அலை அறிந்தது…

1

தெற்குப்பக்கம் சாலைச்சரிவில் இருந்து ஒரு அலங்காரப்பெட்டி ஏறிவந்தது. அந்தப்பக்கம் ஓடும் ஆற்றுக்குள் இருந்து நீரில் அது மிதந்து எழுவதுபோல தோன்றியது. அதன்பின் ஒரு தலை. அதன்பின் உடல். நான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். நெடுநாட்கள் துவைத்து உலர்த்திப் பழுப்பேறிய வெள்ளைத்துண்டு நிறத்தில் நரைத்தத் தலைமுடியும் தாடியும் முழங்கால் வரை சரிந்து காற்றில் ஆடிய நீலநிறமான பெரிய ஜிப்பாச்சட்டையுமாக ஒரு கிழவர் பெட்டியுடன் என்னை நோக்கி வந்தார். வரவர வெற்றிலைக் காவிச்சிரிப்பு துலங்கியபடியே வந்தது. தாடி அசைய கன்னங்கள் உருள என்னைப் பார்த்து சிரித்து “யா ரஹ்மான்… புள்ளே, அம்மை இருக்காஹளா? கூப்பிடுங்க… கூப்பிடுங்கப்பா, ராசால்ல, சுல்தான்ல?” என்றார்.

நான் “எனக்கு சீனி முட்டாய் குடுப்பீங்களா?” என்றேன். நீளச்சட்டை போட்டபின் சீனிமிட்டாய் விற்கத்தானே வேண்டும்? “அய்யாஅவுஹ தப்பா நினைச்சிட்டீஹகளே… நாம சீனி முட்டாயி விக்யலே. அத்தர் பன்னீர் செண்டு விக்கறோம்… அம்மைய கூப்பிடுங்க” என்றார். நான் மூக்குக்குள் கையை விட்டுக்கொண்டு யோசித்தேன். அவர் ஏழடி உயரம் இருந்தார். பெரிய மூக்கு, பெரிய கண்கள் பெரிய கைகால்கள். நல்ல சிவப்பு நிறம். பெட்டிக்குள் இருந்து எடுத்த பழைய பட்டுமாதிரி ஒரு வழவழப்பு அவர் நெற்றியிலும் கன்னங்களிலும் இருந்தது.

அவர் தன் அலங்காரப் பெட்டியை தரையில் வைத்தார். அது விசித்திரமான பெட்டி. மரத்தாலான பெட்டிதான். அதன் மூடிமட்டும் வளைவாக மேலெழுந்திருந்தது. பெட்டியின் மரப்பரப்பின்மீது பட்டுப்புடவையை வெட்டி ஒட்டியிருந்தார்கள். எங்கள் வீட்டிலேயே உள்ளே அதைப்போல ஒன்று இருந்தது. அதற்கு முருக்குபெட்டி என்று அம்மா பெயர் சொன்னாள். மென்மையான முருக்கு மரத்தால் செய்யபப்ட்டது. எடை இருக்காது. வெளியே பட்டுப்புடவையும் உள்ளே வெல்வெட் துணியும் ஒட்டப்பட்டு பளபளவென இருக்கும். அதற்குள்தான் ராமாயணம், மகாபாரதம், ஜாதகங்கள் எல்லாம் இருந்தன. இந்தப்பெட்டி மீது பட்டுப்புடவை நன்றாக நரைத்திருந்தது. ஆங்காங்கே கிழிந்து உள்ளிருந்து மரம் தெரிந்தது.

அவர் பெட்டியை திறந்தார். உள்ளே நான் எதிர்பார்த்தது போலவே சிவந்த வெல்வெட். சிவப்புநிறம் எனக்கு எப்போதுமே தின்பண்ட ஆசையை உருவாக்கிவிடும். என் மார்பில் எச்சில் குழாயாக வழிய ஆரம்பித்தது. வெல்வெட்டால் ஆன மூடியை விலக்கியதும் உள்ளே சிறிய அறைகளில் ஏராளமான சின்னச்சின்ன புட்டிகள். சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சள்… ஒவ்வொன்றும் பெரிய சீனி மிட்டாய் போல ஒளிவிட்டது. அவர் சிவப்புநிற சீசாவை எடுத்து திறந்து ஒரு சொட்டு தன் சுட்டுவிரலில் எடுத்து என் வயிற்றில் தடவினார். எனக்கு ஜில்லிட்டது. வயிற்றை உக்கி சிரித்தேன்.

