இந்த அவையில் சினிமாவைப்பற்றிப்பேசுவதற்கு எனக்கிருக்கும் தகுதி என்னவென்றால் எனக்கு சினிமா பற்றிய முறையான, சீரான அறிவு இல்லை என்பதையே சொல்லவேண்டியிருக்கும். பலவருடங்கள் நான் சினிமாவைக் கவனித்ததே இல்லை. தமிழ் சினிமாவுக்கு நான் தற்செயலாக வந்தேன். முன்னரே எனக்கு சினிமாவில் நல்ல வாசகர்கள் இருந்தாலும்கூட என் நண்பர் லோகிததாஸின் கட்டாயத்தால் வேறு வழியில்லாமல் கஸ்தூரிமானுக்காக வசனங்கள் எழுதினேன்
இன்று எனக்கு சினிமா சார்ந்த ஆர்வம் இந்த அளவில்தான். அது ஓர் எளிய நல்ல தொழில் என்று எனக்கு பட்டது. எனக்கு நேரத்தை மிச்சப்படுத்தி அளிக்கிறது. அதன் மூலம் அபாரமான சுதந்திரத்தை அளிக்கிறது. தரமான கேளிக்கைப்படங்களில் பங்களிப்பாற்றலாமென எண்ணுகிறேன். நான் பங்களிப்பாற்றும் படங்களில் முடிந்தவரை தரமான எழுத்தை அளிக்கவும், தரமான ஆக்கமாக அது அமைய இயக்குநரை செலுத்தவும் முயல்கிறேன். ஆனால் சினிமா என்பது நூற்றுக்கு நூற்றியொரு சதவீதம் இயக்குநரின் கலை.
இப்போது நான் பணியாற்றும் மூன்று படங்களும் மூன்று வகை. ஒன்று ஒரு மிகப்பெரிய தமிழ்ப்படம். வணிகநோக்கும் கலைநோக்கும் கலந்தது, கலந்தாகவேண்டியது. இன்னொன்று ’மதுபால்’ இயக்கத்தில் சீனிவாசன் நடிக்கும் ஒரு மலையாளப்படம். நடுத்தளப் படம் அது. மூன்று ,டாக்டர் ரவீந்திரநாத் இயக்கத்தில் ஒரு முழுமையான கலைப்படம். இம்மூன்றையும் நானே ஒப்பிட்டுக்கொள்கிறேன்
பெரியபடத்தில் பணம்பிரச்சினையே அல்ல. ஆனால் அந்த பணமே அதன் நிபந்தனை. அதை திருப்பி எடுக்கவேண்டுமானால் தென்னிந்தியா முழுக்க முப்பதுகோடி பேர் அந்தப் படத்தை பார்த்தாகவேண்டும். அவர்களுக்கு புரியவேண்டும். விதவிதமான கலாச்சாரப்புலங்களில் வாழ்க்கைச்சூழல்களில் உள்ள முப்பதுகோடிப்பேர். கற்றவர்கள் கல்வியறிவற்றவர்கள். பழங்குடிகள் நவீன மனிதர்கள்..
ஆகவே மீண்டும் மீண்டும் புரியுமா என்ற வினாவே ஒவ்வொரு விவாதத்திலும் எழுகிறது. எந்த ஒரு கருத்தையும் இது அனைவருக்கும் புரியுமா என்ற அளவுகோலை வைத்தே பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.
நடுத்தளப் படத்தில் பணம் பிரச்சினை. ஆகவே காட்சிகளை எப்போதும் கட்டுக்குள் நிறுத்தவேண்டும். நாலைந்து ரயில்நிலையக் காட்சிகளை வைத்தாலே போதும் செலவு கையைவிட்டு போய்விடும். ஆனால் இதன்பார்வையாளார்கள் குறைவு. ஒருகோடிப்பேர் இதை பார்த்தால் போதும். மலையாளத்தின் நல்ல நடுத்தளப் படங்களை பார்த்து பழகிய, அடிபப்டை ரசனையும் தேடலும் கொண்ட அந்த ஒருகோடிப்பேர். ஆனால் அங்கும் புரிதல் சிக்கல்தான். அந்த ஒருகோடிப்பேருக்கும் புரிந்தாக வேண்டும். அவர்கள் தலைக்கு மேல் போகக்கூடாது
கலைப்படத்தின் உத்தேசப்பார்வையாளர்கள் இந்தியாவிலேயே இல்லை. அவர்கள் உலகமெங்கும் திரைவிழாக்களில் வந்து இதை பார்க்கப்போகிறார்கள். ‘சார் மெலோடிராமாவே வேண்டாம். மெலோடிராமா என்ற சந்தேகம்கூட வரக்கூடாது’ ஆம், இங்கும் பார்வையாளர்கள் தீர்மானிக்கிறார்கள். அழுதால் வெள்ளைக்காரர்களுக்கு பிடிக்காது. ஆகவே மகன் செத்த தாய்கூட உறைந்த முகத்துடன் தான் இருந்தாகவேண்டும்
இந்த அரங்குக்குள்தான் சினிமா என்ற வட்டாட்டம். இங்கே நண்பர் ராஜன்குறை இருக்கிறார். அவர் 1950களில் அனுப்பப்பட்ட தந்திகளை வைத்துக்கொண்டு ஒரு சமூகவியல் ஆய்வுசெய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த தந்தி எவருக்கு அடிக்கப்பட்டது என்பதை கணக்கில் கொள்ளாமல் தன் மதிப்பீடுகளைச் செய்வாரா என்ன? ஆனால் நாம் சினிமாவில் அதைத்தான் செய்கிறோம்.
