ஊட்டி காவிய முகாம் – பதிவு-1

ஊட்டி சந்திப்பில் பங்கு கொள்வதற்காக மலேசியாவில் இருந்து விமர்சகர் யுவராஜன் 24 ஆம் தேதியே திருவனந்தபுரம் வழியாக எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அவருக்கும் சேர்த்து பேருந்தில் பயணச்சீட்டு பதிவுசெய்திருந்தேன். அருண்மொழியும் சைதன்யாவும் கூடவந்தார்கள். மாலை ஆறரை மணிக்கு பேருந்து. மிகச்சோம்பலாக ஊர்ந்து, நடுவே உல்லாசமாக பல இடங்களில் நின்று, மறுநாள் எட்டரை மணிக்கு ஊட்டிக்குக் கொண்டு சேர்த்தது.

ஊட்டியில் நல்ல காலநிலை என்று நிர்மால்யா சொல்லியிருந்தார். முந்தையநாள் இரவில் மழைபெய்திருந்த எச்சங்கள் தெருவில் இருக்க இளம் குளிர். ஆட்டோ பிடித்து குருகுலம் சென்றோம். முந்தையநாளே அங்கே கிருஷ்ணன் அரங்கசாமி இருவரும் வந்திருந்தார்கள். ஏழெட்டு நண்பர்கள் முந்தையநாளே வந்திருந்தார்கள் என்று சொன்னார்கள். இருபதுபேர் வரை ஆங்காங்கே கூடிப் பேசிக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவராக அறிமுகம்செய்துகொண்டேன். சிலர் நெடுநாள் கழித்து சந்திப்பவர்கள். சிலர் அப்போது அறிமுகமானவர்கள்.

அறைக்குள் சென்றேன். சொட்டுசொட்டாக குழாயில் வெந்நீர் வந்தது. பொறுமை இல்லாமல் பச்சைத்தண்ணீரிலேயே குளித்து உடை மாற்றிவிட்டு வெளிவந்தேன். ஒன்பதரைக்குள் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து பேர் வந்திருந்தார்கள். ஐம்பத்தெட்டுபேர் வருவதாக உறுதி சொல்லியிருந்தார்கள். மூவர் வரமுடியாதநிலை. உடல்நிலைசிக்கலால் சங்கம் மருவியகால இலக்கியம் பற்றி பேசுவதாக இருந்த கரு.ஆறுமுகத்தமிழன் வரவில்லை.

முதல் அரங்கை பத்தரை மணிக்கு ஆரம்பித்தோம். குன்னூரில் ஒரு கூட்டத்துக்குச் சென்ற நாஞ்சில்நாடன் அப்போதுதான் வந்து சேர்ந்தார். அரங்கம் குருகுலத்தின் நூலக அறையில். விசாலமான கூடம். நாற்காலிகளில் அமர விரும்பியவர்களுக்கு நாற்காலிகள். முதலில் கூட்டத்தின் இயல்பைப்பற்றி நான் சொன்னேன். ‘இக்கூட்டத்தில் தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்க்க வேண்டும். அதே சமயம் எந்தக்கருத்தையும் முன்வைக்கலாம். எவரையும் மறுக்கலாம். நாராயணகுருவையோ நித்யாவையோ கூட இங்கே மறுக்கவும் நிராகரிக்கவும் செய்யலாம். குருகுலத்தில் எந்த விதமான நடத்தை,செயல்பாடு சார்ந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. முழுக்க முழுக்க சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இருக்கவேண்டும் என்பதற்காகவே நிபந்தனைகள் விதிக்கப்பட்டன’ என்றேன்

முதலில் சிறில் அலெக்ஸ் அவரது ஆதர்ச இறையியலாளரான ஆண்டனி டிமெல்லோ குறித்து உரையாற்றினார். [Anthony de Mello] ஏசுசபை பாதிரியரான டிமெல்லோ கோவாவைச்சேர்ந்தவர். மும்பையில் 1931ல் பிறந்த டிமெல்லோ ஏசு சபை பாதிரியாராகவே கடைசி வரை இருந்தார். அதேசமயம் ஆன்மீகத்துக்கும் மதத்துக்கும் இடையேயான உறவை அவர் தொடர்ந்து மறுபரிசீலனை செய்தார். நிறுவனமயமாக்கபப்டும் நம்பிக்கை என்பது பலசமயம் சடங்குகளாக ஆகி ஆன்மீகஞானத்தை மறைப்பதாக ஆகிவிடுகிறது என்பதே டிமெல்லோவின் கருத்தாக இருந்து வந்தது.

