பகுதி ஐந்து : தேரோட்டி – 7
எப்போதுமே தாக்குதலில் வெறிகொள்ளும் கண்டர்கள் அன்று தங்கள் தரப்பின் இறப்புகளால் பித்துநிலையில் இருந்தனர். எல்லைமீறிய எதுவும் களியாட்டமாகவே வெளிப்படுகிறது. உரக்க நகைத்தும் படைக்கலங்களைத் தூக்கியபடி நடனமிட்டும் அவர்கள் அவ்வூர் முழுக்க சுற்றிவந்தனர். இல்லங்களின் அடித்தளங்களை உடைத்து, அங்கு ஒளித்து வைக்கப்பட்டிருந்தவற்றை சூறையாடினர்.
திண்ணைகளில் கைவிடப்பட்டிருந்த நடக்கமுடியாத முதியவர்களின் தலைகளை துண்டித்து தூக்கிவீசி கால்களால் பந்தாடி கூச்சலிட்டனர். வெட்டுக்கழுத்துகளைத் தூக்கி செந்நீரை பிறர் மேல் பீய்ச்சியடித்து சிரித்தாடினர். வயிற்றைக் கிழித்து குடல்களை இழுத்து குதிரைக்கால்களில் சிக்கவைத்து தெருநீள இழுத்துச்சென்றனர். பின்னர் இல்லங்களை தீவைத்துக்கொளுத்தி புகைக்குள் துள்ளிக்குதித்து வெறியாட்டமாடினர்.
ரைவதகர் எண்ணியதுபோல அன்று பாலைக்காற்று வீசவில்லை. எனவே கண்டர்களில் ஒருவன் முட்புதர்மண்டிய பாலை மென்மணலில் குளம்புகளும் காலடிகளும் பதிந்துசென்ற திசையை கண்டடைந்தான். வாள்சுட்டி “இவ்வழியே சென்றுள்ளார்கள்” என்று அவன் கூற, வெறிக்குரல்களுடன் கண்டர்கள் அச்சுவடுப்பாதையை தொடர்ந்தனர். சற்று கடந்ததும் குளம்புகளும் காலடிகளும் தனித்தனியாக பிரிநது போவதை கண்டனர். புரவிகளை நிறுத்திவிட்டு கைகளில் விற்களும் வாள்களுமாக அக்காலடிகளை தொடர்ந்து சென்றனர்.
“ஆடுகளை பிறகு கொள்வோம். பெண்களையும் பின்னர் கொள்வோம். இப்போது தேவை வெங்குருதி” என்றான் தலைவன். “ஆம்! ஆம்!” என்று அவர்கள் கூச்சலிட்டனர். மலையடுக்குகளுக்கு அப்பால் ஒரு பெரிய பள்ளத்தில் ஆடுகள் பட்டியடித்து கட்டப்பட்டிருந்தன. அவை ஓசையிடாமலிருக்க அவற்றின் மேல் ஈரப்புழுதி பரப்பப்பட்டிருந்தது. அவர்கள் பாறைகள் செறிந்த குன்றின்மேல் ஏறிச்சென்றனர். மடம்புகளில் குழவியரை முலைமேல் அணைத்தபடி ஒண்டியிருந்த கஜ்ஜர்கள் காலடியோசைகளை கேட்டு நடுநடுங்கினர். குழந்தைகளை மார்போடு அணைத்து அமர்ந்திருந்த அன்னையர் அஞ்சி மூச்சு விடும் ஒலியே புற்றுக்குள் இருக்கும் அரவ ஒலியென கேட்டது. தேனடைகளை தேடிக் கண்டடையும் வேடர்கள்போல பாறைகளில் தாவித் தாவி அவர்களை கண்டடைந்தனர்.