சினிமாவுக்கு அதன் உத்தேசரசிகர்கள் கண்முன் உள்ளனர். அவர்களுக்காகவே அது நிகழ்த்தப்படுகிறது. அவர்களின் ரசனை, அவர்களின் அடிமன ஏக்கங்கள், அவர்களின் அரசியல் நோக்கங்கள் அந்த படத்தை உடனடியாக தீர்மானித்தபடியே உள்ளன. இந்த அம்சத்தை கணக்கில் கொள்ளாமல் சினிமாவைப்பற்றி பேசுவது போன்ற அபத்தம் வேறில்ல்லை. ஆனால் பலவருடங்களாக இங்கே சினிமா ஆய்வுகள் அனைத்துமே இவ்வாறுதான் செய்யப்படுகின்றன. அறிவுஜீவியாக தன்னைக் காட்டிக்கொள்ளும்பொருட்டே பெரும்பாலும் இங்கே விமர்சனங்கள் எழுதப்படுகின்றன.
ஒரு மூத்த திரைக்கதையாசிரியர் சொன்னார். தமிழ்சினிமாவில் நெடுங்காலம் இரு டேபிள்கள் தேவையாக இருந்தன என்று. ஒன்று டைனிங் டேபிள். எம்.ஜி.ஆர் மட்டுமே சாப்பிடும் மேஜையில் நூறுபேருக்கான உணவு நிறைந்திருக்கும். அரைப்பட்டினிக்காரனாகிய அன்றாடத்தமிழன் அத்தனை உணவை எங்கே பார்க்க முடியும்? அது அவனுக்கு அளித்த இன்பக்கிளர்ச்சி ஒரு சமூகத்தேவையாக இருந்தது
இன்னொன்று டிரஸ்ஸிங் டேபிள். கைப்பிடியளவு கண்ணாடியில் முகம் பார்ப்பவள் சராசரி தமிழ்ப்பெண். அவளுக்கு ஜெயலலிதா மாபெரும் தந்தங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடி முன் நின்று பெரிய வார்ட்ரோபை திறந்து ஒவ்வொரு துணியாகப் பார்த்து ஒன்றை தேர்வுசெய்து அணிவது எத்தனை உவகையை அளித்திருக்கும்! நான் ஒருவரிடம் கேட்டேன். நேர்மையான அதிகாரியான ஏஸ்.பி.சௌத்ரிக்கு ஏன் மியூசிய பங்களா என்று. அவர் சொன்னார், ஏன் அன்பேவா எம்ஜியாரின் மாபெரும் பங்களாவில் அத்தனை விளக்குகளையும் எப்போதும் போட்டுவைத்திருப்பவர் யார் என்று கேட்பதுதானே என்று.
ஆம், அதெல்லாம் தெரியாதவர்களால் அப்படங்கள் எடுக்கப்படவில்லை. எண்பதுகள் வரைக்கூட ‘பங்களா செட்’ என்பது தமிழின் ஒரு சமூகவியல் தேவை. வாசல்படிக்கு அப்பால் அனுமதிக்கப்படாத எளிய கிராமியத்தமிழன் வேறு எப்படி பங்களாவின் உட்பக்கங்களை பார்க்க முடியும்? அவனது ஆசையே திரையை வடிவமைத்தது. தொடர்ச்சியான நுட்பமான எதிர்வினை அமைப்பால் வடிவமைக்கப்பட்டது தமிழ்சினிமா. அதனால்தான் உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்று கேளிக்கைத்தொழிலே அழிந்து ஹாலிவுட் ஆட்சி செய்யும்போதும் நம் சினிமா நம்மிடமே உள்ளது. அது ஒரு சாதாரண விஷயம் அல்ல.
