அன்புள்ள ஜெயமோகன் ஐயா,
ஒரு வருடத்திற்கு முன்பு வரை உங்கள் பெயரைக் கூட கேட்டதில்லை. நான் முதன்முதலில் படித்த உங்கள் கட்டுரை, பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்று பத்ரி சேஷாத்ரி எழுதிய கட்டுரையில் இருக்கும் உண்மை பற்றி நீங்கள் அலசிய கட்டுரை.
நீங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் நான்கு வகை எழுத்தாளர்களில், சில காலம் முன்பு வரை முதல் வகை எழுத்தாளர்கள் எழுதிய படைப்புக்களையும், ராமகிருஷ்ணா மடத்தின் பதிப்புக்களில் சிலவற்றையும் தவிர வேறு எதையும் படித்ததில்லை. இப்பொழுது மற்ற பிரிவு படைப்புக்களையும் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் வந்துள்ளது.
Facebook இல் யாரோ ஒருவர் முன்பு கூறிய பத்ரி சேஷாத்ரியின் கட்டுரை குறித்த உங்கள் கட்டுரையை பகிர்ந்திருந்தார். அதைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது முதல் நீங்கள் எழுதிய சில கட்டுரைகளை அவ்வப்போது உங்கள் தளத்தில் படித்து வருகிறேன். தாமதிக்காமல் விஷயத்துக்கு வருகிறேன்…
Quora.com என்ற கேள்வி பதில் தளத்தில் ஒருவர் இவ்வாறு ஒரு கேள்வி கேட்கிறார் —
Why are Tamil Brahmins using an unconventional Tamil dialect?
இதற்கு நானும் என் சிற்றறிவிற்கு எட்டியவாறு ஒரு பதில் அளித்திருந்தேன். பலரும் பதில் அளித்திருந்தார்கள். ஆனால் எந்த பதிலும் உண்மைக்கு அருகில் கூட வரவில்லை. பலரும் கேள்வி கேட்டவர் கேட்ட தொனிக்கே (பிராமணர்களை தாக்கும் தொனிக்கே) பதில் அளித்ததாகத் தோன்றியது, என்னை உட்பட. அந்தக் கேள்விக்கு உண்மையான பதில் யாரிடமிருந்தாவது வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன், இன்னும் வரவில்லை. இணையத்தில் தேடியும் இங்கும் அங்குமாக விடை சிதறிக்கிடந்தது. எதை ஏற்பது எதை புறக்கணிப்பது என்று தெரியவில்லை. நான் ஒரு பிராமணன், சற்று உணர்சிவசப்படுபவனே. இருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி உண்மையை அறியும் ஆர்வம் இருப்பதால் அந்த கேள்விக்கு நீங்கள் பதில் அளித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.
அன்புடன்,
பாலாஜி ராமகிருஷ்ணன்.
அன்புள்ள பாலாஜி
கடல் சினிமா வெளிவந்தபோது பல பிராமணர்கள் அந்த வட்டார வழக்கு ‘அன்னியமாக’ இருப்பதாக எழுதியிருந்தனர். படம் முழுக்க இம்மாதிரி அன்னியமாகப்பேசுவது தேவையா என்று கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். இவ்வகையான அன்னியமான மொழியை கடற்கரை மக்கள் பேசுவதற்கு என்ன காரணம் என்று கேட்டிருந்தனர். ஆக, ஒருவருக்கு அவரது சொந்த வழக்கு இயல்பானது,மற்றவை வேடிக்கையானவை, unusual ஆனவை, அவ்வளவுதான்
குமரிப்பகுதியில் பேசப்படும் மொழி தமிழ்நாட்டின் பிறபகுதியினருக்கு வேடிக்கையான அயல்மொழி. குமரிமாவட்டத்தினருக்கு கோவை மாவட்டத்தினர் பேசுவது என்ன என்றே தெரியாது. நாம் அனைவருக்குமே மலைமக்கள் பேசும் தமிழ் ஒரு சொல் கூட சாதாரணமாகப்புரியாது. நெல்லைமாவட்ட இஸ்லாமியத் தமிழுக்கு தனி அகராதியே தேவைப்படும்.