சிறு பள்ளங்களில் ஒளிந்திருந்த அவர்களை கிழங்கு பிடுங்குவதுபோல் கொத்துக்களாக அள்ளி தூக்கி எடுத்தனர் கண்டர்கள். அன்னையர் இடையில் இருந்த குழந்தைகளை தலைமயிரைப் பற்றி இழுத்து வெளியே எடுத்தனர். கருவறைக்குள் இருந்து வருவதுபோல அழுதபடி வந்த குழந்தைகளைத் தூக்கி குறிகளை நோக்கினர். ஆண் குழந்தைகளைத் தூக்கி மேலே வீசி வாள்முனையில் விழச்செய்தனர். கால்சுழற்றி பாறைகளில் அறைந்து சிதறடித்தனர். தூக்கி உச்சிப்பாறைகளிலிருந்து கீழே இருந்த பாறைகள்மேல் வீசினர். பேறுக்கு வழியற்ற முதுபெண்டிரை கூந்தல் பற்றி இழுத்து தலைவெட்டி நின்றாடிய உடலை உதைத்துச் சரித்தனர். கூந்தலைப்பற்றி தலையைச் சுழற்றி தொலைவுக்கு விட்டெறிந்தனர்.
பெண் குழந்தைகளின் கைகளை பின்னால் சேர்த்து தோல்நாடாக்களால் கட்டி புரவிகளுக்கு இருபுறமும் தொங்கவிட்டனர். பெண்களை கூந்தல் பற்றி இழுத்துச் சென்று ஆடைகளைந்து வெட்டவெளியில் அங்கேயே உடல்நுகர்ந்தனர். தெய்வங்களை அழைத்து அவர்கள் அலறிய குரல் விண்ணில் பட்டு கசங்கியது. பாலைக்காற்று சிதறி மறைந்தது. அதன்பின்னர் ஆடுகளை அவிழ்த்து ஒன்றோடொன்று சேர்த்துக்கட்டி இழுத்தபடி புழுதித்தடம் நீள பாலையில் சென்று மறைந்தனர்.
மூன்றாவது நாள் விடியற்காலையில் காலைப்பனி பாறையில் பட்டு குளிர்ந்து துளித்து உதிர்ந்த நீர்த் துளிகள் முகத்தில் விழ ரைவதகர் தன்னுணர்வு பெற்றார். எங்கிருக்கிறோம் என்று உணர்ந்தபின்பு அனல் சுட்டதுபோல் எழுந்து உடல் புரட்டி மேலெழ முயன்றார். தன் உடல் குருதிப்பசை ஒட்டி உலர்ந்த ஆடைகளுடன் இறுகியிருப்பதை அறிந்தார். உடலெங்கும் விடாய் எரிந்தது. முகத்தில் விழுந்த நீர்த்துளிக்கு வாய் காட்டி நீட்டிய நாவில் விழச்செய்து நக்கி நக்கி தொண்டையின் வறட்சியை போக்கினார். எளிய நீர்த்துளி கருந்திரிக்கு நெய் என உடலினுள் ஒடுங்கிய உயிரை தளிர்க்கச் செய்ததை உணர்ந்தார். குருதி உலர்ந்து பொருக்காய் இருந்த உடலில் சிற்றெறும்புகளும் வண்டுகளும் மொய்த்து அவர் அசைவில் எழுந்து பறந்து சுழன்றன.
அவர் விழுந்து கிடந்த பாறைப்பிளவின் மேல் விளிம்பில் இரு ஓநாய்கள் நின்று அவரைநோக்கி முனகி காலால் பாறையை பிராண்டியும் மெல்ல குரைத்தும் மூக்கு தாழ்த்தி நாநீட்டி வாய்விளிம்பை நக்கியும் தவித்தன. அவரது ஒரு கையும் காலும் செயலற்று இருந்தன. இன்னொரு கையை பாறை விளிம்பில் ஊன்றி மறுபாறையில் தோளை அழுத்தி கணுக்கணுவாக மேலே எழுந்து வந்தார். அவர் அசைவை அறிந்து அவரை நோக்கி உறுமி தலை தாழ்த்தி வால் நீட்டி பின்னடைந்தபின் பழுத்த விழிகளால் கூர்ந்து நோக்கி துணிவுகொண்டு மெல்ல மூக்கால் அணுகிய ஓநாயை பாராததுபோல் மேலே எழுந்தார்.