“புள்ள போயி அம்மைக்கிட்ட சொல்லணும்… ஒரு அத்தர் பாய் வந்திருக்காருன்னு சொல்லணும்… அத்தர் கபீர்னு சொல்லணும்…”

நான் தயக்கமாக உள்ளே சென்றேன். நான் உள்ளே செல்லும் கணங்களுக்குள் அவர் அப்படியே மாயமாக காற்றில் மறைந்துவிடுவார் என்று தோன்றியது. பின்னால் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றேன். உள்ளே சென்றதும்தான் என்னுடன் ஒரு விசித்திர மணமும் வருவதைக் கண்டேன். ரோஜாமலரின் மணம். ஆனால் வெறும் ரோஜாமணம் அல்ல. சங்கரி அக்காவுடன் நான் ஈஸ்வரியக்கா கல்யாணத்தன்று சேர்ந்து படுத்துக்கொண்டபோது அவள் கூந்தலில் இருந்து வந்த அதே மணம்.

கொல்லையில் குந்தி பானையைச் சாம்பலால் தேய்த்துக்கொண்டிருந்த அம்மா என்னைப் பார்த்ததும் “என்ன மறுபடியும் பசிக்க ஆரம்பிச்சிட்டுதாக்கும்… எல்லாம் எந்த பாதாளத்திலே போகுதுண்ணே தெரியலையே” என்றவள், மூக்கு விடைக்க சட்டென்று “அத்தர்பாய் வந்திருக்காரா?” என்று எழுந்து கையை வேட்டியிலேயே துடைத்தபின் முடியை கோதியபடி வேகமாக முன்வாசலுக்குச் சென்றாள். நான் பின்னால் ஓடினேன்.

“வாங்க பாய்…” என்றபடி அம்மா முன்பக்கம் வந்தபின் அவரைக் கண்டு நின்று “புது ஆளா?” என்றாள்.

“ஆமா, நாச்சியாரே…. நம்மள் பேரு கபீர். காதர்பாயி போனமாசம் நெஞ்சடைச்சு மௌத்தாயிட்டான்..” என்றபின், “அத்தர் பன்னீர் செண்டு பாருங்க நாச்சியே… அசல் அரேபியா செண்டு பேர்சியா அத்தர்…” என்றார்.

அம்மா சிரித்தபடி “காயப்பட்டிணம் பன்னீரு… அதையும் சொல்லவேண்டியதுதானே” என்று அமர்ந்தாள். ஒவ்வொரு புட்டியாக எடுத்து முகர்ந்து பார்த்தாள்.

“புள்ளைக்கு என்ன வயசாகுது? என்றார் கபீர் பாய்.

அம்மா “அது ஆகுது மூணு வயசு… மாந்தையன் மாதிரி எப்ப்ப பாத்தாலும் முழிச்சிட்டு இருக்கான்… பேச்சும் சரியா வரல்லை… இது என்னது?” என்றாள்.

“நாச்சியே அது மல்லிகை செண்டுல்லா…. யாஸ்மின் செண்டு.. அசல் சிங்கப்பூரு மேக்கு..” என்றபின் “சின்ன எஜமான் எளுத்துவாசனை உள்ளவராக்கும்… பாத்துட்டே இருங்க” என்றார்.

“என்னத்த வாசனையோ… மீன் மணத்த கேட்டா எங்க இருந்தாலும் பாய்ஞ்சு வந்திருவான்” என்றாள் அம்மா.

“கண்ணைப்பாத்தா தெரியுதே… கர்ப்பூரக்கட்டியாக்கும். நாம பேசுறது செய்றது எல்லாம் அப்டியே உள்ள போகுது… அல்லாகிருபை உள்ள பிள்ளைங்கள கண்ணப்பாத்தா தெரியும் பாத்துக்கிடுங்க” கபீர் பாய் சொன்னார்.

“அய்யய்ய, சீசாவ அப்டியே கவுத்துப்பாத்தாக்க நான் எங்க போயி ஏவாரம் பாக்குறது… நாச்சியாரே… இது எடுங்க… தாழம்பூவு.”

“தாழம்பூவு இங்கியே பூத்து கெடக்கே… பாரிஜாதம் உண்டா?”

“கல்யாண சௌகந்திகம் இருக்குல்லா, பண்டு மகாபாரதத்திலே பீமன் தேடிட்டு போனது, அது கொண்டாண்ணு கேப்பீஹ போலுக்கே… யா ரஹ்மான்.. இத்தா மணம் இருக்கிற ஒண்ணும் உங்களுக்கு போதிக்கலையாக்கும்….”