தமிழகத்தில் தனியான மொழிவழக்கைப்பேசுபவர்கள் பிராமணர்கள் மட்டும் அல்ல என்று கொஞ்சமாவது பயணம்செய்தவர்கள், மக்களைச் சந்தித்தவர்கள் அறிவார்கள். எல்லா சாதியினரும், எல்லா வட்டாரத்தினரும் தங்களுக்கென தனி மொழிவழக்கைக் கொண்டிருக்கிறார்கள். அவை அவர்கள் திட்டமிட்டு உருவாக்கிக்கொண்டவை அல்ல. எவரும் மொழியை அவ்வாறு உருவாக்கிக்கொள்ள முடியாது. அவை நீண்டகால புழக்கத்தினூடாக மெல்லமெல்ல உருவாகி வருபவை. கால்ந்தோறும் மாறிக்கொண்டிருக்கக்கூடியவை.
என்ன காரணம்? இம்மாதிரி எந்த ஒரு வினா எழும்போதும் அதற்கு நம் வரலாற்றிலும் பண்பாட்டுப்புலத்திலும் சென்று விடைதேடவேண்டும். அதற்குரிய எளியவாசிப்புகூட இல்லாதவர்கள்தான் இங்கு அதிகம். ஆகவேதான் வெற்று அரட்டையாக கருத்துக்களையும் விமர்சனங்களையும் அள்ளிவைக்கிறார்கள். ஒவ்வொரு தளத்திலும் இந்தப்பொதுப்புத்திப்புரிதல்களை எதிர்கொண்டுதான் எதையும் பேசவேண்டியிருக்கிறது. அதிலும் இணையமும் ஃபெஸ்புக்கும் வந்தபின்னர் எந்த அசட்டுத்தனமும் அச்சிலேறி பரவி நிலைக்கும் அபாயம் மிகுந்திருக்கிறது. மிக எளிமையான இந்த விஷயங்களைக்கூட விவாதித்துப்பேசவேண்டிய கட்டாயம் உருவாகிறது.
செய்தித்தொடர்பு, போக்குவரத்து ஆகியவற்றின் உருவான பெரும்வளர்ச்சியே நவீன காலகட்டத்தை உருவாக்கியது என நாம் அறிவோம். பொதுக்கல்வி அதற்குப்பின் வந்தது. பொது அரசியல் அடுத்து. இவற்றின் மூலம் மக்கள் மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு ஒற்றைச்சமூகமாக ஆனார்கள். இன்று நாமறியும் தமிழ்ச்சமூகம், இந்தியச்சமூகம் இவ்வாறு நவீனகாலகட்டத்தில் கட்டமைக்கபட்டது. இன்றுள்ள பொதுவான பேச்சுமொழி, பொதுவான அடையாளங்கள், பொதுமனநிலைகள் அனைத்தும் நவீனகாலகட்டம் உருவானபின்னர் மெல்லமெல்ல உருவாகித்திரண்டு வந்தவை மட்டுமே.
நவீன காலகட்டத்திற்கு முந்தைய சமூகத்தை வேளாண்மைச்சமூகம் என்கிறோம். அன்று இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட சமூகம் இருக்கவில்லை. பல தனி அலகுகளாக சமூகத்தைப்பிரித்து ஒன்றன்கீழ் ஒன்றாக அடுக்கி உருவாக்கப்பட்ட சமூகம் அது. பொதுவாக நிலவுடைமைச்சமூகம் [Feudalism] என்று அதைச் சொல்வது வழக்கம்
அன்றைய சமூகத்தில் ஒவ்வொரு இனக்குழுவும் மதக்குழுவும் தங்களுக்குள் உரையாடிக்கொண்டு தங்கள் சொந்த சமூகவிதிகள், ஆசாரங்கள், நம்பிக்கைகளின்படி வாழ்ந்தன. தொழில் சார்ந்த தேவைகளுக்காக மட்டுமே பிறசமூகங்களுடன் உரையாடின. குடியிருப்புகள் கூட தனித்தனியாகவே அமைந்திருந்தன. ஆகவே ஒவ்வொரு குழுவும் தனக்கென தனி மொழிவழக்கை அடைந்தது.