ஒரு ஓநாய் மேலும் துணிவுகொண்டு அவரை அணுகியது. மேலும் மேலும் அதை அணுக விட்டார். கையருகே திறந்த வாய்க்குள் வெண்பற்கள் வளைந்து தெரிந்தன. கடைவாயில் அரக்கு உருகியதுபோல உதடுகளின் பிசிறுகள் எச்சில் ஊறி சொட்டி வெளியே மலர்ந்திருந்தன. அதன் வாய் கையருகே வருவது வரை காத்திருந்துவிட்டு ஒரே கணத்தில் அம்பால் அதன் கண்ணை குத்தினார். கண்ணில் இறங்கிய அம்புடன் சில்லென்ற ஒலி எழுப்பி அலறி மறுபக்கம் பாய்ந்து பாறைச் சரிவுகளில் விழுந்து எழுந்து மீண்டும் அலறி ஓடியது ஓநாய். அதன் தோழியும் பின்னால் பாய்ந்து தொடர்ந்தது.
இரு ஓநாய்களும் வால் சுழற்றி ஊளையிட்டபடி ஓடுவதை கேட்டார். தலைசுழன்று கீழே விழுந்துகொண்டே இருப்பதுபோல உளமயக்கு ஏற்பட்டது. பற்களைக் கடித்து சற்று நேரம் ஓய்வெடுத்தபின் மீண்டும் தோளையும் கையையும் உந்தி மேலே வந்து புரண்டு படுத்து உருண்டு பெரிய பாறையின் மேல் ஏறி கையூன்றி எழுந்து கால்கள் தள்ளாட நின்றார். பின்னர் கண்களைத் திறந்து வானைநோக்கினார். முகிலற்ற நீலவானின் அமைதி அவரது உள்ளத்தை படியச்செய்தது. ஏனென்றிலாத மெல்லிய உவகையை உணர்ந்தார். அது உயிருடனிருப்பதன் இன்பம் என்று அறிந்தார்.
பாறைச் சரிவுகளில் சறுக்கி, கீழிறங்கி, செம்புழுதியில் கால்வைத்தார். தரைத்தளத்திற்கு வந்ததும் உடலின் எடை சற்று குறைந்ததுபோல் இருந்தது. புழுதியில் உடைந்து கிடந்த வில் ஒன்றைக் கண்டு அதை எடுத்து ஊன்றுகோலாக்கி, காலை இழுத்து புழுதியில் கோடு நீட்டியபடி நடந்து அவ்வூரை அடைந்தார். அங்கு ஓநாய்கள் கிழித்துக் குதறிய மனித உடல்கள் கிடந்தன. புழுதியில் இழுபட்டு துணிச்சுருள்கள் போல சிறுபூச்சிகள் ரீங்கரிக்க கிடந்த குடல்கள் காலில் சிக்கின. உருண்டு கிடந்த தலைகளில் விழிகள் வியந்தும் துயர்கொண்டும் அஞ்சியும் விழித்திருக்க தேய்ந்த கூழாங்கல்நிறப் பற்கள் சிரித்தன.
சாம்பல்குவைகளாக மாறியிருந்த இல்லங்கள் கொண்ட ஊரை கடந்துசென்ற பாதையில் குதிரைக் குளம்புகள் குதறிப் போட்டிருந்த பாலை மணலில் உலர்ந்த குருதித்துளிகள் கரிய பொருக்குகளென கிடந்தன. அங்கே கண்டர்கள் கொன்று வீசியிருந்த இளமைந்தர்கள் ஓநாயால் பாதி உண்ணப்பட்டு வானிலிருந்து விழுந்தவர்கள் போல புழுதி மண்ணில் சற்றே புதைந்து சிதறிக் கிடந்தனர். சிறு கால்களையும், தளிர்க்கைகளையும் மட்டும் பார்த்தபோது மென்மரவுரிச்சேக்கையில் அன்னை தாலாட்டுகேட்டு அவர்கள் துயில்வதுபோல தெரிந்தது. சிறிய ஈக்கள் பறந்து சுழன்று ரீங்கரித்து மொய்த்த விழிகள் உறைந்த தேன்துளிகள் போல் இருந்தன.
காற்று ஓசையுடன் வந்து எழுந்து ஊரைச்சூழ்ந்த பாறைகளால் சீவப்பட்டு கீற்றுகளாகக் கிழிபட்டு வெவ்வேறு திசைகளில் சுழன்று மாறி மாறி வீசியது. அவரது ஆடை முன்னும் பின்னுமாக எழுந்து பறந்தது. அங்கு நிகழ்ந்தவற்றை அவரது உள்ளம் முன்னரே உய்த்துக்கொண்டிருந்தமையால் அதிர்ச்சி ஏற்படவில்லை. சித்தம் கற்பாறையாலானது போலிருந்தது. ஆனால் தனியாகக்கிடந்த ஒரு சிறு கையில் வளையல்களைக் கண்டதும் அவருள் ஓர் உடைவு நிகழ்ந்தது. “தெய்வங்களே” என்று அங்கு அமர்ந்து ஓலமிட்டார்.
