பகுதி ஐந்து : தேரோட்டி – 10
நீலாஞ்சனையின் இறப்பு அரண்மனையை ஆழ்ந்த அமைதியில் ஆழ்த்தியது. அவைநடுவே தன் கலையின் உச்சகணத்தில் அவள் மறைந்தது நல்லூழ் என ஒரு சாராரும் அவைநடுவே ஓர் இறப்பு நிகழ்ந்தது தீயதேதோ தொடர்வதற்கான அறிவிப்பு என இன்னொரு சாராரும் பேசிக்கொண்டனர். ஏதோ நிகழவிருக்கிறது என அனைவரும் அறிந்திருந்தனர். தன் மஞ்சத்தறையில் நாட்டிய சிலை என அரசர் அமர்ந்திருப்பதை நகரமே அறியலாயிற்று. அவரை அணுக அஞ்சி அரசியும் இளையோரும் அவரது அணுக்கச்சேவகனும் அறைவாயிலிலேயே காத்திருந்தனர்.
மறுநாள் துவாதசி. அன்று கன்னியை சிதையேற்றுவது முறையல்ல என்றனர் நிமித்திகர். அதற்கு மறுநாள் தெற்குக்காட்டில் அவளுக்கு சிதை ஒருக்கப்பட்ட செய்தியை வந்து அவரிடம் சொன்னார்கள். மஞ்சத்தில் அமர்ந்த நிலையிலேயே கை மேல் தலை வைத்து கண்கள் குத்தி நிற்க அசையாதிருந்த ரிஷபர் எழுந்து “எரியீடு எப்போது?” என்றார். “உச்சிக்கு ஒரு பொழுது முன்பு” என்றார் அமைச்சர். மீண்டும் “எரியீடு எப்போது?” என்றார். அமைச்சர் விழிமாறாமல் அதை சொன்னார். “இப்போது நேரமென்ன?” என்றார். “நெருங்குகிறது” என்றார் அமைச்சர்.
நீள்மூச்சுடன் “நன்று” என தன் சால்வைக்கென கைநீட்டினார். “தாங்கள் செல்லவேண்டுமென்பதில்லை அரசே” என்று தன்னைத் தொடர்ந்து வந்த அமைச்சரின் சொற்களைக் கேளாமல் படியிறங்கி அரண்மனை முற்றத்திற்கு வந்து ஒற்றைக் குதிரை தேரிலேறி “செல்க!” என்றார். அவன் அறிந்திருந்தான் அவர் செல்லுமிடம் ஏதென்று. புரவி நெஞ்சின் தாளமென குளம்பு பதிய சாலையில் ஓடியது.
தெற்குக்காட்டில் சிதை ஒருக்கப்பட்டிருந்தது. அங்கு நீலாஞ்சனையுடன் வந்த பன்னிருவரும் துயர் தாங்கி நின்றிருந்தனர். கூடி இருந்த நகர்மக்களோ இருநாள் துயிலழிந்த முகங்கள் வீங்கி விழிகள் நனைந்து ஊறியிருக்க, கைபிணைத்து தலை குனிந்து நின்றனர். அவர் வந்ததும் மெல்லிய குரலில் வாழ்த்தொலிகள் எழுந்தன. தேர் விட்டிறங்கி சிதை அருகே மலர் வணக்கத்திற்கென வைக்கப்பட்டிருந்த நீலாஞ்சனையின் உடல் நோக்கி சென்றார். மலர்மணமும் பல்வகை பொருள்மணமும் கலந்து அவள் உடலில் இருந்து எழுந்த அனைத்து மணங்களின் அடுக்குகளையும் கலைத்து வெளிவந்தது சதை அழுகும் நாற்றம்.
