‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 50

பகுதி ஐந்து : தேரோட்டி – 15

ரைவத மலையின் பின்பக்கமாக சென்ற செம்மண் பாதை, சுட்டுவிரல் தொட்டு நீட்டிய செங்காவிக்கோடு போல கரும்பாறைகளைச் சுற்றியும் செம்மலைச்சரிவுகளில் இறங்கியும் வளைந்தேறியும் சென்றது. இருபக்கமும் முட்கள் செறிந்து சாம்பல் நிறம் கொண்டு நின்ற செடிகள் பகைமையுடன் சிலிர்த்திருந்தன. உச்சிப்பாறைகளின் மேல் வரையாடுகளின் நிரை ஒன்று மெல்லிய தும்மலோசை எழுப்பியபடி கடந்து சென்றது. காலையில் அவ்வழி சென்ற அருகப் படிவர்களின் காலடிகள் செம்மண் புழுதியில் படிந்து அப்போதும் அழியாமல் எஞ்சியிருந்தன.

அவற்றின் மேல் கால் வைக்காமல் நடந்த இளைய யாதவர் அர்ஜுனனிடம் “கீழ்த்திசை எங்கும் இவ்வருகப்படிவர்கள் சென்றுள்ளார்கள். தெற்கில் தண்டகாரண்யத்தை கடந்தும் சென்று விட்டிருக்கிறார்கள். இங்கு இப்பாலை மண்ணில் விழியும் உளமும் பழகியதனால் செல்லுமிடங்களிலும் முட்புதர்களும் பாறைகளும் நிறைந்த வெறும் வெளியையே இவர்கள் நாடுகிறார்கள். எங்கும் அரைப்பாலை நிலங்களிலேயே இவர்களின் வாழ்விடங்கள் அமைந்துள்ளன” என்றார். “வளம் என்பது இவர்களுக்கு ஒவ்வாததா?” என்றான் அர்ஜுனன். “ஆம், அங்கு வாழ்வு செழிக்கிறது. செழிப்பின் திசைக்கு எதிர்த்திசையே துறவின் திசையென்று இவர்கள் எண்ணுகிறார்கள். துறந்து துறந்து சென்று துறக்க ஒண்ணாததென எஞ்சுவதே தங்கள் இருப்பென்றும் அதை நிறைவழியச்செய்யும் முறைமையே ஊழ்கமென்றும் இவர்களின் நெறிவழி வகுத்துள்ளது” என்றார் இளைய யாதவர்.

மலைப்பாறை ஒன்றின் இடுக்கில் பெரிய அரசவெம்பாலையின் சட்டை தொங்கி பட்டுச் சால்வை போல் காற்றில் நெளிந்தது. அர்ஜுனன் அதைப் பார்த்ததும் யாதவரை நோக்கினான். “குகைகளில் இவர்கள் அரசப் பெருநாகத்துடன் தங்குகிறார்கள் என்று எளியமக்கள் நம்புகிறார்கள். ஆகவே செல்லும் இடங்களிலெல்லாம் நாகர்கள் இவர்களை எளிதில் ஏற்றுக்கொள்கிறார்கள். தென்திசையில் அருகர் ஆலயங்களைச் சுற்றிலும் நாகர்களின் அரவாலயங்கள் அமைந்துள்ளன” என்றார். அர்ஜுனன் “தங்கள் தமையனார் முற்றிலும் அருக நெறியை சார்ந்துள்ளாரா?” என்றான். “அதை அறியேன். சென்றமுறை வந்தபின் அவரை நான் காணவுமில்லை. அவர் இங்கு அருகநெறியினருடன் இருக்கிறார் என அறிந்தேன். அவர் இருக்கும் நிலையை உணரக்கூடவில்லை” என்றார்.

சில கணங்கள் எண்ணிவிட்டு “நான் அவரிடம் விடைபெறும்போது இங்கிருங்கள் மூத்தவரே இவ்வழிச்செல்கையில் தன் முழுத்தோற்றத்தை சுருக்கி தன் கைகளுக்குள் அடங்கும் நாள் ஒன்று வரும். அப்போது விரல்களை விரித்துப் பார்த்தால் அங்கும் ஒரு வினாவை மட்டுமே காண்பீர்கள். அன்று திரும்புவதற்காக உங்களுக்கு ஒரு நகரம் உண்டென்று உணருங்கள். துவாரகை உங்களுக்குரியது. நீங்கள் விழைந்தால் என் மணிமுடி தங்கள் பாதங்களுக்கு உரியது என்றேன். புன்னகைத்து சென்று வா என்றார்” என்றார் இளைய யாதவர். “உண்மையில் அன்று இம்மலை இறங்கி செல்லும்போது ஒரு முழுநிலவு நாளுக்குள் அவர் திரும்பி வருவாரென்றே எண்ணினேன். முன்பு ராகவ ராமனுக்காக அனுமன் இலங்கையை நோக்கி கடல் தாவி சென்றது போல் நெடுந்தொலைவுகளை கணத்தில் தாவிக் கடப்பவர் அவர். இன்று ஓராண்டு நிறைகிறது. இன்னமும் இங்குதான் அவர் இருக்கிறார் என்பதே என்னை வியப்புறச் செய்கிறது” என்றார்.