நெஞ்சில் அறைந்தபடி விலங்குபோல கூவினார். என்னசெய்கிறோம் என்றறியாமல் மண்ணை அள்ளி அள்ளி தன் தலைமேல் போட்டுக்கொண்டார். “தெய்வங்களே, இங்கு என் குடிகளின் நடுவே சிறுமை கொண்டு நிற்கின்றேன். விண்ணில் இருந்து நோக்கும் என் மூதாதையர் விழிகளுக்கு முன் கீழ்மைகொண்டு நிற்கின்றேன். இனி உயிர் வாழேன்” என்றார். வாளைத் தூக்கி தன் கழுத்தில் வைத்தவர் “இல்லை, மூத்தாரே உங்கள் உலகுக்கு வந்துசேர்கிறேன். உங்கள் காலடியில் விழுந்து பிழைபொறுக்க இரக்கிறேன்” என்றார்.
அங்கேயே கால்மடித்து ஊழ்க முறையில் அமர்ந்து, கைகளை மடியில் வைத்து கண்மூடி “கொள்க! இவ்வுயிர் கொள்க!” என்று சொல்லி தன் உளம் அடைத்து அமர்ந்தார். பாறைகளால் சிதறடிக்கப்பட்ட நூறு காற்றுகள் அவரைச் சூழ்ந்து அலையடித்தன. அக்காற்றுகள் அள்ளிப்பறக்கவிட்ட மென்மணல் அலையலையாக அவர் மேல் பொழிந்து தலையிலும் தோளிலும் வழிந்து மடியில் கொட்டிக்கொண்டிருந்தது.
மேற்குத் திசையை ஆளும் வாயுதேவனின் மைந்தர்களாகிய பதினெட்டு மருத்துக்கள் அக்காற்றுகள் வழியாக களியாடினர். ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளி, குழல் பற்றி இழுத்துத் தழுவி மண்ணில் புரண்டனர். விண்ணில் தாவி ஏறிச் சுழன்று அமைந்தனர். அவர்கள் கூவிக் களித்த ஓசை முட்கிளைகளில் பாம்புச்சீறலாகவும் பாறைப்பிளவுகளில் யானையின் உறுமலாகவும் இலைக்கற்றைகளில் சிறகடிப்புகள் போலவும் ஒலித்தது. செம்புழுதி மண்ணில் கிடந்த சடலங்கள் மேல் பொழிந்து ஆடையாக்கி புதுவடிவங்கள் சமைத்தது.
அவர்களில் இளம் குழவியாகிய மந்தன் என்னும் மருத்தன் தன் சிறு கால்களை வைத்து தவழ்ந்து ஓடி தமையன்களை பற்ற முனைந்தான். அவர்களின் கால்களின் நடுவே ஓடி அவற்றால் தட்டி வீழ்த்தப்பட்டு புரண்டு எழுந்து “நானும்! நானும்!” என்று கைநீட்டி கூவினான். மூத்தவர் ஆடலில் அவனுக்கு இடமே இருக்கவில்லை. “நான் விளையாடுவேன்! நான் விளையாடுவேன்” என்று அவன் கூவிக்கொணடு இருந்தான். “விலகு” என்று அவனை தள்ளிவிட்டு மீண்டும் ஓடினான் மூத்தவனாகிய பீஷ்மகன்.
மந்தன் பீஷ்மகனின் நீண்ட ஆடையை அள்ளி பற்றிக்கொண்டான். அவன் கையைப் பற்றி விலக்கி “போடா” என்று தள்ளிவிட்டு தமையன் ஓட புழுதியில் விழுந்து கையூன்றி எழுந்து “நான் புயலாக வந்து உன்னை கொல்வேன்!” என்றபடி அமர்ந்தான். “நாளைக்கு நான் வளர்ந்து பெரிய புயலாக ஆவேன்.” அவன் சினம் கொண்டு மண்ணை அள்ளி நான்குபக்கமும் தூற்றினான். அது அலையலையாக விழுவதைக் கண்டு நின்று நோக்கி மகிழ்ந்து “ஆடை” என்றபின் மீண்டும் அள்ளி வீசத்தொடங்கினான்.