டிமெல்லோ சிறிய உதாரண கதைகள் மூலம் தன்னுடைய தரப்பை முன்வைத்தார். அவரது நூல்கள் கத்தோலிக்க சபையின் எதிர்ப்புக்கு ஆளாயின. தடைசெய்யப்பட்டன. ஆனால் பிறகு சிறிய எச்சரிக்கைக் குறிப்புடன் அவை சபையால் அனுமதிக்கப்பட்டன. சிறில் டிமெல்லோவின் சில குட்டிக்கதைகளை குறிப்பிட்டு அவற்றில் இருந்து விவாதத்தை ஆரம்பித்தார். டிமெல்லோவுக்கு ஜென் பௌத்தம் மீது பெரும் ஈடுபாடு இருந்தது என்றும் அவரது கதைகளில் அதைக் காணலாம் என்றும் சிறில் சொன்னார் [ தாய்லாந்தைச்சேர்ந்த பௌத்த துறவி அஜா சா [Ajahn Chah] வின் மீது டிமெல்லோவுக்கு பற்றுஇருந்தது]

டிமெல்லோவின் முதல் கதையில் ஒரு பயணி அமேசான் காடுகளுக்குச் சென்றபின் திரும்பி வருகிறார். ஊரார் அவரிடம் அதைப்பற்றி சொல்லச் சொல்லி கேட்கிறார்கள். அதைச் சொல்லவே முடியாது என நினைக்கும் பயணி வேறுவழியில்லாமல் ஒரு வரைபடத்தை வரைந்து அளிக்கிறார். அந்த வரைபடத்தையே அவர்கள் ஆமேசான் காடாக எண்ணிக்கொள்கிறார்கள்.

நிலவைச் சுட்டிக்காட்டிய விரலை பார்ப்பதுபற்றிய ஜென் கதையுடன் இந்த கதை இணைகிறது என்று சொல்லப்பட்டது. ஓர் அனுபவத்தை எப்படிச் சொல்ல முடியும்? சொல்லப்படுவது எதுவுமே அந்த அனுபவத்துக்கு நிகரல்ல. ஆகவே அனுபவமே உண்மை, அதைப்பற்றிய சித்திரங்கள் அல்ல என்று சொல்லப்பட்டது. ஆனால் மானுட அனுபவத்தைச் சொல்ல முடியும் ,பகிர முடியும் என்ற சாத்தியக்கூறே இலக்கியத்தை உருவாக்கியது. கலைகளை உருவாக்கியது. தத்துவத்தையும் சிந்தனைகளையும் உருவாக்கியது. அதாவது வரைபடத்தை வைத்து தானும் அமேசானுக்குச் செல்லக்கூடியவனுக்கு அது உதவிகரமானது. அந்த வரைபடத்தை மட்டுமே நம்புகிறவனுக்கு அதனால் பயனில்லை.

அனுபவம் என்ற சொல் ஃபவ என்ற சம்ஸ்கிருத மூலவேர் கொண்டது. ஃபவ என்றால் நிகழ்வது, ஆவது என இருபொருள். நிகழ்வதை அறிவதும் ஆவதை உணர்வதுமே அனுபவம். இன்னும் நுட்பமாகச் சென்றால் ஃப என்ற மூல ஒலியே ஃபவ மற்றும் ஃபாவ என்னும் இரு சொற்களுக்கும் வேர். ஃபவ என்றால் ஆதல். ஃபாவ என்றால் உணர்தல். இரண்டும் ஒன்றே என்ற ஆதி உணர்வில் இருந்து அச்சொற்கள் உருவாகியிருக்கின்றன என்று சொல்லப்பட்டது