“பட்டுசாரியிலே போட்டு வைக்கிறதுக்கில்லா..” என்றபின் அம்மா இரு புட்டிகளை எடுத்தார். “ சாயபுக்கு காயப்பட்டிணமா?”

“ஆமா… அம்பதடி அந்தால நிண்ணாலே தெரியுமே… நாங்கள்லாம் அசல் அரேபியா மரைக்காயரு நாச்சியே… ஊட்டாளுக்கு என்ன சோலி?”

“ரெயிஸ்ட்ரார் ஆபீஸிலே’’ என்றாள் அம்மா. “இங்க நாகருகோவிலிலே வீடா? எம்பிடு பிள்ளைய?”

“அது கெடக்கு ஏழெட்டு.. ரெண்டெண்ணத்த கெட்டிக்குடுத்தாச்சு… இன்னும் அறை நிறைச்சு நிக்குது நாலெண்ணம்… எடலாக்குடி பாலத்துக்கு பக்கத்திலே வீடு…”

“இருக்கிறதுல மூத்தவ பேரென்ன?” என்றாள் அம்மா இன்னொரு புட்டியை எடுத்தபின், “அத வச்சுகிடுறேன்…இது வேண்டாம்.”

“ரெண்டும் இருக்கட்டும் நாச்சியே… மூத்தவ பேரு கதீஜா. இப்ப வயசு இருபத்தஞ்சாவது… தரம் பாக்கணும். கையிலே ஓட்டமில்லே… என்னண்ணு தரம் பாக்க?”

“இருபத்தஞ்சு தானே… எனக்கே இருபத்தாறிலேதான் தரம் வந்தது… ஒரு ஜாக்கெட்டுத் துணி இருக்கு கதிஜாவுக்கு குடுக்கவா? எனக்கு பாறசாலை அக்கா குடுத்தது. நான் இனிமே நிறமுள்ள துணி போடுறதில்லை…” அம்மா சிரித்தபடி “அதுக்கு வெலை இல்லை பாய்.. அது சும்மா…” என்றாள்.

“அது நமக்கு தெரியாதா… நாச்சிக்கு இனிமே வெள்ளைதானோ… மலையாளத்திலே மட்டும் எப்பமும் வெள்ளை” என்றார் கபீர்பாய். “தமிழ்நாட்டுப்பக்கம் சுமங்கலிப்பொண்டுக வெள்ளைய கட்டமாட்டாக.”

“வெள்ளைதானே ஐஸரியம்?” என்றபின் அம்மா உள்ளே சென்று ஜாக்கெட் துணியை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். “சீக்கிரமே கல்யாணமாயிடும்னு நான் சொன்னதாச் சொல்லுங்க பாய்” என்றபின் “நான் அந்த செண்ட வச்சிட்டு இத எடுக்கவா?” என்றாள்.

“எல்லாம் நாச்சியாரு அனுக்கிரகமாக்குமே..” என்றபின் அவர் பெட்டியை மூடினார். “இனிமே பொட்டிய திறந்து வைக்யப்பிடாது நாச்சியே… மாத்திகிட்டே இருப்பீஹ.. பொட்டப்புத்தியில்லா?’’ திண்ணையில் அமர்ந்தபின் “ஒரு கடுந்தேயிலை போடுங்க நாச்சியே… சீனி நிறைய போடுங்க..”

“நீங்க அரேபியாவிலே இருந்து வந்தீங்களா?” என்று அம்மா கேட்டாள்.

“ஆமா… நாங்கன்னா எங்க பூர்வீகம்… ஒரு முந்நூறு வருஷம் முன்னாடி. எல்லாத்துக்கும் எளுத்து ஆதாரம் இருக்கு. அரேபியாவிலே கெத்தாங்கிற ஊரிலே இருந்து ஒரு கப்பல் உருவிலே நாப்பதுபேரு கெளம்பியிருக்காஹ. அவுஹ வந்து எறங்கின எடம் காயப்பட்டிணம் பக்கம் ஏறுவாடி. கப்பலிலே நெறைய சரக்கு கொண்டு வந்தாங்க…”

“என்ன சரக்கு?” என்று அம்மா கேட்டாள். புட்டியை முகர்ந்தபின் “அந்த தாழம்பூவே எடுக்கவா?” என்றாள்.

