அமெரிக்காவில் பயணம்செய்தபோது ராலே நகர் அருகே ஓடும் நதியின் கரையைப் பார்க்கச்சென்றிருந்தேன். நண்பர் ராஜன் சோமசுந்தரமும் அவரது மனைவி சசிகலாவும் உடனிருந்தார்கள். அங்கு ஓரு பெண்மணி எங்களுக்கு அவரே முன்வந்து வழிகாட்டியாக பணிபுரிந்து உதவினார். பணம்பெற்றுக்கொள்ளாமல் அங்கு வருபவர்களுக்கு அங்குள்ள இயற்கையை அறிமுகம் செய்வது அவரது பொழுதுபோக்கு.
தொழில்முறையாக அவர் ஆசிரியை. இயற்கைப்பாடம் நடத்துபவர். குழந்தைகளுக்கு இயற்கையைக் கற்பிப்பதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவரது உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்ளக்கூடியது. மிக நுட்பமான தகவல்களை தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருந்தார்
அவரிடம் பேசும்போது நான் ‘டேவிட் அட்டன்பரோவின் இயற்கை குறித்த ஆவணப்படங்களை வகுப்பில் காட்டுவீர்களா?” என்றார். “இல்லை” என்று ஆணித்தரமாகச் சொன்னார். “நவீன கல்விக்கொள்கையின்படி காட்டக்கூடாது என்றே எண்ணுகிறோம். நேரடியாகச்சென்று ஒரு பறவையையோ செடியையோ பார்த்து அவதானிக்கவேண்டும். அந்த அவதானிப்பை மொழியாக மாற்றி உள்ளே பதித்துக்கொள்ளவேண்டும். அதுதான் உண்மையில் கல்வி”
“மொழியாக மாறாத எதுவும் கற்கப்படுவதில்லை. இயற்கைபற்றிய காணொளிகள் எல்லாமே கேளிக்கைகள் மட்டும்தான். அவற்றை மட்டும் பார்த்து எவரும் இயற்கையியல் அறிஞர் ஆக முடியாது. அவை உண்மையில் நிலையான கவனத்தைக்கூட உருவாக்குவதில்லை”
“சொல்லப்போனால் அவை குழந்தைகளுக்கு தடையாக அமையக்கூடியவை. மொழியாக அறிதல்களை மாற்றிக்கொள்ளவேண்டிய காலகட்டத்தில் அவை மொழி உருவாகாமல் தடுத்துவிடுகின்றன. மொழியில்தான் யோசிக்கமுடியும். அமெரிக்கக் கல்வி என்பது எப்போதுமே புத்தகங்களைச் சார்ந்தது. இப்போது இன்னும் அழுத்தமாகப் புத்தகங்களை வலியுறுத்துகிறோம்” என்றார்.
உண்மையில் நான் கொஞ்சம் வெட்கமாக உணர்ந்தேன். அதிநவீனக்கல்வி என்பது அதுநவீனக் கல்விச்சாதனங்களான காட்சியூடகங்களை பயன்படுத்துவது என்னும் நம்மூர் கான்வெண்ட் பிரச்சாரம் எனக்குள் இருந்ததன் விளைவு அது.
இன்று காட்சியூடகம் வாசிப்பை அழிக்கிறது. ஆகவே மொழித்திறன் குறைகிறது. மொழித்திறன் குறைவதென்பது சிந்தனைத்திறன் குறைவதுதான். உலக அளவில் நலம்நாடும் அரசுகள் மொழிவழி அறிதலை முதன்மையாகக் கருதி கல்வியிலும் கலாச்சாரச் செயல்பாடுகளிலும் முக்கியத்துவம் அளிக்கத்தொடங்கியிருக்கின்றன. ஆசியாவில் சீனாவும் கொரியாவும் சிங்கப்பூரும் அதற்கு முன்னுதாரணங்கள்.
இன்று தென்கொரியா, சிங்கப்பூர் அரசுகள் பலவகையான இலக்கியமாநாடுகளை நடத்துகின்றன. இலக்கியப்போட்டிகளை நடத்துகின்றன. நூலகங்களையும் வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களை தொடங்கியிருக்கின்றன.