சிறில் குறிப்பிட்ட கதைகளை உதாரணகதைகள் என்று சொல்லலாம். அவை பெரும்பாலும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதைகளின் பாணியில் அமைந்தவை. ஒரு மதச்சடங்கின்போது தொந்தரவு செய்த பூனையை குரு கட்டிப்போடுகிறார். பிறகு குரு மறைந்தபின் பூனையை கட்டிபோட்டு சடங்குசெய்வது ஒரு மரபாக ஆகிறது. இன்னொரு கதையில் ஒரு பாதிரியார் சிறுவன் ஒருவனின் தொந்தரவை தவிர்க்க ஆற்றில் பூதம் இருக்கிறது போய்ப்பார் என்று சொல்லி விடுகிறார். சிறுவன் சொல்லக்கேட்டு ஊரே ஆற்றுக்கு ஓட இருந்தாலும் இருக்கும் என பாதிரியாரும் பின்னால் ஓடுகிறார்.

கதைகள் மீதான விவாதம் இரு முக்கியமான வினாக்களில் மையம் கொண்டது. ஒன்று, கிறித்தவ சபையின் வன்முறையைப்பற்றி டிமெல்லோ எனன் நினைத்தார்?. அமைப்புரீதியாக திரட்டப்படும் மதம் வன்முறையையே உருவாக்கும் என்றும் கிறித்தவ சபை உலகமெங்கும் மானுடப்பேரழிவை உருவாக்கியது என்றும் அதைப்பற்றி டிமெல்லோ என்ன சொல்கிறார் என்றும் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலாக அத்தகைய வன்முறையைச் செய்யாத மதம் உண்டா என்ற வினா எழுந்தது. மதங்கள் அனைத்துமே அதிகார உருவாக்கத்தின் கருவிகளாகவே இருக்கின்றன. எந்த மதமும் விதிவிலக்கல்ல என்று சொல்லப்பட்டது.

இதைச்சார்ந்த விவாதத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் பல கோணங்களில் அமைந்திருந்தன. கிறித்தவம் பழங்குடிப்பண்பாட்டை முழுமையாகவே அழித்தொழிப்பதாக பலநாடுகளில் செயல்பட்டது வரலாறு. ஆனால் அதையே இந்துமதமும் செய்கிறது. பிறபண்பாடுகளை அது தனக்குள் இழுத்துக்கொள்கிறது அது வன்முறை அல்லவா என்று கேட்கப்பட்டது.

மதம் என்பது சென்றகாலகட்டத்தின் பண்பாடும் ஞானமும் நம்பிக்கைகளும் முழுக்க தொகுக்கப்பட்ட ஓர் அமைப்பு. அந்த அமைப்பை அந்தந்தக் காலகட்டத்து ஆதிக்கசக்திகள் பயன்படுத்திக்கொள்வது என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் அதற்குப் பதிலாக மொத்த மதக்கட்டுமானத்தையே நிராகரிப்பதென்பது சாத்தியமானது அல்ல. மதம் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்கும் கருவியாக ஆகும் என்பது எந்த அளவு உண்மையோ அந்த அளவு உண்மை அதில் சென்றகாலத்தின் ஆன்மீகப் பாரம்பரியமும் உள்ளது என்பது. டிமெல்லோ மதத்தில் இருந்து அந்த ஆன்மீகத்தைமட்டும் பிரித்து எடுக்க முயன்றவர் என்று பதில் சொல்லப்பட்டது

