நேமிநாதர்,கிருஷ்ணன்,காந்தி

1

இனிய ஆசிரியருக்கு,

என் பெயர் லெட்சுமிபதி ராஜன். நான் மதுரையில் தங்களை சந்தித்தது நினைவிருக்கலாம்.

வெண்முரசு என் ஒவ்வொரு நாளையும் செறிவு மிக்கததாக்குகிறது. இதுவே என் முதல் மின்னஞ்சல். (அனுப்ப உத்தேசித்த சில மின்னஞ்சல்கள் அனுப்பபடாமல் உறங்குகின்றன.) இந்த மின்னஞ்சலுக்கான காரணம் வெண்முரசில் கிருஷ்ணன் அரிஷ்டநேமி சந்திப்பு ஏனோ எனக்கு தங்களின் “காந்தியின் பலிபீடம்” கட்டுரையை நினைவு படுத்தியதே. இவ்விரு சந்திப்புகளில் உள்ள ஒற்றுமைகள் திகைக்க வைக்கின்றன.

“ஆற்றுவனவற்றுக்கு முடிவிலாதிருந்தன எனக்கு. அவரோ செயலின்மையை ஊழ்கமென கொண்டிருந்தார்.” என்ற அரிஷ்டநேமியை பற்றிய கண்ணனின் சொற்கள் எனக்கு “காந்தியின் பலிபீடம்” கட்டுரையின் “ஒருவர் கர்மயோகி. இன்னொருவர் ஞானயோகி.” என்ற வரிகளை நினைவு படுத்தியது.

காந்தியும் கண்ணனை போலவே கர்ம யோகி. இருவரும் கண்ணெதிரே தெரியும் தர்மம் ஒன்றுக்காக, சாத்தியமான வரை போராடுபவர்கள். கண்முன்னே கொலைக் களங்களில் மனிதர்கள் பலிபீடங்களில் ஆடுகள் போல் மடிவதை காணப் போகிறார்கள். மறுபுறம் அரிஷ்டநேமியும், காந்தி காளிகோயிலில் சந்தித்த சாதுவும் அனைத்தையும் துறந்து ஞான மார்க்கியாக அனைத்துக்கும் சாட்சியாக மட்டும் அமர வேண்டியவர்கள்.

கண்ணன் அரிஷ்டநேமியை சந்தித்து அவரைக் கல்யாணம் செய்து கொண்டு கர்ம மார்க்கத்திற்கு திரும்ப அழைக்கிறான். காந்தி, சாது ஏன் ஆடுகள் பலியிடப்படுவதை எதிர்த்துப் பிரச்சாரம்செய்யக்கூடாது என்று கேட்கிறார். வேறு வார்த்தைகளில் அவரை கர்ம மார்க்கத்திற்கு அழைக்கிறார்.

ஒரு முரண். கர்ம யோகியான காந்தி அதன் எல்லையை உணராமல், பலிபீடங்களை கண்டு குழம்புகிறார். அரிஷ்டநேமி தனக்கான பாதை கர்மமா, ஞானமா என்ற குழப்பத்தின் விடையை பலிபீடங்களில் பெறப் போகிறார். தாங்கள் உத்தேசித்தே இதை எழுதி இருக்கிறீர்களா எனத் தெரியவில்லை. ஆனால் இவ்வாறு சிந்தித்ததில் காந்தியிடம் முயங்கிய கீதையின் கர்ம யோகமும், அருகர்களின் கொல்லாமையும் மின்னல் ஒளியில் தெரிந்த காட்சி என என்னை சிலிர்க்க வைத்தது.

நன்றி. என்றும் உங்களிடம் கற்க விரும்பும் மாணவன்.
லெட்சுமிபதி ராஜன்

2

அன்புள்ள லெட்சுமிபதி ராஜன்,

என் வாசகர்களைப்பற்றிய பெருமிதம் எப்போதும் எனக்குண்டு. அற்புதமான கடிதங்கள் எனக்கு வருகின்றன. விஷ்ணுபுரம் வெளிவந்த நாள்முதலே அரிய வாசகர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இணையத்தில் எழுதத் தொடங்கியபின்பு அது மேலும் பலமடங்காகியிருக்கிறது

முக்கியமான காரணம், என் வாசகர்களை நான் இணையம் மூலம் தொடர்ந்து சந்திப்பதனால் என் மொழிநடை, மனம்செயல்படும் விதம் ஆகியவை அவர்களுக்கு மேலும் நெருக்கமாக ஆகின்றன. என் படைப்புகள் மொத்தமாகவே அவர்களுக்குக் கிடைக்கின்றன.

இன்று இந்தோனேசியாவில் யோக்யகர்த்தா என்னும் ஊரிலிருக்கையில் இந்தக் கடிதத்தைப் பார்த்தேன். பெரிய மனஎழுச்சி ஏற்பட்டது. எழுத்தாளனாக நான் நல்ல வாசகர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

நேமிநாதரின் கதை சமணமகாபாரதத்தில் உள்ளது. அவர் அந்தக விருஷ்ணிகுலத்தில் பிறந்தவர். கிருஷ்ணனின் ஒன்றுவிட்ட சகோதரர். அவர்கள் இருவரும் சந்திப்பதென்பது எந்தப்புனைகதையாளனையும் உள்ளம்பொங்கவைக்கும் தருணம்

ஒருவர் கொல்லாமை என்னும் விழுமியத்தின் அடையாளம். பிறிதொருவன் ஆகவே கொலைபுரிக என்றவன். இரு தரிசனங்கள். இரு உச்சங்கள். அதுவே வெண்முரசில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது

அந்த இடத்தை கூடுமானவரை பூடகமாகவே கொண்டுசெல்கிறேன். அதை முழுமையாகவே தொட்டு எடுத்திருப்பது மட்டுமில்லாமல் அது செல்லும் திசையையும் சரியாகவே ஊகித்திருக்கும் உங்கள் வாசிப்பு நான் எவருக்காக எழுதுகிறேன் என்பதைக் காட்டுகிறது

3

நேமிநாதரில் இருந்து கிருஷ்ணனுக்கு வரும் பாதையே கிருஷ்ணனில் இருந்து காந்திக்கு வரும் பாதை. நேமிநாதரின் மண்ணில் பிறந்தவர் காந்தி. அவரது போர்பந்தர் துவாரகைக்கு மிக அருகேதான். கிர்நார் மலை [ரைவத மலை] அருகேதான். நேமிநாதர் மீண்டும் வந்து கிருஷ்ணனை கண்டடைகிறார் என்று படுகிறது

அகிம்சைக்கும் அறத்தின் கூரிய வாளுக்குமான முரண்பாடு. நீங்கள் சுட்டிக்காட்டியபின்னரே ஏதோ ஒருவகையில் முன்னரே சென்று தொட்டிருக்கிறேன் என அறிந்தேன். நன்றி

ஜெ

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்


வெண்முகில்நகரம் கேசவமணி

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54
அடுத்த கட்டுரைஎம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்