கு வியப்பூட்டியது.
பௌத்தத்தின் யோகாசார மரபே தென்னகத்தின் சிருஷ்டி என்றேன் . நாகர்ஜுனர் தென்னகத்தவர். திக்நாகர், தர்மகீர்த்தி, தர்மபாலர் என அவரது வழிவந்தவர்கள் அனைவருமே காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். அவர் காஞ்சியை அறிந்திருந்தார். ஜாவாவில் பௌத்தத்தை பரப்பியவர் எனக் கருதப்படும் போதிதர்மர் காஞ்சியிலிருந்து வந்தவர்.
சமீபத்தில் அமெரிக்காவில் ராஜன் சோமசுந்தரத்தின் இல்லத்தில் தங்கியிருந்தபோது டியூக் பல்கலைகழகத்தில் பௌத்தத்தில் ஆய்வுசெய்யும் பேராசிரியர்களைச் சந்தித்ததைப்பற்றிச் சொன்னேன். மேலைநாட்டினர் பௌத்தத்தை ஆராயும்போது அதன் ஐந்து மையமுரண்களை புரிந்துகொள்ளத் தடுமாறுவார்கள் என்றேன்.
அவர் சிரித்து மாதம் ஒருமுறை அந்தச் சிக்கலை நாங்கள் சந்திக்கிறோம் என்றார். அவருக்கு நான் மணிமேகலை பற்றிச் சொன்னேன். உலக அளவில் பௌத்தத்திற்கு என ஒரு காவியம் மட்டுமே உள்ளது, அது தமிழில் உள்ளது. அதன் நாயகி ஒரு பெண், கணிகையும்கூட.
ஒவ்வொன்றும் அவருக்கு திகைப்பூட்டும் புதியசெய்திகளாக இருந்தன. அங்கே பிக்குகளுக்கு மறுநாள் கழித்து ஓர் உரையாற்றமுடியுமா என்று கேட்டார். நான் திரும்பவிருப்பதாகச் சொன்னேன். இந்தியாவரும்போது அவர் விரும்பினால் தென்னகப்பயணத்தை நான் ஒருங்கிணைத்து தருவதாகச் சொல்லி மின்னஞ்சலை அளித்தேன்.
நான் பேசிக்கொண்டிருந்தபோது சூழலை மறந்துவிட்டேன். ஒருமணிநேரம் என்னை அங்கே தேடி கடைசியில் சரவணன் கண்டுபிடித்தார். போராப்புதூர் முதல் ஒரு சமகால பிக்கு வரை இன்றையநாள் ஒரு பௌத்த அனுபவம் என நினைத்துக்கொண்டேன்.