இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 8

விடுதியிலிருந்து காலை மூன்றரை மணிக்கே கிளம்பவேண்டும் என்று சரவணன் சொல்லியிருந்தார். போராபுதூர் பௌத்தப்பேராலயத்தைச் சென்று பார்ப்பதாகத் திட்டம். நான் வெண்முரசு எழுதி வலையேற்றி முடிக்க பத்தரை ஆகிவிட்டது.

காலையில் அந்த எச்சரிக்கையே விழிப்பைக்கொண்டு வந்தது. இரண்டரை மணிக்கு சரவணன் வந்து கூப்பிட்டார். மணி இரண்டரை என்று அருண்மொழி சொல்ல ‘மன்னிக்கவும், நான் சிங்கப்பூர் நேரத்துக்கு எழுப்பிவிட்டேன்” என்றார்


வேறேதும் செய்வதற்கில்லை. அருண்மொழி குளித்துக்கிளம்பத் தொடங்கினாள். நான் தூங்கவே இல்லை என்று தோன்றியது. கனவில் இடிபாடுகள் நடுவே அலைந்துகொண்டிருந்தேன். சம்பந்தமே இல்லாமல் கறுப்பினத்து மக்களை கண்டேன். ஒட்டங்களைக் கண்டேன்

முன்தினம் குளித்திருந்தமையால் நான் குளிக்கவில்லை. டியோடரண்டை கண்டுபிடித்தவனுக்கு நாமெல்லாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். ஓட்டுநர் சரியாக வந்து காத்து நின்றிருந்தார். நேரத்துக்கு வந்த ஓர் ஓட்டுநரை நான் இந்தியாவில் இதுவரை பார்த்ததில்லை, சினிமாவுக்கு வெளியே


இந்தோனேசியா பக்கவாட்டில் நீண்ட நாடு என்பதனால் நாட்டின் மையக்கோட்டு நேரத்திலிருந்து ஜாவா நேரம் கொஞ்சம் பிந்தையது. எனவே இங்கே ஐந்து மணிக்கே சூரியன் எழுந்துவிடும். விடியற்காலை என்பதனால் மெல்லிய குளிர் . ஆளில்லாத சாலையில் டொயோட்டோ வண்டி ஓசையின்றி சென்றது

போராப்புதூர் சாலையில் அரைத்தூக்கத்தில் சென்றுகொண்டிருக்கும்போது ஒரு கனவு. ஒரு சிலை என்னை நோக்கி ஏதோ பேசமுயல்வதுபோல. விழித்துக்கொண்டபோது அது வருணன் என்று தெரிந்தது. கையில் தண்ணீர்பாம்புடன். பரம்பனான் ஆலயச்சிலை. அத்தனை சிலைகளில் அது மட்டும் ஏன் நினைவில் தங்கியது என்று தெரியவில்லை

இந்தோனேசியா பொருளியல்நெருக்கடியில் உள்ள நாடு. நாம் வளரும்நாடு. ஆனால் நம்மூரில் இதைப்போன்ற சாலைகளை டெல்லியில்கூட காணமுடியாது. சீரான சாலைகள். நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட சுத்தமான சாலையோரங்கள்

உண்மையில் ஆப்ரிக்கா உட்பட எந்த நாட்டிலும் நான் மிகமோசமான சாலைகளை, குப்பைமலைகளை, சாலைக்கட்டுப்பாடும், தூய்மையுணர்வும் இல்லாத மக்களை நான் கண்டதில்லை. ஒருதேசமாக எவ்வகையிலும் நாம் எந்த நாட்டினர் கண்களுக்கும் கௌரவத்திற்குரியவர்கள் அல்ல என்பதே உண்மை.

போராப்புதூர் பௌத்த ஆலயம் அரசுக்குச்சொந்தமான பெரிய நட்சத்திரவிடுதி ஒன்றின் வளாகத்திற்குள் உள்ளது. அங்கே காரை நிறுத்திவிட்டு கட்டணச்சீட்டு வாங்கிக்கொண்டு உள்ளே அமைக்கப்பட்டிருந்த பூங்கா வழியாகச் செல்லவேண்டும்

காலையிருள் நிறைந்திருந்தது. வெள்ளையர் கூட்டம்கூட்டமாகச் சென்றுகொண்டிருந்தனர். வானில் விண்மீன்கள் தெரிந்தன. தொலைவில் ஒரு பெரிய வரவேற்பு வளைவு போல ஏதோ வானில் எழுந்து தெரிந்தது. சுற்றுலாப்பயணிகளுக்கான ஏதோ கட்டுமானம் என்ற எண்ணமே எனக்கு முதலில் வந்தது

அருகே சென்றபின்னர்தான் அது போராபுதூர் ஆலயவளாகம் என்று தெரிந்தது. இந்தியாவில் எங்குமில்லாத அபூர்வமான ஒரு கட்டுமானம் இது.

