பகுதி ஐந்து : தேரோட்டி – 24
தெற்கே சேரநாட்டிலிருந்து துவாரகைக்கு கொண்டுவரப்பட்டது சுப்ரதீபம் என்னும் வெண்களிறு. துவாரகையின் துறைமுகத்திற்கு வந்த தென்கலம் ஒன்றின் நடைபாதையின் ஊடாக தலையை ஆட்டியபடி ஆவலுடன் நடந்து வந்த குட்டியானையைப் பார்த்து அன்று துறைமுகமே உவகை எழுச்சியுடன் ஒலி எழுப்பி சூழ்ந்து கொண்டது. வெண்பளிங்கில் வெட்டி உருட்டி எடுக்கப்பட்டது போன்ற அதன் உடல் காலையொளியில் மின்னியது. மானுடத்திரளைக் கண்டு மேலும் களி கொண்டு செவ்வாழைக் குருத்து போன்ற துதிக்கையை நீட்டி வளைத்து மணங்களை பற்றியபடி மெல்ல பிளிறியது.
வெண்ணிற வெள்ளரிப்பிஞ்சு போன்று இரு சிறிய தந்தங்கள் மழுங்க சீவப்பட்டிருந்தன. மொந்தன் வாழைத்தண்டு போன்ற கால்களை முன்னும் பின்னும் எடுத்து வைத்து ஆட்டியபடி தன்னைச்சுற்றிக் கூடி நின்ற ஒவ்வொருவரையாக துதிக்கை நீட்டி தொட முயன்றது. துறைமுகத் தலைவராகிய சிவதர் ஓடி வந்து “விலகுங்கள்! விலகுங்கள்!” என்று ஆணையிட்டு அதை அணுகி முழந்தாளிட்டு “துவாரகையை வாழ்த்துங்கள் தென்னிலமுடையோரே” என்று வணங்கினார்.
அவர் தலையில் சூடி இருந்த மலரை தன் துதிக்கையில் தொட்டு எடுத்து இருமுறை சுழற்றி ஆட்டி அவர் மேலேயே போட்டபின் முன்கால் தூக்கி வைத்து ஓடி வந்து நெற்றியால் அவரை முட்டி வான்நோக்கி தள்ளியது யானைக்குழவி. அவர் கூவிச்சிரித்து உருண்டார். அவர் எழமுயல மேலும் மோதித் தள்ளியது. அதைப் பிடிக்க வந்த இரு காவலர்களை நோக்கி சுருட்டிய வாலுடன் திரும்பி முட்டித் தள்ளியது. சிரித்தபடி காவலர் பற்ற முயல அதையே விளையாட்டாக மாற்றிக்கொண்டு முட்டித் தள்ளத் தொடங்கியது. காவலர்கள் சிரித்துக் கூச்சலிட்டனர்.
செய்தி சென்று துவாரகையிலிருந்து அக்ரூரரே இறங்கி வந்தார். நிமித்திகர்களும் களிற்றுக்குறி தேர்பவர்களும் அவருடன் வந்தனர். அப்போது துறைமேடை முழுக்க அலுவல்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு களிக்கூச்சல் எழுந்து கொண்டிருந்தது. வெண்ணிற யானைக்குட்டி துறை மேடையிலிருந்த பொதிகளை நெற்றியால் முட்டித் தள்ளியது. துதிக்கை தூக்கி ஒவ்வொருவரையாக பிடித்து இழுத்து சுழற்றி வீசியது. அதை பின்னால் இருந்து வால் பற்றி இழுத்தும் முதுகில் அறைந்தும் நெற்றியில் கை வைத்து தள்ளியும் வீரரும் வினைவலரும் ஏவலரும் விளையாடினர்.
அக்ரூரர் இறங்கி வருவதைக் கண்டதும் தலைமைக் காவலன் தன் கொம்பை எடுத்து ஊத அனைவரும் விலகி தங்கள் பணியிடங்களுக்கு ஓடினர். தனித்து விடப்பட்ட யானைக்குட்டி அருகே இருந்த தூண் ஒன்றை நெற்றியால் ஓங்கி முட்டி பிளிறலோசை எழுப்பியது. திரும்பி புரவிகளில் வந்து இறங்கிய அக்ரூரரையும் அகம்படியினரையும் கண்டு ஆர்வம் கொண்டு ஓடிச் சென்றது. அக்ரூரரின் பின்னால் நின்றிருந்த களிற்றுக்குறி தேர்பவரான கூர்மர் “அமைச்சரே இது போன்று நற்குறிகள் முற்றிலும் அமைந்த பிறிதொரு குழவிக்களிறை நான் கண்டதில்லை” என்றார். “எவ்வண்ணம் சொல்கிறீர்?” என்றார் அக்ரூரர்.
