இலக்கியத்தில் இன்று …

index

 

சீன ஞானமரபின் சிறப்பான பங்களிப்பாகக் கருதப்படுவது யின் – யாங் என்ற அவர்களின் இயங்கியல் கருதுகோள். அதை எளிதில் விளக்கமுடியாது. ஒன்றை ஒன்று நிரப்பக்கூடிய ஒன்றை ஒன்றுசெயல்படச்செய்யக்கூடிய ஒன்றை ஒன்று விளக்கக்கூடிய இரு எதிரீடுகள் என்று சொல்லலாம். இரவுபகல் போல. ஆண்பெண் போல. மின்சாரத்தில் நேர் எதிர் போல.

எல்லாவற்றுக்கும் சீனர்கள் அதைபயன்படுத்துகிறார்கள். அதாவது நன்மை உள்ளுறையாத தீமையோ தீமை உள்ளுறையாத நன்மையோ இல்லை. வீழ்ச்சி இல்லாத எழுச்சி இல்லை. அறம் இல்லாத மறம் இல்லை. அழகு இல்லாத அசிங்கம் இல்லை. இருட்டுக்குள் ஒளியும் ஒளிக்குள் இருட்டும் உண்டு.

மானுட உணர்ச்சிகளுக்குக் கூட சீனர்கள் அதைப் போட்டுப்பார்ப்பதுண்டு. உணர்ச்சி உச்சங்கள் அனைத்தும் நேர் எதிரான உணர்ச்சிகளாலும் சமன்செய்யப்பட்டவை. ஒன்றைநாம் பார்க்கும்போது பிறிதொன்று மறைந்து விடுகிறது. பெருங்கருணைக்குள் கொடுமையும் கொடுமைக்குள் கருணையும் இருந்தாகவேண்டும்.

சமீபத்தில் சு.வேணுகோபால் எழுதிய வெண்ணிலை என்ற தொகுதியில் வரும் தொப்புள்கொடி என்ற கதையை வாசித்தபோது இதையே எண்ணிக்கொண்டேன். அது கார்த்திகா என்ற பெண்ணின் கதை. அவள் அம்மா பெயர் தவமணி. சாதாரண விவசாயக்குடும்பம். திடமான உழைக்கும்பெண் கார்த்திகா. ஒருமுறை நெல்லறுவடைக்காக குத்தகைதாரருடன் ஒரு குழுவாக பக்கத்து ஊருக்குச் செல்கிறாள். அங்கே எதையோ கண்டு பயந்திருக்கலாம். மனம் கலங்கிவிடுகிறது

முதலில் பேசிக்கொண்டே இருக்கிறள். பேச்சு அர்த்தமில்லாமல் செல்லும்போது வேறுபாட்டைக் கவனிக்கிறார்கள். பின்பு பாட்டு. சினிமாப்பாட்டும் தாலாட்டும் ஒப்பாரியும் மாறிமாறிக் கலந்த தடையற்ற பிரவாகம். காடுமேடென கட்டில்லாமல் அலைந்த விவசாயிமகளை அடைத்துப்போட முடியவில்லை. கேலிசெய்பவர்களை காதுகூசும் கெட்டவார்த்தைகளால் வசைபாடுகிறாள். ஆழ்மனதுக்குள் உள்ள அத்தனை வக்கிரங்களும் சொல்வடிவம் கொண்டு பீரிடுகின்றன

வேலைகள் செய்வாள். கொடுத்தால் சாப்பிடுவாள். மெல்லமெல்ல அதுவும் இல்லாமலாகிறது. சொல்லப்படும் எதுவும் அவளுக்குள் சென்று சேர்வதில்லை. காட்டிலேயே தங்கிவிடுகிறாள். எதையாவ்து பொறுக்கி உண்பதுடன் சரி. பசிக்கையில் தன் வீட்டுக்குவந்து கழனிபபனையில் நீர் குடித்து அடியில்தங்கும் சோற்றுவண்டலை அள்ளி தின்கிறாள். தட்டில்வைத்து ஊட்ட அம்மா முன்வந்தாலும் சாப்பிடுவதில்லை. மனிதர்கள் எவரையுமே அடையாளம் காண்பதில்லை