வெண்மலர்களும் செம்மலர்களும் கொண்டு மூடப்பட்டிருந்த அவள் உடலருகே நெருங்கும் தோறும் அஞ்சும் விலங்கென அவர் உள்ளம் திமிறி இழுத்துக்கொண்டு பின்னால் சென்றது. இதுவல்ல இதுவல்ல என்று தவித்தது. அருகே சென்று நின்று அம்முகத்தை நோக்கியதும் திடுக்கிட்டு “ஆ!” என்று மெல்லொலி எழுப்பினார். அங்கு கிடந்தது பிறிதொரு சதையும் உடலும். மெழுகென உயிர் அழிந்த தோல். வீங்கிய இமைகள். நீலமோடிய இதழ்கள். உப்பி சற்றே வளைந்து உறைந்திருந்த கன்னங்கள். “யாரிது?” என்று அறியாது அமைச்சரிடம் வினவி உடனே விழி திருப்பிக்கொண்டார். அமைச்சர் மறுமொழி உரைக்கவில்லை. பின்னால் நின்ற தலைமை ஏவலர் “மலரீடு செய்யுங்கள் அரசே” என்றார். “ஆம்” என்றபின் மும்முறை மலரள்ளி அவள் மேல் இட்டபின் தலை குனிந்து விலகினார். அவள் விரிந்த இதழ்களின் மேல் தேனீக்கள் அமர்ந்திருந்தன.
அவள் உடலை சிதைக் காவலர் தூக்கி சந்தன விறகடுக்கின் மேல் வைப்பதை கண்டார். மென்விறகிட்டு உடல் மூடப்பட்டது. அவள் துணைவனாக வந்த கந்தர்வன் நெஞ்சில் நெருப்பிட்டான். சருகில் பற்றி சற்றே தயங்கி சிறு சுள்ளியை வெடிக்கச் செய்து சிவந்தெழுந்து இதழ் இதழாக மலர்ந்து விரிந்து தடிகளை வளைத்துச் சுழன்று மேலெழுந்தது செந்நெருப்பு. உள்ளே அவள் உடல் வெந்து உருகி வழிவதை அவரால் விழியின்றி நோக்க முடிந்தது. தோல் இழுபட்டு கருகி வழிந்து விலகி உள்ளிருந்த நிணம் உருகிச் சொட்ட ஊன்நெய் ஊறிக் கொதித்தபடி வழிந்து விறகில் விழுந்து நீலமாகி எரிந்தது. அங்கு எழுந்த நெருப்பின் நாக்கு அதை ஆவல்கொண்டு உண்டது.
எரியாத முகம் உருகி வழிந்து பற்களுடன் மூக்கின் வெள்ளெலும்பு மூடிய துணிப்பரப்பில் புடைத்து எழும் மரப்பாவை போல் தெரிய, மென் முலைகள் அழன்று வழிந்தபின் வெள்ளெலும்பு நிரை எழுந்து வர, உள்அமைந்த நுரையீரல் சலம் சிதற மெல்ல வெடித்தது. சிதைக் காவலன் நீண்ட கவைக்கழியால் அந்நெஞ்சை அறைந்து உடைத்து உள்ளே சிறைப்பட்ட காற்றை வெளியேறச் செய்தான். இடையெழுந்த தசை உருகி பற்றிக்கொள்ள மேலும் காலமெடுத்தது. நீள் கழியால் அதை அறைந்து உடலை மெல்ல உள்மடித்து மேலும் விறகை எடுத்து வைத்தான். உடல் நீரை அனல் உண்டதும் ஊன் கொழுப்பு தானே நெருப்பாயிற்று.
விழியசைக்காது ஏன் இதை நோக்கி நிற்கிறோம் என்று வியந்தார். நோக்குவது உள்ளமல்ல உடலே என்று உணர்ந்தார். திரும்புக திரும்புக என்று அதற்கு ஆணையிட்டார். விரைக என கடிவாளத்தை பிடித்திழுக்க இழுக்க அது கற்குதிரை என்று உணரும் கனவு போலிருந்தது அக்கணம். “செல்வோம் அரசே” என்றார் அமைச்சர். “ஆம்” என்று உரைத்து திரும்பி நடந்தார். தேரில் கால் வைக்கும்போது தலை சுழன்றது. வாயில் நிறைந்திருந்த உமிழ் நீரை துப்பியபின் ஏறுவதற்காக உன்னும் கணத்தில் இரும்பு கதாயுதத்தால் பிடரியில் அறையுண்டது போல் உள்ளம் திறந்தது. அவரது நா அறிந்தது ஊன் சுவை!