இதில் சில சமூகக்குழுக்கள் மிககுறைவான அளவுக்கு பிற சமூகக்குழுக்களுடன் தொடர்புடையனவாக இருந்தன. அவர்களின் மொழிவழக்கு பெரிய அளவில் வேறுபட்டிருந்தது. இவ்வாறு தனிமைப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று, நிலம். மீனவர்கள் வாழும் கடல்சார் நிலம் பிற நிலங்களில் இருந்து முற்றிலும் தனித்தது. ஆகவே அவர்களின் மொழி வேறுபட்டிருந்தது.
இன்னொன்று மதம். தமிழ் இஸ்லாமியரின் மொழிவழக்கு மிகவேறுபட்டிருப்பதற்குக் காரணம் இதுதான்.[நெல்லைப்பகுதியில் இஸ்லாமியரின் தனிவழக்கை நையாண்டி செய்யும் நூற்றுக்கணகான வேடிக்கைக்கதைகள் புழக்கத்திலுள்ளன] மூன்றாவதாக, ஆசாரங்கள். பிராமணர் தங்களுக்கென தனி ஆசாரங்கள் கொண்டவர்கள். ஆகவே அவர்கள் மேலும் தனித்து வாழ்ந்தனர். கடைசியாகத் தொழில். ஐம்பதாண்டுகளுக்கு முன் ஆசாரிகள் போன்ற சிறிய தொழிற்குழுக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது பிறருக்கு புரிவதே கடினம் என்னும் நிலை இருந்தது
இந்த தனிவழக்குகளில் அக்குழுவின் ஆசாரங்கள் சார்ந்த தனிச்சொற்கள் இருக்கும். அவர்களின் மதம் சார்ந்த கலைச்சொற்கள் இருக்கும். தொழில்சார்ந்த குழூக்குறிகளும் குறியீட்டுச் சொற்களும் இருக்கும். அவை அந்த வழக்கை பிறருக்கு அயலானவையாக ஆக்குகின்றன
தமிழகத்தில் ஆரம்பத்திலேயே நவீனக் கல்விகற்றவர்கள் பிராமணர்கள். ஆகவே நவீன எழுத்துக்கும் அவர்களே முதலில் வந்தனர். ஆகவே ஆரம்பகால எழுத்துக்கள் அவர்களின் பேச்சுமொழியை அதிகமாகப் பதிவுசெய்வனவாக இருந்தன. ஆரம்பகால சினிமா, நாடகங்கள் அனைத்திலும் அவையே இடம்பெற்றிருந்தனஆகவே பிறர் அதிகமாக அறிந்த அயலான மொழிவழக்கு பிராமணவழக்குதான். ஆகவேதான் பெரும்பாலானவர்கள் அவர்கள் மட்டும் மாறுபட்ட மொழியை பேசுவதாக நினைக்கிறார்கள்.
பின்னர் பிற சமூகக்குழுக்களின் தனிவழக்குகளும் இலக்கியத்தில் பதிவாகத் தொடங்கின. புதுமைப்பித்தனே பலவகையான மொழிவழக்குகளை இலக்கியத்தில் கையாண்டிருக்கிறார். தோப்பில் முகமது மீரானும் நாஞ்சில்நாடனும் குமாரசெல்வாவும் நானும் எழுதுவது குமரிமாவட்ட வட்டார வழக்கு. ஆனால் நான்கும் நான்கு மொழிவழக்குகள் என்பதை வாசகர் காணமுடியும். காடு நாவலில் மலைமக்களின் மொழியென முற்றிலும் மாறுபட்ட ஒரு மொழிவழக்கு இருப்பதைக்காணலாம்
சென்றகாலத்தில் நாம் இப்போது பேசும் , எழுதும் பொதுமொழி என ஒன்று இருக்கவில்லை என்பதைக் காணலாம். அன்றிருந்தது செய்யுள்நடையும் பல்வேறுவகையான பேச்சுவழக்குகளும்தான். தமிழில் உரைநடை உருவாகி வந்தது 1850 களில் நிகழ்ந்த ஒரு வளர்ச்சி. ஆரம்பகட்டத்தில் எழுதப்பட்ட சைவநூல்கள் செய்யுள்நடையையே உரைநடையாக எழுதின. அதேசமயம் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு வட்டாரவழக்கையே உரைநடையாக எழுதியிருப்பதைக் காணலாம்
இவ்விருவகை நடைகளும் கலந்து மெல்லமெல்ல உருவாகி வந்ததே நம்முடைய பொதுமொழி. அது முதலில் அச்சில்தான் வந்தது. நாளிதழ்கள் வழியாகவே அது பரவியது. அதன்பின்னர் மேடைப்பேச்சுக்கள், நாடகங்கள் வழியாக பரவலாயிற்று.