ஒருநாள் ஊரிலே கவனிக்கிறார்கள், அவள் கர்ப்பமாக இருக்கிறாள். அம்மாவும் அப்பாவும் அண்ணனும் அவளை அடிஅடியென அடித்து துவைக்கிறார்கள். ‘என்ன பண்ணினே, யாருடி அவன், சொல்லு’ என்று துவைத்து எடுக்கிறார்கள். அவள் சொல்வதில்லை. அவளுக்கு தெரிவதே இல்லை. அடிகள் கூட வேறு எவருக்கோதான் விழுகின்றன

அவள் கரும்புக்கொல்லையில் குழந்தைபெற ஆரம்பிக்கும் இடத்தில்தான் வேணுகோபாலின் கதை தொடங்குகிறது. குருதியும் சலமும் கொட்டி நனைந்த சேலை குடல்போல பின்னால் இழுபட தாள முடியாத வலியுடன் கதறி ஊளையிட்டபடி அவள் ஊருக்குள் வருகிறாள். ஊரார் கூடி அவளை ஒரு மாட்டுத்தொழுவுக்கு இட்டுச்செல்கிறார்கள். கேலிசெய்த வாய்கள் கூட அனுதாபம் உதிர்க்கின்றன. ஊரே அவளுக்காக பிரார்த்தனைசெய்கிறது. மரணம் பிறப்பு இரண்டும் மானுடத்தின் ஆதாரப்புள்ளிகள் அல்லவா?

குழந்தை பிறக்கிறது. அழகான ஆண்குழந்தை. அதைக்கண்டு ஏனோ ஊர் கண்ணீர் வடிக்கிறது. எதுவுமே தெரியாத பித்திக்கு அந்தக்குழந்தை தன்னுடையதென மட்டும் தெரிந்துவிடுகிறது. அள்ளி மார்போடணைத்துக்கொள்கிறாள். சுரக்கும் முலைகளை அதன் வாயில் வைத்து அழுத்துகிறாள். பால்குடி பால்குடி என்று போட்டு படுத்தி எடுக்கிறாள். ’குழந்தைக்கு சப்ப தெரியவில்லைடீ..இங்கே கொடு’ என்று கேட்டு அருகே வரும் தவமணிக்கு இடுப்பைச்சேர்த்து ஓர் உதை விழுகிறது. தெறித்து விழுகிறாள் அவள்.

எவரும் கார்த்திகா அருகே நெருங்கமுடிவதில்லை. குழந்தையை மூர்க்கமாக அணைத்துக்கொண்டு கரும்புக்காட்டுக்குள் செல்கிறாள். அது அழுது அழுது நீலமாகிறது. இரவில்வந்து கழனிப்பானை வண்டலை அள்ளி குழந்தைக்கு ஊட்டுகிறாள். குழந்தை அலறி விரைத்திருக்கிறது. தவமணி தூரத்தில் நின்று கொன்னுடாதடீ என்று கதறுகிறாள்

குழந்தை மறுநாள் இறக்கிறது. இறந்துவிட்டதென்பதை அவளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. குழந்தையை கொஞ்சியபடி அலைகிறாள். எவரும் நெருங்கமுடிவதில்லை. மூன்றாம்நாள் குழந்தை உப்பி வெடித்து ஒழுக ஆரம்பிக்கிறது. அப்போதும் பிடியை விடுவதில்லை. வேறுவழியில்லாமல் வீட்டில் ஓர் முடிவெடுக்கிறார்கள். தவமணி அதற்குச் சம்மதிக்கிறாள். ஆனால் கடைசியில் ’வேண்டாங்க வேண்டாங்க’ என்று மனம் பொறாது கதறுகிறாள்

கழனிப்பானை நீரில் முழுப்புட்டி பாலிடாலைச் சரிக்கிறார்கள். அன்று அவர்கள் காத்திருக்கையில் அவள் வந்து அதை அள்ளி உண்கிறாள். அறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தவமணி எப்படியோ வந்து ‘என்னைபெத்த மகளே’ என்று கதறுகிறாள். வாயில் நுரைதள்ளும்போது கார்த்திகாவுக்கு ஓர் உணர்ச்சி எழுகிறது ’அம்மா’ என்று அழைக்கிறாள். இறந்துவிடுகிறாள்.