மந்தன் தன்னருகே உருவான அழகிய செம்பட்டாடைகளின் மடிப்புகள் மேல் சுட்டு விரல் ஓட்டினான். அந்த மென்மையான ஏட்டுப்பரப்பில் தன் பெயரை எழுதி வைக்க முயன்றான். அப்போது அதன் உள்ளே அமைந்த புழுதி மெல்ல பறந்து அங்கு ஒரு சிறு குழி உருவாவதை கண்டான். ஆவலுற்று அக்குழியில் கைவைத்தபோது அக்குழியிலிருந்து மெல்லிய நீராவி காற்று ஒன்று எழுந்தது. வியந்து முகம் அணைத்து உதடுகுவித்து மெல்ல ஊதி அக்குழி மணணை விலக்க உள்ளே ஒரு முகம் எழுந்தது.
ஊழ்கத்தில் இருந்த ஒருவரின் மூச்சுக்காற்று என்று உணர்ந்தபோது மந்தன் வியந்து தன் சிறகுகளால் வீசி அப்புழுதி மூடலை விலக்கினான். உள்ளே அமர்ந்திருந்த அரசனை அறிந்து அவன் நெற்றிப்பொட்டில் கைவைத்து “விழித்தெழுக!” என்றான். விழிமலர்ந்த அவரிடம் “என் பெயர் மந்தன். நான் மாருதியின் மைந்தன். என்னால் பார்க்கப்படும் பேறு பெற்ற நீ யார்?” என்றான். “என் குடிகளைக் காக்க முடியாமலானபோது வடக்கிருந்து உயிர் துறக்கும் நோன்பு கொண்டுள்ளேன். நான் கஜ்ஜயந்தபுரியை ஆளும் அரசன் ரைவதகன்” என்றார் ரைவதகர்.
“உன் நகரோ, உன் குலமோ, உன் குடியோ அழிந்துபட்டதா?” என்றான் மந்தன். ரைவதகர் “என் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் என் குலமே, என் குடியே” என்றார். “அவர்களை காக்கும்பொருட்டு மணிமுடி சூடி வாள் ஏந்தியவன் நான்.” கண்கலுழ்ந்து நெஞ்சு விம்மி “அதில் நான் தோற்றபின் உயிர் துறப்பதே முறை” என்றார். மந்தன் என்ன நிகழ்ந்தது என சுற்றிப் பார்த்தான். அப்பால் காவலருடைய சிறு வாள் ஒன்று விழுந்து கிடந்தது. அதைச்சுட்டிக்காட்டி “என் உடைவாள் அது. அது உன்னிடம் இருக்கட்டும். நீ விழைகையில் அதை மும்முறை வீசு. அது எழுப்பும் சீறல் ஒலி கேட்டால் அங்கு நான் எழுவேன். இனி இம்மண்ணில் உன் முன் எவரும் படைக்கலன் ஏந்தி நிற்கப்போவதில்லை” என்றான்.
ரைவதகர் தலைவணங்கி “நல்வாழ்த்து பெற்றேன். என் குடிசிறக்க உங்கள் அருள் என்றென்றும் இருக்கட்டும்” என்றார். விழி திறந்தபோது தனக்கு முன்னால் பெரியதொரு வாள் போல் விழுந்துகிடந்த காற்றின் அலைவடிவத்தை கண்டார். எழுந்து அது எவ்வண்ணம் உருவாகியது என்று சுற்றி நோக்கினார். கனவென்றோ, தொல்நினைவென்றோ நிகழ்ந்தவை நெஞ்சில் நின்றன. பெருமூச்சுடன் காலை இழுத்து நடந்து வேறொரு மலைக்கு வந்தார். அங்கிருந்து நோக்கியதும்தான் அது மாபெரும் வாள் வடிவம் என அறிந்தார். தன் கையிலிருந்த வாளை மெல்ல வீசியபோது அந்த மாபெரும் மணல்வாள் எழுந்து சுழல்வதைக் கண்டு விம்மியபடி நிலத்தில் அமர்ந்தார்.