அடுமனையில் உணவாகும் ஊன்மணம் அது. ஊன். ஊனை அறியும் கணம். அவரது உடல் குத்துண்ட குதிரை என விதிர்த்து நடுங்கிக் கொண்டிருந்தது. “அரசே” என்று அமைச்சர் அழைத்தது கேட்கவில்லை. பின்னால் நின்ற முதியஏவலர் “செல்வோம் அரசே” என்று அவர் தோளைத் தொட்டபோது உடல் நிலையழிய கால் தளர்ந்து விழப்போனார். அவர் தோளை பற்றிக்கொண்டார் ஏவலர். மானுடர் எவருக்கும் இல்லாத நிகரற்ற எடை கொண்ட உடல் என்பதால் அவரால் ரிஷபரை நிறுத்த முடியவில்லை. சரிந்து கற்சிலையென மண்ணை அறைந்து விழுந்து அவ்வண்ணமே கிடந்தார்.
பாதி புதைந்ததுபோல் மண்ணுடன் மண்ணென கிடக்கும் தொல்காலத்துச் சிற்பம் போல் அசைவிழந்திருந்தார். அதுவரை அவர் முகத்தில் இல்லாத நெடுநரம்பொன்று மூக்கு நோக்கி இறங்கி கிளைபுடைத்து நீலமாகி நின்று துடிப்பதை ஏவலர் கண்டார். குனிந்து அவர் கைகளை பற்றியபோது அவர் உடலின் அனைத்துத் தசைகளும் கோல்கொண்ட முரசுத் தோலென அதிர்ந்து கொண்டிருப்பதை அறிந்தார். “அரசே அரசே” என்று அழைத்தார். அமைச்சர் கைவீசி பிற ஏவலரை அழைத்து அவரைத் தூக்க ஆணையிட்டார்.
அவர்கள் அருகே வந்தபோது தலைமை ஏவலர் கைகாட்டி நிறுத்தி விலகும்படி சொன்னார். சில கணங்களுக்குப் பின் மெல்லிய விசும்பல் ஒலி ரிஷபரிடமிருந்து எழுந்தது. சிறுகுழந்தை போல் உடல் குறுக்கி தோள் ஒடுக்கி மண்ணில் கிடந்தார். கண்ணில் இருந்து வழிந்த நீர் காது நுனியில் சொட்டி விழுந்தது. உதடுகள் அதிர கேவல்கள் வெடித்தன. அழும்தோறும் அழுகை எழுந்தெழுந்து வலுத்தது. பின்னர் இரு கைகளையும் ஊன்றி எழுந்து அமர்ந்தார். மூன்று நீள்மூச்சுகளுக்குப் பின் கண்களைத் துடைத்து எவர் இவர் என தன்னைச் சூழ்ந்திருந்தவர்களை நோக்கினார்.
முற்றிலும் அறியாதவரென அவரது விழிகள் மாறியிருந்ததை அணுக்கனாகிய முதியஏவலர் கண்டார். “அரசே” என விளித்து ஏதோ சொல்ல வந்த அமைச்சரை அவர் கை நீட்டி தடுத்தார். எழுந்து விண் சூடிய தலையுடன் நின்ற ரிஷபர் தன் வலக்கையால் நெற்றியில் சரிந்த குழல் கற்றையை பற்றிச் சுருட்டி இழுத்து பிடுங்கினார்.
இருகைகளாலும் தன் தலை மயிர் அனைத்தையும் பிழுது அவர் வீசுவதை உடல் விதிர்க்க கெட்டித்த பற்களுடன் சுற்றம் நோக்கி நின்றது. குருதி வழிய முண்டனமாகியது தலை. மீசையையும் தாடியையும் அவ்வண்ணமே பிடுங்கி வீசினார். இடை சுற்றிய பட்டாடையை, மணிக்கச்சையை, கழுத்தணி ஆரத்தை, கங்கணங்களை, தோள்வளைகளை, கழலை களைந்தார். அக்கணம் கருவறைக்குள் இருந்து வெளிவந்தது போல் குருதி வழிந்த தலையுடன் முழுதுடலுடன் தெற்கு நோக்கி நடந்தார்.