தொலைவில் எருதுக்கொடி பறக்கும் மலைக்குகை முகப்பு ஒன்றிருந்தது. இரு பெரிய பாறைகளால் மறிக்கப்பட்ட குகையின்முன்னால் இருவர் கையூன்றி சரிந்து செல்வதற்கு இடமிருந்தது. அதனருகே சென்றதும் உள்ளிருந்து வந்த குகையின் குளிர்மூச்சு அர்ஜுனனின் விலாத் தசைகளை சிலிர்க்க வைத்தது. இளைய யாதவர் உள்ளே சென்று உருளைப்பாறைகளை கடந்து தாவி கீழே இறங்கி “வருக” என்றார். அர்ஜுனன் தொடர்ந்தான். “இயற்கையான குகை… உள்ளே நீரூற்று ஒன்றுள்ளது” என்று இளைய யாதவர் சொன்னபோது குரலுடன் குகைமுழக்கமும் கலந்திருந்தது.

இருண்ட குகைக்குள் தொலைவில் என தெரிந்த நெய்யகல் சுடர் வெளிச்சத்தில் இரு கைகளையும் மடியில் அமர்த்தி கால் மடித்து விழிமூடி ஊழ்கத்திலிருந்த ரிஷபரின் பெருஞ்சிலை பாறைப்புடைப்பென செதுக்கப்பட்டிருந்தது. நன்கு தீட்டபட்டு எண்ணெய் பூசப்பட்ட சிலையின் கரிய வளைவுகளில் செவ்வொளி குருதிப்பூச்சு போல மின்னிக் கொண்டிருந்தது. அங்கு எவரும் இருப்பது போல் தெரியவில்லை. அவர்களின் காலடி ஓசையை குகை எங்கெங்கோ எதிரொலித்து திருப்பி அனுப்பியது. இருளுக்கு விழி பழகியபோது அங்கு ஊழ்கத்திலிருந்த ஏழு படிவர்களை அர்ஜுனன் கண்டான். அவர்களில் ஒருவர் பிறரைவிட அரை மடங்கு பெரிய உடல் கொண்டிருந்தார். அக்கணமே அது அரிஷ்டநேமி என்று அவன் தெளிந்தான்.

சுரிகுழல் கற்றைகள் தோளில் விழுந்து கிடக்க பெரிய கூர்மூக்கின் இருபுறமும் கடற்சிப்பிகள் போல் மூடிய இமைகளுடன், மெல்லிய நகை ஒன்று சூடிய குவிந்த இதழ்களுடன், மடிமேல் மலர்ந்த கைகளும் தாமரை இதழென மடிக்கப்பட்ட கால்களுமாக நிமிர்ந்து தசைச்சிலையென அமர்ந்திருந்தார். இளைய யாதவர் ஓசையின்றி சென்று அரிஷ்டநேமியின் கால்களுக்கு அருகே அமர்ந்து அவர் பாதங்களைத் தொட்டு மும்முறை சென்னி சூடினார், சற்று விலகி அதே போல ஊழ்கத்தில் அமர்ந்தார். அர்ஜுனன் கைகளை மார்பில் கட்டியபடி இருவரையும் நோக்கி நின்றான்.