1900 ங்களில் இந்தியாவில் அரசியலியக்கங்கள் பெரும் அலையாக எழுந்தபோதுதான் இங்கு பொது ஊடகங்கள் பெரிதாக வளர்ந்தன. மக்கள் அச்சிட்ட மொழியை வாசிக்கத்தொடங்கினர். மேடைப்பேச்சைக் கேட்க ஆரம்பித்தனர். ஒரே இடத்தில் கூடவும் பிறருடன் உறவாடவும் தொடங்கினர். தங்கள் சிறிய வட்டங்களுக்கு வெளியே வந்து இன்னொரு மொழியை அறியத்தொடங்கினர். அவ்வாறுதான் பொதுவான பேச்சுமொழி மிகமெல்ல உருவாகத்தொடங்கியது
அந்தப்பொதுமொழியை உருவாக்குவதில் பள்ளிக்கூடங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பொதுக்கல்வி என்பது இந்தியாவில் 1900ங்களில்தான் பரவலாக வரத்தொடங்கியது. பள்ளிகள் அனைவருக்குமான மொழியை கட்டாயமாக்கின. நான் சிறுவனாக இருந்தபோது பிள்ளைகளை ஒரு பொதுமொழி பேசுவதற்குப் பயிற்றுவதை ஆசிரியர்கள் முக்கியமான கடமையாகக் கொண்டிருந்தனர். ‘அவிய, இவிய’ என்று பேசியதற்காகவே நான் அடிபட்டிருக்கிறேன்.
இன்றுகூட பொதுமொழியின் உருவாக்கத்தில் கல்விக்கூடங்கள் பெரும் பங்காற்றுகின்றன. என் மகள் படிக்கும் பள்ளியில் ஒருமுறை இதைக் கவனித்தேன். கடற்கரை மக்களின் பிள்ளைகள் அங்கு அதிகம். கடற்கரையில் மிக நல்ல பள்ளிகள் இருந்தாலும் அவற்றைத் தவிர்த்துவிடுவார்கள். காரணம் அவர்கள் அந்த வட்டாரவழக்கில் இருந்து பிள்ளைகள் வெளியே வரவேண்டும் என்று விரும்புவதுதான்.
ஆரம்பகாலத்தில் நாடகங்களில் கதைநாயகனும் நாயகியும் மட்டும் பொதுமொழி பேச பிறர் அவரவர் சாதிகளுக்குரிய வட்டார வழக்கைப் பேசுவது வழக்கமாக இருந்தது. ஏனென்றால் பொதுமொழி என்பது படித்தவர்களுக்குரியதாக இருந்தது அன்று. மேடையிலேயேகூட முக்கியமான விஷயங்களை மட்டும் பொதுமொழியிலும் பிறவற்றை வட்டார வழக்கிலும் பேசினர்
உண்மையில் பொதுவழக்கு இன்றிருப்பதுபோல மையப்போக்காக ஆனது தொலைக்காட்சி வந்தபின்னர்தான். என்னையே எடுத்துக்கொள்ளுங்கள், கல்லூரிப்படிப்பை முடிப்பது வரை நான் குமரிமாவட்ட, குலசேகரம் வட்டார, நாயர் -வேளாளர்களின் தமிழைத்தான் பேசிக்கொண்டிருந்தேன். என்னால் பொதுமொழியில் பத்துநிமிட பேசமுடியாது. பாடங்களை மட்டுமே அச்சுமொழியில் படித்து எழுதுவோம். மேடைப்பேச்சு அந்த பாடப்புத்தக மொழியை ஒப்பிப்பதாக இருக்கும். பேச்சு என்றால் வட்டார வழக்கு மட்டுமே
தொலைக்காட்சி ஒரு பொதுவான பேச்சுமொழியை கட்டமைத்தது. உயர்குடிகளாகிய பிராமணர், வேளாளர், முதலியார் போன்றவர்களின் மொழிவழக்குகளையும் பாடப்புத்தகமொழியையும் ஆங்கிலத்தையும் கலந்து அந்த மொழி கட்டமைக்கப்பட்டது. நம் பொதுமொழியில் இந்த அளவுக்கு ஆங்கிலம் இருப்பதற்குக் காரணமே இதுதான். சாதிய, வட்டார அடையாளம் இல்லாத பொதுமொழியை உருவாக்குவதற்கு ஆங்கிலம் தேவைப்படுகிறது.
