1984ல் நான் முதல்முறையாக ஹம்பி சென்றேன். அன்றெல்லாம் அது ஒரு சுற்றுலாத்தலமாக அறியப்படவில்லை. மிகக்குறைவான பயணிகளே வந்தனர். கர்நாடகமாநிலத்தவர் அறவே வருவதில்லை. ஹோஸ்பெட்டில் மட்டுமே தங்கும்விடுதிகள் இருந்தன. மத்தியத் தொல்பொருள்துறை அந்த இடிந்த தொல்நகரை கட்டி எழுப்பிக்கொண்டிருந்தது.
எனக்கு ஒரு பெரிய கொடுங்கனவாக இருந்தது இடிந்த ஹம்பியின்வழியாக நடந்துசெல்வது. நூற்றுக்கணக்கான ஆலயங்கள் இடிந்துகிடந்தன. கல் மண்டபங்கள் கண்ணெட்டியதொலைவு வரை சிதறிக்கிடந்தன. வெயில் விரிந்து கிடந்த அக்கல்வெளியில் நெருஞ்சி அடர்ந்திருந்தது. சிறுபறவைகள் எழுந்து பறந்தமைந்தன.
[ஹம்பி]
நாம் காட்சிகள் அனைத்துமே உள்ளத்திற்குள் படிமங்களாகின்றன. அந்த இடிபாடுகள் எனக்கு இந்தியா என்று தோன்றியது. சென்றகாலத்தின் இடிபாடுகளில் வாழவிதிக்கப்பட்டவர்கள் நாம். நாம் அறியும் வரலாறு என்பது சிதறிக்கிடக்கும் கையுடைந்த காலுடைந்த தலையற்ற சிற்பங்கள், சிதைந்த சித்திரக்கற்கள். பொறுக்கி சேர்த்து அடுக்கி நாம் எழுப்பிக்கொள்கிறோம்
ஹம்பியின் காட்சிகளின் செல்வாக்கே விஷ்ணுபுரமாக அமைந்தது. கொற்றவையில் இன்று வெண்முரசில் ஹம்பி எவ்வகையிலோ இருந்துகொண்டிருக்கிறது. அதிலிருந்து நான் தப்பமுடியாது. பின்னர் 1888ல் கொனார்க் சென்றபோது மீண்டும் அந்த கனவுக்குள் சென்றேன்.
அதன் பின் மீண்டும் மீண்டும் அங்கே சென்றுகொண்டே இருக்கிறேன். சமீபத்தில் காஷ்மீரின் இடிந்து சரிந்த ஆலயங்களில் கைவிடப்பட்ட மார்த்தாண்ட் ஆலயத்தின் பெரிய சிதறல்வெளியில் அக்கனவை உக்கிரமாக மீண்டும் அடைந்தேன்
பரம்பனான் ஆலய வளாகம் மீண்டும் அக்கனவை என்னுள் நிறைத்தது. எங்குபார்த்தாலும் இடிந்த கற்குவியல்கள். ஒழிந்த கருவறைகளுடன் நிற்கும் ஆலயங்கள். சிதைந்த சிற்பங்களின் மௌன மொழி. ஆழ்ந்த பதைப்பும் தனிமையும் கொண்டு அவ்வளாகத்தில் சுற்றிவந்தேன்.