தாய்மை என்ற பெரும்பித்தின் கொடூரத்தைச் சித்தரிக்கும் கதை இது. இதன் யின் யாங் மிகச்சிக்கலானது. நுட்பமாகப் பாருங்கள். கார்த்திகா மட்டுமல்ல கொலைகாரத்தாய், தவமணியும்கூடத்தான்! பேரரருளே பெரும் கொடூரமாக எப்படி மாறுகிறது? ஒன்றுக்குள் ஒன்று உறைகிறதா என்ன?

சு.வேணுகோபால் சமகால எழுத்தாளர். என் பிரியத்திற்குரிய இளவல். என் பெருமதிப்புக்குரிய மூதாதை கி.ராஜநாராயணன் இதேபோன்றதொரு கதையை எழுதியிருக்கிறார். ‘பேதை’ 1966ல் , சு.வேணுகோபாலின் கதைக்கு சரியாக நாற்பதாண்டுகளுக்கு முன்பு, சாந்தி இதழில் அக்கதை வெளியானது.

அவள்பெயர் பேய்ச்சி. அப்பெயருக்கே உரியவள். பித்தி. பருத்தி அறுவடைக்காக ஊர்ஊராகச்செல்லும் வரண்டநிலத்து நாடோடிகளில் ஒருத்தி. இயற்கை அவளுக்கு ஓர் அருளை கொடுத்திருந்தது, ஓர் அப்சரஸுக்குரிய மார்பகங்களை’ என்கிறார். அவளுக்கு மனம் மிக மங்கல். சொன்னால்புரியும் ஆனால் சொல்லிப்புரியவைப்பது கடினம். இரவுபகல் பார்க்காத கடும் உழைப்பு. அதற்கான சிறு கூலியில் சீனிக்கிழங்கையே முக்கியமான உணவாக உண்டு வாழ்கிறார்கள் அவளும் அவள் சுற்றமும்.

உழைப்பின் உச்சியில் பிணம்போல அவள் தூங்குவாள். வேப்பமரத்தடியில் அவள் தூங்கும்போது ஓர் அழகான கனவு. ஒரு குழந்தை கதவை சற்றே திறந்து அவளைப்பார்க்கிறது, ஒளிந்துகொள்கிறது. பளபளவென அழகான குழந்தை. அவள் முகத்தில் வேப்பமரக்கிளை அசைய நிலவொளி மறைந்து மறைந்து விழுந்துகொண்டிருக்கிறது. அவள் குழந்தையை சட்டென்று பிடித்து ஆவிசேர கட்டிக்கொள்கிறாள். குழந்தை கனக்கிறது, வேப்பமரமே அவள் மேல் விழுந்துவிட்டது போல.

பேய்ச்சி கருவுறுகிறாள். ஊரே அதிர்ந்து போகிறது. அவளுடைய ஊர்க்காரர்கள் அவளை போட்டு அடித்து உதைத்து விசாரிக்கிறார்கள். அவளுக்கு தெரியவில்லை. மெல்ல வயிறு வளர்கிறது. ஊர்ப்பெண்களின் கருணை காரணமாக சோறும் கூழும் கிடைக்கிறது. வயிறு தழையத்தழைய அவள் முகத்தில் ஓர் ஒளி கூடுவது போலிருக்கிறது. அந்த வேப்பமரத்தடியில் வந்தமர்ந்து கனவுக்குள் மூழ்கும்போது அவள் முகம் இனிதாகவும் ஆகிறது