அவர்கள் வந்ததையோ இளைய யாதவர் அருகே அமர்ந்ததையோ அரிஷ்டநேமி அறிந்தது போல் தெரியவில்லை. ஆனால் அவர் இருந்த கனவுக்குள் இளைய யாதவர் நுழைந்துவிட்டார் என்பதை அர்ஜுனன் உணர்ந்தான். சில கணங்கள் கழித்து திரும்பி நோக்கியபோது அசைவற்ற சிலையாக இளைய யாதவர் மாறியிருப்பதை கண்டான். இருவரையும் மாறி மாறி நோக்கியபடி அவன் அங்கு நின்றான். மூச்சு ஓடுகிறதா என்று ஐயமெழுப்பும் அசைவின்மை. இரு ஆடிப்பாவைகள். ஒன்றை ஒன்று நோக்கும் இரண்டு முடிவின்மைகள். இரண்டு வினாக்கள். அல்லது இரண்டு விடைகள். ஒரு பொருள் கொண்ட எதிரெதிர் சொற்கள். இரண்டு முடிவிலா பெருந்தனிமைகள். பொருளின்றிப் பெருகிய சொற்கள் பதற்றம் கொண்ட வெள்ளாட்டு மந்தைகளென ஒன்றையொன்று நெரித்து முட்டிச் சுழல தன் சித்தம் பித்து கொள்வதை உணர்ந்து அர்ஜுனன் இமைகளை மூடிக்கொண்டான். இமைகளுக்குள் அவன் குருதிக் குமிழிகள் மிதந்தலைந்தன. அவன் எண்ணியது என்ன? குந்தி. பின்பு பாஞ்சாலி. உலூபி. பின்பு சித்ராங்கதை. அவர்கள் வழியாக சென்றடைந்த எண்ணம் எவ்வண்ணம் கர்ணனை சென்றடைந்தது? யாரவன் இந்நிரைக்குள் நுழைய? வில்லேந்தியவன். தெளிந்த பெரிய விழிகள் கொண்ட கருவண்ண மேனியன். யாரவன்?

விழிகளைத் திறந்து நோக்கியபோது மிக அருகிலென ரிஷபரின் கரியசிலை தெரிந்தது. சுடர் அசைவில் இதழ் நெளிய அவர் ஏதோ சொல்ல விரும்புவது போல. கைகள் கால்கள் அனைத்திலும் எழுந்த ஒளியசைவு அவர் எழுந்துவிடப் போகிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. கை நீட்டி தனக்குப் பின்னாலிருந்த குகைச் சுவரை தொட்டான். நீரில் கிடக்கும் பாறை போல் அது குளிர்ந்திருந்தது. மலை உச்சியில் ஊற்றுகள் அனைத்தும் அப்பாறைகளை எங்கோ நனைத்துச் செல்கின்றன. அப்போதுதான் குகைக்குள் எங்கோ கொட்டிக் கொண்டிருந்த நீரோசையை அவன் கேட்டான். சொட்டிய நீர் வழிந்தோடும் ஓசை இருளில் சுரந்து இருளுக்குள்ளே வழிந்தோடுகிறது. ஒருபோதும் ஒளியை அறியாதது. ஆகவே இருளென்றே ஆனது. இருள் நீர் குளிர்ந்திருக்கும், தன்னந்தனிமையின் கண்ணீரென.

அரிஷ்டநேமி விழிகளை அப்போது திறந்திருக்காவிட்டால் தன் சித்தம் கீழே விழுந்த நீர்த்துளிபோல் சிதறி பரந்து மறைய, பித்தனாகி வெளியே சென்றிருப்போம் என அர்ஜுனன் உணர்ந்தான். அவர் புன்னகையுடன் எதிரே அமர்ந்திருந்த இளைய யாதவரை நோக்கி “வணங்குகிறேன் இளையோனே” என்றார். இளைய யாதவர் புன்னகைத்து “தங்களைப் பார்ப்பதற்காகவே வந்தேன் மூத்தவரே” என்றார். “ஆம், உனது வருகையை எதிர்நோக்கியிருந்தேன். ஏழு நாட்களுக்கு முன்னரே கரிக்குருவி ஒன்று அதை சொன்னது” என்றார். கால்களை நீட்டி அவர் எழுந்தபோது அவரது தலை உச்சிப் பாறை வளைவை தொட்டது. இளைய யாதவர் எழுந்து அவரருகே நின்றபோது அவரது குழல்சூடிய பீலி அரிஷ்டநேமியின் மார்பு அளவுக்கே இருந்தது.

தன் பெரிய கைகளால் இளைய யாதவரின் தோள்களைத் தொட்டு “உன் வருகை இத்தனை மகிழ்வளிக்கும் என்று நான் எண்ணவில்லை. நீ வருவாய் என்ற செய்தி வந்தபிறகு ஒவ்வொரு நாளும் காலையில் நினைவெழும்போது உன் புன்னகையே உள்ளே விரிந்தது. நீ எனக்கு எப்படி பொருள்படுகிறாய் என்று புரியவில்லை. இளையோனே, இங்கு வந்தபிறகு அங்கு கொண்டிருந்த ஒவ்வொன்றையும் உதிர்த்துவிட்டேன். நகரையும் உறவுகளையும் குலத்தையும் பெயரையும்கூட. இங்கென்னை நேமி என்றே அழைக்கின்றனர். அது என் குலச்சின்னமாயினும் அறவாழியின் பெயரென அதை மட்டும் ஏற்றுக்கொண்டேன். அதற்கப்பால் ஏதுமில்லை என்றே இருக்கிறேன். ஆயினும் நீ என்னிடம் முழுமையாக இருந்து கொண்டிருக்கிறாய் எனும் விந்தையை சில நாட்களாக திரும்பத் திரும்ப எண்ணிக் கொண்டிருக்கிறேன்” என்றார் அரிஷ்டநேமி.

