ஏக்நாத்தின் ‘ஆங்காரம்’

ஆங்காரம் - ஏக்நாத்

பரவலாகக் கவனிக்கப்பட்ட கெடைகாடு நாவலுக்குப்பின் ஏக்நாத் எழுதியிருக்கும் நாவல் ஆங்காரம். ஒரு ரயில்பயணத்தில் இதை வாசித்துமுடித்தேன். இதன் ஈர்ப்புக்கு முக்கியமான காரணம் என்ன என்று யோசித்தபோது இதிலுள்ள நாஞ்சில்நாடன் எழுத்தின் சாயல்தான் என்று தோன்றியது.

நாஞ்சில்நாடனின் ‘என்பிலதனை வெயில்காயும்’ போன்ற நாவல்களுக்கு பலவகையிலும் அணுக்கமானது ஆங்காரம். குமரிக்குப்பதில் திருநெல்வேலி மாவட்டம். சற்றே வரண்ட நிலம். ஆடுமாடு மேய்த்தலும் மழையை நம்பி விவசாயம் பார்ப்பதும் தொழில்.படிப்படியாக அழிந்துவரும் கிராமச்சூழல். அதில் ஒரு வறிய உயர்சாதி [வேளாள] இளைஞனின் இளமைக்காலம். நாவலின் கதைகூட இதுதான் என்று சொல்லிவிடலாம்.

முப்பிடாதி ஆடுமேய்த்துக்கொண்டிருக்கும் சித்தரிப்பில் ஆரம்பிக்கிறது நாவல். மென்மழை பெய்கிறது. அவன் காலுடன் ஒண்டும் ஆட்டை ‘என்னமாம் கடிக்குதா?’ என்று கேட்டு அருகே அணைத்து உடலைத் தடவிப்பார்க்கும் அவனுடைய கரிசனம் அவனுடைய கதாபாத்திரத்தைக் காட்டுகிறது.

ஏழைக்குடும்பம். தந்தை வயிற்றுவலிக்காரராக இருந்து இறந்தவர். அன்னை புல்பறித்தும் விறகுசேர்த்தும் பையனைப் படிக்கவைக்கிறாள். அவன் அந்த கிராமத்திலிருந்து மெல்ல முளைவிட்டெழுந்து கல்லூரிக்குச் சென்று ஓர் இளைஞனாக ஆகி தன் ஆளுமையைக் கண்டடைவதை சித்தரிக்கிறது ஆங்காரம்

2

வயதடைவுச் சித்தரிப்பு நாவல் [coming to age novels] என்னும் வகைக்குள் இந்நாவலை சேர்க்கலாம். உண்மையில் மிக எளிதாக எழுதத்தகுந்த ஒரு வகைமை இது. ஏனென்றால் அத்தனைபேருக்கும் இப்படி ஒரு வாழ்க்கைக்காலகட்டம் இருந்திருக்கும். அதை நம்பகமாகவும் நுட்பமாகவும் சொல்லத்தெரிந்தாலே போதும்

ஆனால் தமிழில் இத்தகைய நாவல்கள் மிகக்குறைவு என்பது இப்போது எண்ணிப்பார்க்கையில் தோன்றுகிறது. நாஞ்சில்நாடனின் ’என்பிலதனை வெயில்காயும்’ தான் உடனடியாக நினைவுக்கு வரும் நாவல். நீலபத்மநாபனின் ‘தலைமுறைகள்’ நாவலின் கரு வேறுதிசை நோக்கிச் சென்றாலும் ஓர் எல்லைவரை அதையும் இவ்வகைமைக்குள் வைக்கலாம்.

ஆனால் அனைத்து இலக்கணப்படியும் வயதடைவுச்சித்தரிப்பு நாவல் என்றால் ஆதவனின் ’என் பெயர் ராமசேஷன்’ தான். அந்த இலக்கணப்படி அமையாவிட்டாலும் அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு இவ்வகையில் தமிழில் எழுதப்பட்ட உச்சம். அந்த இளைஞன் எது புறவுலகு என புரிந்துகொள்ளும் தீவிரத்தை நாம் பிற எந்த நாவலிலும் காணமுடிவதில்லை.