அவரைத் தொடர்ந்து கண்ணீருடன் சென்றனர் அயோத்தி மக்கள். செய்தி அறிந்து அவரது இரு மைந்தரும் தொடர்ந்து ஓடி வந்தனர். அவரை பின் நின்று அழைக்க அல்லது முன் சென்று தடுக்க அவர்களுக்கு துணிவு கைகூடவில்லை. அயோத்தியின் எல்லை வரை குடிகளும் படைகளும் மைந்தரும் அவரை தொடர்ந்தனர். ஒருகணமும் திரும்பாமல் உடல் களைந்து விண்ணேகும் உயிர் என நடந்து காட்டின் விளிம்பை அடைந்தார். எவனோ ஒரு சூதன் தன்னை மறந்து “முகில் ஏறி மறையும் தேவன்” என்றான். அச்சொல் கேட்டு நீர் விழுந்த குளம்போல் அலையெழுந்து அடங்கியது கூட்டம். புதர்களுக்குள் ரிஷபர் மறைந்தார்.
இருபத்தியெட்டு ஆண்டுகாலம் ரிஷபர் அருந்தவம் இயற்றினார் என்கின்றன நூல்கள். வெண்பனி அனலென உடலை எரிக்கும் இமயமலை உச்சியில், நதிகளுக்கு பித்துபிடித்த தாழ்வரைகளில் சூரியனின் அடுமனை என கொதிக்கும் பெரும் பாலைகளில். ஆறு ஞானமரபுகளை அவர் கடந்தார். ஏழுவகை ஊழ்க முறைகளை பயின்றார். இறுதியில் நீர்விடாய் கொண்ட யானை துதிக்கை நீட்டி ஊற்று தேடி செல்வது போல் கீழ்த்திசை வந்தார். சௌராஷ்டிர மண்ணில் அமைந்த பாலிதானம் என்னும் இப்பெருங்குன்றின் மேலேறினார்.
அன்று மானுடர் எவரும் செல்லாத பெருமலை அடுக்கமாக அமைந்திருந்தது அது. அங்குள்ள இன்நீர்ச் சுனை ஒன்றில் புலியும் இளமான் குட்டியும் இணைந்து நீரருந்துவதை கண்டார். இவ்விடமே என்று கண்டு அங்குள்ள பேரால மரத்தடியில் அமர்ந்தார். எண்வகை இருத்தல்களை உதறினார். ஐவகை நிலைகளை அடைந்தார். சித்திரை முழுநிலவு நாளில் அவர் சித்தத்தில் முழுமை நிறைந்தது.
கருணை என்னும் சொல்லுடன் காலமில்லா பெருவெளி கடந்து வந்து கண்விழித்தார். முழுநிலவு அப்போதும் புவியை தழுவி இருந்தது. பெருங்கருணை கரும்பாறைகளில் வழிந்தது, இலைகளில் ஒளிர்ந்து சொட்டியது. கருணையில் நெளிந்தன புழுக்கள். கருணை ஒளியை சிறகெனச் சூடி பறந்தன பூச்சிகள். கருணையில் விழி கனிந்து நின்றன மான்கள். கருணையில் சிறகு துழாவி திளைத்தன பறவைகள். கருணையை கவ்வியபடி சுழன்றது வானத்தில் வெண் பருந்து. கருணையுடன் புழுவை கொத்தி உண்டது புறா. கருணையுடன் தவளையை விழுங்கியது பாம்பு. கருணையுடன் கிழித்த மானின் ஈரலை சுவைத்தது புலி. கருணையுடன் மாமலைகளை நெரித்துக் கொண்டிருந்தது காலம்.
“இரு கைகளையும் விரித்து வான் நோக்கி நின்றபின் ரிஷபர் மலை இறங்கினார். இப்புவிக்கு அவர் ஒன்றும் சொல்ல தேவை இருக்கவில்லை. பொருள் மயக்கமின்றி உரைக்கப்பட்ட ஒற்றை மந்திரச்சொல் என இருந்தது அவர் தோற்றம். சென்ற இடத்திலெங்கும் கருணை என நின்றது அவரது நெறி. இளையவரே, இம்மண்ணை அணைத்து கொல்லாமை என்னும் நெறியை நாட்டியது அவர் கொண்ட அப்பெருஞ்சொல். அதில் எழுந்த அருகர்களை இங்கு நாங்கள் வழிபடுகிறோம்” என்றார் சப்தமர்.