உண்மையில் இது ஒரு நடுத்தர உயரமுள்ள குன்று. அந்தக்குன்றை உள்ளேவைத்து கற்களை அடுக்கி அடிவாரத்திலிருந்தே பல நிலைகளாக ஒரு பெரிய ஸ்தூபியை உருவாக்கி எழுப்பியிருக்கிறார்கள்.

இந்து தாந்த்ரீக மரபில் ஸ்ரீசக்கரம் இந்த பிரபஞ்சத்தின் சுழற்சியைக் குறிக்கும் சித்திரம். அதை முப்பரிமாணமாக அமைத்தால் அது மேரு. மேருவுக்கு நிகரான பௌத்தர்களின் அமைப்பு மண்டலம் எனப்படுகிறது. போராப்புதூர் தூபி அந்த அமைப்பில் உருவானது. பல வட்டங்களாக மேலெழுந்து செல்லும் வட்டக்கூம்பு வடிவம்

போராபுதூர் ஏழாம் நூற்றாண்டுமுதலே வழிபாட்டிடமாக இருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் இந்த தூபி கட்டிமுடிக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர் ஊகிக்கிறார்கள். மகாயான பௌத்த மரபைச் சேர்ந்தது இது. ஆனால் இங்குள்ள தேரவாத பௌத்தர்களுக்கும் இது முக்கியமான இடம்.

இந்த ஸ்தூபிதான் உலகிலேயே பெரிய பௌத்தக் கட்டுமானம். ஒன்பது அடுக்குகள் கொண்டது இதன் அடித்தளம். ஒவ்வொன்றும் பன்னிரு அடி உயரம். ஒவ்வொரு அடுக்கும் குன்றைச் சுற்றி வருபவை. அவற்றின் நான்கு பக்கமும் மேலே செல்லும் படிக்கட்டுகள்.


அவற்றுக்கு மேல் ஆறு அடுக்குகளாக சிற்பங்கள் செறிந்த பிரகாரங்கள் போன்ற சுற்றுப்பாதைகள். அவற்றுக்குமேல் மூன்று பெரிய வளைவுநிலைகள். அவற்றில் சிறிய கல்தூபிகள் செறிந்துள்ளன. இங்கே ஐநூறுக்கும் மேல் புத்தர்சிலைகளும் சிறிய தூபிகளும் உள்ளன

கடைசி வட்டத்தில் சராசரியாக 18 அடி உயரமுள்ள 72 தூபிகள் வட்டமாக அமைந்திருந்தன. அவற்றுக்கு நடுவே கவிழ்ந்த வட்டமான பெரிய தூபி. அதன் உச்சி நம்மூர் தூபிகள் போல குடை அல்லது தாமரை வடிவுடன் இல்லாமல் கூர்மையாக மலரின் புல்லிவட்டம் போல நீட்டி நின்றது


நாங்கள் மேலேறிச்சென்றபோது நல்ல இருட்டு. தூபியின் வட்டவிளிம்புகளில் சுற்றுலாப்பயணிகள் நிறைந்து நின்றனர். அப்பால் எரிமலை அடுக்குகள் இருளுக்குள் நிழல்கோடுகளாகத் தெரிந்தன. வானம் கண்ணொளியால் மட்டுமே தன்னைக் காட்டுவதாக இருந்தது. குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது

மெல்ல விடியத்தொடங்கியது. இருளின் திரை மேலே தூக்கப்பட்டபோது எங்களைச்சுற்றி நாங்களறியாத தொல்பழங்காலம் ஒன்று துலங்கிவந்தது. மழையால் அரிக்கப்பட்ட நிலக்கரிக்குழம்புப்பாறையால் ஆன நூற்றுக்கணக்கான தூபிகள் சூழ்ந்திருந்தன. ஒவ்வொன்றும் ஒரு கல்மொட்டு. உச்சியில் கல்ல்லால் ஆன புல்லி.

எரிமலைகள் வெண்முகில்சூடியிருந்தன. அவற்றுக்கு அப்பால் தெரிந்த சூரியன் கலங்கியநீருக்குள் என செங்குழம்பாகத் தெரிந்தது. மெல்ல அது வட்டமாக மேலெ எழுந்தது. எரிமலைகள் செங்குத்தான கூம்புகளாக எழுந்து ஒன்றன் மேல் ஒன்றென அடுக்கப்பட்டிருந்தன. அவை வானிலிருந்து புடைத்து வந்துகொண்டிருந்தன.