“நாச்சியே மூடின பெட்டிய திறக்கப்பிடாது பாத்துக்கிடுங்க..” என்றார் கபீர்பாய். “சரக்கு என்னான்னு கேட்டீஹன்னா பேரீச்சம்பழம். அத்தரு. அரபிப்பொன்னு… அதைவச்சுகிட்டு ஒரு பெரிய வங்களாவ கெட்டினாங்க… அப்ப அங்க பெரிய பள்ளிவாசல் கெடையாது. எங்க பெரியவாப்பா அவரு தொழுறதுக்குன்னு ஒரு கல்லுபள்ளி கெட்டினாரு… அதை இப்பவும் பூனைக்கண்ணு மரக்காயர் பள்ளின்னுதான் சொல்றாக.”

“அவருக்கு பூனைக்கண்னா?”

“நல்லா கேட்டீஹ… நம்ம நாலு பொட்டைக்குட்டிஹளுக்கும் பூனைக்கண்ணுதான் நாச்சியே… அதொரு அரேபிய அழகுல்லா.”

அம்மா உள்ளே சென்று கொஞ்ச நேரத்தில் கருப்பு டீயுடன் வந்தாள்.

நான் “எனக்கு கருப்பட்டி?” என்றேன்.

“இந்த லெச்சணம்தான் பாயி எப்பவும். திங்கிறதுல்லாம வேற நினைப்பே இல்லை” என்றாள் அம்மா.

“இப்ப தீயி நாக்கிலே இருக்கு. இனி அந்த தீ கல்பிலே கேறும்.. அப்பம் தம்பி வேற எங்கியோ போயிடுவாருல்ல… இன்ஷா அல்லா” கபீர் பாய் டீயை ஊதி ஊதி குடித்தபோது மீசை நுனி பறந்ததை நான் கவனித்தேன்.

“உங்க கொள்ளுத்தாத்தா வேவாரமா பண்ணினாரு?”

“ஆமா… கப்பலு ஏவாரம். அரேபியாவுக்கும் கொளும்புக்கும்… எட்டு ஊரே அவரு சோத்தத்தான் திண்ணுதுன்னு சொல்லுவாஹ. எங்க வாப்பா சின்னப்பிள்ளையா இருக்கிறப்ப பிளீமத் காரிலேதான் உஸ்கூல் போவாருண்ணு ஊரிலே பேச்சு உண்டு… பொண்ணுக நிக்காஹெல்லாம் திண்ணவேலி தேர்த்திருவிழா மாதிரில்லா நடத்தினாரு அவங்க வாப்பா.. அவரு காலத்திலேதான் பொன்னுக்கும் பொருளுக்கும் அளவே இல்லாம போச்சு.. .எட்டு கப்பல் வச்சு ஏவாரம் பண்ணினாரு… செவத்த மரைக்காயர்னா ஊரிலே பேரச்சொன்னாலே எந்திரிச்சு நின்னு போடுவானுஹள்லா?”

அம்மா வாய்மேல் கையை வைத்தாள். “பிறவு?”

“ரம்ஸான் சக்காத்துக்கு மட்டும் அந்தக்காலத்திலே அம்பதாயிரம், லெச்சம் ரூவா வரை செலவாக்குவாரு… நாலாயிரம் அஞ்சாயிரம் பேருக்கு பிரியாணி… பணகுடிப்பொட்டலிலே இருந்து ஆட்டுமந்தைகள அப்டியே பட்டாளம் மாதிரி ஓட்டிட்டு வந்திருவாஹ. ராத்திரி முச்சூடும் சமையல். பிரியாணி மணம் அந்தால நாங்குனேரிக்கு அடிக்கும்லா? அவரு வங்களா நாலுமாடி. முற்றம் பள்ளிவாசல் மைதானத்தை விட பெரிசு… நாலாம்மாடி உப்பரிக்கையிலே நிண்ணுட்டு ரூவாநோட்டா அள்ளி அள்ளி வீசிட்டே இருப்பாரு… கீழே ஏழைபாழைங்க வந்து ராத்திரிலேயே காத்து கிடப்பாங்க. ரூபாவ அவுஹ பாய்ஞ்சு அள்ளி அள்ளி சேப்பாங்க… அந்தக்காலத்திலே அந்த ரம்சான் சக்காத்த வச்சுத்தான் எட்டு ஊரிலே சனங்க துணிமணி எடுக்கிறதுன்னா பாத்துக்கிடுங்க.”

“பகவானே” என்றாள் அம்மா.