அருகிலிருந்த கமனபதம் என்னும் ஆயர்குடியை அவர் அடைந்தார். அங்கிருந்து கஜ்ஜயந்தபுரிக்கு அவரை கொண்டுசென்றனர். உடல்நலம் கொண்டதும் அவர் பிறிதொருவர் என தோன்றினார். அவர் காற்றுவெளியுடன் பேசத்தொடங்கியதை குஜ்ஜர்கள் உணர்ந்தனர். அவருக்கு தேவர்கள் காட்சிகொடுப்பதாக எண்ணத்தலைப்பட்டனர். அவர் பேராற்றல் மிக்கவரென தோன்றினார். குன்றுகள் போல் பேருடல் கொண்டு மானுடரை குனிந்து நோக்கும் பார்வை விழிகளில் எழுந்திருந்தது.
எல்லையில் அமைந்த தவணம் என்னும் சிற்றூரில் மீண்டும் கண்டர்களின் தாக்குதல் நிகழக்கூடும் என்று ஒற்றர் செய்தி வந்தது. தனது சிறு படையுடன் அங்கு சென்று காத்திருந்தார் ரைவதகர். கண்டர்களை கவரும்பொருட்டு எல்லையில் கொழுத்த கன்றுகளை உலாவவிட்டனர். எட்டு நாள் கழித்து குன்றில் மேல் அமர்ந்து காத்திருந்த அவரது ஒற்றனின் கண்ணில் தொலைவில் செம்புழுதி பறக்கும் தாழ்வரையில் குதிரைப் படை ஒன்று நதிநீரோட்டமென வருவது தெரிந்தது. அவன் குறுமுழவை ஒலிக்க கஜ்ஜர்கள் விற்களுடன் எழுந்தனர். ஆனால் எவரிடமும் துணிவிருக்கவில்லை. மகளிர் கதறி அழுதபடி மைந்தரை அணைத்துக்கொண்டனர். அனைத்து விழிகளும் ரைவதகரை நோக்கின. அவரோ அங்கில்லாதவர் போலிருந்தார்.
தொலைவில் வந்து கொண்டிருந்த புரவிநிரை சொடுக்கப்பட்ட சாட்டை ஒன்றின் நெளிவைப்போல் தெரிந்தது. சாட்டையின் கைப்பிடியென வந்துகொண்டிருந்தது தலைவனின் கொடியேந்திய முதற்புரவி. முந்தைய தாக்குதலுக்குப் பிறகு மேலும் இருமடங்கு வீரர்களுடன் தாக்கும் வழக்கத்தை கண்டர்கள் கொண்டிருந்தனர். அத்துடன் படைமுகப்பில் இருபக்கமும் பக்கவாட்டிலும் பின்நோக்கியும் புரவியில் அமர்ந்து சூழலை உற்றுநோக்கும் கண்காணிப்பாளர்களையும் அமர்த்தியிருந்தனர். அவர்களின் படை பறவைகளைப்போல ஆறுதிசைகளிலும் நோக்கு கொண்டிருந்தது.
அப்படையின் எண்ணிக்கையைப் பார்த்ததும் கஜ்ஜர்கள் அஞ்சி உடல் குறுக்கினர். அத்தனை விழிகளும் ரைவதகரையே நோக்கின. கண்மூடி நெற்றிப்பொட்டில் சித்தம் குவித்து நின்று “மந்தனே, இங்கு எழுந்தருள்க!” என்றார். இடையிலிருந்து அவன் அளித்த வாளை உருவி நீட்டினார். எதிரே இருந்த பாறையிலிருந்து புழுதியும் சருகும் எழுந்து அவர் மேல் பொழிந்தன. குழந்தைச் சிரிப்பொலியுடன் அவரைச் சூழ்ந்த மந்தன் “வந்துவிட்டேன்” என்றான். “என் குலத்தை காத்தருள்க!” என்றார். “உன் வாளில் நான் எழுகிறேன்” என்றான் மந்தன்.
“ஆம், ஆணை” என்றார் ரைவதகர். விழி திறந்தபோது செம்மண் குன்று ஒன்றின் மேலிருந்து அலையாக புழுதிக்காற்று இறங்கி வந்து படிவதை கண்டார். நெடுந்தூரம் வாளென வளைந்து கிடந்தது அது. தன் கையிலிருந்த குறுவாளை அவர் அசைத்தபோது அதுவும் அசைந்தது. தன் படைகளை நோக்கி. “அங்கு செல்வோம்” என்றார். “நாம் தப்பி ஓடுகிறோமா அரசே?” என்றார் படைத்தலைவர். “ஒரு முறை ஓடினால் பின் எங்கும் நிற்க இயலாது. இவர்கள் கஜ்ஜயந்தகக் குன்று வரை வந்துவிடுவார்கள்.”