குழந்தை பிறக்கிறது. ஊர்கூடி பிரசவம் பார்க்கிறார்கள். செக்கசெவேலென ஒரு அழகான குழந்தை. குழந்தையில்லாதவர்கள் பார்த்து பெருமூச்சுடன் கண்ணீர்விடுகிறார்கள். பேய்ச்சிக்கு அபாரமான தாய்ப்பால். ஒரு முலையில் குழந்தை பருகும்போது குருதிகொட்டும் காயம்போல மறுமுலை சொரிந்து துணியை நனைக்கிறது. எப்போதும் அவளிடம் ஒரு தாய்ப்பால்கெச்சை அடிக்கும்

குழந்தை திண்திண்ணென வளர்கிறது. குழந்தையுடன் அவள் வேலைகள் செய்தாள். ஒருவரும் அதை தொட அனுமதிப்பதில்லை. எந்நேரமும் அது அவள் உடலுடன் இருந்தது. அதனுடன் மட்டுமே அவள் பேசினாள். அதனிடம் மட்டுமே சிரித்தாள். ஒருநாள் டிப்தீரியா கண்டு அது இறந்து போகிறது. அது இறந்தது அவள் உள் சென்றுசேரவில்லை. அவள் எப்போதும்போல குழந்தையுடன் இருந்தாள், சிரித்து பேசி பாலூட்டி

குழந்தையை பிரிக்க முயல்கிறார்கள். அவள் காட்டுக்குள் தப்பி ஓடுகிறார்கள். பன்றி பிடிக்கும் ஆட்களை வரவழைத்து சுற்றிவளைத்து மூன்றாம்நாள் குழந்தையை பிடுங்கும்போது அது மட்க ஆரம்பித்திருந்தது. அதை சுடுகாட்டில் அடக்கம்செய்தபின் அவளை கைகால் கட்டி அவளது ஊருக்கே கொண்டுசென்றுவிடுகிறார்கள்.

ஆனால் தன் வீட்டின் கூரையைப் பிய்த்துக்கொண்டு அவள் வெளிவந்து ஓடியே இடைச்செவல் வருகிறாள். கோயில்பட்டிக்குச் செல்லும் சாலையில் விளக்குகள் ஆட மணியோசையுடன் செல்லும் மாட்டுவண்டிகளின் வண்டிக்காரர்கள் புதர்களை காற்று போல ஊடுருவி அவள் செல்வதைக் கண்டு அலறுகிறார்கள். அவள் சுடுகாட்டில் நுழைது பிணம் எரியும் ஒளியில் தன் மகனின் குழிமாடத்தை கண்டு வெறும் கைகளால் தோண்டி பிணத்தை எடுத்து பேரலறலுடன் மார்போடணைக்கிறாள்

பசியில் அருகே எரியும் பிணத்தை பிய்த்து தின்கிறாள். அந்த சடலத்துடன் காட்டுள் நுழைந்து ஒரு கருவேலமரத்தின் மீது அமர்ந்துகொள்கிறாள். அதன்பின் சுடுகாட்டில் பிணங்களைத் தின்றும் பாம்புகளையும் பல்லிகளையும் உண்டும் அவள் காட்டில் இருக்கிறாள். பகலில் வெளிவருவதேயில்லை. இரவில் தெரு வழியாக ஒரு தாலாட்டுப்பாட்டுடன் அவள் செல்லும்போது உக்கிரமான நாற்றம் ஊரையே மூழ்கடிக்கிறது. அந்த நாற்றம் கனவுகளுக்குள் புகுந்து அங்கே கொடூரமான நிகழ்ச்சிகளை பிறக்கச்செய்கிறது.