“அது வருவதை நோக்குங்கள். ஒவ்வொரு அடியும் பிறிதொரு அடியின் மேல் விழுகிறது. நூல்வடம் மேல் வரும் பொதிபோல நேர் கோட்டில் அணுகுகிறது” என்றார் கூர்மர். “உடலின் ஒவ்வொரு தசையும் பிறிதொன்றால் முற்றிலும் சமன் செய்யப்பட்டுள்ளது. இது பல்லாயிரம் கோடி களிறுகளில் ஒன்று. எதன் பொருட்டு இப்பெருநகருக்கு இது வந்துள்ளது என்று அத்தெய்வங்களே அறியும். ஒன்றுரைப்பேன். எளிய மானுடனுக்காக இது இந்நகர் புகவில்லை. மண்ணிறங்கும் தெய்வமொன்று தன் ஊர்தியை முன்னரே அனுப்பியுள்ளது.”
“என்ன சொல்கிறீர்?” என்று மெய் சிலிர்த்து அக்ரூரர் கேட்டார். “அறியேன். ஆனால் இது விண்ணகம் இறங்கி மண் தொடும் நிகழ்வுக்கு கட்டியம். அதுவன்றி பிறிதொன்றையும் சொல்ல மொழியில்லை எனக்கு” என்றார் கூர்மர். நிமித்திகராகிய கமலகர் “இங்கு வரும் வழியிலேயே நேரத்தை குறித்துக் கொண்டிருந்தேன். இதன் முன் வலதுகால் துவாரகையின் மண்ணைத் தொட்ட கணம் எதுவென நான் அறிய வேண்டும்” என்றார்.
அவர்களை அணுகிய வெண்களிறு சற்று தொலைவிலேயே நின்று ஐயத்துடன் செவிகளை முன்மடித்து தலைகுலுக்கி மூவரையும் பார்த்தபின் அக்ரூரரை நோக்கி துதிக்கையை நீட்டியது. அதன் துதிக்கையின் முனை சிவந்திருந்தது. மழலையின் வாய் போல மூக்குத்துளையின் விரல் நுனி ஆடியது. காற்றளைந்த காதுகளின் பிசிறுமுனைகளும் துதிக்கை சென்றணைந்த விரிமுகமும் செவ்வாழைமடல் விளிம்பு போல் சிவப்போடியிருந்தன. உடலெங்கும் வெண்ணிற முடி புல்குருத்துகள் போல் எழுந்திருந்தது. சுழன்ற வாலில் முடியும் வெண்ணிறமாக இருந்தது. கடற்சிப்பிகள் போலிருந்தன கால் நகங்கள்.
“அதன் விழிகளும் வெண்ணிறமாக இருக்கின்றன” என்றார் அக்ரூரர். “ஆம், ஆனால் நோக்கில் குறையில்லை” என்றார் கூர்மர். கமலகர் துறைமேடைத்தலைவர் சரமரை அருகழைத்து “இது இந்நகரில் கால் வைத்த தருணம் எது?” என்றார். “நான் அதை குறிக்கவில்லையே” என்று அவர் சொல்ல அருகிலிருந்த முதிய காவலர் ஒருவர் “நான் குறித்தேன் நிமித்திகரே. காலை எட்டாம் நாழிகை பதினெட்டாவது கணம்” என்றார்.
அக்ரூரர் மண்டியிட்டு கை நீட்டி அக்களிறின் துதிக்கை முனையை தொட்டார். அது அவர் விரல்களை சுற்றிப்பிணைத்து அருகே இழுத்தது. நிலை தடுமாறி அவர் முன்னால் விழ அருகே இருந்த காவலன் “அமைச்சரே, குழந்தையாயினும் அது களிறு” என்றார். யானைக்குட்டி காலெடுத்து வைத்து தன் நெற்றியால் அவரை பின்னால் தள்ளியது. அருகே ஓடி வந்து இடையில் சுற்றியிருந்த கச்சையை பற்றி அவிழ்த்து தூக்கியது. அக்ரூரர் கையூன்றி எழுந்து அமர்ந்து “இதன் பாகன் கச்சையில் எதையோ ஒளித்து வைத்திருக்கும் பழக்கமுடையவன் போலும்” என்றார். கச்சையை உதறி நிலத்தில் இட்டு அதனுள் நன்கு தேடியபின் அக்ரூரரை நோக்கி கை நீட்டியது. அக்ரூரர் அதன் மத்தகத்தை தொடப்போனார்.
பின்னால் இருந்து அதன் தென்னகப்பாகன் ஓடி வந்து “அமைச்சரே, அதன் மத்தகத்தை தொட வேண்டியதில்லை” என்றான். “இவ்வயதில் இளங்கன்றுகள் மத்தகத்தை தொடுவதை போர் விளையாட்டுக்கான அழைப்பாக எடுத்துக் கொள்கின்றன. அதன் பின் தங்களை அது முட்டிக்கொண்டே இருக்கும். இங்குள்ள ஒவ்வொருவரையும் முட்டிவிட்டது. பலருக்கு முறிவுகள் கூட உள்ளன.” “இதன் பெயர் என்ன?” என்றார் அக்ரூரர். “வெண்ணன்” என்றான் பாகன். “தென்னாட்டு மொழியாகிய தமிழில் வெண்ணிறமானவன் என்று பொருள்.”