“ரிஷபர் பால்குன மாதம் வளர்பிறை பதினொன்றாம்நாள் நிறைவடைந்தார். வடதிசைக்கேகி அஷ்டபதம் என்னும் எட்டு குன்றுகளைக் கடந்து கயிலை மலைமுடியை அடைந்தார். அங்கு திகழ்ந்த பேரொளியில் கலந்து விண்உருக்கொண்டார். இன்று பாரதவர்ஷமெங்கும் நரம்புவலைப் பின்னலென விரிந்துள வணிகப்பாதை வழியாக ஊறிப்பரவிக் கொண்டிருக்கிறது அருகநெறி. அதன் ஒரு துளியையேனும் அறியாத மானுடர் எவரும் இன்று இங்கில்லை. சௌராஷ்டிரமென்னும் மலைச்சுனையில் இருந்தே அது ஊறித் ததும்பி பெருகுகிறது. இப்பெருநிலத்திற்கு கோட்டை என்றும் காவலென்றும் இருப்பது அருகநெறியே” என்றார் சப்தமர்.
வெள்ளிமுளைத்ததும் அவர்கள் கிளம்பினர். துயிலெழுந்த விலங்குகள் புத்துணர்வுடன் நடப்பது இருளுக்குள் அவற்றின் காலடியோசையிலேயே தெரிந்தது. தொலைவில் இருளுக்குள் நின்ற மலைப்பாறைகளில் அவற்றின் காலடியோசை எதிரொலித்தது. “இவர்களின் ஊர்கள் வெயில் வந்தபின்னரே விழித்தெழுகின்றன. இருள் வந்தவுடன் அடங்கிவிடுகின்றன. இருளில் விழித்திருக்கலாகாது என்னும் கொள்கை கொண்டவர்கள்” என்று சப்தமர் சொன்னார்.
முதல்கதிர் எழுந்தபோது அவர்கள் சௌராஷ்டிரத்தின் சிற்றூர்களை கடந்துசென்றனர். ஊருக்குள் பிரிந்துசெல்லும் அனைத்து சாலைமுகப்புகளிலும் சிறிய அருகர் ஆலயங்கள் இருந்தன. ஒவ்வொரு அருகர் ஆலயத்தின் அருகிலும் காரையிலை சேர்த்து அவித்த அப்பங்களும் குடிநீருமாக சிறியதோர் அன்னசாலையும் இருந்தது. விலங்குகள் அருந்த மரம் குடைந்த படகுகளில் நீர் நிறைத்துவைக்கப்பட்டிருந்தது.
அர்ஜுனன் “இங்கு கொள்ளையர் அணுகவில்லை என்றால் அது ஒரு விந்தையே” என்றான். “தங்களுக்குத் தேவையானவற்றுக்கு மேல் சேர்த்து வைப்பவர்களை கொள்ளையர்கள் அணுகுகின்றனர். எறும்புப் புற்றுக்கும் தேன் கூடுக்கும் தேடி வரும் கைகள் உண்டு. பறவைக் கூடுகளை எவரும் தொடுவதில்லை” என்றார் சப்தமர். “விண்ணில் பறக்கும் பறவைகள் அறிந்துள்ளன இம்மண்ணை. ஆகவேதான் அடுத்த வேளை உணவை அவை சேர்த்து வைப்பதில்லை. மண்ணில் துளையிட்டு உழலும் எலிகள் விண்ணை அறிந்ததில்லை. ஆகவேதான் உண்ணும் மணிக்கு நிகரான நெல்மணிகளை அவை சேர்த்து வைக்கின்றன.”
கஜ்ஜயந்தபுரியில் வணிகம் பெரிதும் ஈச்சமரத்தில் இறக்கி காய்ச்சி எடுத்த வெல்லமாக இருப்பதை சாலையோரமாக குவித்து வணிகத்திற்கு வைக்கப்பட்டிருந்த வெல்லக் குவைகளிலிருந்து அவன் அறிந்துகொண்டான். ஆடுமேய்க்கும் சிற்றாயர்குலம் படிப்படியாக அத்தொழிலை விட்டு இனிப்பு சமைப்பவர்களாக மாறியிருந்தனர். “ஆடுகளை கொல்லாமல் வளர்க்க இயலாது என்று அறிந்ததும் நடந்த மாற்றம் இது. ஊனோ தோலோ வணிகம் செய்ய இயலாதபோது பாலை நிலத்தில் ஈச்சை மரங்களை பயிரிடலாமென்று ரைவதகுலத்து மன்னர் வஜ்ரசேனர் கண்டடைந்தார். அவர் காலத்தில்தான் இங்கு இத்தொழில் தொடங்கி வளர்ந்தது.”