ரைவதகர் “இல்லை, இன்று நான் இளமருத்தனின் வாளால் போரிடப்போகிறேன்” என்றார். வியந்து நின்ற படைகளிடம் தன்னை பின்தொடரும்படி கை வீசிவிட்டு, ரைவதகர் தன் புரவியில் ஏறி அந்தச் செம்புழுதி வாளின் விளிம்பு வழியாக புரவியில் விரைந்து சென்றார். மண்ணில் ஒரு மலர்மலைபோல் விழுந்த அவரது புரவிச்சுவடை நோக்கி தயங்கிவிட்டு, பின் அங்கிருந்து அவரைத் தொடர்ந்தார்கள். அவர்கள் அம்மண்மேட்டைக் கடந்து மறுபக்கம் சென்று, அங்கிருந்த உதிரிப் பாறைகளுக்கு அப்பால் மறைந்தனர்.
அவர்கள் இருந்த இடத்திற்கு மேல் பாறைகள் செறிந்த சரிவில் எழுந்த கண்டர்கள் அப்பாதச் சுவடுகளைக் கண்டு உரக்க நகைத்தபடி நின்றனர். அவர்களின் தலைவன் கை சுட்டி “அவர்களின் புரவிகளை உயிருடன் பிடியுங்கள். ஒரு தலைகூட கழுத்தில் நிற்கலாகாது” என்றபடி தன் புரவியைத் தட்டி தங்கள் குலக்கொடி பறக்க குன்றின் மணல்சரிவில் இறங்கி அச்சுவடுகளை தொடர்ந்தான். அவன் படையினர் அவனை தொடர்ந்தனர். இடியை எதிரொலிக்கும் முகில்குவைகளாயின மலைப்பாறைகள். அவர்களைச் சூழ்ந்திருந்த பாறைகளின் உச்சியில் இருந்து புழுதிகளும் சருகுகளும் பறந்து அவர்கள் மேல் விழுந்தன. அந்த செம்மண் வளைவை அவர்கள் கடப்பதற்குள் கடலில் எழுந்த பேரலைபோல் மணல்வரி வளைந்து எழுந்தது. அவர்கள் திரும்பி நோக்குவதற்குள் செம்முகில்போல் அவர்களை முற்றிலும் மூடி சூழ்ந்துகொண்டது. விழி இழந்து கடிவாளத்தை இழுத்து ஒருவரோடு ஒருவர் முட்டி கூச்சலிட்டபடி அவர்கள் சுழன்றனர்.
பெரும் சுழிபோல் அவர்களை சுற்றிச் சூழ்ந்து அலைக்கழித்தது புழுதிப் புயல். மூச்சடைத்து குதிரைகளின் கழுத்தில் முகம் புதைத்து அமர்ந்திருந்தனர். மேலும் மேலும் என புழுதி எழுந்துகொண்டே இருந்தது. அவர்கள் ஒருவரோடொருவர் முட்டி நிலையழிந்து மண்ணில் விழ புரவிகள் கனைத்தபடி அவர்களை மிதித்துத் துவைத்தன. தொலைவில் இருந்து ரைவதகர் தன் குறுவாளை சுழற்றிக்கொண்டிருந்தார். செம்புழுதிச் சுழலுக்குள் மின்னிய வாள் மின்னல்களையும், புரவி வால்களின் நெளிவையும் கண்டார். ஒன்றுடன் ஓன்று கலந்து ஒலித்த அலறல்களையும் உலோகமுட்டல்களையும் கேட்டார்.