நெடுங்காலமாக இந்த ஆலயப்பகுதி இடிபாடுகளின் வெளியாகவே இருந்திருக்கிறது. மக்கள் இஸ்லாமியர்களாக மாறியதனால் இதைப்பற்றிய அனைத்து நினைவுகளும் மறைந்தன. ஆனால் கண்ணெதிரே தெரிந்த கல்வெளி அவர்களின் கற்பனைகளைத் தூண்ட ஒரு கதை எழுந்து வந்தது
மைய சிவன் கோயிலின் தெற்குபக்கம் இருக்கும் மகிஷாசுர மர்த்தனியின் சிலையை உள்ளூர் மக்கள் வேறுவகையில் கதையாக்கியிருக்கிறார்கள். ஜொங்ராங் இனக்குழுவின் கதைகளின் படி பான்டுங் பந்தோவாசோ என்னும் இளவரசன் ரோரா ஜொங்ராங் என்ற பழங்குடி அரசகுலத்துப் பெண்ணைக் காதலித்தான். அவள் தந்தை போகோவை கொன்று அவர்களின் மண்ணை எடுத்துக்கொண்டவன் அந்த இளவரசன் என்பதனால் அவள் அந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை
ஆனால் பேரரசனாகிய பாண்டுங்கின் வற்புறுத்தல்தாளாமல் அவள் அவனிடம் ஒரே இரவில் ஆயிரம் கோயில்களை கட்டித்தரவேண்டும் என்றாள். அவன் அதை ஏற்று மந்திரத்தால் பூதங்களை வரவழைத்து கோயில்களைக் கட்டத்தொடங்கினான். 999 கோவில்கள் கட்டி முடிக்கப்பட்டன. கடைசிக்கோயில் கட்டப்படும்போது திருமண ஏற்பாடுகள் ஆரம்பமாயின
அதற்காக ஆயிரம் நெய்ப்பந்தங்களை ஏற்றினர். அந்த ஒளியை புலரிச்செம்மை என நினைத்து ஒரு கோழி கூவியது. அதைக்கேட்டு விடிந்துவிட்டது என நினைத்து பூதங்கள் அப்படியே கோயிலை விட்டுவிட்டுச் சென்றுவிட்டன.
முடிவடையாத கோயில்கள் அங்கே நின்று காலத்தால் இடிந்தன. அங்கே பூதங்கள் ஒவ்வொரு நாளும் இரவில் வந்து பார்த்துவிட்டுச்செல்கின்றன. கல்லாக கோயில்களின் அருகே விழுந்து கிடக்கும் பூதங்கள் இரவில் உயிர்கொள்கின்றன
இப்பகுதியில் இருக்கும் சேவூ ஆலய வளாகம் அந்த ஆயிரம்கோயில்களால் ஆனது எனப்படுகிறது. அங்கு 240 கோயில்கள் இடிந்த நிலையில் இன்று உள்ளன. அவை புத்தர்கோயில்கள்.
மனமுடைந்த இளவரசன் ரோரோவை கல்லாகப்போகும்படி சாபமிட்டான். அதுதான் துர்க்கையின் சிலை. அவள் விருந்துக்காக வெட்டும் எருமைதான் அது. அவளுடைய தோற்றமும் அதற்கேற்ப இந்தோனேசியச் சாயலுடன் இருக்கிறது. அவளுக்கு மெலிந்த கன்னி என்னும் பொருள் வரும் இந்தோனேசியப்பெயரும் புழக்கத்தில் உள்ளது.
இதேகதை பல வடிவில் இந்தியாவில் இருப்பதுதான். கேரளத்தில் இரு பேராலயங்களில் அங்குள்ள கொடிமரங்களை விடிந்துவிட்டது என எண்ணி பூதங்கள் ஆலயக்குளத்தில் போட்டுவிட்டுச்சென்றதாகக் கதைகள் உள்ளன. கன்யாகுமரி தேவியின் கதையும் இந்திரன் சேவலாக வந்து கூவி விடிந்துவிட்டது என ஏமாற்றியதுதான்.
அங்கே அந்தக்கதைக்கு பெரியதோர் பொருள் உள்ளது என்று தோன்றியது. உலகளாவிப்பரந்த இந்துப்பண்பாட்டையே அந்த ஆயிரம் ஆலயங்கள் குறிக்கின்றன. ஆயிரமாவது ஆலயம் கட்டப்படவே இல்லை. ஊழ் அது என்றுதான் சொல்லவேண்டும்.
பரம்பனான் ஆலயவளாகத்தைப்பற்றி விரிவாக பலகோணங்களில் எழுத முடியும். ஒன்பதாம்நூற்றாண்டு இந்தியச்சிற்பக்கலையுடன் இவ்வாலயச் சிற்பங்களைத் தொடர்பு படுத்தி ஆராய்வதற்கான ஏராளமான சாத்தியக்கூறுகள் உள்ளன.