அந்தமுயற்சியில் டிமெல்லோ வென்றாரா, அவர் மத அமைப்பால் நிராகரிக்கத்தானே பட்டார் என்று கேட்கப்பட்டது. டிமெல்லோ கத்தோலிக்கத் திருச்சபையுடன் மோதினார். ஆனால் அவரை கத்தோலிக்க சபை முற்றிலும் விலக்கவில்லை. அவர்மீதான முரண்பாட்டுடன் அவரை அனுமதிக்கவே செய்தது. திருச்சபைகளில் இன்றும் அவர் வாசிக்கப்படுகிறார், அமைப்பு மனிதர்களாக ஆகாமல் ஆன்மீகம் நோக்கி நகரும் பலருக்கு அவர் ஆதர்சமாக இருக்கிறார் என்று பதில் சொல்லப்பட்டது

எந்த மதமும் ஆதிக்கத்தை உருவாக்குகிறது. ஆனால் சமணம், பௌத்தம், கிறித்தவம், இஸ்லாம் போன்ற தீர்க்கதரிசன மதங்களின் ஒற்றைப்பார்வை இந்துமதம் யூத மதம் போன்றவற்றுக்கு இருப்பதில்ல. ஆகவே அவற்றின் அணுகுமுறை இன்னமும் நெகிழ்தன்மை கொண்டதாக உள்ளது. மாற்றுக்கருத்தை அழிக்கும் போக்குடன் மாற்றுக்கருத்தை உள்வாங்கும் போக்குடன் ஒப்பிடக்கூடாது. உள்வாங்குவது என்பது ஒப்பீட்டளவில் சாத்வீகமானது. உள்வாங்கப்பட்ட எந்த பண்பாட்டுக்கூறும் அழிந்த வரலாறு இல்லை. ஆனால் சீனாபோன்ற நாடுகளில்கூட பழங்குடிப்பண்பாடுகள் கம்யூனிசத்தால் வேருடன் பிடுங்கி அழிக்கப்பட்டன. அந்த பேரழிவுகளைப்பற்றி எந்தக்கருத்தும் சொல்லாதவர்களே இந்துமதத்தின் உள்வாங்கலை மாபெரும் வன்முறையாகச் சித்தரிக்கிறார்கள்.

ஏன் அப்படி ஒரு தொகுப்புமுறை செய்யப்படவேண்டும்? ஏன் ஒவ்வொன்றையும் அவ்வாறே வளரவிடக்கூடாது? எழுப்பப்பட்ட அந்த வினாவுக்கு விடையாக, இரு பதில்கள் சொல்லபப்ட்டன. பற்பல சிறுகூறுகளை இணைப்பதன்மூலமே நிலப்பிரபுத்துவம் உருவாக முடிகிறது. ப்ழங்குடிப்பண்பாட்டின் உள்முரண்பாடுகளை அந்த இணைப்பின்மூலம் நிலப்பிரபுத்துவம் தீர்த்து வைக்கிறது. நிலப்பிரபுத்துவம் என்பது அந்தக்காலகட்டத்தின் வரலாற்று முன்னகர்வுக்கு இன்றியமையாதது. இதுவே மார்க்ஸிய முரணியக்க வரலாற்று நோக்காகும்.

அந்த தொகுப்புமுயற்சியின் விளைவாகவே பெரிய சமூக அமைப்புகள் உருவாயின. அரசாங்கங்கள் உருவாயின. அந்த அமைப்புகளே சிந்தனைகளையும் கலைகளையும் பண்பாட்டையும் உருவாக்கின. ஆகவே தொகுப்புமுறையும் அதில் உள்ள ஆதிக்கமும் சென்றகாலகட்டத்தில் தவிர்க்கவே இயலாதது. எந்த அளவுக்கு வன்முறை குறைவானதோ அந்த அளவுக்கு அது மேலானது என்றே நம்மால் இன்று சொல்லமுடியும்.

இரண்டாவது பதில், அவ்வாறு தொகுக்கப்பட்டது அனைத்துக்கும் பொதுவாக காலப்போக்கில் உருவாகி வந்த ஒரு மையம் வழியாகவே என்று. பலவருடக்காலம் நீடித்த விவாதம் அதில் நிகழ்ந்தது. அவ்வாறு திரண்ட மையக்கருத்து அனைத்தையும் தொகுப்பது என்பது சிந்தனைகளின் இயல்பான வளார்ச்சி என்று சொல்லப்பட்டது. அதை எங்கும் எச்சிந்தனையிலும் காணலாம்.