“எல்லாம் அல்லாவோட வெளையாட்டு… கொதிச்ச பாலிலே தண்ணி விளுந்தமாதரி எல்லாம் அப்டியே போய்ட்டுது… முப்பது வருசத்திலே வீடு வாசல் எல்லாம் போயிட்டுது… கொளும்பு ஏவாரத்திலே பெரும் நஷ்டம்… யுத்தம் வந்தப்ப எல்லாம் போச்சு… அப்டியே எங்கள கூட்டிகிட்டு அப்பா பணகுடிக்கு வந்தாரு… அங்கேருந்து இங்க எடலாக்குடி… நம்ம பொளைப்பெல்லாம் இங்கதான்… ஆனாலும் அப்பப்ப ஏறுவாடி போயி நம்ம வாப்பா வங்களாவையும் பள்ளிவாசலையும் பாத்துட்டு வந்துடறது…. அல்லாவை பாக்க முடியலேண்ணாலும் அல்லாவோட அடையாளங்கள பாக்குறது ஞானமாக்குமே… மொத்தம் பதினெட்டு ரூவா நாச்சியே.”

“அய்யோ… பதினெட்டு ரூவாயா… எனக்கு வேண்டாம்… இந்தா பாயி நீங்களே வச்சுக்க்குங்க.”

“இது என்னா பேச்சு? வாங்கின மொதல திருப்பி எடுக்கவா… செரி பதினாறு… ரெண்டு ரூவா நஷ்டம் அல்லா கணக்கிலே”

“பதிமூணுண்ணா எடுப்பேன்… இல்லேன்னா இந்தா இருக்கு”

“என்ன நாச்சியே… ஏவாரி வயித்துலே அடிக்கலாமா? செரி போட்டு… பதினஞ்சு ஒரு பைசா உங்கிளுக்கும் இல்ல எனக்கும் இல்ல”

அம்மா “பதிநாலு” என்றாள்.

“புட்டிய குடுங்க நாச்சியே… நான் நாலூடு போயி பொழைக்கிற ஆளு”

“செரி பதினஞ்சு” என்றாள் அம்மா.

உள்ளிருந்து அம்மா பணம் எடுத்து வரும்போது கபீர் பாய் என்னிடம் “எல்லாம் ரிக்கார்டு பண்ணியாச்சா? உள்ள போட்டா புடிச்சு வைச்சாச்சா?” என்றார்.

நான் “எனக்கு சீனி முட்டாய்?” என்றேன்.

அம்மா பணத்தைக் கொடுத்துவிட்டு “கதைய கேட்டா கஷ்டமா இருக்கு பாய்… லட்சுமி போறதும் வாறதும் பெருமாளுக்கே தெரியாதுண்ணு சொல்லுவாங்க.”

“அதிலே ஒரு ரகசியமும் இல்ல நாச்சியே… அலை மேலேறினா கீழிறங்கணும்னு அல்லாவோட ஆணை… அதை மனுஷன் மாத்த முடியுமா? கீழ எறங்குத நேரத்திலே நாம வந்து பொறந்தாச்சு… வரட்டுமா?” என்றபடி பெட்டியை மூடி தலைமேல் ஏற்றினார்.

“இருந்தாலும் ஒரு காரணம் இருக்கணும்லா? தப்பு நம்மகிட்டதானே இருக்கணும்… ஆண்டவன் தப்பு செய்வானா?”

“காசு வந்தா அதுக்குண்டான தப்புகள செய்யாம இருப்போமா… அதானே மனுஷ கொணம்…”

“என்ன தப்பு? உங்க அப்பா, தாத்தாக்க அம்பிடு தானதர்மம் பண்ணியிருக்காங்க”

“நாச்சியே, சக்காத்த வாரி எறிஞ்சு குடுத்த பாவத்துக்கு இன்னும் எத்தன தலமொற கஷ்டப்படணுமோ, ஆருகண்டா…? யா ரஹ்மான்” என்று நிமிர்ந்து “வாறேன் நாச்சியே… வாறேன் புள்ளை” என்று சென்றார். அலங்காரப்பெட்டி காற்றின் அலையில் செல்வதுபோல சென்றது.

நான் அம்மாவிடம் “எனக்கு கருப்பட்டி?” என்றேன்.

[சதக்கத்துல்லா ஹசனீ ஆசிரியத்துவத்தில் வந்த ’அல்-ஹிந்த்’ ரம்சான் மலரில் [2010] வெளியான கதை]

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 12, 2010

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2
அடுத்த கட்டுரைநிலா எங்கே போகிறது?