இளைய யாதவர் “அது என் நல்லூழ். தங்கள் பாதங்களை வணங்கும் பேறு எனக்கு உள்ளது என்பது அதன் பொருள்” என்றார். “முகமன்கள் எதற்கு?” என்றபின் அரிஷ்டநேமி நீள் மூச்சுவிட்டார். “இந்நாட்களில் நான் எண்ணிக்கொண்டது ஒன்றே. நான் துறந்தவை அனைத்தாலும் ஆனவன் நீ. உன் வடிவில் என் வாழ்க்கையை பிறிதொருவனாக மாறி நடித்துக் கொண்டிருக்கிறேனா? கிளைகள், இலைகள், மலர்கள் அனைத்தும் வேர் மண்ணுக்குள் ஒளிந்துகொண்டு காணும் கனவுகள்தானா?” இளைய யாதவர் “அறியேன் மூத்தவரே. ஆனால் ஒன்று உரைப்பேன்… தாங்கள் என் கனவு” என்றார்.

சற்றே திகைத்தவர் போல் அரிஷ்டநேமி திரும்பி இளைய யாதவரை பார்த்தார். ஏதோ சொல்லெடுக்க விழைபவர் போல் அசைந்தார். அர்ஜுனனை திரும்பிப் பார்த்தபின் “செல்வோம்” என்றார். அவர் முன்னால் செல்ல இளைய யாதவர் பின்தொடர்ந்தார். அர்ஜுனன் அவர்கள் இருவரையும் நோக்கியபடியே தொடர்ந்து சென்றான்.

தன் பெரிய கால்களை களிறு போல் தூக்கி வைத்து அரிஷ்டநேமி முன்னால் செல்ல பாறைகளில் தாவி இளைய யாதவரும் அர்ஜுனனும் அவரை தொடர்ந்தனர். முட்கள் செறிந்த பாதையை அவர் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. அர்ஜுனனின் கால்கள் முழுக்க முட்கள் கீறி குருதிக்கோடுகள் எழுந்து ஊறி வழிந்தன. திரும்பி தன் குருதி சூடி நின்ற அம்முள்முனைகளை நோக்கியபின் அவன் அவர்களை தொடர்ந்தான். மலைச்சரிவில் சிறிய பாறை இடுக்கு ஒன்றை நோக்கி சென்ற அரிஷ்டநேமி “இங்குதான் நான் தங்கியுள்ளேன்” என்றார். அர்ஜுனன் இளைய யாதவரை நோக்க அவர் முகத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.

மலையின் கருவறைத்திறப்பு போல தெரிந்த அவ்விடுக்குக்கு அருகே சென்று அமர்ந்து பின்பு தன் உடலை நீட்டி கால்களை உள்ளே விட்டு மெல்ல நாகம்போல உடலை உள்ளிழுத்துக்கொண்டார். குனிந்து நோக்கியபோது அங்கிருந்த இருண்ட சிற்றறை ஒன்றுக்குள் கால் மடித்து அமர்ந்திருப்பதை காணமுடிந்தது. இளைய யாதவர் அதேபோல உள்ளே சென்று அமர அர்ஜுனன் சற்று தயங்கியபின் தன்னையும் உள்ளே நுழைத்து மூலையில் உடல் ஒடுக்கி அமர்ந்தான். சில கணங்களுக்குப் பின் விழிபழக வெளியே இருந்து வந்த ஒளியின் கசிவில் அந்தப் பாறைக் குடைவு தெளிவடைந்தது.

“இங்கு வஜ்ரநந்தி அடிகள் என்னும் படிவர் பதினெட்டு ஆண்டுகாலம் வாழ்ந்தார். அவர் விண்ணேகியபின் எட்டு மாத காலம் இது ஒழிந்து கிடந்தது. அப்போதுதான் நான் வந்தேன். இவ்வறையை எனக்குரியதாக்கிக் கொண்டேன்” என்றார் அரிஷ்டநேமி. “இளையோனே, நீ என்னை தேடி வந்தது ஏன் என்று அறிய விழைகிறேன்” என்றார்.

“எவ்வண்ணம் ஆயினும் நான் வரவேண்டும் மூத்தவரே. இன்னும் நான்கு நாட்களில் இங்கு ரைவதகரின் விண்ணேற்று நாள் வரப்போகிறது. விருஷ்ணிகளும் அந்தகர்களும் போஜர்களும் விரும்பிக் கொண்டாடும் நாள் அது. அதற்கு முன் நான் வந்தது தங்களிடம் என் சார்பிலும் தங்கள் தந்தை சார்பிலும் ஒரு மன்றாட்டை முன் வைக்கவே. தாங்கள் நகர்புக வேண்டும். மதுராவின் அரசர் உக்ரசேனரின் மகள் தங்கள் மணமகளாக அங்கு சித்தமாக இருக்கிறார்.”

