அன்புள்ள ஜெ,
வாசக விடலை ஒருவர் [சிவராமன்] எழுதியிருக்கும் கடிதத்தை ஒரு சிறு எதிர்வினை கூட இல்லாமல் நீங்கள் வெளியிட்டிருப்பது ஏமாற்றமும் வருத்தமும் வேதனையும் அளிக்கிறது – பொதுவாக இது உங்களது பாணி அல்ல என்று நான் கருதுவதால்.
.”நண்பர்கள் சொன்னார்கள்” என்பது என்ன வகையான கருத்து? இவ்வளவு தூரம் நீட்டி முழக்கி கடிதம் எழுதும் ஆள், இணையத்தில் கொஞ்சம் தேடினாலே வெ.சா எங்கெங்கு என்ன எழுதியிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்குமே.. வெ.சா சொல்வனம், திண்ணை, தமிழ்ஹிந்து, வல்லமை, தமிழ்ஸ்டுடியோ, சிஃபி.காம் எனப் பற்பல இணைய தளங்களில் தன் வாழ்நாளின் இறுதிவரை தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார். அதுபோக, மின்தமிழ் போன்ற கூகிள் குழுமங்களிலும். 80 வயதுக்கு மேல் தள்ளாத முதுமையிலும் தொழில்நுட்பம் தரும் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தி உரையாடல்களில் ஈடுபட்டு வந்தவர் அவர்.
இதில் கணிசமான தளங்கள், சாதாரணமான பொழுதுபோக்கு, வணிக எழுத்துக்கள் உட்பட சகல விதமானவற்றையும் எந்த பாகுபாடும் இன்றி பதிப்பித்து வருபவை – இவற்றுக்கு நடுவில் தான் அவரது கட்டுரைகளும் வந்தன. உண்மையில், இதில் “இந்துத்துவ தளங்கள்” என்ற கறாரான அடைமொழிக்கு தமிழ்ஹிந்து மட்டுமே பொருந்தும்.. சரி, இருக்கட்டும். அப்போதும் ஒரு உண்மையான வாசகன் வெ.சா அங்கு என்ன எழுதியிருக்கிறார் என்று அல்லவா பார்க்க வேண்டும்?
அந்த தளத்தில் எழுதினார் என்பதை வைத்து “தனிப்பட்ட ரசனை சார்ந்து வரவேண்டுமே ஒழிய ஏதாவது அமைப்பின் குரலாக இருக்கக்கூடாது” என்று பொத்தாம் பொதுவாகப் பேசுவது எந்த மாதிரியான வாசக அறம்? இத்தகைய மனநிலை ஒரு உண்மையான இலக்கிய வாசகனுக்கு உகந்ததா என்ன? காலச்சுவடு பதிப்பதுக்கும் நடுநிலைக்கும் உள்ள தூரம் நன்கறிந்தது. அதைவைத்து அவர்கள் வெளியிட்ட சித்திர பாரதி, ஒரு புளியமரத்தின் கதை, பொய்த்தேவு, வாசவேஸ்வரம் போன்ற நூல்களையெல்லாம் தவிர்ப்பேன் என்பது போல இது.
இதோ வெ.சா தமிழ்ஹிந்து தளத்தில் எழுதிய கட்டுரைகள் – http://www.tamilhindu.com/author/vesa/ “தலித்துகளும் தமிழ் இலக்கியமும்” உட்பட பல முக்கியமான கட்டுரைகள் உள்ளது. இதில் எந்தக் கட்டுரையில் எந்த சித்தாந்தத்தின் அமைப்பின் குரல் ஒலிக்கிறது என்று அந்த வாசகர் கண்டுபிடிக்கட்டும். வெ.சா தனது வாழ்நாளில் இறுதியாக எழுதிய சே.ராமானுஜம் பற்றிய கட்டுரையும் இதில் உள்ளது.