சாலிங்கரின் Catcher in the rye போன்ற ஒரு வயதடைவுச்சித்தரிப்பு நாவலுக்கான களம் தமிழகத்தில் உண்டா என்ற எண்ணம் இந்நாவலை வாசிக்கையில் வந்தது. அறங்கள், அறமீறல்கள், கொள்கைகள், குழப்பங்கள் நிறைந்த பெரியவர்களின் உலகை சந்திக்கும் இளையவர்களின் கொந்தளிப்பைச் சொன்ன நாவல் அது. நீங்கள் சமைத்து வைத்திருக்கும் உலகை நான் ஏன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற பதின்பருவத்து இளைஞனின் வினா அதில் இருந்தது.

அங்கிருந்து உண்மையில் இருத்தல் என்றால் என்ன என்னும் வினாவை நோக்கிச் சென்றது சாலிங்கரின் நாவல். ஆகவேதான் அது ஒரு காலகட்டத்தின் சினத்தின் அறைகூவலின் அத்துமீறலின் ஆவணமாக ஆகியது. இன்றும் ஒரு செவ்வியல்படைப்பாக கொள்ளப்படுகிறது. என் இளமைக்காலமாகிய எண்பதுகள் அரசியல் அவநம்பிக்கைகள், வேலையில்லாத்திண்டாட்டம், அழிந்த நிலப்பிரபுத்துவ வாழ்க்கை ஆகியவற்றால் கலங்கிமறிந்த ஒன்று. அன்று சாலிங்கரின் நாவல் ஒரு பெரிய அலைக்கழிப்பை அளித்தது. இன்று என்னவாக அது பொருள்படும் என மீண்டும் வாசித்தால்தான் தெரியும்

அத்தகைய அலைக்கழிப்பை, கொந்தளிப்பை தமிழ்ச்சூழலில் வளரும் ஓர் இளைஞன் அடைவதில்லை என்பதையே ஆங்காரம் நாவலும் காட்டுகிறது. ஏனென்றால் அலைக்கழிப்பு நிறைந்த ஓர் மேல்மட்ட உலகுடன் அவனுக்குத் தொடர்பில்லை. அவன் வாழும் கிராமம் காலத்தின் அடித்தட்டில் அசைவற்றுக் கிடக்கிறது. நிலப்பிரபுத்துவ வாழ்க்கைமுறையும் சமூக அமைப்பும் மெதுவாக அழிந்து வருவது, அருகே உள்ள நகருடன் கொள்ளும் தொடர்பு ஆகியவைதான் அவன் அறியும் மாற்றங்கள். அந்த மாற்றங்களை வியப்பும் கிளர்ச்சியும் சஞ்சலமுமாக அவன் எதிர்கொள்வதே இங்குள்ள யதார்த்தம்

1

ஏனென்றால் தமிழகத்தில் பெரிய அளவிலான சமூகக்கிளர்ச்சிகள் ஏதும் நிகழ்ந்ததில்லை. மேலோட்டமான சில அரசியல் அலைகள் வந்துபோயின. சுதந்திரப்போராட்டம் கூட தமிழகத்தைப்பொறுத்தவரை ஒரு சில செய்திகளும் நிகழ்ச்சிகளும்தான். ஆரம்பகால இந்தியவிடுதலை இயக்கங்களாலும், பின்னர் இடதுசாரி இயக்கங்களாலும் பின்னர் நக்சலைட் இயக்கத்தாலும் அலைக்கழிக்கப்பட்ட வங்கத்து இளைஞன் ஒருவேளை சாலிங்கரின் உலகுக்கு நிகரான ஒன்றை உருவாக்கக்கூடும். ஹைதராபாத் பின்னணியில் தேசப்பிரிவினைச் சூழலில் பதினெட்டாவது அட்சக்கோட்டின் நாயகன் அந்த கொந்தளிப்பை அடைகிறான்

நாஞ்சில்நாடனின் இளைஞனுக்கு உள்ள அதே வகையான சிக்கல்கள்தான் கிட்டத்தட்ட ஒரு தலைமுறைக்காலத்திற்குப் பின்னரும் ஏக்நாத்தின் தலைமுறைக்கும் என்பதே இந்தியக்கிராமச்சூழலின் தேக்கத்தை திகைப்பூட்டும்படிக் காட்டுகிறது. ஆங்காரத்தின் முப்பிடாதிக்கு என்பிலதனை வெயில் காயும் நாவலின் சுடலையாண்டியுடன் நெருக்கமான ஒற்றுமை உள்ளது பெயரில்கூட.