சிங்கப்பூர் அரசு தொடர்ச்சியாக இலக்கிய விழாக்களை நடத்துகிறது. ஒவ்வொரு வருடத்திலும் சிங்கப்பூரின் மூன்றுமொழிகளான மலாய்மொழி,சீனமொழி,தமிழ் ஆகியவற்றைச் சேர்ந்த எழுத்தாளர்களை அவ்வருடத்தைய வாசிப்புக்கான எழுத்தாளராகத் தெரிவுசெய்து நூலகங்கள் வழியாக அறிமுகம்செய்கிறது. நான் சென்றவருடத்திற்கு முந்தையவருடம் அவ்வாறு தெரிவுசெய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டேன். இவ்வருடம் இலக்கியப்போட்டி ஒன்றுக்கு நடுவராக இருந்தேன்.
அக்டோபர்-நவம்பரில் நடக்கும் சர்வதேச இலக்கியவிழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். தமிழ்நாட்டில் இருந்து நா.முத்துக்குமாரும் திலீப்குமாரும் அழைக்கப்பட்டிருந்தனர்.
சிங்கப்பூருடன் சேர்த்து இந்தோனேசியா செல்லும் பயணத்தையும் திட்டமிடலாமென்று நண்பர் சரவணன் விவேகானந்தன் சொன்னார். அமெரிக்கப்பயணம் முடிந்ததும் அருண்மொழிக்கு ஒரு ஏக்கம். அடுத்த பயணம் பற்றிய கனவே அதை சமன்படுத்தும் என்றுதோன்றியதனால் இப்பயணத்திற்கு நான் ஒத்துக்கொண்டேன்.
அருண்மொழி வருவதை அறிந்ததும் நண்பர் நண்பர் ராஜமாணிக்கம் அவரது மனைவி பத்மாவுடன் வருவதாகச் சொன்னார். செல்வேந்திரனும் திருக்குறளரசியும் வருவதாகச் சொன்னதாகச் சொன்னாலும் வரமுடியவில்லை.
அக்டோபர் இருபத்தாறாம்தேதி சென்னைக்கு வருவதற்கு டிக்கெட் போட்டிருந்தோம். அனந்தபுரி எக்ஸ்பிரஸ் 5 45 க்குக் கிளம்பும். நான் வெண்முரசு அத்தியாயங்களை வெறிபிடித்து எழுதிக்கொண்டிருந்தேன். அரைப்பார்வையில் 17 .45 என்பதை ஏழேமுக்கால் என வாசித்து அருண்மொழிக்குச் சொன்னேன். ரயில் கிளம்பி அரைமணிநேரம் கழித்துத்தான் விஷயம் மண்டைக்கு உறைத்தது
பேருந்துநிலையத்தில் அலைமோதி ஒரு பேருந்தில் கடைசியில் அமர்ந்துசெல்வதற்கு இடம் கிடைத்தது. என் முதுகுக்கு அது மிகப்பெரிய வதை. ஆனால் வேறுவழி இல்லை. இரண்டு அனாசின் மாத்திரையைச் சாப்பிட்டு அரைக்குப்பி கிளைக்கோடின் இருமல் மருந்தையும் சாப்பிட்டேன். தூங்கிவிட்டேன்.
சென்னை வந்தபின்னரும் தூங்கிவழிந்துகொண்டுதான் இருந்தேன். இதற்கு ஒரு குவாட்டரே அடித்திருக்கலாம் என்று நண்பர் அனுதாபத்துடன் சொன்னார். சென்னையில் பகல் முழுக்க அமர்ந்து வெண்முரசு வேலை.
இருபத்தேழாம்தேதி இரவு 11 மணிக்கு சிங்கப்பூர் விமானம். அங்கே காலை நாலரை மணிக்குச் சென்று சேர்ந்தோம். விமானநிலையத்திற்கு சிங்கப்பூரில் என் முதல்நண்பரான சித்ரா ரமேஷ் வந்திருந்தார். சரவணன் விவேகானந்தனும் வந்திருந்தார்.
ஒன்றரை வருடங்களுக்குப்பின் மீண்டும் சிங்கப்பூர். விடிகாலையில் அரைத்தூக்கத்தில் அன்னியநாட்டில் காரில் செல்லும் அனுபவம் பலமுறை அறிந்தது. ஆனாலும் அதில் ஒரு போதையூட்டும் புதுமை உள்ளது.