அவர் விழிகளில் எந்த மாற்றமும் தெரியவில்லை. “இங்கு நான் வாழும் வாழ்வை பார்த்தபின்னும் இதை சொல்வதற்கான உறுதிப்பாடு உன்னிடம் உள்ளதா இளையோனே?” என்றார். இளைய யாதவர் “தாங்கள் மூத்தவர்களுக்கு நீர்க்கடன் செலுத்தும் முறைமை உள்ளவர். தங்கள் குருதியிலிருந்து மைந்தர்கள் பிறக்கவேண்டும். அவர்கள் தந்தையையும் தந்தையை ஈன்ற முதுமூதாதையர்களையும் நீரும் உணவும் அளித்து மூச்சுலகில் நிலை நிறுத்தவேண்டும். மண்ணில் பிறந்த எவரும் முற்றிலும் தவிர்க்கமுடியாத கடனென்பது நீத்தாருக்குரியதே. அதன் பொருட்டு தாங்கள் வரவேண்டும்” என்றார்.

“அவ்வாறு நெறிநூல்கள் சொல்கின்றன என்று அறிவேன் இளையோனே. ஆனால் எனக்கு முன் ஏழு உடன்பிறந்தவர்கள் உள்ளனர். அவர்களில் மூத்தவராகிய ஸினி இன்று சௌரபுரத்தின் பட்டத்தரசர். அவர்கள் நம் தந்தையருக்குரிய கடன்கள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பும் தகுதியும் உடையவர்கள் அல்லவா?” என்றார்.

இளைய யாதவரின் முகம் எவ்வுணர்வை காட்டுகிறது என்று அர்ஜுனன் கூர்ந்து நோக்கினான். அதில் உணர்வுகள் எதுவும் தெரியவில்லை. மிக எளிய அன்றாட விவாதமொன்று நிகழ்ந்து கொண்டிருப்பதற்கான மெய்ப்பாடுகளே தெரிந்தன. “மூத்தவரே, நான் உரைப்பது நாளையை பற்றி.” சிலகணங்களுக்குப் பிறகு அரிஷ்டநேமி “நிமித்திகர் அவ்வண்ணம் உரைத்தனரா?” என்றார். “ஆம், தங்கள் மூத்தவர்கள் அனைவரும் களம்படுவது உறுதி. அவர்களின் குருதிகளில் மைந்தர்களும் எழப்போவதில்லை. தங்கள் மூதாதையருக்கு நீர்க்கடன் செலுத்தப்படவேண்டுமென்றால் தங்கள் குருதி முளைத்தாக வேண்டும். வேறு வழியில்லை” என்றார் இளைய யாதவர்.

அரிஷ்டநேமியின் முகத்தில் எழுந்த வலியை அர்ஜுனன் கண்டான். “என் தசைகளை அறுத்துக் கொண்டுதான் நான் என்னை இங்கிருந்து விடுவிக்கவேண்டும். இளையோனே, இன்று நான் கன்றுச்செடியல்ல, வேர் விட்டு கிளை எழுந்துவிட்ட மரம்” என்றார். “தங்கள் விழைவும் தேடலும் எனக்குத் தெரிகிறது. நான் சொல்வதற்கு ஏதுமில்லை. இனி முடிவெடுக்கவேண்டியது தங்கள் உள்ளம். இங்கிருந்து கிளம்புவது தங்களுக்கு ஒரு மறுபிறப்பென்றே உணர்கிறேன். குருதி வழிய தொப்புள் சரடு அறுத்து தாங்கள் அங்கு வந்து விழவேண்டும். ஆனால் வேறு வழியில்லை மூத்தவரே. மண்ணில் உள்ள அத்தனை பேருக்கும் உள்ள கடமை தங்கள் குலக்கொடியை நிலைநிறுத்துவது. அதிலிருந்து விலகிச்செல்லும் ஒருவர் தன் மூதாதையரின் நீட்சிமுடிவிலிக்கு பெரும் பழியொன்றை செய்தவராகிறார். அவர்களின் கண்ணீர் அவரை தொடரும். அச்சுமையை ஏற்றபின் அவர் செல்லும் தொலைவென்ன?”