உண்மையில் இக்கிராமத்தில் முப்பிடாதி சந்திப்பவை என்ன? நுணுக்கமான ஊடுபாவுகளாகப் பின்னப்பட்ட கிராமிய உறவுகள். அவற்றை அவன் ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்வதை நாவல் காட்டுகிறது. கற்பழித்துக்கொல்லப்பட்ட வண்ணாத்தி, காமராஜரிடம் கிராம யதார்த்தத்தைச் சொன்னமைக்காக தாக்கப்பட்டு உயிர்பிழைத்த கம்யூனிஸ்டுத் தாத்தா என கதாபாத்திரங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இவர்களினூடாக எப்படி அந்தக்கிராமம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என அவன் அறிகிறான்

அடுத்தது அந்த எல்லைகள் மீறப்படும் சித்திரம். நிலவுடைமையாலும் சாதியாலும் மேல்கீழென உறுதியாக அடுக்கப்பட்டிருக்கும் அந்தக்கிராமத்தின் தீர்மானிக்கப்பட்ட விதிகளை பலர் மீறுகிறார்கள். மீறல் இருவகையில் நிகழ்கிறது. ஒன்று வழக்கம்போல காமம். செல்வந்தன் வீட்டுப்பெண்ணை சாதாரண இளைஞன் வலைவீசிப்பிடிக்கிறான். அடிபட்டு மும்பைக்கு ஓடிப்போகிறான். இன்னொன்று அரசியல். மானுட சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் ஊருக்குள் கொண்டுவருகிறது அது. அதன் உருவமாக இருக்கிறது கிராமத்து வாசிப்புசாலை.

கல்லூரிக்குப் போய் படிப்பவன் முப்பிடாதி. விடுமுறை நாட்களில் ஆடுமாடு மேய்க்கிறான். அது அவன் இடத்தை வகுத்துவிடுகிறது அங்கே. சாலையில் தன் வயதான இளம்பெண்களைப் பார்க்கையில் மார்பை சட்டையால் மறைக்கவில்லையே என அவன் கொள்ளும் பரிதவிப்பு ஒரு நல்ல குறியீடு போல இந்நாவலில் வருகிறது. முப்பிடாதி ஆசைப்படுவதே அதைத்தான், ஒரு வெள்ளைச்சட்டை. மாடுமேய்த்தவனை பிறிதொருவனாக ஆக்குகிறது அது. அதற்காக அவன் கொள்ளும் ஆங்காரம்

ஆதவன்
ஆதவன்

முப்பிடாதி தன்னுள் கண்டடையும் காமம் இன்னொரு சரடாக இந்நாவலில் ஓடுகிறது. வழக்கம்போல மதினியின் உடல்கட்டில் கொள்ளும் ரகசிய வேட்கையும் குற்றவுணர்வும். கல்லூரியில் ‘ஸ்டைலான’ பெண்களை எல்லாம் தவிர்த்துவிட்டு தனக்குரியவளாக தனக்குச் சிக்கக்கூடியவளாக சாயம்போன தாவணிக்காரியை கண்டடையும் தாழ்வுணர்ச்சி.இவற்றுக்கு நடுவே அலைபாய்ந்துசெல்கிறது அது.

மற்றபடி முப்பிடாதி பெரியதாக எதையும் எதிர்கொள்வதில்லை. அரசியல் அவனை தொடுவதில்லை. வரலாற்றை அவன் அறிவதேயில்லை. ஆழமான சமூகவினாக்களும் இருத்தல் ஐயங்களும் அவனை ஆட்டிப்படைப்பதில்லை. அவன் நாடுவது தன்னை இச்சமூகத்தில் பொருத்திக்கொள்ள ஓர் இடம். அதை நோக்கிய வீம்பும் வேகமும்தான் அவனுடைய இளமை.

முற்றிலும் நகர்ப்புறம் சார்ந்து வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஆதவனின் ராமசேஷனுக்கும் வேறுவாழ்க்கை இல்லை என்பதை வியப்புடன் நினைத்துக்கொள்கிறேன். இங்கே மதினி என்றால் அங்கே மாமி. அங்கும் தாழ்வுணர்ச்சி தயக்கம். தொழிலதிபர் வீட்டில் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்துத் தரப்படும் குளிர்ந்த ஆப்பிளை கூச்சத்துடன் ரசித்து உண்ணும் ராமசேஷனை நினைவுகூர்கிறேன். அவன் முப்பிடாதியேதான்.

உண்மையில் தமிழ் இளைஞனின் வாழ்க்கை என்பது இவ்வளவுதான் என்பதே இந்நாவலை நம்பகமான சமூகப் பதிவாக ஆக்குகிறது. எத்தனை சின்ன வாழ்க்கை என்னும் பிரமிப்பை உருவாக்குகிறது இது. காலடியில் ஒரு புழு நெளிந்து செல்வதைக் கண்டு ஆம் அதற்கும் ஒரு பயணம் இருக்கிறது என எண்ணுவதைப்போல.