இருபத்தெட்டு இருபத்தொன்பது முப்பதாம் தேதிகளை சிங்கப்பூரைச் சுற்றிப்பார்ப்பதற்காக வைத்துக்கொண்டோம். முப்பத்தொன்றாம்தேதி எனக்கு இரு நிகழ்ச்சிகள். காலையில் காட்சியூடகத்திற்கு இலக்கியத்தை பயன்படுத்துவதைப்பற்றி ஒரு பயிலரங்கம். மாலையில் தமிழிலக்கியத்தின் இன்றைய நிலை குறித்து ஒரு கூட்டுவிவாதம்.
முப்பதாம் தேதிமுதல் ஒன்றாம்தேதி வரைதான் எனக்கு சுவிஸோட்டல் என்னும் விடுதியில் அறை. ஆகவே வந்ததுமே நேராக சித்ரா ரமேஷ் வீட்டுக்குச் சென்றுவிட்டோம். ராஜமாணிக்கமும் மனைவியும் சரவணன் வீட்டில் தங்கினர்.
மாலைவரை ஓய்வெடுத்துவிட்டு எஸ்பிளனேட் மையத்திற்குச் சென்றோம். சிஙகப்பூரின் ‘ஜங்க்ஷன்’ அது. பலவகையான மனிதமுகங்கள்தான் எப்போதும் அந்த இடத்தை அழகான மையமாக ஆக்குகிறது. பயணிகள் என்பதனால் அனைவருமே உற்சாகமான மனநிலையில் இருப்பார்கள். ஓரு முக்கியமான இடத்தில் இருக்கிறோம் என்னும் உணர்வும் திரளாக இருப்பதன் கொண்டாட்டமும்.
குறிப்பாக குழந்தைகளும் பெண்களும் அத்தருணங்களில் இருப்பதுபோல சுதந்திரமாக வேறெங்கும் இருப்பதில்லை. நான் பார்த்தவரை இத்தகைய மனநிலைகளின் உச்சமான இடம் என்பது நியூயார்க் டைம் ஸ்குயர்தான்.
இன்று சுற்றுலா என்பதே ‘செல்ஃபி’ எடுப்பதுதான். குச்சிகளில் கட்டப்பட்ட செல்பேசிகளுடன் ஓடி ஓடி படம் எடுத்துக்கொண்டனர். நின்றும் நடனமிட்டும் அணைத்தும் சிரித்தும் துள்ளிக்குதித்தும். காலம் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. மனிதனுக்கு அதை நிறுத்திவைக்கவேண்டுமென்று ஆசை.
சூழ்ந்திருந்த கட்டிடங்களெல்லாம் ஒளிகொள்வது வரை அங்கே அமர்ந்திருந்தோம். வானளாவிய கட்டிடங்கள் ஜொலிக்கும் பெருநகரம் எப்போதும் எனக்கு ஓர் அறிவியல்புனைகதை உலகுக்குள் இருக்கும் உணர்வை அளிக்கும். அன்னியத்தன்மையும் வினோதமான பரவசமும் கலந்த நிலை அது
எஸ்பிளனேட் போன்ற மையங்கள் எந்த ஒரு நகருக்கும் அவசியமானவை. இருவகைகளில். ஒன்று அது அந்நகரின் முகம். அந்நகர் என்னும்போதே அதுதான் நினைவுக்கு வரும். இரண்டு, அது ஒரு கலை- கேளிக்கை மையம். நாடக அரங்குகள், இசையரங்குகள், நூலகங்கள். இத்தகைய ஓர் இடம் ஒருநகரின் முக்கியமான இளைப்பாறல் களம்.
இந்தியநகரங்களில் டெல்லியில் மட்டுமே அப்படி ஏதேனும் ஒரு இடம் உள்ளது. வேறெந்த நகரையும் உலகம் முழுக்க நகரம் என்றபொருளில் எதைச்சொல்கிறார்களோ அந்தபொருளில் சொல்லமுடியாது. அவை வெறும் குடியிருப்புத்திரள்கள், வணிகமையங்கள் மட்டுமே. இங்குள்ள எவருக்கும் எந்நகர் மீதும் எப்போதும் அக்கறை இருந்ததில்லை என்பதே உண்மை.
[மேலும்]