தொலைமேற்கின் பெரும்பாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட குட்டை ஓலைகளும் முள்சூழ்ந்த கரிய உடலும் கொண்ட ஈச்சை மரங்கள் அரைப்பாலை நிலங்களில் நீள்வரிசையாக நடப்பட்டிருந்தன. ஒன்றுடன் ஒன்று இணைத்து மூங்கில்களை கட்டி ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்திற்கு நடந்து சென்றே பாளைகளை சீவும்படி அமைக்கப்பட்டிருந்தது. ஈச்சமரப்பாளைகளின் முலைநுனிகளை மெல்லச்சீவி கலங்களுக்குள் விட்டு ஊறிச் சொட்டி நிறையவைக்கப்பட்டிருந்த இன்நீரை மரமேறிகள் மரக்குடுவைகளில் சேர்த்து சகடைகளில் கட்டப்பட்டிருந்த கயிறுகளில் கட்டி இறக்கினர்.
இன்நீர் இறக்கியவர்கள் தங்களுக்குள் மயிலகவல் போல ஒலியெழுப்பி பேசிக்கொண்டது வானிலிருந்து வழியும் குரல்களென கேட்டுக்கொண்டிருந்தது. ததும்பும் குடங்களை தோளிலேற்றியபடி வியர்த்த உடல்களில் தசைகள் இறுகி அதிர மரமேறிகள் ஓட்டமும் நடையுமாக வந்தனர். மூச்சும் பேச்சுமென “உம் உம் “ என அவர்கள் வழிகோரி எழுப்பிய ஓசைகள் சாலைதோறும் ஒலித்தன. “காஜுர் மரங்கள் பிற ஊர்களிலெல்லாம் கள்ளுக்கென்றே வளர்க்கப்படுகின்றன. இங்கு கள் உண்பது கொலைக்கு நிகரான குற்றம்” என்றார் சப்தமர். “இங்குள்ள பெருந்தண்டனை என்பது ஊர்நீக்கம். இங்கு திறந்த நிலத்தில் வாழ்ந்தவர்கள் பிற ஊர்களில் வாழ முடியாது. எனவே அது இறப்புக்கு நிகர்தான்.”
பாலைகளில் செறிந்திருந்த சிறிய முள் மரங்களை வெட்டி விறகாக்கி சுமந்துகொண்டு வந்தனர் சிறுவர். அவற்றை எரித்து வாயகன்ற கலங்களில் இன்நீரைக் காய்ச்சி பதநீராக்கிக் கொண்டிருந்தனர் பெண்கள். ஒரு சிற்றூரில் அர்ஜுனன் சென்று அருகமர்ந்து அவர்கள் அதை காய்ச்சுவதை நோக்கினான். அங்கிருந்த மூதாட்டி முன்னெழுந்து பிரிந்து நின்ற பற்களைக் காட்டி நகைத்தபடி “இப்போதுதான் பார்க்கிறீர்கள் போலும், இன்நீர் இப்படித்தான் வெல்லமாகிறது” என்றாள். “இப்புவியை ககன வெளியிலிருந்து இப்படித்தான் தெய்வங்கள் காய்ச்சி உருட்டி எடுத்தன என்று என் மூதன்னை ஒரு முறை சொன்னாள்.”
அர்ஜுனன் சிரித்துக்கொண்டு “இது மெய்ஞானம் திரளும் முறை என நான் எண்ணினேன்” என்றான். அவள் சிரித்தபடி “நாங்கள் எதையும் அறியோம். நினைவறிந்த நாள்முதல் இன்நீரில் இனிப்பு திரட்டுவதை மட்டுமே செய்துவருகிறோம்” என்றாள். அர்ஜுனன் “இதன் வழியை அறிந்தால் அருவம் உருவமாவதை அறியமுடியும் அல்லவா?” என்றான்.
