பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதிய இக்குறிப்பை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார். இது ஒரு சிறுகதைபோல உள்ளது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.
அ.மார்க்ஸின் தமிழ்நடை எனக்குப் பிடித்தமானது. இதையும் மிகச்சுருக்கமாக, மிகையுணர்ச்சிகள் விளையாமல் எழுதியிருக்கிறார்.
மினிமலிசம் [குறைத்துரைத்தல்முறை] இத்தகைய தீவிரமான உண்மைநிகழ்வுகளுக்குத்தான் பொருத்தமானது. ஏனென்றால் நிகழ்வுகளின் அடுக்குகளுக்குள் உண்மையான அனல் உள்ளது.
இந்த உண்மை நிகழ்வில் அந்தக்குடும்பம் கொண்டுள்ள ஒரு தலைமுறைக்காலம் முழுக்க நீண்டுவரும் தேடல், அவ்விளைஞருக்கு என்ன ஆகியிருக்கும் என்னும் ஊகம். அவ்வுணர்வுகளை தாங்கும் மறுமுனையாக உள்ள அ.மார்க்ஸ் ஆகிய எல்லா தரப்புகளிலுமே நெடுந்தூரம் செல்ல வழிகள் உள்ளுறைந்துள்ளன.
இத்தகைய உண்மையான அனுபவங்கள், தீவிரமான அனுபவங்களை குறைத்துரைத்தல் முறைப்படி எழுதும்போதே ஆழமான உணர்வுநிலைகள் உருவாகின்றன. அன்றாடநிகழ்வுகள், உணர்வுச்செறிவற்ற நிகழ்வுகள் ஒருபோதும் குறைத்துரைத்தல் முறைப்படி எழுதப்படலாகாது.
சமீபகாலமாக ஃபேஸ்புக் வந்தபின் சரசரவென்று எதையாவது குறித்திடும் எழுத்துமுறை அனைவருக்கும் கைவந்துள்ளது . அப்படியே நீட்டி கதையோ நாவலோ ஆக்கிவிடுகிறார்கள். அத்தகைய எழுத்துக்கள்தான் தட்டையாக உள்ளன. நுண்சித்தரிப்பாக அமையாமல், நிகர்வாழ்வனுபவத்தை அளிக்காமல் சலிப்பூட்டுகின்றன.
குறைத்துரைத்தல்முறை என்பது எத்தனை கூறினாலும் குறையாத உணர்வுகள் செறிந்த அனுபவங்களுக்கு மட்டுமே உரியது. அதாவது அது நீரல்ல, அனல். அள்ள அள்ளக் குறையாது கூடும் தன்மை கொண்டது
நானும் அவரும்: ஒரு அற்புத அனுபவம்” அ.மார்க்ஸ்
சுமார் ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும். ஆனந்த விகடனில் எனது விரிவான நேர்காணல் ஒன்று வெளிவந்திருந்தது. படங்களுடன். எனது நக்சல்பாரி இயக்க அனுபவங்கள் குறித்த ரொம்பவும் ரொமாண்டிக்கான நேர்காணல் அது. நான் சொன்னதைக் காட்டிலும் ரொமாண்டிக்காக அதைச் செய்திருந்தனர் நண்பர்கள் அருள் எழிலனும் தளவாய் சுந்தரமும்.
இரண்டு நாட்களுக்குப் பின் எனது இயற்பியல் துறைத்தலைவர் டாக்டர் பாண்டி என்னைச் சந்தித்தபோது, “சார் உங்களைப் பத்தி யாரோ ஒருவர் கரூரிலிருந்து ரொம்ப விசாரிச்சாங்க. துருவித் துருவி விசாரிச்சாங்க” என்றார். நான் அப்போது சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராகப் பணியில் இருந்தேன்.
நான் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாராவது உளவுத் துறையினராக இருக்கலாம் என நினைத்துக் கொண்டேன். ஆனாலும் விசாரித்த பெண்மணி என் பிறந்த தேதி, மதம் முதலான விவரங்களை எல்லாம் விசாாித்தார்கள் என்பது வியப்பாக இருந்தது. சிலநாட்களுக்குப் பின் தளவாயைச் சந்தித்தபோது அவரும் இப்படிச் சொன்னார். யாரோ கரூரிலிருந்து ஆனந்தவிகடன் ஆபீசுக்குப் போன் செய்து என் விவரங்கள், போன் நம்பர், கல்லூரி, துறை எல்லாம் கேட்டதாகச் சொன்னார்.