அக்ரூரர் அதன் காதுக்குக் கீழே இருந்த சிறு குழியை கைகளால் வருடினார். சற்று உடல் சிலிர்த்து பின்பு சிறு குழவியென ஆகி அவர் உடலுடன் தன் தலையை சேர்த்துக் கொண்டு செவிஅசையாது நின்றது. காதுகளையும் தாடையின் அடிப்பகுதியையும் அவர் வருடினார். அவரது காலை துதிக்கையால் சுற்றி வளைத்தபடி தலையை அவர் இடையுடன் சேர்த்துக் கொண்டது குழவி. நேரத்தை கணித்த நிமித்திகர் திகைப்புடன் யானையைப் பார்த்து கைகூப்பினார். “என்ன சொல்கிறீர்?” என்றார் அக்ரூரர்.
“இது…” என்றபின் “இவர்…” என்றார் நிமித்திகர் கமலகர். அக்ரூரர் அவருடைய பதற்றத்தை பார்த்தபின் “சொல்க!” என்றார். “மண் நிகழப்போகும் விண்ணவன் ஒருவனை கொண்டு செல்லும் பொருட்டு இங்கு வந்தவர், ஐயமே இல்லை” என்றார் நிமித்திகர். “இங்கு என்ன நிகழப்போகிறதென்று நான் அறியேன். ஆனால் விண்ணவருக்கு மட்டும் உரியது இவர் கால்கள் துவாரகையின் மண்ணை தொட்ட கணம்.”
அக்ரூரர் “இதை மேலே அரண்மனைக்கு கொண்டு போ! இளைய யாதவர் இப்போது ஊரில் இல்லை அவர் வந்து பார்த்து இதற்கு நல்ல பெயர் ஒன்றை சூட்டட்டும். துவாரகையின் செல்வங்களில் ஒன்று தெய்வங்களால் இந்த நன்னாளில் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார். யானை திரும்பி தான் வந்த கலத்தை நோக்கி ஓடி அங்கே நின்றிருந்த கலத்தலைவனை முட்டி நீருக்குள் தள்ளியபின் தலையை ஆட்டியபடி திரும்ப வந்தது.
நான்கு நாட்கள் கழித்து அஸ்தினபுரியிலிருந்து இளைய யாதவர் வந்தபோது துவாரகையின் அரண்மனைச் சேடியர் ஏவலர் காவலர் அமைச்சர் அனைவரும் அதனுடன் சிரித்துக்கூவி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதன் ஆடலன்றி வேறேதும் அங்கு நிகழவில்லை. அமைச்சு அலுவலகங்களுக்குள் நுழைந்து ஏட்டுச் சுவடி அடுக்குகளை முட்டி வீழ்த்தியது. அவைக்கூடங்களுக்குள் நுழைந்து நிரை வைக்கப்பட்டிருந்த பீடங்களை மறித்துக் கலைத்தது. திண்ணைகளில் தொற்றி ஏறி அங்கிருந்த தூண்களை முட்டியது. உள்ளறைகளுக்குள் புகுந்து செம்புக்கலங்களை பேரோசையுடன் சரித்து உருட்டியது.
அடுக்கப்பட்டிருந்த எதுவும் அதை கவர்ந்தது. மூடப்பட்டிருந்த எந்தக் கதவும் அதை சீண்டியது. நின்று கொண்டிருந்த எந்த மனிதரும் அறைகூவலாக தோன்றியது. ஓடிக் கொண்டிருந்த ஒவ்வொரு சிறுவனும் தன்னை அழைப்பதாக அது எண்ணியது. ஆனால் முதியவர்களின் அருகே வருகையில் அதன் விரைவு குறைந்தது. அருகே வந்து மெல்ல துதிக்கையெடுத்து அவர்களைத் தொட்டு வெம்மையுடனும் ஈரத்துடனும் அவர்கள் மேல் மூச்சு பட உழிந்தது. கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த அன்னையர் அருகே சென்றதும் மெல்ல கை நீட்டி குழந்தைகளின் கால்களை தன் மூக்கு விரலால் தொட்டுப் பிடித்தது. அவர்களின் அருகே முன்னங்கால் நீட்டி பின்னங்கால் சரித்து மடித்து குறுவால் வளைத்து ஒதுக்கி அமர்ந்து விளையாடியது. தன் துதிக்கை உயரத்திற்கு மேலுள்ள ஒவ்வொன்றையும் பிடித்து கீழிறக்க ஒவ்வொரு கணமும் முயன்று கொண்டிருந்தது.
இரண்டாவது நாளே பொறுக்க முடியாமல ஆனது போல் “அமைச்சரே, அதை தளைத்தால் என்ன?” என்றான் காவலர் தலைவன். “இக்களிறு மானுடனால் தளைக்கபடுவதல்ல. அது முடிவெடுக்கட்டும் எங்கு எதை செய்வதென்று” என்றார் அக்ரூரர். “அப்படியானால் அதன் கழுத்தில் ஒரு மணியையாவது கட்டுவோம். அது வரும் ஒலியைக் கேட்டு ஆட்கள் சற்று எச்சரிக்கை கொள்ள முடியுமே” என்றான் காவலர் தலைவன். பொன்னன்றி வேறு எதுவும் அதன் உடலை தொடலாகாது என்று அக்ரூரர் ஆணையிட்டார். அரண்மனைக் கருவூலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பெரிய பொன்மணி ஒன்று அதன் கழுத்தில் பொன் வடம் கொண்டு கட்டப்பட்டது.