தமிழின் மகத்தான கலை இலக்கிய மேதை, விமர்சன பிதாமகர் வெ.சா. அவரது மறைவின் பின்னணியில், அநியாயமாக அவரை முத்திரை குத்தும் அவசரம் அந்தக் கடிதத்தில் தெரிகிறது. இது அருவருப்பானது, கண்டனத்திற்குரியது. அதை விட அதிக வருத்தம் எதுவும் சொல்லாமல் மௌனமாக அதை நீங்கள் வெளியிட்டது.
அன்புடன்,
ஜடாயு
அக்கடிதத்திற்கு நான் எதிர்வினையாற்ற வேண்டியதில்லை. வாசகர்கடிதங்கள் அனைத்துக்கும் நான் எதிர்வினையாற்றுவதுமில்லை. என் தரப்பை தெளிவாகவே எழுதியிருக்கிறேன். வெங்கட் சாமிநாதனை முற்றாக வாசித்து புரிந்துகொண்டு விவாதித்து மதிப்பிட்டு எழுதப்பட்ட கட்டுரைகள் அவை எல்லாவகையான எதிர்வினைகளுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்பதே என் எண்ணம். ஆகவே அக்கடிதத்தை வெளியிட்டேன்.
எதிர்வினை ஆற்றவேண்டியது உங்கள் கடிதத்திற்குத்தான். வெங்கட் சாமிநாதன் தமிழின் சிற்றிதழ் மரபில் வந்தவர். கறாரான விமர்சனம் வழியாகவே உருவாகி வந்தது அம்மரபு. விமர்சனம் இல்லாமல் அது நீடிக்கவும் முடியாது. விமர்சனம் என்பது எத்தனை மூர்க்கமாக நிகழ்ந்தாலும்சரி அது உண்மையில் எதிர்தரப்பை நிராகரிப்பதில்லை. எதிர்தரப்பை உள்ளிழுத்துச் செழுமைகொள்ளவே செய்கிறது
நான் எழுதிய அனைத்து அஞ்சலிக் கட்டுரைகளிலும் அந்த ஆளுமையை மிகக்கறாராக மதிப்பிடவே முயன்றிருக்கிறேன். சுந்தர ராமசாமி, கமலா தாஸ் முதல் ஜெயகாந்தன் வரை. அவர்களின் சாதனைகளையும் சரிவுகளையும் என் நோக்கில் முன்வைத்துத்தான் அஞ்சலிக்கட்டுரையை எழுதுவேன்.
ஏனென்றால் எழுத்தாளன் இறந்ததும் அவனுடைய ஒட்டுமொத்த எழுத்துக்களும் இணைந்து ஒற்றைபிரதியாக ஆகிவிடுகின்றன. அவனை முழுமையாக அணுகுவதற்கான தொடக்கப்புள்ளி அது. எழுத்தாளன் இறந்ததும் பிறரைப்போல இரங்கல்குறிப்புகளுடன் வரலாற்றுக்கு அனுப்பப்படுவதில்லை. மறுபரிசீலனைக்கே ஆளாகிறான்.