இன்றைய முதலாளித்துவ யுகத்தில் ஒவ்வொரு பண்பாட்டுக்கூறும் தன்னுடைய இயல்பான வளர்ச்சியைஅடையும்படி விடப்படலாம். ஆனால் அப்போதுகூட அவை ஒன்றுடன் ஒன்று உரையாடும்போது அவற்றில் வலிமையானது பிறவற்றை பாதிக்கும். பல சிறு பண்பாட்டுக்கூறுகள் இணைந்து பெரிதாக ஆகும். அது சிந்தனைகளின் இயக்கவியல்.

இரண்டாவதாக, டிமெல்லோ அவரது ஆன்மீக ஈடேற்றத்துக்கு கீழைச்சிந்தனைகளை பயன்படுத்திக்கொண்டாரா என்பதைப்பற்றிய விவாதம். டிமெல்லோ தன்னை கீழை மேலை என்ற பிரிவினைகளில் சிக்கிக்கொள்ளச் செய்யவில்லை. அவரது வினா ஒவ்வொருவரும் அந்தரங்கமாக அடையும் ஆன்மீக அனுபவம் குறித்தது மட்டுமே. அந்த அந்தரங்கத்தை தளைக்கும் அம்சமாக அமைப்புகளை கொள்ளலாகாது என்பதே

மனக்குளத்தில் பாசியை விலக்கி மெய்மையை அறிவதைப்பற்றிய சுந்தரராமசாமியின் பிரபலமான உருவகம் குறிப்பிடப்பட்டது. பழக்கம் என்பதே பலசமயம் அனைத்தையும் மறைக்கும் திரையாக ஆகிவிடுகிறது. அந்தப் பழக்கத்தை ஓயாது விலக்குவதே சுய அறிதலுக்கான வழி. டிமெல்லோ அவரது கதைகள் வழியாக முன்வைக்கும் மீட்பு என்பது இதுவே என்று சொல்லப்பட்டது.

விவாதம் பலதிசைகளில் இருந்தும் பலராலும் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் வழியாக முன்னகர்ந்தது. சிலசமயம் சத்தம் மிகுந்திருந்தாலும் நகைச்சுவையும் வேடிக்கையுமாக அது உற்சாகமான அனுபவமாக இருந்தது. தனிப்பட்ட மோதல்களை நோக்கிச் செல்லவில்லை. பொதுவாக மதத்தைப்பற்றிய ஆழமான அவநம்பிக்கை கொண்ட ஒரு தரப்பும் மதம் என்பது சிந்தனைகளின் தொடர்ச்சியை உருவாக்கும் ஓர் இன்றியமையாத அமைப்பு என்ற எண்ணம் கொண்ட தரப்பும் இருந்தது.

மதிய உணவுக்குப் பின்னர் நான் இந்திய சிந்தனை மரபின் நான்கு அடிப்படை வினாக்களைப்பற்றிப் பேசினேன். அவை – விடுதலை (முக்தி, மோட்சம்), மையம் (பிரம்மம், பிரபஞ்சத்தின் சாரமான பொருள்), ஊழ் (விதி, கர்மவினை), அறம் (சம்சாரம், வாழ்க்கைச் சுழல்) என்பவை. இந்திய சிந்தனைகளை நாம் பயிலும்போது அவற்றை புரிந்துகொள்ளவும் ஒப்பிடவும் மதிப்பிடவும் இந்த அடிப்படைகள் தேவையாகின்றன. காரணம் இந்த அடிப்படைகள் வேதாந்தம் போன்ற வைதிக சிந்தனைகளுக்கும் பௌத்தம், சமணம் போன்ற அவைதிக சிந்தனைகளுக்கும் பொதுவாக உள்ளன. [பார்க்க நான்கு அடிப்படை பேசுபொருட்கள் ]

இந்த நான்கு அடிப்படைகளும் எல்லா சிந்தனைகளுக்கும் பொதுவா என்ற வினா எழுப்பப்பட்டது. இந்த நான்கு அடிப்படைகளையும் வினாக்களாக எழுப்பினால் எல்லா இந்திய சிந்தனைகளும் அதற்கு ஒரு பதிலை அளிக்கும். துக்கத்தில் இருந்து விடுதலை என்பதை தங்கள் நோக்கமாக எல்லா சிந்தனைகளுமே சொல்கின்றன. வேதாந்தத்துக்கு ஞானமே விடுதலை. ஆனால் சார்வாக மரபுக்கு காமமே [உலக இன்பமே] விடுதலை.