அரிஷ்டநேமி சொல்லுக்கென தத்தளிப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். இருகைகளாலும் தன் குழலை நீவி பின்னுக்கு சரித்தார், கண்களை மூடி சில கணங்களுக்குப் பிறகு நீள்மூச்சுடன் திறந்து “என்ன சொல்வதென்றே தெரியவில்லை இளையோனே. நான் கற்ற அனைத்து நூல்களையும் நீயும் கற்றிருக்கிறாய். நான் சென்ற தொலைவெல்லாம் சென்றவன் நீ. நீயே உரை. பிறப்பின் கணம் ஒருவனிடம் வந்து தொற்றிக்கொள்ளும் இந்த பவச்சுழல் சரடை அறுக்கவே கூடாதென்றா நீ சொல்வதற்குப் பொருள்? பிறந்ததனாலேயே வீடுபேறற்றவனாகிவிட வேண்டுமென்றா சொல்கிறாய்? ஒருவனின் ஊழ் பிறவியிலேயே முற்றிலும் வகுக்கப்படுமென்றால் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள அறிவும் உணர்வும் எதற்காக? அவ்விரண்டின் அடியில் அணையாது எரியும் மீட்புக்கான தவிப்பின் பொருளென்ன?”

இளைய யாதவர் முகத்தில் மெல்லிய துயர் ஒன்று படிந்தது. “இதற்கெல்லாம் இறுதி விடை என ஒன்றை என்னால் சொல்லிவிட முடியுமென்று நான் எண்ணவில்லை மூத்தவரே. ஒருவேளை இவற்றை இயற்றி ஆடி கலைத்து மீண்டும் இயற்றும் அப்பெரு நெறி கூட இதற்கு விடையளிக்க முடியாமல் இருக்கலாம். பிறந்திறந்து செல்லும் இச்சுருள் பாதையில் ஒரு கண்ணி அறுந்தால் நம்மால் எண்ணி முடிக்கப்படாத பல்லாயிரம் கண்ணிகள் எங்கெங்கோ அறுபட்டு துடிதுடிக்கச் செய்கிறோம். பல ஆயிரம் கோடி நுண்சமன்களால் ஆன இந்த ஆட்டத்தை எப்போதைக்குமாக குலைக்கிறோம். அதற்கான உரிமை மானுடனுக்கு இல்லை. ஆனால் அச்சமன் குலைவை நிகழ்த்தாமல் எவரும் தானிருக்கும் இடத்திலிருந்து ஒருகணமும் எழப்போவதுமில்லை.”

“இப்பெரிய வலையை சமைத்து இதை மீறும் துடிப்பை அதன் ஒவ்வொரு துளியிலும் அமைத்து இங்கு ஆடவிட்ட அது அலகிலாத விளையாட்டு கொண்டது. அது ஒன்றையே என்னால் சொல்ல முடியும். முடிவெடுக்கவேண்டியது தாங்கள்” என்றார் இளைய யாதவர். அதன் பின் இருவரும் உரையாடவில்லை.

அரிஷ்டநேமி ஒவ்வொரு சொல்லாக எடுத்து கூர்நோக்கி தன்னுள் அமைத்துக் கொள்கிறார் என்பதை அவரது முகம் காட்டியது. சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி முற்றிலும் விடுபட்ட அமைதியை இளைய யாதவர் அடைந்திருப்பதை அவர் முகம் வெளிப்படுத்தியது. அர்ஜுனன் அந்தப் பாறையிருளில் குளிர்ந்து வெளியே செல்ல விழைந்தான். ஒளிமிக்க வானம் விரிந்து கிடக்கும் மலைப்பாறை உச்சியில் ஏறி இரு கைகளையும் சிறகுகளென நீட்டி நிற்க வேண்டுமென தோன்றியது. முடிவெடுக்கும் பொறுப்பால் மானுடனை மண்ணுடன் கட்டிப்போட்டிருக்கின்றன தெய்வங்கள். எங்கு செல்வதென இல்லாமல் காற்றுக்கு சிறகை கொடுத்திருக்கும் எளிய பூச்சிகள் மட்டுமே திளைக்கின்றன.

திரும்பி அரிஷ்டநேமியை நோக்கினான். அவனுக்கு இரக்கமே சுரந்தது. என்ன முடிவை எடுக்கப்போகிறார்? எம்முடிவென்றாலும் அதன் பொறுப்பை அவர் ஏற்றாக வேண்டும். அதுவோ அவர் சற்றும் புரிந்து கொள்ளாத முடிவின்மை. இன்னதென்றே அறியாத ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் ஒருவன் எங்கு நிறைவுடன் அமரமுடியும்? எதை எண்ணி தன்னை நிறுவிக்கொள்ள முடியும்? இளைய யாதவரை நோக்கினான். இத்தகைய தருணத்தில் இவர் எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும்?