[வேதசகாயகுமார்]
பலசமயம் பொதுவாசகர் இந்த கறாரான மதிப்பீடுகளைப்பற்றி அதிர்ச்சியோ வருத்தமோ அடைகிறார்கள். ஒருவர் இறந்ததும் அவரை உணர்ச்சிகரமாக ஏத்துவது நம் மரபு. அவரை அடைமொழிகளுடன் புகழ்வது, அவர் இழப்பை பெரிதாக்குவது , அவருடனான தனிப்பட்ட உறவையும் துயரையும் விதந்துசொல்வது வழக்கம்
சிற்றிதழ்கள் வழியாக உருவாகி வந்துள்ள நவீன இலக்கியத்தில் இம்மனநிலைகளுக்கு இடமில்லை. சுந்தர ராமசாமி க.நா.சு குறித்து எழுதியதையோ அல்லது நான் சுந்தர ராமசாமி பற்றி எழுதியதையோ நீங்கள் பார்க்கலாம்
[சிவத்தம்பி]
தமிழின் மகத்தான கலை இலக்கிய மேதை என்றெல்லாம் வெங்கட் சாமிநாதனை அடையாளப்படுத்தி நீங்கள் எடுக்கும் நிலைபாடுகள் சிற்றிதழ்மனநிலையைச் சேர்ந்தவை அல்ல. அத்தகைய உணர்வுநிலைகள் விவாதங்களை மறுப்பவை. மறுதரப்பே ஒலிக்காத முழுமையான புகழ்மாலைகள் வெங்கட் சாமிநாதன் போன்ற விமர்சகருக்கு எழுவதும் சாத்தியமல்ல
உங்கள் ஆவேச நிலைபாடுகள்தான் ஒரு குறிப்பிட்ட கருத்துத் தரப்பின் குரலாக அவரை ஆக்கி உணர்ச்சிகரமாகத் தூக்கிப்பிடிக்கும் தன்மை கொண்டவை. எதிர்தரப்புகளை விடலை என எளிதாக முத்திரைகுத்தக்கூடியவை. வெங்கட் சாமிநாதனை அவரது சாதனைகளை மிக எளிதாக மறைத்து ஓர் எளிய தரப்பாக மாற்றுபவை இவைதான்.
எழுதவந்த காலம் முதல் சாமிநாதனின் கருத்துக்களுக்கு மிகமிக வலுவான எதிர்ப்புக்குரல் இருந்துள்ளது. அந்தத் தரப்பு சிற்றிதழ்ச்சூழலில் மிக முக்கியமானது. பொதுவாக இத்தகைய கருத்துக்களை அவற்றின் மறுதரப்பையும் சேர்த்து ஒரு விவாதமாகப்புரிந்துகொள்வதே உகந்தது. இதை எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்
நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். கைலாசபதி,சிவத்தம்பி, நா.வானமாமலை, நிர்மலா நித்யானந்தம், தோத்தாத்ரி, பிரமிள், எம்.ஏ.நுஃமான் என நீளும் ஒரு பெரிய மறுதரப்பே உண்டு. வெங்கட் சாமிநாதனின் தரப்பு எத்தனை முக்கியமானதோ அதற்கிணையானது அந்த எதிர்தரப்பு. சாமிநாதனின் தரப்பையே நான் சார்ந்திருக்கிறேன், அதற்காக இத்தனை ஆண்டுகளாக பேசிவந்திருக்கிறேன். ஆனால் மறுதரப்பை எப்போதும் எதிர்முகமாகச் சார்ந்தும் இருக்கிறேன்
அந்த மறுதரப்பையும் சேர்த்தே சாமிநாதனைப் புரிந்துகொள்ளவேண்டும். அதை என் விமர்சனக்கட்டுரைகள் அனைத்திலும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆகவே அவரைப்பற்றி எழும் ஐயங்கள் நிராகரிப்புகள் எல்லாமே முக்கியமானவை. அருவருப்பு கண்டனம் அல்ல அதன் வழி. விவாதம் மட்டுமே. நான் எவரையும் எதையும் வாதிட்டுத் தூக்கி நிறுத்தும் பொறுப்பு உடையவன் அல்ல. முடிந்தவரை கறாராக வரையறுத்துப் புரிந்துகொள்ளவே முயல்கிறேன்.
வெங்கட் சாமிநாதனை நிராகரித்த வேதசகாய குமார் போன்றவர்கள் அவரிடம் வந்திருக்கிறார்கள். அவரை ஏற்றுக்கொண்ட ராஜ் கௌதமன் போன்றவர்கள் முழுநிராகரிப்பை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். இந்த உலகின் விவாதம் சார்ந்த அறிதல்முறை இது. உங்கள் உணர்வுநிலைகளுக்கு இதில் பங்கில்லை. ஆகவே தயவுசெய்து கொஞ்சம் விலகியிருங்கள். அவ்வளவே நான் சொல்வதற்கிருக்கிறது
ஜெ