தமிழ் சினிமாவை ஒரு கலாச்சார நிகழ்வாக அணுகவேண்டும், ஆராயவேண்டும் என்றே சொல்ல வருகிறேன். இலக்கியத்தை அணுக 60கள் வரை அமெரிக்க விமரிசன முறைமை, அதாவது புதுத்திறனாய்வு இயக்கத்தினருடைய [New Critics] ஆய்வுமுறை மட்டுமே கையாளப்பட்டது. படைப்பை நுணுகி ஆராய்வது அது. அதன் கூறுகளை பிரித்து கூறுகட்டி முடிவுகளுக்கு வருவது. அதை பிரதியியல் விமர்சனம்[Textual Criticism] எனலாம். அந்த நோக்கே வணிக சினிமாவுக்கும் இன்றும் கையாளப்படுகிறது
இன்று இலக்கியத்திறனாய்விலேயே உரைமாற்றாடல்திறனாய்வு [ Dialogic Criticism ] போன்ற அணுகுமுறைகள் உருவாகி வந்துள்ளன. கலைபப்டைப்பை ஒரு உரையாடலாக, விவாதமாக அணுகும் முறைகள். படைப்பை அது உருவாக்கும் ரசிக எதிர்வினைகள் மூலம் மதிப்பிடும் வாசக எதிர்வினை விமர்சனம் [Reader-response criticism] முதலியவை. சினிமா போன்ற ஒரு மாபெரும் சமூக இயக்கத்தை அத்தகைய விரிவான ஆய்வுக்கருவிகள் இன்றி நம்மால் மதிப்பிட முடியாது.
நான் ஓரு நாவல் எழுதும்போது உண்மையிலேயே என் முன் வாசகன் இல்லை. வாசகன் இருக்கிறான், எனக்குள் நானாக ஆகியிருப்பது ஒரு நல்ல தமிழ் வாசகன். அவனுக்காக நான் எழுதுகிறேன். அவ்வகையில் வாசகன் இருக்கத்தான் செய்கிறான். ஆனால் சினிமாவுக்கு எழுதும்போது நேர் எதிரில் நின்றுகொண்டிருக்கிறான். அவனை மறந்து எந்தப்படத்துக்காகவும் எழுத முடிவதில்லை. பிரமிப்பாக இருக்கிறது. நம்ப முடியாத , மதிப்பிட முடியாத வெகுஜன ஆழ்மனம் என்ற பெரும்கடல். இருளில் ஆள்கூட்டம் நோக்கி கல்லெறிதல். எத்தனைபேர் மீது படும் என்பதே ஆச்சரியம்தான். இங்கே எல்லாருமே திகிலுடன் மட்டுமே சினிமாபற்றி பேசுகிறார்கள்.
கலையை நிரந்தரக்கலை தற்காலிகக் கலை என்று பிரித்து நோக்கும் ஓர் அணுகுமுறை மேற்கே உண்டு. ஒரு சுவரொட்டி, ஒரு கோஷம், ஒரு அரசியல் கதை போன்றவை தற்காலிகக் கலைவகையைச் சார்ந்தவை. அவை அக்காலகட்டத்துடன், கண்முன்னால் உள்ள ஒரு ஏற்பாளர்களிடம் மட்டும் தொடர்புறுத்திக் கொள்கின்றன. அவர்களுக்காக உருவாக்கப்படுகின்றன. நிரந்தரக் கலை என்பது அப்படி அல்ல. அது என்றுமிருக்கும் ஒரு ஏற்பாளர்களை தன் முன் காண்கிறது. அது அழியலாம் ஆனால் அழிவதற்காக ஆக்கப்படுவது இல்லை
சினிமாவில் கிளாஸிக்குகள் உள்ளன. நான் பார்த்த பல படங்களை மகத்தானவை என்றே சொல்வேன். ஆனாலும் சினிமா நிரந்தரக்கலையா என எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. என் எல்லைகளைக் காட்டுவதாகவும் இது இருக்கலாம். நான் அழியாத செவ்வியல் படைப்புகள் என நினைத்த இரு ஆக்கங்களை சமீபமாக மீண்டும் பார்த்தேன். பர்க்மானின்[ Ingmar Bergman.] ’ஏழாவது முத்திரை’ [The Seventh Seal ]மற்றும் அலெய்ன் ரெஸ்னெய்ஸ் [Alain Resnais] இயக்கிய ’இனி வேண்டாம் ஹிரோஷிமாக்கள்’ [Hiroshima mon amour]. பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டது. அவை இப்போது இறந்த சடலங்களாக இருந்தன
ஆனால் இன்றும் ஏழாவது முத்திரையின் திரைக்கதை அற்புதமான கலையனுபவம் தரும் படைப்பாக உள்ளது. ஏன்? காரணம் சினிமா பெருமளவுக்கு தொழில்நுட்பத்தைச் சார்ந்துள்ளது. அது பாதிதான் கலை மீதி தொழில்நுட்பம். ஏடு காலாவதியானால் சிலப்பதிகாரத்துக்கு ஒன்றும் இல்லை. ஆனால் படச்சுருள் காலாவதியாகும்போது அகிரா குரசேவா அவரது மகத்துவத்தை இழக்கிறார் என்று படுகிறது. அதனால்தான் சினிமா ஒரு தற்காலிகக் கலை என்றே எனக்குச் சொல்லத்தோன்றுகிறது. தல்ஸ்தோயின் தஸ்தயேவ்ஸ்கியின் பீடத்தில் எந்த சினிமா இயக்குநரையும் என் மனம் அமர்த்த தயங்குகிறது.