தன் கழுத்திலிருந்த மணியின் ஓசையை பெருங்குழவி விரும்பியது. எனவே எங்கிருந்தாலும் தன் உடலை அசைத்து அம்மணியோசையை எழுப்பிக் கொண்டே இருந்தது. அரண்மனையின் அனைத்து அறைகளிலும் நிறைந்த மணியோசையை கேட்டு காவலர் தலைவன் “இம்மணியோசையால் எந்தப்பயனும் இல்லை அமைச்சரே. எந்நேரமும் இது கேட்டுக் கொண்டிருக்கிறது. துயிலுகையில்கூட யானை உடல் அசைக்கும் என்பதை இப்போதுதான் அறிந்தேன்” என்றான். “இதன் கால்களுக்கு மணி கட்டுவோம். அவ்வோசையை வீணே எழுப்ப முடியாதல்லவா” என்றான். அதன் நான்கு கால்களுக்கும் சதங்கை மணிகள் கொண்ட பொன்னணிகள் அணிவிக்கப்பட்டன.
அரண்மனையின் இடைநாழிகள் வழியாக புகுந்து வாயில்களை முட்டித் திறந்து சேடியரின் பின்புறங்களை முட்டிச் சரித்து விளையாடிய களிற்று மகவிடம் சினங்கொண்ட மூதாட்டி ஒருத்தி “நீர் என்ன இளவரசரா? களிறுதானே? யானைக் கொட்டிலுக்கு செல்லுங்கள்” என்று சீறினாள். அவள் முகத்தை நோக்கியபடி அசைவற்று நின்றபின் திரும்பிச் சென்று அவ்வறையின் ஒரு மூலையில் முகத்தை சேர்த்து நின்று கொண்டது.
ஒளிந்து விளையாடுவது அதன் வழக்கம். திரைச்சீலைகளுக்குப் பின்னால் தூண்களின் மறைவில் அசைவற்று நின்று அவ்வழியாக வருபவரை துதிக்கை தூக்கி பிடிப்பது அதன் ஆடல். ஒளிந்து நிற்பது யானைகளுக்கு பிடித்தமானது என்று யானைக்குறியாளர் சொன்னார்கள். ஆனால் பகல் முழுக்க அவ்வண்ணமே அது முகம் திருப்பி நிற்கக் கண்டபின்புதான் அதில் ஏதோ பிழையுள்ளது என்று செவிலியர் உணர்ந்தனர். அமைச்சர்கள் வந்து அதைச் சுற்றி குழுமினர். அக்ரூரர் வந்து அதன் முதுகைத் தட்டி “தென்னரசே, என்ன இது? ஏன் இங்கு நிற்கிறீர்கள்?” என்றார். செவிலியர்தலைவி “வெல்லமும் கரும்புச் சாறும் அளித்தோம். எதையும் உண்ணவில்லை” என்றாள்.
அக்ரூரர் வந்து வெல்லக்கட்டி ஒன்றை எடுத்து அதன் துதிக்கைக்கு அளித்தார். துதிக்கை அதை பற்ற மறுத்து விட்டது. கூர்மர் வந்து அதை நோக்கினார். “இது நோயெதுவும் அல்ல. அவர் சினந்துளார். இங்கு எவர் மீதோ அவர் முனிந்துள்ளார்” என்றார். “எவர் மேல்?” என்றார் அக்ரூரர். மூதாட்டியாகிய செவிலி கை கூப்பியபடி “அறியாதுரைத்தேன் அமைச்சரே. களிற்றுக் கொட்டிலில் சென்று நிற்கவேண்டியதுதானே என்று சொன்னேன். நான் அறிந்திருக்கவில்லை இவர் சினம்கொள்வார் என. என் மைந்தனைப்போல் எண்ணினேன்” என்றாள்.
சினத்தில் சிவந்து நடுங்கிய முகத்துடன் அக்ரூரர் “வா, இங்கு வா” என்று அவளை அழைத்து முன்னால் தள்ளி “அவர் முன் சென்று நின்று உன் தலையை அவரது முன்காலடியில் வை” என்றார். ”உன்னைக் கொன்று சினம் தணிப்பது அவர் விழைவென்றால் அவ்வண்ணமே ஆகட்டும்” என்றார். “ஆம். அதற்கும் நான் சித்தமாக உள்ளேன்” என்றபடி கைகூப்பி அழுதபடி வந்து களிற்றுமகவின் முன் அமர்ந்து அதன் வலது முன்காலில் தன் தலையை வைத்தாள் செவிலி.