அதேபோல ஒரு சிந்தனை பிரபஞ்ச மையமாக மகாதர்மம் என்ற அடிப்படை விதியை முன்வைக்கிறது. சைவம் அடிப்படையான காரணமாக சிவம் என்ற கருத்தை முன்வைக்கிறது. அப்படி ஒரு மையமே இல்லை என்று சமணம் சொல்லக்கூடும். இந்த வினாக்கள் மூலம் நாம் இந்தச் சிந்தனைகளை ஒப்பிட்டு அறிவது எளிதாகிறது. ஊழ்வினையை ஒவ்வொரு சிந்தனையும் ஒவ்வொரு வகையில் ஏற்கிறது. சமண பௌத்த மதங்களுக்கு ஊழ்வினை என்பது சென்ற பிறவியில் செய்யப்பட்ட செயல்களுக்கான எதிர்வினை. வேதாந்தி அதை ஏற்பதில்லை. அவருக்கு ஊழ் என்பது பேரியற்கையின் விதி மட்டுமே. சார்வாகர்களுக்கு இப்பிறவியில்செய்யும் செயல்களுக்கான எதிர்விளைவுதான் அது.

முக்கியமாகக் கேட்கப்பட்ட இரு கேள்விகள். ஒன்று இச்சிந்தனைகளை வெறும் அருங்காட்சியகப்பொருட்களாக நாம் அறிய வேண்டுமா என்பது. பதிலுக்கு இவற்றைப்போலவே காலத்தால் பழமையான பிளேட்டோ , சாக்ரடீஸ், அரிஸ்டாடில் சிந்தனைகள் அருங்காட்சியகத்திலா உள்ளன என்று கேட்கப்பட்டது. தொழில்நுட்பமும் நடைமுறைச்சிந்தனைகளும் காலாவதியாகும். தத்துவம் என்பது ஒருவகை வாழ்க்கைநோக்கு. அது காலாவதியாவதில்லை.

மேலைநாட்டின் இன்றைய நவீனச் சிந்தனைகள் அனைத்துமே அவர்களின் கிரேக்க செவ்வியல் மரபில் உள்ள பழமையான சிந்தனைகளின் நீட்சியாகவும் வளர்ச்சியாகவும் உருவானவையே. ஆகவேதான் அங்கே அந்த முன்னோடிச் சிந்தனையாளர்கள் வாழும் பெயர்களாக உள்ளனர். அந்த தத்துவமரபு அவர்களுக்கு ஒரு பார்வையை திறந்து தருகிறது. அதை அவர்கள் தர்க்கபூர்வமாக ஆராய்ந்து புதிய புதிய எல்லைகளுக்குக் கொண்டுசெல்கிறார்கள்

நமக்கு கடந்த இருநூற்றாண்டுகளாக அந்தமேலை மரபே சிந்தனையின் அடிப்படை என்று சொல்லித்தரப்பட்டிருக்கிறது. ஆழமான தாழ்வுணர்ச்சியுடன் நாம் மேலைநாட்டினரே சிந்திக்க முடியும் நாம் அவற்றை பின் தொடர்ந்து சென்று கற்றுக்கொள்ளவே முடியும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆகவேதான் நமக்கு சங்கரர் பழமையானவராகவும் இமானுவேல் காண்ட் இன்றும் தேவையான நவீனசிந்தனையாளராகவும் இருக்கிறார். சங்கரரின் ஆயிரமாண்டு பிறப்புவிழாவில் இதைச் சுட்டிக்க்காட்டிப்பேசியவர் இ.எம்.எஸ்.