கலைப்படைப்புகளை அவற்றின் அமைப்பு சார்ந்து நிகழ்கலை என்றும் பதிவுக்கலை என்றும் வகுப்பதுண்டு. இலக்கியமும் ஓவியமும் பதிவுக்கலைகள். நடனமும் நாடகமும் நிகழ்கலைகல். நிகழ்கலையான இசை இன்று பதிவுக்கலையாக ஆகிவிட்டிருக்கிறது. சினிமா பதிவாகும் நிகழ்கலை என்றே எனக்குப் படுகிறது. பதிவுக்கலையின் காலம் கடந்த தன்மை சினிமாவுக்கு இல்லை. உரையாடிக்கொண்டிருக்கும் இருவரில் ஒருவரை பதிவுசெய்வது போன்றதே சினிமாவின் பதிவு. அது அக்காலத்திற்கு இப்பால் வரும்போது வெறும் ஆவணமாக ஆகிவிடுகிறது.
நிகழ்கலையாகிய சினிமா அதைச்சுற்றியுள்ள கோடிக்கணக்கான கண்கள் முன்னால் காதுகளுக்கு முன்னால் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த கண்களையும் காதுகளையும் தவிர்த்துவிட்டு அதை மதிப்பிட முடியாது. சினிமா ரசிகர்களை உருவாக்குவதைப்போலவெ ரசிகர்கள் சினிமாவை உருவாக்குகிறார்கள். நம் ரசிகர்களை தவிர்த்துவிட்டு சினிமாவைப்பற்றி பேச முடியாது.
நான் சினிமாவுக்கு வந்தபின் வணிகசினிமாக்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்த்து வருகிறேன். முதல் பத்து நிமிடங்கள் அரங்கில் செல்பேசிகள் ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றன. பொறுமையில்லாமல் பார்க்கிறார்கள். அவர்களை செல்பேசியை மறக்கச்செய்யும் படமே வெற்றிபெறுகிறது. எந்த விஷயத்தையும் கவனிக்கும் பயிற்சி அற்ற, பொறுமை அற்ற ஒரு பெரும் திரள். அவர்களுக்காக எடுக்கப்படுகிறது தமிழ் சினிமா
இன்றைய தமிழ் சினிமாவின் ரசிகர்களில் பெரும்பாலோர் தனிமையும் புறக்க்கணிப்பையும் உணரும் அடித்தள இளைஞர்கள். ஆகவே சினிமா அவர்களுக்காக உருவாக்கப்படுகிறது. அவர்களே இன்றைய தாதா படங்களை, வன்முறைப்படங்களை உருவாக்குகிறார்கள். எம்.ஜி.ஆர் போன்ற இலட்சிய நாயகன், அரசியல் கொண்ட இளைஞன் எப்படி சினிமாவில் இருந்து காணாமலானான்? எப்படி பெண்களுக்கான ப்டங்கள் இல்லாமலாயின?
ஆம் சினிமா ஓர் உரையாடல். நம் சமூகம் தனக்குள்ளாகவே நடத்திக்கொள்ளும் ஓர் அந்தரங்க உரையாடல். அத்தகைய உரையாடலுக்கு இருக்கக்கூடிய அனைத்து சில்லறைத்தனங்களும் பாலியல்கற்பனைகளும் சாகச ஏக்கங்களும் கோபங்களும் வருத்தங்களும் உவகைகளும் கலந்த ஓர் உரையாடல்.
இதெல்லாம் சினிமா அறியாத ஒரு இலக்கியவாதியின் மனச்சித்திரங்களாக இருக்கலாம். ஆனால் இவற்றையும் நாம் யோசிக்கவேண்டுமென்றே நான் நினைக்கிறேன். நண்பர் சுபகுணராஜனின் ‘காட்சிப்பிழை’ என்ற இந்த இதழின் சிறப்பியல்பாக நான் நினைப்பதே இதுதான். இது சினிமாவை ஒரு மக்களியக்கமாக, ஓர் உரையாடலாக அணுக முயல்கிறது. அதற்கான கோட்பாடுகளை உருவாக்க முயல்கிறது. அந்த முயற்சி வெல்க என வாழ்த்துகிறேன்
[2-09-10 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் காட்சிப்பிழை சினிமா இதழ் அறிமுகக் கூட்டத்தில் ஆற்றிய உரை]