தன் கால்களை பின்னுக்கு இழுத்தது அது. துதிக்கையை நீட்டி அவள் மேலாடையைப் பற்றி இழுத்து இடமுலையின் கண்ணை மெல்லிய மூக்கு நுனியால் வருட காவலர் தலைவன் வெடித்துச் சிரித்தபடி புறம் காட்டினான். அக்ரூரர் சிரிப்பை அடக்கி உடல் குலுங்கினார். திரும்பி கூடிநின்ற கூட்டத்தைப் பிளந்து இடைநாழியில் ஓடியது யானைக்குட்டி. கூர்மர் “நானும் ஒரு கணம் சிந்தை மயங்கிவிட்டேன் அமைச்சரே. இது எளிய யானை அல்ல. அவ்வுருவில் இம்மண் நிகழ்ந்த பிறிதொன்று. பேரருள் ஒன்றை அன்றி பிறிதொன்றையும் இதனிடமிருந்து எவ்வுயிரும் பெறப்போவதில்லை” என்றார்.
இளைய யாதவர் தன் நிமித்திகர் அவையைக் கூட்டி அக்களிற்றுமகவுக்கு ஒரு பெயர் சூட்டும்படி ஆணையிட்டார். அது பிறந்த நேரம் சேரநாட்டின் யானைக்குறி தேர்பவர்களால் பதிவு செய்யப்பட்டு ஓலையில் பொறிக்கப்பட்டு உடன் அனுப்பப்பட்டிருந்தது. மதங்க ஜாதகம் என்னும் அவ்வோலையில் அதன் பதினெட்டு நற்குணங்கள் அங்குள்ள நிமித்திகர்களால் குறிக்கப்பட்டிருந்தன. அது நகருள் கால் வைத்த முதற்கணத்தை கணக்கிட்டு அத்தருணத்தின் கோள்அமைப்பையும் விண்மீன் உறவையும் விரித்தெடுத்தனர் நிமித்திகர். அதன் பதினெட்டு நற்சுழிகளை தொட்டெண்ணி நூல் பதித்தனர் மாதங்கர்.
வலக்கால் மடித்து அது அமரும் முறை, இடப்பக்கம் சரிந்து அது துயிலும் வகை, இடக்கால் மடித்து எழுந்து வலக்கால் முன்வைத்து அது வரும் இயல்பு, நன்கு அமைந்த நீள்அம்பு என நேர்கோட்டில் ஓடும் தகைமை என ஒவ்வொன்றையும் கணித்தனர். “அரசே, ஏரிக்கரை சேற்றில் அது செல்லும்போது நோக்குங்கள். நான்கு கால் கொண்ட விலங்கு அது. ஆனால் செல்லும் போது ஒற்றைக்கால்தடம் மட்டுமே நேர் கோடென விழுந்திருக்கும்” என்றார் கூர்மர். பதினெட்டு நாட்கள் நிமித்திகரின் நெறி சூழ்கை முடிந்தபின் தலைமை நிமித்திகர் அவையில் எழுந்து “மண்ணில் இருந்து விண்ணேகும் எவருக்கோ ஊர்தியாக ஆவதெற்கென இங்கு வந்த யானையுருக் கொண்ட இத்தேவனுக்கு விண்ணவர் முன்னரே பெயர் சூட்டியிருக்கின்றனர் என்று அறிந்தோம். சுப்ரதீபம் என்று இதை அழைக்கிறோம்” என்றார். அவை ஒரேகுரலில் “மங்கலம் நிறைக!” என வாழ்த்தியது.
“எது மலர்களில் வெண்தாமரையாகியதோ, எது பொருட்களில் வெண்பளிங்கு ஆகியதோ, எது பறவைகளில் அன்னமாகியதோ, அது விலங்குகளில் இதுவாகியுள்ளது. பழுதற்ற பெருந்தூய்மை ஒன்றின் பீடம் இது. கதிரவனை தன்மேல் அமர்த்தும் வெண்முகில். இந்நகர் இதன் ஒளியால் அழகுறுவதாக!” என்றார் இளைய யாதவர். அவை களிகொண்டு “வாழ்க! வாழ்க!” என வாழ்த்தியது.
சுப்ரதீபம் யானைகளுடன் இருந்ததில்லை. அரண்மனையின் மைந்தருடன் ஆடி அது வளர்ந்தது. ஒரு போதும் தளைக்கப்பட்டதில்லை. நூறு சிறுவருடன் கூடி முட்டி மோதி துதிக்கை சுழற்றி ஓடி விளையாடும்போதும் அன்னையர் எவரும் அதை அஞ்சியதில்லை. தவழ்ந்து செல்லும் குழந்தை அதன் கால்களுக்கு இடையில் அமர்ந்து களித்திருக்கும்போது அன்னையர் அப்பால் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தனர். களிவெறி மீதூறி மதில்களின் மேல் அது ஏறுகையிலோ சிற்றறைகளுக்குள் உடல் திணித்து சுவரை இடிக்க முற்படுகையிலோ ஒரு குடுவை குளிர்நீரை அதன் மேல் ஊற்றினால் போதும் என்று கண்டுகொண்டனர். குளிர்நீர் பட்டதும் அவ்வண்ணமே அசைவழிந்து உடல் சிலிர்த்து துதிக்கை நெளித்து நிற்கும். மெல்ல கழுத்தணியைப் பற்றி பூனைக்குட்டியை அழைத்துச் செல்வதுபோல் சென்றுவிட முடியும்.