இந்நாவலை ஒரு சம்பிரதாயமான தமிழ் யதார்த்தநாவல் என்றே வகைப்படுத்தமுடியும். இதன் யதார்த்தம் சுவாரசியமானதாக இருந்தாலும் இது நம்மை எங்கும் கூட்டிச்செல்வதில்லை. ஒரு பொதுப்புத்திப்பார்வைக்கு அப்பால் ஆசிரியரின் கலைநோக்கால் மட்டுமே கண்டெடுக்கப்பட்ட வாழ்க்கைத்தரிசனங்கள் இல்லை. கவித்துவ வெளிப்பாடுகள் இல்லை. அரிய தருணங்கள்கூட இல்லை.

அவ்வகையில் நாற்பதாண்டுகளுக்கு முன் நாஞ்சில்நாடனின் தலைகீழ் விகிதங்கள் வந்தபோது சுந்தர ராமசாமி முன்வைத்த விமர்சனங்கள் அனைத்தும் இந்நாவலுக்கும் பொருந்துவன என்று தோன்றுகிறது. யதார்த்தம் அதற்கு அப்பால் கொண்டுசெல்வதற்கான ஒரு பாதையாக அமையவேண்டும், அவ்வாறு அமையவில்லை. ஆகவே இதை ஒரு நவீனநாவல் என்று சொல்லமுடியாது.

நாஞ்சில்நாடனின் மொழி கற்பனாவாதம் அற்றது. ஆகவே அது அவரது யதார்த்தவாதத்தில் சரியாகப்பொருந்துகிறது. ஏக்நாத் பல இடங்களில் எளிய கற்பனனாவாத மொழிக்குச் செல்கிறார். அது இவ்வுலகுக்கு அயலாக உள்ளது. ‘ ஒருநொடியில் உயிர் அசைந்து இன்னொருமுறை பார்க்கமாட்டாளா என்றிருக்கும்’ போன்ற வரிகளை உதாரணமாகச் சொல்லலாம்.

நாவலை முடித்தபின் ஒரு சுவாரசியமான எண்ணம் வந்தது. முப்பிடாதி [ஆங்காரம்] ராமசேஷன் [என் பெயர் ராமசேஷன்] சுடலையாண்டி [என்பிலதனை வெயில்காயும்] திரவியம் [தலைமுறைகள்] என நாம் வாசிக்கும் வயதடைவுச்சித்தரிப்பு நாவல்கள் அனைத்திலுமே கதைநாயகனின் பெயர் பழமையானது. ஆசிரியர்களுக்கு ஏன் அப்படித் தோன்றியது? ராமசேஷன் ‘ஆம் ராமசேஷன்தான் , பழைய பெயர். என் தாத்தாவின் பெயர். அதைக்கூட மாற்ற என் அப்பாவுக்கு தைரியமில்லை’ என்று தன் பெயரைப்பற்றிச் சொல்லிக்கொள்வதில்தான் நாவல் தொடங்குகிறது.

அந்த இளைஞர்கள் புதிய காலத்தை நோக்கி எழ விழைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அவர்களின் பாரம்பரியம் பழைமையை பெயராகவே சூட்டியிருக்கிறது. அதை அவர்களால் மாற்றிக்கொள்ளவே முடியாது. ஆகவே அவர்கள் போராடுவது அவர்களின் சொந்த அடையாளங்களுடன்தான். ஒரு முப்பிடாதி அல்லாமலாகத்தான் முப்பிடாதி ஆங்காரம் கொள்கிறான். நான் கல்லூரியில் படிக்கும்போது அனேகமாக ஒவ்வொரு இளைஞனும் அவனுடைய சொந்தப் பெயர்மீதுதான் கசப்பு கொண்டிருந்தான் என நினைவுறுகிறேன். அந்நினைவு இவ்வாசிப்பை பல திசைகளில் திறந்துகொள்ளச் செய்கிறது

ஆங்காரம்
Discovery book palace
6, Mahaveer complex
Munusami salai
K.K.nagar west.
Chennai- 78.
phone: 8754507070
விலை: 220.

ஏக்நாத் இணையதளம்

முந்தைய கட்டுரைகோவை வெண்முரசு வாசகர் கலந்துரையாடல்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா 2015