அவர் தன்னுள் அறக்கேள்வி எதையும் கேட்டுக்கொள்ள மாட்டார் என்று எண்ணினான். தன்னுள் இருந்து கொப்பளிக்கும் தொன்மையான ஊற்றொன்றின் விசையாலே இயக்கப்படும் மனிதர். இரண்டு வயதுக்குழந்தையை இயக்கும் அதே பேராற்றலே அதையும் இயக்குகிறது. உண்ண வெல்ல வளர இருக்க விழையும் ஒன்று. இம்மண்ணில் சிறகு சிறகென்று தவமிருக்கும் கூட்டுபுழுக்களும் உணவு உணவென்று தாவும் புலிக்குருளைகளும் வானம் வானம் என்று எம்பும் முளைச்செடிகளும் கொண்டுள்ள முதல் விசை அதன் ஒருதுளி. பிறிதொன்றுமல்ல.

இளைய யாதவர் எழுந்து “பார்த்தா, நாம் செல்வோம். தன் முடிவை அவர் எடுக்கட்டும்” என்று சொன்னபின்பு கைகூப்பினார். அரிஷ்டநேமி வாழ்த்துவதுபோல கைகாட்டினார். இளைய யாதவர் பாறை வெடிப்பில் கையூன்றி வெளிவந்தார். அர்ஜுனன் அவரைத் தொடர்ந்து வெளிவந்து வெளியே எழத்தொடங்கியிருந்த காலை இளவெயிலில் கண்கள் கூச கைகளால் மறைத்துக்கொண்டான். அப்பாலிருந்த இரு பாறைகளின் இடைவெளி வழியாக சரிந்து வந்த காற்று அவன் குழல்களை நீவி தோளில் பறக்கவிட்டது.

“நாம் செல்வோம்” என்றார் இளைய யாதவர். “அவர் எந்த முடிவை எடுப்பார்?” என்றான் அர்ஜுனன். “அறியக்கூடவில்லை. பார்த்தா, ஊழின் துலா நிகர் நிலையில் நின்று தயங்கும் அருங்கணங்களை வாழ்வில் அவ்வப்போது காண்கிறோம். முடிவின்மை என்பது நம் நெஞ்சை தன் மத்தகத்தால் முட்டும் தருணம் அது. யோகி இங்குள்ள ஒவ்வொரு கணத்திலும் அதை காண்பான். இதோ இந்தச் சிறு எறும்பின் மறுகணம் என்பது முடிவின்மையே” என்றார் இளைய யாதவர். அவ்வெறும்பு ஒரு சிறு இலை நுனி ஒன்றில் ஏறமுயன்றது. சுழன்று வீசிய காற்று அதை பறக்க வைத்தது. அது எங்கு சென்று விழுந்தது என்று அர்ஜுனன் நோக்கினான். காணமுடியவில்லை. “இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பனவற்றை மானுடனால் விளக்க முடியாது. முற்றிலும் அறிதலால் ஆனது மானுட உள்ளம். முற்றிலும் அறிதலுக்கு அப்பால் இருப்பது அது” என்றார் இளைய யாதவர்.

இருவரும் பாறைகளில் கால்வைத்து கைகளால் கூர்முட்களை ஒதுக்கி மெல்ல நடந்தனர். எண்ணிக்கொண்டபோது எங்கோ சித்தம் பதைத்து நின்றுவிட்டது. ஒன்றுடன் ஒன்று பின்னி செல்லும் ஒரு பெரு நீட்சி. குகையிலிருந்து அவர் வெளிவரலாம். ஒரு பெண்ணுக்கு மணமகனாவதும், அவள் கருவறையில் உடல் கொண்டு உயிர் பெறாது துயின்றிருப்பது மண்நிகழ்வதும் நிகழலாம். உவகைகள் வஞ்சங்கள் துயரங்கள் வெற்றிதோல்விகள் என வாழ்வுப்பெருக்கு இங்கிருந்து எழலாம். பேரரசுகள் எழலாம். பெரும்போர்கள் நிகழலாம். குருதி வெள்ளம் பெருகலாம். நோக்கி முடிக்க முடியாத எதிர்காலம் வரை செல்லும் ஒரு குலச்சரடு இக்கணத்தில் ஒரு சொல்லில் பிறக்கலாம். அதை நிகழ்த்துவது எது?