இளைய யாதவருக்கு மிக அணுக்கமான ஒன்றாக இருந்தது சுப்ரதீபம். ஒவ்வொரு நாளும் இரவில் அதற்கென்றே அமைக்கப்பட்ட அணிக்கொட்டிலில் அது துயில்வதற்கு முன் இளைய யாதவர் சென்று மத்தகத்தையும் நீண்ட துதிக்கையையும் செவ்வெண் மலரிதழ் போன்ற செவிகளையும் வருடி தேங்காயும் பழமும் அளித்து மீள்வார். காலையில் விழித்தெழுந்ததுமே கண்களை மூடிக்கொண்டு அரண்மனையின் சுவர்களையும் தூண்களையும் தொட்டபடி நடந்து அதன் கொட்டிலுக்குள் நுழைந்து மத்தகத்தின் முன் நின்று கண் திறப்பார். அதன் வெண்ணிறப் பெருங்கையை தன் தோளில் தார் என அணிந்து வெண் தந்தங்களை அழுத்தி விளையாடுவார்.
குழவிநாட்களில் அது இரவில் கனவுகண்டு விழித்துக்கொண்டால் பிளிறியபடி எழுந்து கொட்டிலை விட்டிறங்கி கதவுகளை முட்டித்திறந்து சதங்கை ஒலிக்க ஓடி அரண்மனைக்குள் புகுந்து இடைநாழிகளில் விரைந்து மரப்படிகளில் ஏறி இளைய யாதவரின் படுக்கை அறைக்குள் நுழைந்து அவரது மஞ்சத்தருகே நின்று அவர் மேல் துதிக்கையை போட்டுக் கொள்ளும். மெல்ல புரண்டு புன்னகைத்து “கனவா? இங்கேயே துயில்க என் செல்லமே” என்பார். கால் மடித்து அவர் மஞ்சத்தருகே படுத்து அவர் மெத்தை மேல் மத்தகத்தை இறக்கி வைத்து துதிக்கை நீள்மூச்சில் குழைந்து அசைவிழக்க விழி சரிந்து துயிலத் தொடங்கும்.
காலையில் இளைய யாதவரை எழுப்ப வரும் ஏவலன் மஞ்சத்தில் துயின்று கொண்டிருக்கும் வெண்களிறைக் கண்டு வியந்து வாய் பொத்தி சிரிப்படக்குவான். ஒவ்வொரு நாளும் என அது வளர்ந்தது. அதன் தோலின் வெண்ணிற ஒளி கூடிக்கூடி வந்தது. வெண்ணைக்குவை என்றனர். பளிங்கு மலை என்றனர். வெண்முகிலிறங்கி வந்தது என்றனர். பீதர் நாட்டு வெண்பட்டுக்குவை என்றனர். அதன் தந்தங்கள் கட்டு மரங்கள் போல் நீண்டு வளைந்து எழுந்தன. பெருநாகம் போல் ஆயிற்று துதிக்கை. அரண்மனையின் வாயில் எதற்குள்ளும் நுழைய முடியாமல் ஆனபோது ஒவ்வொரு நாளும் வாயிலில் முன்னால் முற்றத்தில் நின்று துதிக்கை தூக்கி நெற்றி தொட்டு பிளிறலோசை எழுப்பும். உள்ளிருந்து இளைய யாதவரும் எட்டு துணைவியரும் அதை தொட்டு வணங்கி வாழ்த்து பெற்று மீள்வர்.
துவாரகையின் விருஷ்ணிகளும் அந்தகர்களும் கூடிய அவையில் அரிஷ்டநேமியின் மணமங்கலம் குறிக்கப்பட்டது. சௌரபுரத்தின் அரசர் சமுத்ரவிஜயரும் அவரது மைந்தர்களும் அவை வீற்றிருந்தனர். ரைவதத்திலிருந்து திரும்பிய இளைய யாதவர் அரியணை அமர்ந்திருந்தார். நிமித்திகரும் அமைச்சரும் பீடம் கொண்டிருந்தனர். நாளும் கோளும் நற்குறிகளும் பழுதற தேர்ந்து அறிந்ததை செய்யுளாக்கி ஏட்டில் பொறித்து அதை அவை முன் வைத்தார் முது நிமித்திகர் சுதர்ஷணர்.
அதை அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அக்ரூரர் இளைய யாதவரின் கைகளுக்கு அளித்தார். இளைய யாதவர் குலமுறைப்படி அதை பெற்றுக் கொண்டு அவையறைவோனை அழைத்து அதை அவை முன் படிக்கும்படி ஆணையிட்டார். எட்டு மங்கலங்களும் நிறைந்த சித்திரை முழுநிலவு நன்னாளில் மணம் நிகழக்கடவது என்றிருந்தனர் நிமித்திகர். விண்ணவர் வானில் சூழும் பெருநாள் என அதை காட்டின குறிகள். மண்ணிலுள்ள எண்வகை உயிர்களும் மகிழ்ந்து கொண்டாடும் தருணம் அது.