இவ்வாலயங்களில் கல்பவிருட்சமும் சிம்மங்களும் முக்கியமாக சுவர்புடைப்புச் சிற்பங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. சிம்மம் இவ்வரசகுலத்தின் கலிங்கத் தொடர்பை உறுதிசெய்கிறது. கல்ப விருட்சம் இவர்களின் செல்வமாக இருந்த தென்னையின் அடையாளம்
சிவன் கோயிலின் எட்டு பக்கங்களிலும் அஷ்டதிக்பாலகர்களின் சிலைகள் உள்ளன. ஆனால் அவை இந்தியாவின் சிற்ப இலக்கணங்கள் கொண்டவை அல்ல. குபேரனை மட்டுமே ஓரளவு நம்மூர் இலக்கணங்களைக்கொண்டு அடையாளம் காணமுடிகிறது
தண்ணீர்ப்பாம்புடன் இருப்பவர் வருணன். அமுதகலசத்துடன் இருப்பவர் சோமன். மண்டையோட்டு கழியுடன் இருப்பவர் எமன் என மெல்ல மெல்ல அடையாளம் கண்டுகொண்டோம். அதில் ஒரு பரவசம் இருந்தது
பரம்பனான் ஆலய வளாகத்தின் அரிய சிற்பங்களில் ஒன்று சீதை சிதையேறுவது. காளிய நடனம், கோபியர் ஆடைகவர்தல் போன்ற சிற்பங்கல் இந்தியாவிலும் புகழ்பெற்றவை. ஆனால் இச்சிற்பம் அபூர்வமான ஒன்று. சிற்பங்களில் இந்திய ஆடையணியும் முறை அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இன்று முற்றிலும் இல்லாத ஒன்று இது.
சரியாக நேரத்திட்டம் போடப்படாமையால் அனைத்து ஆலயங்களையும் பார்க்கமுடியவில்லை. குறிப்பாக சேவூ புத்தர் ஆலய வளாகத்தை. இத்தனை ஆலயங்கள் இருக்கும் என்று நாங்கள் எண்ணியிருக்கவில்லை. அத்துடன் பார்க்கும் ஆலயங்களில் ஆழ்ந்து நேரத்தை அதிகமாக அங்கேயே செலவழித்துவிட்டோம்
சேவூ ஆலய வளாகத்திற்குச் செல்லும்போது இருட்டிவிட்டது. ஆகவே வெளியே இருந்தே திரும்பி விட்டோம். யோக்யகர்த்தாவில் ஒரு விடுதி பதிவுசெய்திருந்தோம். விடுதியாகக் கட்டப்பட்டது அல்ல. ஒரு வீடு போலிருந்தது. ஆனால் கலையழகுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.குளிரூட்டி வசதி உடையது.
அங்கே வைஃபி இணையவசதி இருந்தது. இந்தோனேசியாவின் மின்பொருத்தி குழிக்குள் பொருத்தும் அமைப்பு கொண்டது. வேறெங்கும் நான் அப்படிப்பார்த்ததில்லை. நல்லவேளையாக விடுதியிலேயே இணைப்புக்கு தகவமைவி இருந்தது. அதைவாங்கி கணினியை மின்னூட்டம் கொடுத்தேன்
நண்பர்கள் உணவுதேடி நகரில் இறங்கினர். நான் குளித்துவிட்டு என்னை இரண்டாகப் பகுத்தேன். யோக்யகர்த்தாவில் இருந்த என் பிரக்ஞையை முழுமையாக அணைத்தேன். வெண்முரசு எழுதத் தொடங்கினேன்.
எங்கிருந்தாலும் இக்கனவுக்குள் என்னால் எளிதில் புகமுடிவதன் விந்தையை எண்ணிக்கொண்டேன். வெண்முரசு எழுதுவதைப்போல எளியது ஏதுமில்லை. ஆனால் விமானநிலையத்தில் ஒர் எளிய படிவத்தை அருண்மொழிதான் நிரப்பித்தரவேண்டியிருக்கிறது. இங்கு காண்பவை அனைத்தும் அடியில் சென்று ஊறி நிறையும் நிலத்தடி நீர் வெளி அது.
ஆனால் இது துயரம் நிறைந்தது. சஞ்சலங்கள் கொண்டது. இனியவற்றால் மட்டுமே ஆனது புனைவின் உலகம். அங்கு துன்பங்கள் கூட பெரும் களியாட்டங்களே
அதைக்கொண்டுதான் இந்த தாளமுடியாத யதார்த்ததை எதிர்கொள்கிறேன். இத்தனைக்கும் அப்பால் அதை அளித்தமைக்கு அறியமுடியாமைக்கு நான் நன்றியுரைக்கவேண்டும்