சிந்தனை என்பது அந்தரத்தில் இருந்து எழமுடியாது. நம்முடைய சிந்தனை மரபை கற்று, புறவயமாக ஆராய்ந்து, இன்றைய வாழ்க்கைக்காக அதை மறு ஆக்கம் செய்யும்ப்போதுதான் அது சிந்தனைக்கான அடித்தளமாக ஆகிறது. லங்காவதார சூத்திரம் என்ற நூலில் இருந்து சி.ஜி.யுங் கூட்டுநனவிலி போன்ற கருத்தாக்கங்களை உருவாக்கினார். நாம் அவற்றைக் கற்று மேற்கோள் காட்டுகிறோம்.

அதே போல ழாக் தெரிதாவின் மொழியியல் கோட்பாட்டின் அடிப்படைகள் அனைத்தையும் நம் மீமாம்சை மொழியியலில் காணலாம். அதை அவரே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் நம்முடைய மரபில் இருக்கும் அத்தகைய சிந்தனைகளில் இருந்து நம்மால் உண்மையான சிந்தனைகளை உருவாக்க முடிவதில்லை. காரணம் நமக்கு இருக்கும் தாழ்வுணர்ச்சி. அதனால் நம் மரபை நாமே உதாசீனம்செய்யும் போக்கு. நாம் கற்காத காரணத்தால்தான் இவை நமக்கு அன்னியமாக உள்ளன. ஆனால் அவை உலகமெங்கும் கற்கப்படுகின்றன என்பதை நாம் மறக்கலாகாது

இந்த மரபில் வேர்கள் இருந்த, இங்கிருந்து முளைத்தெழ முடிந்த சிந்தனையாளர்கள் அசலான சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். சந்திரசேகர், விலியனூர் ராமச்சந்திரன் போல பல உதாரணங்களைச் சொல்லலாம். ஒரு நூறு சந்திரசேகர்கள் ராமச்சந்திரன்கள் இருந்திருந்தால் உலகசிந்தனையில் இந்தியாவின் இடம் ஆழமாக நிறுவப்பட்டிருக்கும், இந்த வினாவே எழுந்திருக்காது.

இரண்டாவது வினா, இந்த தத்துவ சிந்தனைகளின் நடைமுறைப்பயன் என்ன என்று. இந்த வினா எல்லா தத்துவ விவாதங்களிலும் தத்துவம் என்றால் என்ன என்று அறியாமல் முன்வைக்கப்படுகிறது. இதே வினாவை சி.ஜி.யுங்கிடமோ தெரிதாவிடமோ கூட கேட்கலாமே. தத்துவம் எதை நோக்கிப் பேசுகிறது என்பதே முக்கியமானது. அரசியலும் பொருளியலும் பேசும் தளத்தை நோக்கி தத்துவம் பேசுவதில்லை. அது மானுடனின் சில அடிப்படையான தத்தளிப்புகளை நோக்கி பேசுகிறது. அதை பறதி [ Angst] என்று சொல்லலாம். தத்துவம் அந்த தளத்தையே இலக்காக்குகிறது. யுங்காக இருந்தாலும் சரி தெரிதாவாக இருந்தாலும் சரி.

சுந்தர ராமசாமி ஒருமுறை சொன்னார். அவரது மகள் நோயுற்றிருந்தபோது எழுந்த மனக்கொந்தளிப்புகளுக்கு மார்க்ஸியம் பதிலளிக்கவில்லை, ஜெ.கிருஷ்ணமூர்த்திதான் பதிலளித்தார் என. அந்த கேள்வியே தவறு. மார்க்ஸியம் எதிர்கொள்ளும் பிரச்சினை பொருளியல் அரசியல் சார்ந்தது. தத்துவம் எதிர்கொள்ளும் பிரச்சினை மனிதனின் இருப்பு, அவனது வாழ்வின் பொருள் சார்ந்தது. ஒன்றிடம் இன்னொன்றின் பதிலை எதிர்பார்க்க இயலாது.