அவன் தலைமேல் பறந்து வந்து கிளையில் அமர்ந்த காகம் முட்கிளையை ஊசலாட்டியபடி “கா” என்றது. ஏன் என்ற சொல். ஒரு பறவைக்கு அதன் மொழியாக ஒற்றைச் சொல்லை அளித்து அனுப்பியிருக்கிறது பிரம்மம். காகம் இருமுறை முட்கிளையை ஊசலாட்டியபின் எழுந்தது. மீண்டும் “கா! கா!” என்றது. மீண்டும் எழுந்து பிறிதொரு மரக்கிளைமேல் அமர்ந்து கரைந்தது. “தாங்கள் விழவு முடிந்ததும் ஊர் திரும்புகிறீர்களா?” என்று அர்ஜுனன் கேட்டான். அப்பெரும் வெறுமையை வெல்ல விழைந்தான். வெறுமையை கலைப்பதற்கென்றே ஆனவை சொற்கள். பொருளற்ற சொற்கள் மேலும் அதற்கு பொருத்தமானவை.

“ஆம், என்னுடன் நீரும் வருக!” என்றார் இளைய யாதவர். அவர் சுபத்திரையைப் பற்றி என்ன சொல்லவிருக்கிறார் என்று அர்ஜுனன் உணர்ந்து கொண்டான். அவன் எண்ணுவதை உணர்ந்தது போல் “சுபத்திரையை துரியோதனனுக்கு அளிக்க என் தமையன் எண்ணியிருக்கிறார். அவருக்கெதிராக எதுவும் செய்ய நான் எண்ணக்கூடாது” என்றார் இளைய யாதவர். அச்சொற்களை நூறு முறை திருப்பி நூற்றொன்றாவது புறத்தை நோக்கியபின் அர்ஜுனன் தலை அசைத்து “ஆம்” என்றான். அதன் பின் அவர்கள் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை.

மேலும் பாறைகளைக் கடந்து இறங்கியபோது அர்ஜுனன் இளைய யாதவர் தன்னைக் கண்டபோது சொன்ன முதல் சொற்றொடரை நினைவுகூர்ந்து திடுக்கிட்டு திரும்பி நோக்கி “துறவியாகவா?” என்றான். இளைய யாதவர் அவன் விழிகளை நோக்காமல் “ஆம். இத்தோற்றத்தில் உம்மை யாதவர்கள் அறிந்து கொள்ள முடியாது” என்றார். அர்ஜுனன் “நான் துறவிக்கோலம் பூணுவது அக்கோலத்துக்கு இழுக்கல்லவா?” என்றான். “உம்முள் ஒரு துறவி இல்லையென்றால் அது இழுக்கே. உண்டென்றால் அத்துறவியை எழுப்பி அவரை துவராடை அணியச்செய்யும்” என்றார் இளைய யாதவர். அவனை நோக்கித் திரும்பி அவர் பேசவில்லை. சுருள் குழல் படிந்த கரிய தோள்களை சில கணங்கள் உற்று நோக்கியபின் “நான் துறவிக்கோலம் கொள்கிறேன்” என்றான் அர்ஜுனன்.

இளைய யாதவர் கீழே தெரிந்த உருளைப்பாறையில் குதிக்க அர்ஜுனன் தொடர்ந்து குதித்தான். இரு பாறைவளைவுகளைக் கடந்து அவர்கள் மீண்டும் செம்மண் பாதைக்கு வந்தபோது மேலே கைதட்டும் ஒலி கேட்டது. இளைய யாதவர் திரும்பி நோக்கி “தமையன்” என்றார். அர்ஜுனன் திரும்பியபோது அங்கொரு மலைப்பாறை மேல் எழுந்த அரிஷ்டநேமியை கண்டான். “நான் வருகிறேன் இளையோனே, அது மூதாதையரின் ஆணை” என்றார் அரிஷ்டநேமி. இளைய யாதவர் “நன்று மூத்தவரே” என்றார். “இப்போது என் குகைக்குள் ஒரு காகம் வந்தது. அது என்னிடம் சொல்வதென்ன என்று உணர்ந்தேன்.”

இளைய யாதவர் வெறுமனே நோக்கினார். “ஊன் என்று அது கூவியது” என்றார் அரிஷ்டநேமி. “நான் எளிய மனிதன், வெறும் ஊன்தடி. ஒன்றிலிருந்து ஒன்றென தன்னை பெருக்கி இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் முடிவிலா ஊன்சரடின் ஒரு கண்ணி. பிற அனைத்தும் என் வெறும் ஆணவங்கள். அவற்றைத் துரத்தாமல் என்னை நான் உணர்வதற்கில்லை. யாதவனே, நீ கொண்டுவந்த செய்திக்கு உடன்படுகிறேன். என் மூதாதையர் எழட்டும். பிறந்து பிறப்பித்து மடிவதற்கப்பால் மானுடர்க்கு ஆவதொன்றும் இல்லையென்றால் அதுவே ஆகட்டும்” என்றார் அரிஷ்டநேமி.

முந்தைய கட்டுரைவெண்முகில் நகரம்
அடுத்த கட்டுரைஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்