அவள் “இதில் எட்டு பதங்கள் உள்ளன வீரரே. வெண்பால் என நுரைகொண்டு நிற்கும் இன்நீரை நுரைப்பதம் என்கிறார்கள். கலத்திற்கு அடியில் அனல் பட்டு அசைவு கொண்டதுமே நிறம் மாறி தேன்பதமாகிறது. பின்பு குமிழிகள் எழுந்து மீன்கண்பதம் ஆகிறது. குமிழிகள் நீராவியுடன் உடைந்து தெறிப்பதை பாகுபதம் என்கிறோம். குமிழித் துளைகள் விழுவது சேற்று பதம். துடுப்பு சிக்கிக் கொள்ளும்போது அதை அரக்கு பதம் என்போம்.”
“அரக்கு பதம் அமைந்ததும் துடுப்பால் இடைவிடாது இதை கிளறவேண்டும். இல்லையேல் பாகு இறுதி வரை பசை என்றே இருக்கும். பாகு அறுத்தல் என்று இதை சொல்கிறோம். துடுப்பில் அள்ளி உதிர்க்கப்படும் பாகு கம்பி என நீளாமல் பிரிந்து அறுந்து விழவேண்டும். அதை தேனடை பதமென்கிறோம். அனலை நிறுத்தி பாகை ஆற விடும்போது மேலே மெல்லிய பொருக்குப் படலம் எழவேண்டும். அது தோல் பதம்” என்றாள் முதியவள். “தோல் பதம் அமைந்தால் வெல்லம் அமைந்ததென்றே பொருள். உறைந்தபின் அள்ளி இக்குழிகளில் விட்டு அரை உருளைகளாக்கி எடுப்போம்.”
முதியவள் அங்கே குவிந்துகிடந்த வெல்லக்குவைகளை சுட்டி “எங்கள் வெல்லம் பாரதவர்ஷத்தின் பதினேழு நாடுகளுக்கு செல்கிறது. சுவை அறிந்த அடுமனையாளர்கள் சௌராஷ்டிர வெல்லம் வேண்டுமென்று கோரிப் பெறுகிறார்கள்” என்றாள். “இங்குள மண்ணின் சுவையா அது?” என்றான் அர்ஜுனன். “அல்ல. இங்குள்ள வெயிலின் சுவை” என்றாள் மூதாட்டி. “இன்நீர் வேரில் ஊறி தடியில் எழுந்து பாளையில் சொட்டி பானையில் திரளவேண்டும். மழையோ பனியோ அதில் ஊறலாகாது. இங்கு மழையில்லை என்பதனால் இந்நீர் நறுஞ்சுவை உடையதாகிறது.”
“இங்கும் கூட நீரற்ற மேட்டுநிலத்து மரங்களின் இனிமை ஊற்றருகே நிற்கும் மரங்களுக்கு வருவதில்லை” என்றார் சப்தமர். “மேட்டுநிலத்தில் நிற்கும் மரம் எப்போதும் தனித்தது. ஆழ வேர் செல்வது. காற்றை தனித்து எதிர்கொள்வதனால் நெடிதோங்கி நிற்பது. அதை நோன்பு கொண்டு நிற்கும் மரம் என்பார்கள். அதன் நீரை காய்ச்சி எடுக்கப்படும் வெல்லம் அருகர்களுக்கு உகந்தது என இவர்கள் எண்ணுகிறார்கள்.”
முதியவள் அளித்த வெல்லத்தை அர்ஜுனன் கைகளில் வைத்து உடைத்து வாயிலிட்டான். “சௌராஷ்டிரத்தின் இனிமை” என்றான். சப்தமர் “ஆறு சுவைகளும் மண்ணுக்குரியவை. மண்ணிலிருந்து இவ்வினிமையை மட்டும் வேர்களால் அள்ளித் திரட்டி நமக்களிக்கும் காஜுர் மரங்கள் அன்னையருக்கு நிகரானவை என்கிறார்கள் இவர்கள். நமக்கென முலை கனிபவை. கரிய உடலுடன் குறுகிய இலைகளுடன் காற்றென்றும் மழையென்றும் வெயிலென்றும் பாராது கருணை சுரந்து இங்கு நின்றிருக்கின்றன.”