இன்று நாம் இந்தப்பொதுமொழியை நோக்கி செல்லத்தொடங்கியிருக்கிறோம். வட்டாரவழக்குகளும் சாதியவழக்குகளும் மங்கலடைந்தபடியே வருகின்றன. என் இளமையில் நான் பேசிய குமரிமாவட்ட வட்டார வழக்குகளை இன்று முதியவர்கள், அதிலும் கிழவிகள், மட்டுமே பேசுகிறார்கள். கடற்கரை வழக்கும் முஸ்லீம் வழக்கும்கூட மாறிவிட்டன.
ஆனாலும் சில குலக்குழுக் கூடுகைகளில் அந்த தனிவழக்கை வலுக்கட்டாயமாகப் பேசுகிறார்கள். அது ஒரு சொந்த உணர்வை அளிக்கிறது. அவ்வளவுதான். நான் என் அண்ணாவிடம் குமரிமாவட்டத்துக்கே உரிய விசித்திரமான ஒரு மலையாளத்தில்தான் பேசுவேன். வற்கீஸிடம் விளவங்கோடு தமிழில்.
சுந்தர ராமசாமி பிராமண வழக்கைத்தான் பேசுவார். ஆனால் அது குமரிமாவட்டத்திற்குரிய பிராமணத்தமிழ். அது அவரது குடும்ப வளர்ப்பிலிருந்து அவர் பெற்றது. [ஒருமுறை திராவிட இயக்கத்தைச்சேர்ந்த ஓவியா என்பவர் அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்து சாலையில் அதைப்பற்றி சத்தம்போட்டு விவாதித்ததை நினைவுகூர்கிறேன். அதற்கு லட்சுமி மணிவண்ணன் நல்ல நாடார்த்தமிழில் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்]
சுந்தர ராமசாமி இலக்கியம் பேச ஒரு சீரான அச்சுமொழியை கையாள்வார். பொது உரையாடலுக்கு பொதுவான பேச்சுமொழிக்கு கொஞ்சம் சிரமப்பட்டு வருவார். ஆங்கிலம் அதிகமாக கலந்திருக்கும், காரணம் அவர் பொதுமொழிக்கு மிகப்பிந்தி வந்த தலைமுறை
சுந்தர ராமசாமியும் நானும் மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரியில் இருந்த சதங்கை ஆசிரியர் வனமாலிகையைப் பார்க்கச் சென்றோம். ‘இப்பம் கொள்ளாமா?’ என்று ராமசாமி கேட்டார். முகம் மலர்ந்த வனமாலிகை “ஓம்,கொறவுண்டு” என்றார்
திரும்பும்போது நான் சுந்தர ராமசாமியிடம் அவரது மொழி பற்றி கேட்டேன். “அது கன்யாகுமரி பாஷை. நான் அதில இப்ப வழக்கமா பேசுறதில்லை. ஆனா நானும் அவரும் சந்திச்சுக்கிட்டது அம்பது வருஷம் முன்னாடி. அப்ப இந்த பாஷையிலதான் பேசிகிட்டோம். அந்த பாஷை எங்கள கிட்டக்க கொண்டு வந்திடுது” என்றார்
ஜெ