“கொல்லுங்கள்” என்றபடி பாறையில் வில்லுடன் எழுந்து அப்புழுதிப் படலத்தை நோக்கி அம்புகளை எய்தார். இலக்கின்றி அவர்கள் விட்ட அம்புகள் அனைத்தும் பார்வையின்றி தவித்த கண்டர்களை தாக்கின. ஆரவாரங்கள் அனைத்தும் ஒழியும்வரை அவர்கள் அம்பெய்து கொண்டே இருந்தனர். பின்னர் செம்புழுதிச் சுழி உச்சி குவிந்து கூர்மைகொண்டது. குடுமிபோல் ஆகி வானில் எழுந்து அலைக்கழிந்து வடமேற்கு நோக்கி சரிந்து இழுபட்டு மறைந்தது. அதன் அகன்ற கீழ்வட்டம் மண்ணிலிருந்து எழுந்து வலைபோல வானில் தெரிந்து மெல்ல மறைந்தது.
செந்நிற இறகுகள் கொண்ட மாபெரும் கழுகுபோல் அப்புழுதிக் கூம்பு வானில் எழுந்து செம்மணல் பரப்பில் முகில்நிழல் போல் கறைபடியச் செய்தபடி சென்று மறைந்தது. நெடுந்தொலைவில் வளைந்து கீழ் இறங்கி அங்கு இருந்த முட்புதர் காட்டில் புழுதி மழையென பொழிந்து பரவி இலைகளை செம்மண் சில்லுகளென மாற்றியது. பாறைகளை செம்மண் திரையால் மூடியது. புதர்களை மூடிய செந்திரைக்குள் இருந்து கூர்முட்கள் வெளிவந்து சிலிர்த்தன. செம்புழுதி படிந்த சிறகுகளை உலைத்து எழுந்த பறவைகள் விடிகாலை என எண்ணி காற்றில் சுழன்று கூச்சலிட்டன.
அவர்கள் எச்சரிக்கையுடன் வில்லேந்தியபடி சென்று நோக்கினர். முற்றிலும் செம்புழுதித் திரையால் மூடப்பட்டிருந்த தரையில் ஒருவர்கூட எஞ்சாமல் அத்தனை கண்டர்களும் அம்பு பட்டு விழுந்துகிடந்தனர். புழுதிப் போர்வையை இழுத்துத் தள்ளி கால்களை உதைத்து துடித்தன புரவிகள். எச்சரிக்கையுடன் கைகளில் அம்புகளும் வாள்களும் ஏந்தி மெல்ல அணி சூழ்ந்தனர் குஜ்ஜர்கள். “ஒருவர்கூட எஞ்சவில்லை” என்றார் படைத்தலைவர். “ஒற்றைக்கையால் பாலைநிலம் அவர்களை நசுக்கி அழித்துவிட்டது.” ஒரு முதியவீரன் நடுங்கும் குரலில் “நம் அன்னை இந்நிலம். இக்காற்று நம் மூதாதையர்” என்றான்.
“என்ன நிகழ்ந்தது அரசே?” என்றார் குடித்தலைவர். “இப்பாலையின் தெய்வமான கைக்குழந்தை ஒன்றால் விளையாட்டுப் பாவையென ஆடப்பட்டு அழிந்தனர் இவர்கள்” என்றார் ரைவதகர். படைத்தலைவர் விழுந்துகிடந்த கண்டன் ஒருவனின் தலையை ஓங்கி உதைத்தார். “வேண்டாம். இவர்கள் எளிய மானுடர்கள். பசித்து வரும் ஓநாய்களும் உயிர் கொடுக்கும் ஆடும் இப்பெருங்களத்தில் இரு காய்கள் மட்டுமே” என்றார் ரைவதகர். செம்புழுதியில் குருதி ஊறிப்பரவி நனைந்த தடங்கள் தெரியத் தொடங்கின. முனகலுடன் துடித்துக் கொண்டிருந்த கண்டர்கள் ஒவ்வொருவராக மூச்செறிந்து உயிர் துறந்து சிலைத்தனர்.
“தாங்கள் அடைந்தது என்ன?” என்றார் படைத்தலைவர். “இப்பெரும் பாலையை ஆளும் மருத்தன் எனக்களித்த வாள் இது” என்றார் ரைவதகர். தன் வாளைத்தூக்கி “இனி எம்மை வெல்ல எவருமில்லை இப்புவியில்” என்றார். திகைத்து நோக்கி நின்ற படைவீரர் ஒரே தருணத்தில் குரலெழுப்பி “குஜ்ஜர்குலம் வாழ்க! கஜ்ஜயந்தம் வாழ்க!” என கூச்சலிட்டனர்.