கஜ்ஜயந்தபுரிக்கு செல்லும் பாதையெங்கும் ஈச்ச மரங்கள் நிறைந்திருந்தன. இல்லங்களின் கூரைகள் ஈச்ச ஓலைகள் முடைந்து செய்யப்பட்ட தட்டிகளால் ஆகியிருந்தன. ஈச்சமரத்தின் நார்களை பின்னி செய்யப்பட்ட கூடைகள். ஈச்சமட்டைகளால் ஆன பீடங்கள். இளையோர் அணிந்திருந்த ஆடைகள்கூட ஈச்சையோலைகளை நுணுக்கமாகக் கீறி பின்னப்பட்டிருந்தன. “ஊர்களின் பெயர்கள்கூட ஈச்சைமரங்களை ஒட்டித்தான்” என்றார் சப்தமர்.
வெயில் வெம்மை கொண்டபோது ஈச்சைச்சிறகு என்னும் ஊரின் முகப்பிலிருந்த பெரிய ஈச்சைக்காட்டின் நடுவே இருந்த அடுத்த விடுதியில் தங்கினர். அங்கிருந்த சிறிய சுனை மலைக்கற்களால் விளிம்பு கட்டப்பட்டு குளிர்ந்த கரிய நீர் நிறைந்து ஈச்சஓலைகளின் நிழலசைவுடன் கிடந்தது. பொதிவிலங்குகளை அவிழ்த்து ஆங்காங்கே கட்டியபின் கொட்டகைகளில் இளைப்பாறினர். சப்தமர் “வெயில் தாழ்ந்தபின் கிளம்பினால் முன்னிரவாகும்போது ரைவதமலையை சென்றடையமுடியும்” என்றார்.
சாவடிக்கு அப்பால் ஊருக்குள் செல்ல திரும்பும் பாதையின் தொடக்கத்தில் இருந்த செம்மண் மேட்டின்மீது இரு கரிய பாறைகளின் நடுவே மிகப்பெரிய ஈச்சை மரம் ஒன்று சிறகுகள் விரித்து எழுந்து நின்றது. அதன் அருகே மரத்தில் செதுக்கப்பட்ட ரிஷபரின் சிலை நின்றிருந்தது. நான்கு ஆள் உயரம். அதன் தலைக்குமேல் முகிலற்ற நீலவானம் வெளித்திருந்தது.
அர்ஜுனன் அருகே சென்று அதை நோக்கி நின்றான். ஆடையற்ற பேருடல். மானுட உடல் அடையும் தசைவடிவத்தின் உச்சம். பெருந்தோள்கள். தாளில் படிந்த கைகள். ஒட்டிய வயிறு. விரிந்த மார்பு. சுருள்நுரையென படிந்த குழல். மண்ணில் எதையும் நோக்காத பார்வை. தன்னுள் ஊறிய மகிழ்வு துளித்து நின்றிருக்கும் இதழ்கள்.
அவன் நெடுநேரம் அதன் முன் நின்றிருந்தான். பின்பு கைகூப்பி அச்சிலையின் அடிகளை தொட்டு சென்னிசூடியபின் திரும்பினான். வெயில் விரிந்த நிலம் போல நான்குதிசைகளும் திறந்து அமைதியே அதுவென இருந்தது உள்ளம். சப்தமர் “ஓய்வெடுங்கள் வீரரே” என்றார். “ஆம்” என்றபடி சென்று தனக்காக இளவணிகன் ஒருவன் விரித்துவைத்திருந்த சருகுப்படுக்கையில் படுத்தான். தலைக்குமேல் கைகளைக் கோத்து கண்களை மூடிக்கொண்டான். காலைமுதல் கேட்ட சொற்களும் குழம்பிக்கொண்டிருந்தன. கொதித்து குமிழியிட்டு கடைந்து திரட்டி…
எவரோ அருகே இருந்து மெல்ல சொன்ன சொற்றொடர் போல ஓர் எண்ணம் அவனுள் எழுந்தது. அந்த முகத்தை அவன் நன்கறிந்திருந்தான். அந்த விழிகளுடனும் இதழ்களுடனும் உரையாடியிருந்தான். “ஆம்” என்று சொல்லிக்கொண்டான். ஆனால் எங்கே? அவன் சித்தம் துழாவிக்கொண்டே இருந்தது. கண்டடையாமலேயே துயிலில் ஆழ்ந்தது.