வெ.சாமிநாதன் -கடிதங்கள்

Ve.sa-front-page

அன்புள்ள ஜெயமோகன்,

//இதில் சேதுபதி அருணாசலத்தால் அவரது இலக்கியப் பங்களிப்பைப்பற்றி குறிப்பாக ஒன்றும் சொல்லமுடியவில்லை. அவரது விமர்சனங்களை அவர் வாசித்திருப்பதாகத் தெரியவில்லை.//

என்று எழுதியிருந்தீர்கள். வெ.சாவுடனான அறிமுகம் அவர் புத்தகங்களை வாசித்த பின்னரே எனக்கு ஏற்பட்டது. அவர் இலக்கியச் செயல்பாடுகள் குறித்த என் கருத்துகள், திலீப்குமார் வெ.சா குறித்துத் தொகுத்த ‘வாதங்களும், விவாதங்களும்’ புத்தகத்தில் ஒரு கட்டுரையாக இடம்பெற்றிருக்கிறது. ஆனால் அதுவும் கூட ஒரு முழுமையான கட்டுரை கிடையாது. இன்று அவர் பங்களிப்பின் நிறைகுறைகளைச் சீர்தூக்கி எழுதும் ஒரு புறவயமான மனநிலை எனக்கு இல்லை. என்றாவது ஏற்படும்போது நிச்சயம் எழுதுவேன்.

கோலப்பன் கேட்ட ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான பதிலை மட்டுமே அவருக்கு மின்னஞ்சலில் சொல்லியிருந்தேன். அதுவும் கூட அவர் எழுதும் கட்டுரைக்குத் தேவைப்படும் தகவலாக இருக்கும் என்று நினைத்தே பதிலளித்தேன். அவர் என் ‘கருத்தாக’ அதை வெளியிடுவார் என்று எனக்குத் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால், நாஞ்சில்நாடன், வண்ணநிலவன் போன்ற வெ.சா மீது பெருமதிப்பு வைத்திருக்கும் தமிழின் முதன்மையான படைப்பாளிகளைக் கேளுங்கள் என்றே சொல்லியிருப்பேன். அதுதான் சரியாக இருந்திருக்கும்.

அன்புடன்,
சேது

அன்புள்ள சேதுபதி,

நீங்கள் சொன்னதில் உள்ள ‘நேரடி அனுபவங்களை ஒட்டி எழுதவேண்டும் என வலியுறுத்தியவர்’ என்னும் வரி வெ.சாவுக்கு நியாயம் செய்வது அல்ல. ஒருவரின் அஞ்சலியுடன் வரும் இத்தகைய வரி சட்டென்று நின்றுவிடும். இனி அவரை அவ்வரியிலிருந்து மீட்பது எளிதல்ல. நான் மீண்டும் மீண்டும் அதை கடக்கவே எழுதிக்கொண்டிருக்கிறேன்

வெ.சாவின் பங்களிப்பு என்று ஒற்றை வரியாகச் சொல்லவேண்டும் என்றால் ‘கட்டற்ற ஆழ்மன எழுச்சியின் விளைவாகவே கலை உருவாகவேண்டும், அதற்கு கருத்தியல்கள் இல்லை என்பதை வலியுறுத்திய அழகியல் விமர்சகர்’ என்று சொல்லியிருக்கவேண்டும்

ஒற்றைவரியை உருவாக்கிக்கொள்வது எளிதல்லதான். ஆனால் நீண்ட தொடர்பும் தொடர்வாசிப்பும் அதற்கு உங்களுக்கு உதவியிருக்கவேண்டும் என எதிர்பார்த்தேன்.

கோலப்பனின் அறிக்கையில் ஒருபக்கம் வலுவாக அமைந்துவிட்டது குறித்த வருத்தம்தான் அது. தனிப்பட்ட முறையில் அல்ல.

புண்படுத்தும்படி இருந்தால் மன்னிக்கவும். எதிர்காலத்தில் வெ சா குறித்து நீங்கள் விரிவாக எழுதவேண்டுமெனக் கோருகிறேன்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

கருத்தியல் ரீதியாக, செயற்கையாக ‘உருவாக்கப்படும்’ படைப்புகளைக் காட்டிலும், தன் கலைக்கு நேர்மையான, நியாயமான, சொந்த அனுபவங்களிலிருந்தோ, அக எழுச்சியிலிருந்தோ உருவாகும் கலை வடிவமே உண்மையானது என்று வெ.சா வலியுறுத்தி வந்தார் என்பதுதான் நான் எழுத நினைத்தது. ஆனால் அன்றைக்கு நான் இருந்த உறைமனநிலையில் இரண்டு மூன்று வரிகளை ஒரு மின்னஞ்சலாக அனுப்பினேன், அவ்வளவே.