அவளை துரத்தவேண்டுமென ஊரார் முடிவெடுக்கிறார்கள். ஒருவழியாக பெரும் படை திரண்டு அவளிடம் இருந்த அந்த மட்கிய தோல் மூடிய எலும்புக்கூட்டை பிடுங்கி எரிக்கிறார்கள். அவளை பிடித்து கட்டி வெகுதூரம் எங்கோ கொண்டு சென்று விட்டு விடுகிறார்கள். பின்பு அவள் வரவில்லை

ஆனால் ஒருவருடம் மாதம் கழித்து அவள் திரும்பி வந்தாள். மதிய வெயிலில் முழுநிர்வாணமாக நிறைமாத வயிற்றை தூக்கியபடி அந்த கோட்டிக்காரி திண்திண் என காலெடுத்து வைத்து நான் நான் என்ற நிமிர்வுடன் அந்த ஊர்த்தெருவழியாக நடந்துசென்றுகொண்டிருந்தாள்

கி.ராஜநாராயணனின் கதை வேறு ஒருதளத்தில் உள்ளது. ஓர் உக்கிரமான நாட்டார்கதையின் சாயல் இதில் உள்ளது. ’பொன்னிறத்தாள் அம்மன்’ கதை போல ஒரு பயங்கரக்கதை. அனைத்துவகையான குறியீட்டு நுட்பங்களும் உள்ள ஆக்கம் இது. அவள் பெயர் பேய்ச்சி. பித்தனின் பேயனின் துணைவி. அவள் முலைகளும் பாலும் வர்ணிக்கப்படும் விதமும் நேரடியாக நம் மரபின் மகத்தான ஆழ்படிமம் ஒன்றுக்குள் கொண்டு செல்கிறது – காளி! மரணமுகியான பைரவி, சுடுகாட்டில்வாழும் சாமுண்டி, பேரருள் சுரக்கும் துர்க்கை.

கி.ராஜநாராயணனின் கதை மரபில் இருந்து தொப்புள்கொடியுடன் நவீனக் கதையுலகுக்குள் வந்து அமர்ந்திருக்கிறது. ஆனால் சு.வேணுகோபாலின் கதை யதார்த்தத்தில் நிற்கிறது. குறியீட்டுத்தளம் மூலம் மரபின் எந்த நுண்மையான நரம்பையும் அது சீண்டவில்லை. அப்படி அப்படியே சொல்ல அது முயல்கிறது.

வேணுகோபாலின் கதையில் யின் யாங் இரண்டும் இயல்பான முரண்பாட்டுடன் உள்ளன. கி.ராவின் கதையில் அந்த முரணியக்கம் சென்ற காலத்தில் கண்டடைந்த மகத்தான சந்திப்புப்புள்ளி ஒன்று நிகழ்ந்திருக்கிறது. நிறைவயிறுடன் செல்லும் பேய்ச்சி என்ற அந்த உச்சம் சு.வேணுகோபாலின் கதையில் இல்லை. அது யதார்த்தமான ஓர் முடிவை மட்டுமே அளிக்கிறது

சு.வேணுகோபால் இப்போது எழுதிவரும் ஒரு முக்கியமான புதுத்தலைமுறை எழுத்தாளர்களின் பிரதிநிதி. கண்மணி குணசேகரன், சொ.தருமன், சு.வெங்கடேசன் என யதார்த்தத்தை யதார்த்தமாகவே எழுதும் ஒரு இலக்கிய இயக்கம் இன்று வலுவாக உள்ளது. தமிழில் நிகழும் இரண்டாவது யதார்த்த அலை. ஆ.மாதவன்,நீலபத்மநாபன்,பூமணி போன்றவர்களின் எழுத்து முதல் யதார்த்தவாதம். இதை நான் புதுயதார்த்தவாதம் என்பேன். நவீனத்துவ அலையின் இலக்கணங்களை அறிந்தபின் எழுத வந்த யதார்த்தவாதிகள் இவர்கள்.

