அன்புடன் ஜெ,
நான் ஐரோப்பிய நாடுஒன்றில் வசிக்கும் இலங்கைத் தமிழன். எனது தந்தையார் உங்களது எழுத்துக்களை வாசிக்கும் ஒரு தீவிர வாசகராக இருந்த போதிலும் ,எனது நண்பர்களால் விதைக்கப்பட்ட விச விதையினால் நான் உங்களது எழுத்துக்களை வாசிக்கவில்லை. ஆனால் நாற்பது வயதைக்கடந்த பின்னால்தான் சிறிதுசிறிதாக உங்களது எழுத்துக்களை வாசிக்கத்தொடங்கி உள்ளேன். ஒவ்வொரு எழுத்துக்களும் எனக்குள்இருந்த,இருக்கிற சந்தேகங்களை தீர்ப்பது போல இருக்கிறது. அதனால் உங்களது நாவல்களைப் படிப்பது என்று இருக்கிறேன் .ஆனால் எதனை முதல்வாசிப்பது என்று யோசிக்கிறேன். உங்களின் அறிவுரை என்ன ? அதற்கான காரணம் என்ன?
நட்புடன்
கிருஷ்ணா
அன்புள்ள கிருஷ்ணா,
பலரும் இதே வினாவை என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அனைவருக்குமென ஒரே பதிலைச் சொல்லமுடியாது. நான் எழுதிய நாவல்களிலே நீலம், கொற்றவை இரண்டும்தான் மொழிச்சவால் கொண்டவை. நேரடியாகவே அவற்றுக்குள் நுழைந்த வாசகர்களும் இருக்கிறார்கள். வாசித்த முதல் புனைவே விஷ்ணுபுரம்தான் என்று சொன்ன வாசகர்களும் உண்டு
வாசகர்களை சிலபிரிவுகளாகப் பிரிக்கலாமென நினைக்கிறேன். தமிழில் பரவலாக அறியப்பட்ட வணிகக் கேளிக்கை எழுத்துக்களை வாசித்த பின்னணியுடன் வாசிக்க முனைபவர்களுக்கு அனல்காற்று, இரவு இரண்டும் நல்ல தொடக்கமாக அமையும். அவை நேரடியான மொழியும் சீரான கதைப்போக்கும் சற்று கற்பனாவாதம் சார்ந்த கூறுமுறையும் கொண்டவை. மானுட அகத்தின் சித்தரிப்பு அவற்றில் உள்ளது என்பதனால் இலக்கியத்திற்குள் நுழையும் வாயில்களாகவும் அமையும். என்னுடைய எழுத்துமுறை என்பது ஒவ்வொரு தருணத்திலும் மனித மனம் கொள்ளும் நிலைகளை நுட்பமாகத் தொடரமுயல்வது என்பதனால் அவை என் உலகுக்கான தொடக்கங்கள்
சற்று அரசியல் வாசிப்பும் சமூகவியல் நோக்கும் கொண்ட வாசகர் என்றால் வெள்ளையானை, ஏழாம் உலகம் ஆகியவை. அவை அதிர்ச்சியளிப்பவை. சமூக யதார்த்தங்களை சித்தரிப்பவை. கூரிய கூறுமுறை கொண்டவை. அரசியல் சார்ந்த, வரலாறு சார்ந்த நுட்பமான அவதானிப்புகள் வழியாகச் செல்பவை . என் எழுத்தில் உள்ள தத்துவதளத்துடன் உறவை உருவாக்குபவை என்பதனால் அவை நல்ல தொடக்கமாக அமையலாம்
முதல்வகையினர் அடுத்தபடியாக வாசிக்கவேண்டிய நூல் என காடு நாவலைச் சொல்வேன். இரண்டாம் வகையினருக்கு பின் தொடரும் நிழலின் குரல். விஷ்ணுபுரம், கொற்றவை போன்றவை அடுத்தகட்ட வாசிப்புக்குரியவை.
இளவயது வாசகர்கள் என்றால் அறம் பனிமனிதன் இரண்டு நூல்களும் சிறந்த தொடக்கங்களாக அமையும் நேரடியான எளிய மொழியும் கதைச்செறிவும் கொண்டவை அவை.
வெண்முரசு வரிசை நாவல்கள் பொதுவாசகர்கள் வாசிக்கத்தக்கவைதான். அவற்றின் மொழிநடை சற்று செறிவானது. பலவகையான பண்பாட்டுக்குறிப்புகளும் படிமங்களும் கொண்டது. ஆனால் துணிந்து தொடங்கினால் உள்ளே வந்துவிடலாம். கதையோட்டமே வாசிக்கச்செய்யும்
ஆனால் மேலே சொன்னவற்றை வாசித்த வாசகர்களால் மட்டுமே முழுமையாக உள்வாங்கத்தக்கவை வெண்முரசு நாவல்கள். இவற்றில் உங்கள் தேர்வு என்ன என்பது உங்களை நீங்கள் எப்படி அவதானிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
ஜெ
காடு அனைத்து விமர்சனங்களும்
கொற்றவை அனைத்து விவாதங்களும்
வெள்ளையானை அனைத்து விவாதங்களும்
ஏழாம் உலகம் அனைத்து விவாதங்களும்
பின் தொடரும் நிழலின் குரல் அனைத்து விவாதங்களும்