வெறும் நேரடி அனுபவங்களை மட்டுமே எழுதவேண்டும் என்று வெ.சா வலியுறுத்தினார் என்று நான் எளிமையாக நான் சுருக்கிப் புரிந்துகொண்டிருந்தால் விஷ்ணுபுரத்தை அவர் கொண்டாடியதையே நான் புரிந்துகொள்ள முடியாமல் போயிருந்திருக்கும். நேரடி அனுபவங்களில் இருந்து வெளியே நிற்கும் தெருக்கூத்தின் சன்னத நிலையை ஆழ்மன எழுச்சியாகவும், அதன் வழியே பார்வையாளர்கள் அந்தப் பேரனுபவத்தில் இணைந்து கொள்வதை முக்கியமாகவும் வெ.சா வலியுறுத்தியது, நவீன கவிதைகளின், ஓவியங்களின் உன்னதங்களுக்குச் செல்லும் அழகியல் – போன்ற வெ.சாவின் பங்களிப்புகளைக் கண்டு திகைத்து நிற்க வேண்டியிருந்திருக்கும். மேலும் அவரை முதன்மையாக ஒரு இலக்கிய விமர்சகராக மட்டும் பார்க்காமல், ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம் போன்ற அனைத்து கலைகளுக்கும் ஒருங்கிணைவான ஒரு உன்னதத்தைத் தேடிய ஒரு ஆளுமையாகத்தான் அவரை நான் பார்க்கிறேன். இப்படிப் பார்ப்பதே கூட ‘நேரடி அனுபவங்கள்’ என்ற எளிமையான வரிக்கு எதிரான ஒன்றுதான்.

நேரமும் மனமும் வாய்க்கையில் அவருடைய கலை, இலக்கிய பங்களிப்புகளைக் குறித்து முழுமையாக எழுத முயல்கிறேன்.

*

அன்புள்ள ஜெ,

உங்கள் எதிர்வினை கண்டேன். விடலை என்று நான் சுட்டிக் காட்டிய அந்தக் கடிதத்தில் வெ.சா மீது எந்த வகையான “விமர்சனம்” இருந்தது என்று தயவு செய்து கூற முடியுமா? (“அவர் இந்துத்துவ தளங்களில்தான் எழுதினார் என்று நண்பர்கள் சொன்னார்கள்… வெங்கட் சாமிநாதனையும் வாசிக்கவேண்டியதில்லை என்று முடிவுசெய்துவிட்டேன்”)

“ஒற்றைப்படையான இந்துத்துவ பார்ப்பனிய வைதீக சொல்லாடலை முன்னெடுக்கும் நாவல். அந்த எழுத்தாளன் ஒரு ஆர் எஸ் எஸ் காக்கி டிரவுசர். புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் கடையில் அந்த நாவல் விற்கப் படுகிறது.. விஷ்ணுபுரத்தை வாசிக்க வேண்டியதில்லை என்று அப்போதே முடிவு செய்து விட்டேன்” – 1990களில், விஷ்ணுபுரத்தின் ஒரு பக்கத்தைக் கூட வாசிக்காமல் அதன் மீது முத்திரை குத்திய அதே போன்ற மனநிலை அல்லவா இதுவும்? இதை உங்கள் படைப்பின் மீதான “விமர்சனம்” என்று நீங்கள் எப்போது கருதியிருக்கிறீர்கள் ஜெ?

ஆனால் வெ.சா விஷயத்தில் இந்த மூர்க்கத் தனமான மனநிலையை இப்போது நீங்கள் ஒரு “தரப்பு” என்று உருவகிக்கிறீர்கள். நான் விடலை என்று அந்தத் “தரப்பை” வசைபாடுவதாக என்னை அடக்குகிறீர்கள். இது உண்மையில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வெ.சா விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று நான் எங்குமே எழுதவில்லையே. “தமிழின் மகத்தான கலை இலக்கிய மேதை” எனறு அடைமொழி கொடுக்கப் படுவதன் பொருள் அது தான் என்று நீங்கள் கருதுவது வினோதமாக இருக்கிறது. உங்களைக் குறித்தும் “தமிழின் மகத்தான படைப்பிலக்கிய ஆளுமை” என்று அடைமொழி கொடுத்துத் தான் நான் எழுதி வந்திருக்கிறேன். அதன் பொருள் விமர்சனம் எதுவுமில்லாமல் உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன் என்பதல்ல. அந்த அடைமொழி ஒரு பெரிய ஆளுமையின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கான குறிப்பு மட்டுமே.

அன்புடன்,
ஜடாயு

http://www.tamilhindu.com/author/jatayu/

அன்புள்ள ஜடாயு

நான் என் தரப்பைச் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். இடதுசாரிகள் எப்போதும் அமைப்பு சார்ந்தவர்கள். ஆகவே எப்போது மறுதரப்பை ஏதேனும் அமைப்புசார்ந்தவர்களாகவே உருவகித்துக்கொள்வார்கள். அது அவர்களின் மனநிலை. அதை நாம் முடிவுசெய்யமுடியாது. வெங்கட் சாமிநாதன் விவாதித்தது அவர்களுடந்தான்

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 44
அடுத்த கட்டுரைஅவதார் – ஒரு வாக்குமூலம்