கி.ராஜநாராயணன் என்ற செவ்வியல் எழுத்தாளருக்கும் சு.வேணுகோபாலுக்கும் நடுவே உள்ள இடைவெளி நவீனத்துவ எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டது. ஜி.நாகராஜன், அசோகமித்திரன்,சுந்தர ராமசாமி போன்றவர்கள். அவர்கள் மரபுக்கும் புத்திலக்கியத்துக்குமான உறவை வெட்டினார்கள். நேற்று இல்லாமல் நின்று எழுதமுயன்றார்கள். அந்த இடைவெளியே புதுயதார்த்தவாதத்தை உருவாக்கியது

இன்னொருவகை எழுத்து உள்லது. மேலும் ஒரு கதை. ஒரு பெண் தன் கைக்குழந்தையுடன் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருக்கிறாள். ஒரு கனவுகண்டு விழித்துக்கொள்கிறாள். அக்கனவில் இளம்பெண்ணாக அவள் ஒரு ஆற்றுக்கு படியிறங்கிச்செல்லும்போது துர்நாற்றத்தை உணர்கிறாள். படியோரமாக ஒரு பன்றி து குட்டி போட்டு படுத்திருக்கிறது. அக்குட்டிகளில் ஒன்றை அது உதிரம் வழிய தின்றுகொண்டிருக்கிறது

அவள் விழித்துக்கொள்கிறாள். அவள் கனவில் கெட்டவாசனையாக உணர்ந்தது ஒரு செண்பகப்பூ வாசனை. அந்த வாசனை அவளை அச்சுறுத்துகிறது. அவள் கதவுகளை மூட மூட அந்த வாசனை அதிகரிக்கிறது. அச்சம் தாளாமல் அவள் குழந்தையை எடுத்துக்கொண்டு பக்கத்து அறைக்கதவை திறக்கிறாள். ஆனால் அது பக்கத்து அறை அல்ல – வெளியே

நிலவு விரிந்த வெளியில் அவள் கனவென நடக்கிறாள். மெல்லமெல்ல உடைகள் கழல்கின்றன. நிர்வாணமாக ஒளியில் மிதப்பது போலச் செல்கிறாள். அடந்த காட்டுக்குள் செல்கிறாள். அங்கே ஓர் இடிந்த கோயில். பாழடைந்த கருவறை. அதில் காலியான பீடம். அவள் அந்த பீடத்தில் ஏறி நிற்கிறாள். அவள் உடலில் பற்பல கைகள் முளைக்கின்றன – சப்பாத்திக்கள்ளிச்செடி போல. அவள் ஒரு பெரும் உறுமலுடன் அந்தக்குழந்தையை எடுத்து தன் வாயில் வைத்துக் கடிக்கிறாள்.

இந்தக்கதை மேலேசொல்லப்பட்ட அதேகதையின் உலகைச்சேர்ந்தது. நான் எழுதிய ’அன்னை’. இது சித்தரிப்பின் மூலமல்லாது முழுக்க முழுக்க கவித்துவம் மூலமே இலக்கியமாக ஆகிறது. இதன் இலக்கணம் கதையுடையதல்ல கவிதையுடையது. இது ஒரு கவியுருவகம் [ மெட்டஃபர் ] மட்டுமே. இந்தவகை எழுத்தை நவீனத்துவத்துக்குப் பின் தமிழில் வந்த எழுத்துமுறை எனலாம். இன்றைய எழுத்தாளர்களில் பா.வெங்கடேசன், பா.திருச்செந்தாழை போன்ற பலரை இவ்வகையில் எழுதும் படைப்பாளிகள் என்று சொல்லலாம்.

இவ்விரு மரபுகளும் தமிழில் வலுவான ஆக்கங்களை இன்று அளித்துக்கொண்டிருக்கின்றன. இதுவே இன்று தமிழிலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்று சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறேன்

நன்றி

[2-09-10 அன்று மதுரை ஃபாத்திமா மகளிர் கல்லூரியில் பேராசிரியைகள் திருமதி எம்.ஏ.சுசீலா மற்றும் ஃபாத்திமா அவர்களின் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த சொற்பொழிவு]

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம்  Sep 6, 2010

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 40
அடுத்த கட்டுரைஆத்மாநாம் பதிப்புச்சர்ச்சை