எந்த ஒரு மனிதனுக்கும் அவன் இருப்பை அல்லது தன்னிலையை பற்றிய ஒரு தத்துவ நிலைப்பாடு ஒன்று இருக்கும். பலசமயம் அது அவனால் பெற்றோரிடமிருந்து பெற்று இயல்பாக சுமக்கப்படுவதாக இருக்கும். தத்துவசிந்தனை அதைப்பற்றிய விவாதத்தை முன்னெடுக்கிறது. சாக்ரடீஸில் இருந்தோ ஜைமினியில் இருந்தொ ஆரம்பித்து ழாக் லக்கான் வரை தெரிதா வரை நீண்டுகொண்டே இருக்கிறது.

பலகோணங்களிலான விவாதம் ஐந்தரை மணிக்கு முடிவுக்கு வந்தது. நண்பர்களுடன் மாலைத்தேனீருக்கு பின்னர் நடக்கச் சென்றோம். குருகுலம் அருகே உள்ள பைன்மரக்காட்டுக்கு சென்றோம். குளிர்ந்த பசுமையான சாலையில் மேடேறிசென்றது மூச்சிரைக்கச் செய்யும் அனுபவம். அங்கும் விவாதம் முன்னகர்ந்தது. ஆனால் இப்போது பல நகைச்சுவைகள் கிண்டல்களுடன்.

மலைமேல் பனி இறங்கிக்கோண்டிருந்தது. சுற்றிலும் பைன்மரக்காடுகளில் வெல்வெட் போல பசுபாசி. பைன் இலைகள் படிந்த மெத்தை போல நிலம். காட்டு மடிப்புகளில் உயரமில்லாத சோலைக்காடுகளுக்குள் பறவைகள் கூடணைந்து கலகம் செய்துகொண்டிருந்தன. நல்ல குளிர் பரவிக்கொண்டிருந்தது.

திரும்பி வரும்போது நன்றாகவே இருட்டிவிட்டது. தவறான இடத்தில் புதர்க்காட்டுக்குள் நுழைந்துவிட்டோம். நல்ல இருட்டு. புதர்க்காடு இரண்டாள் உயரமானது.ஆனால் மிக அடர்த்தியான முள்செடிகளால் ஆனது. ஊடே ஒருவர் மட்டுமே செல்லும் பாதை. சிலபாதைகள் காட்டெருதுக்கள் சென்று உருவானவை. அப்பகுதிதான் காட்டெருதுக்களின் இடம். குருகுலத்துக்குள் அவை வழக்கமாக வரும். சென்ற இரவுகூட வந்ததாக சொன்னார்கள். சட்டென்று ஒரு காட்டெருதைச் சந்தித்திருந்தால் அந்த முள்காட்டில் முன்னும் பின்னும் நகரமுடியாமல் உயிராபத்தே நிகழ்த்திருக்கும்

கொஞ்சம் கொஞ்சமாக திகில் கூடியது. செல்பேசி ஒளியில் அந்த காட்டுக்குள் சுழல்பாதை போல ஒருமணிநேரம் வரை சுற்றினோம். செல்பேசிக்கு இத்தனை ஒளி உண்டு என அப்போதுதான் தெரிந்தது. ஆரம்பத்தில் சிரித்தவர்கள் கூட புலம்ப ஆரம்பித்தனர். மெல்லமெல்ல திரும்பி மீண்டும் தேயிலைத்தோட்டத்துக்குள் வந்தோம். வான வெளிச்சத்தில் பச்சைத்தோட்டம் நிழலுருவாக விரிந்து கிடந்தது. ஒருவழியாக மறுபக்கம் வந்தபோது தேடிவந்த நிர்மால்யா தோன்றினார். உடனே எல்லாம் எளிதாக ஆகி சிரிப்பும் உற்சாகமும் மீண்டது

[மேலும்]

முந்தைய கட்டுரைசைவப்பாடல்கள், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇரு நிகழ்ச்சிகள்