“அன்று கீழ் வானில் ஒரு ஏழுவண்ண வானவில் எழும். மேற்கு வானில் இந்திரவஜ்ரம் எழுந்து ஏழுமுறை மின்னி அமையும். பதினெட்டு முறை முழங்கி இடியோசையென தெய்வங்களின் வாழ்த்தொலி எழும். பொற்துகளென இளமழை பொழிந்து மண் குளிரும். அன்று எவ்வுயிரும் பிறிதொரு உயிரை வேட்டையாடாது. அன்று காலை எம்மலரிலும் வண்டுகள் அமராது. தொடப்படாத தூய மலர்கள் அனைத்தும் விண்ணிறங்கி வரும் கந்தர்வர்களுக்காக காத்திருக்கும்.”
“இப்புவி உள்ள நாள் வரை நினைவுகூரப்படும் நன்னாள் அது. சைத்ர மாதம் முழுநிலவு. குருபூர்ணிமை. மெய்மை அறிந்தோர் சொல்லும் வார்த்தையில் கலைமகள் வந்தமரும் நன்னாள். மந்திரங்கள் உயிர் கொள்ளும் தருணம். வெண்ணிற யானை மேல் ஏறி மணங்கொள்ள எழுவார் இவ்விளையோர். அவ்வண்ணமே ஆகுக அனைத்து மங்கலங்களும்.”
அச்சொல் கேட்டதும் அவை கலைந்து எழுந்த ஓசை சொல் தொட்டு வாசித்து நின்ற அறைவோனை விழிதூக்க வைத்தது. இளைய யாதவர் புன்னகையுடன் “ஆம். அதற்கென்றே அமைந்தது போலும் சுப்ரதீபம்” என்றார். அந்தகக்குடி மூத்தார் திகைப்புடன் “அதன் மேல் இதுவரை மானுடர் ஏறியதில்லையே” என்றார். பிறிதொருவர் “மானுடர் ஏறிச் செல்வதை அது விழையுமோ என்றே ஐயமாக உள்ளது. யானைகள் இளவயதிலேயே தங்கள் மேல் மானுடரை ஏற்றி பழகியனவாக இருக்க வேண்டும் அல்லவா?” என்றார்.
அவர்கள் கூற வருவது அதுவல்ல என்பதை உணர்ந்த இளைய யாதவர் “மூத்தாரே, இந்நகருக்கு அவ்வெண்களிறு வந்தபோது அது தெய்வங்களின் ஆணை என்று நாம் அறிந்தோம். இன்று நிமித்திகர் சொல்லில் இவ்வரி எழுந்ததும் தெய்வங்களின் ஆணை என்றிருக்கட்டும். இதில் நாம் சொல்ல ஏதுள்ளது? அவரை தன் மத்தக பீடத்தில் அமர்த்த வேண்டுமா வேண்டாமா என்பதை சுப்ரதீபமே முடிவெடுக்கட்டும்” என்றார். அச்சொல்லிலும் நிறைவுறாது குடிமூத்தாரின் அவை வண்டுக்கூட்டமென கலைந்த ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.
“முழுமை அடைந்த மானுடன் ஒருவன் விண் வடிவோன் ஆகி மண் விட்டெழுவதற்காக வந்தது அவ்வெண்களிறு என்று பத்து வருடங்களாக இங்கு சூதர்கள் பாடியுள்ளனர். எத்தனை சிறப்புடையதாயினும் இது ஒரு மணவிழா அல்லவா? இளவரசர் ஒருவர் தன் அரசியை மணப்பதற்கு ஏறிச்செல்வதற்காகவா அந்த தெய்வ ஊர்தி?” என்றார் ஒரு குடி மூத்தார். “ஏன்? மண்ணில் பிறக்கவிருக்கும் விண்ணவன் ஒருவன் பிறப்பதற்காக அமைகிறது இம்மணவிழா என ஏன் சொல்லக்கூடாது? பாரதவர்ஷத்தை ஆளும் சக்ரவர்த்தி கருபீடமேறக் கண்ட வழிபோலும் இது” என்றார் ஸ்ரீதமர். “இவை அனைத்தும் சொற்கள். நாமறியும் அறியவொண்ணா ஒன்றை இவ்வண்ணம் நாம் விளக்கிக் கொண்டிருக்கிறோம். நிகழவிருப்பது எதுவோ அதை தெய்வங்கள் முடிவெடுக்கட்டும். நமக்கு ஆணையிடப்பட்டதை இயற்றுவோம்” என்றபின் அக்ரூரரிடம் திரும்பி “தங்கள் எண்ணமென்ன அக்ரூரரே?” என்றார் இளைய யாதவர்.
“ஒவ்வொன்றும் நிகழ்கையில் முற்றிலும் இயைபின்றி ஒன்றன்மேல் ஒன்றென வந்து விழுவதுபோல் தோன்றுவதே இப்புடவியின் இயல்பு. நிகழ்ந்து முடிந்த பின்னரே அவை ஒவ்வொன்றும் பிறிதொன்றுடன் பழுதற இணைந்திருப்பதை நாம் காண்கிறோம். அலகிலாத ஊழ் வலையால் சமைக்கப்பட்டது இப்புடவி என்றறிந்துளோம். அதுவே நிகழ்வதாகுக!” என்றார் அக்ரூரர். “ஆம், நானும் அவ்வண்ணமே உரைக்கிறேன். இது அரசாணை. மணநாளில் வெண்களிறு மேலேறி என் மூத்தார் மணப்பந்தலை அடையட்டும்” என்றார் இளைய யாதவர்.