ஒளிவந்தபின்னர்தான் அந்த தூபிகளை சரியாகப்பார்த்தேன்.சீராக வெட்டப்பட்ட கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட பெரிய தூபிகளுக்கு உள்ளே நோக்குவதற்கு முக்கோணவடிவமான சாளரங்கள் உள்ளன. ஒவ்வொரு தூபிக்குள்ளும் ஒரு ஆறடி உயரமான புத்தர்சிலை ஊழ்கத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டேன்.

புற்றுக்குள் வான்மீகி தவம்செய்வதுபோல என்று தோன்றியது. இப்படி ஒரு அமைப்பை எங்கும் கண்டதில்லை. கற்பனைகூட செய்ததில்லை. சில இடங்களில் உடைந்த தூபிக்குள் இருந்து புத்தர்சிலையின் பாதி வெளியே தெரிந்தது. அற்புதமான சிலைகள். தன்னுள் ஆழ்ந்த அமைதி நிறைந்த முகம்.


ஆனால் அச்சிலைகளை துளைகளினூடாகவே காணமுடியும் என்பது ஒரு விந்தையாகவே மனதில் இருந்துகொண்டிருந்தது. துளைகளின் வழியாகப்பார்த்தபோது வெளிச்சத்திட்டுகள் விழுந்த புத்தர் நம் நோக்குக்கு அப்பாலிருப்பதுபோல நம்முள் புதைந்திருப்பதுபோல கனவு எழுந்தது.


போராப்புதூரின் காலை நினைவுகளை ஒன்றிலிருந்து ஒன்றாகத் தொட்டெழுப்பியது. முதன்முறையாக 1985ல் சாஞ்சி தூபியை காணச்சென்றது. தன்னந்தனியனாக. நிலைகொள்ளாத உள்ளம் கொண்டவனாக. அன்று பகல் முழுக்க அதனருகிலேயே சுற்றிவந்தேன்

தூபிகளுக்கு ஒரு மாயம் உண்டு. தொலைவில் அவை மிகச்சிறியவை என்று தோன்றும். சாஞ்சி தூபி முதலில் கண்ணில்படும்போது சிறிய கொட்டாங்கச்சி கவிழ்த்தப்பட்டது என்றே நினைப்போம். அருகே செல்லச்செல்லத்தான் அதன் பேருருவம் நம்மை சூழ்ந்துகொள்ளும்

பின்னர் புத்த கயா. அஜந்தா எல்லோராவின் குடைவரைகள். கார்லேயின் பாறைக்குடைவு விகாரம். ஃபாஜா ஃபானா குகைகள். உண்டவில்லி குடைவு சைத்யங்கள். சாரநாத் தூபி. குஷிநகரின் படுத்த புத்தர்

சென்ற இருபத்தைந்தாண்டுகளாக பௌத்த தலங்கள் தோறும் சென்றுகொண்டிருக்கிறேன். ஒவ்வொன்றிலும் காலை ஓர் அனுபவமாக அமைந்திருக்கிறது. பெரும்பாலான பயணங்களில் நண்பர் கிருஷ்ணன் உடனிருந்திருக்கிறார். அவரை அங்கே நின்று நினைத்துக்கொண்டேன்

படங்கள் மேலும்

பௌத்தம் என்பது சாராம்சத்தில் என்ன? தூய அறிதல்நிலை என்பதே தியானநிலையாக ஆவதுதான். அதில் உணர்வெழுச்சிகள் பரவசநிலைகளுக்கு இடமில்லை. அறிதலின் முழுமைநிலை. அள்ளி அள்ளி நிறைந்து ஓசையற்றதாக ஆகும் குடத்தின் நிறைவு. அதையே பௌத்தம் விடுதலை என்கிறது.

அத்வைதமும் அதைத்தான் சொல்கிறது. ஆனால் எங்கும் அத்வைதம் அந்நிலையில் இல்லை. ஒருபக்கம் சடங்குகளாக மறுபக்கம் பக்திப்பரவசமாக அது திரிக்கப்பட்டபடியே உள்ளது. பௌத்தமும் அனைத்துவகையான திரிபுகளையும் அடைந்ததுதான். ஆயினும் அதன் அறிவார்ந்த தன்மை மாசுபடாமல் அதன் மையத்தில் இருந்துகொண்டே இருக்கிறது

IMG_2192

போராப்புதூரின் இந்தக்காலை ஓர் அரிய வாழ்வனுபவம். சில சமயம் சில அனுபவங்கள் இனி இவை திரும்புவதில்லை என்னும் எண்ணத்தை அளித்து ஆலிலைமேல் காற்றென அதிரச்செய்வதுண்டு. இன்று அத்தகைய நாள்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 62
அடுத்த கட்டுரைதமிழ் ஹிந்து செய்தி – கடிதங்கள்