அவை நிறைவுற்று கலைந்து செல்லும்போது ஒவ்வொருவரும் அகம் குலைந்து பதறும் உடல் கொண்டிருந்தனர். “என்ன நிகழவிருக்கிறது இங்கு?” என்றார் ஒருவர். “வெண்களிறு ஏறி மணப்பந்தலுக்கு வருபவரைப் பற்றி இதுவரை கேட்டதில்லை” என்றார் பிறிதொருவர். “ஒரு மணநாளுக்கென விண்ணில் இந்திர வில் எழுமென்றால், வஜ்ரம் ஒளிரும் என்றால், இடி சொல்லி பிரம்மம் வாழ்த்தும் என்றால் வெண்களிறு ஏறிவருவதற்கென்ன?” என்றார் மூன்றாமவர்.
அவர்களிடருந்து அச்சொற்கள் பரவி நகரை அடைந்தன. எங்கும் அதுவே அன்று பேச்சென்றிருந்தது. இளைய யாதவர் தன் அமைச்சர்களை அழைத்து “சுப்ரதீபம் மேல் இளவரசர் அமர்வதற்குரிய பொற்பீடம் அமைக்கப்படட்டும். பட்டத்து யானைக்குரிய அணிகலன்கள் அனைத்தும் அதற்கு ஒருங்கட்டும்” என்றார். கூர்மர் “அவ்வாறே” என்று தலைகுனிந்தார். “நீர் என்ன எண்ணுகிறீர் கூர்மரே? தன் மேல் மானுடர் அமர அது ஒப்புமா?” என்றார் இளைய யாதவர். கூர்மர் தலைவணங்கி “அறியேன். ஆனால் இம்மணநாள் அதற்கும் ஒரு நன்னாள். பதினெட்டு அகவை நிறைகையிலேயே குழவி களிறாகிறது. அரசே, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றதொரு சித்திரை முழுநிலவு நாளில்தான் அது மண் நிகழ்ந்துள்ளது” என்றார்.
யானைப்பயிற்றுநர் எவரையும் அணுக அது விட்டதில்லை. அதற்கென்று கோலேந்திய பாகர்கள் எவரும் இருக்கவும் இல்லை. அதை நீராட்டி உணவூட்டி பேணும் ஏவலர்களே இருந்தனர். ஒரு முறையேனும் கோலோ துரட்டியோ அதன் மேல் தொட்டதில்லை. மானுடர் அதற்கு கற்றுக் கொடுக்க ஏதுமில்லை என்றார் கூர்மர். அது அறியாத அவைமுறைமைகளோ, புரிந்து கொள்ளாத மானுட மெய்ப்பாடுகளோ, துவாரகையில் அதன் நினைவில் இல்லாத இடங்களோ இருக்கவில்லை.
பிறயானைகள் அனைத்தும் அதை நன்கு அறிந்திருந்தன. யானைப்பெருங்கொட்டிலில் உணவு இடுகையில் ஒருவர் உண்ணும் கவளத்தை பிறிதொருவர் நோக்கி சினம் கொண்டு மத்தகம் உலைத்து, துதிக்கை சுழற்றி, இடியோசையிடும் போர்க்களிறுகளைக் கண்டு பாகர்கள் ஓடிவந்து அதை அழைத்துச் செல்வார்கள். யானைக் கொட்டிலுக்குள் சுப்ரதீபம் காலெடுத்து நுழைந்ததுமே முரண்டு நிற்கும் களிறுகள் தலைதாழ்த்தி துதிக்கை ஒதுக்கி பின்வாங்கும். எந்த யானையையும் திரும்பி நோக்காது மெல்ல நெளியும் துதிக்கையுடன், விசிறும் வெண்சாமரச் செவிகளுடன் எண்ணி எடுத்து வைத்த பஞ்சுப்பொதி பேரடிகளுடன் கொட்டிலைக் கடந்து அது மறுபக்கம் செல்லும்போது மாற்று ஒன்று அற்ற முழு வணக்கத்துடன் மதமொழுகும் பெருங்களிறுகளும் ஈன்று பழுத்த அன்னைப் பிடிகளும் திமிரெழுந்த இளங்களிறுகளும் கட்டென்று ஏதுமறியாத குழவிகளும் அசைவற்று நிற்பதை காண முடியும்.
சுப்ரதீபத்தின் மேல் ஒருமுறைகூட மானுடரோ தெய்வங்களோ ஏறியதில்லை. அதன் மத்தகமும் முதுகும் எவ்வண்ணம் இருக்கும் என்பதை ஒவ்வொரு நாளும் ஏரியில் அதை இறக்கி நீராட்டும் அணுக்கப்பாகர்கள் மட்டுமே அறிந்திருந்தனர். “ஒவ்வொரு இதழென மலர்ந்தபடி இங்கு காத்திருக்கிறது ஒரு வெண்தாமரை மலர்ப் பீடம்” என்றனர் சூதர்.