சில நாட்களுக்குப் பின் அந்தப் பெண்மணியே என்னிடம் பேசினார். மிக்க மரியாதையுடன் அந்த நேர்காணல் குறித்துப் பேசியவர் கொஞ்சம் கொஞ்சமாக நான் பி றந்த ஊர், என் குடும்பம், நான் படித்த பள்ளி, என் உடன் பிறப்புகள் குறித்தெல்லாம் விசாரித்து முடித்தார். நானும் பொறுமையாக எல்லாவற்றையும் சொன்னேன்.
பிறகு அவர் அடிக்கடிப் பேசுவார். பேச்சு முதலில் அப்போது வெளிவந்த எனது கட்டுரையில் தொடங்கி இறுதியில் சொந்த விசாரிப்புகளில் முடியும் அல்லது பொதுவாக நக்சல்பாரி இயக்கம் தொடர்பான உசாவலாகத் தொடங்கி என்னைப் பற்றிய விசாரிப்புகளாக முடியும்.
ஒருமுறை நான் ஒரு பத்து நாட்கள் ஏதோ ஒரு வெளிநாட்டுக்குச் சென்றிருந்தேன். என் செல் போன் இணைப்பு நிறுத்தப்பட்டிருந்தது. நான் போகுமுன் அந்தக் குடும்பத்தாரிடம் சொல்லிச் செல்லவில்லை. அப்போது நான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.ஊருக்குத் திரும்பியவுடன்தான் அறிந்தேன். அவர்கள் பதறிப்போய் பலருக்கும் போன் செய்து விசாரிக்க முனைந்திருக்கின்றனர், நான் ஓய்வு பெற்றுவிட்டதால் எனது துறைத் தலைவர் பாண்டியாலும் விவரம் சொல்ல இயலவில்லை. பிறகு கல்லூரியில் எனது நண்பராக இருந்த முனைவர் மணிவண்ணனிடம் எல்லாம் விசாரித்துள்ளனர். கேள்விப்பட்ட நான், பிறகு தொடர்பு கொண்டு என் பயண விவரங்களைச் சொன்னேன்.
அதன்பின் எங்கு சென்றாலும் அவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் செல்வேன்.
இந்தப் பின்னணியில்தான் ஒரு நாள் நாமக்கல் மாவட்டம் கந்தசாமிக் கண்டர் கல்லூரிக்கு ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளச் சென்றேன். அதைத் தெரிந்த அந்தப் பெண்மணி அவரது சகோதரர்கள் இருவரை அங்கு அனுப்பியிருந்தார். அவர்கள் வந்து என்னை வேலாயுதம்பாளையத்தில் உள்ள அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அவர்களது குடும்பத்தினர் அனைவரும் அங்கு கூடி இருந்தனர். சாப்பிட்டு விட்டுப் பேசிக் கொண்டிருந்தபோதுதான் அந்தப் பாசமிகு குடும்பத்தின் தேடுதலின் பின்னணியிலிருந்த சோகக் கதை விளங்கியது.
1951 ஜனவரியில் பிறந்தவர் தோழர் அ. ருக்மாங்கதன். பள்ளியில் படிக்கும்போது முதல் மாணவர். மாணவர் சங்கத் தலைவர். சிறந்த பேச்சாளர். ஸ்போர்ட்ஸ்மன். பள்ளிப் பிரச்சினைகளில் மாணவர்களைத் திரட்டிப் போராடுபவர். அந்த ஊரில் அனைவருக்கும் தெரிந்த, மதிக்கப்பட்ட இளைஞர்.
1968ல் திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரியில் பி.யூ.சி முடித்துள்ளார். பின் கோவை சி.ஐ.டி கல்லூரியில் கெமிகல் எஞ்சினீரிங் படித்துக் கொண்டிருந்தபோது அன்று பெரும் நம்பிக்கைகளுடன் மேலெழுந்து வந்த நக்சல்பாரி இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 1972. பி.ஈ இறுதி ஆண்டு படிக்கும் போது அவர் தலைமறைவானார்.
அதற்குப்பின் இந்த 43 ஆண்டுகளில் அவர் பற்றி அந்தக் குடும்பத்துக்கு இன்றுவரை ஏதும் தெரியாது.
ஒருமுறை ஒரு பேருந்தில் ஏறும்போது அவரது அப்பா அவரைப் பார்த்துவிட்டு “ருக்மாங்கதா” எனப் பதறிக் கூவியவுடன் திரும்பிப் பார்த்த அவர் நகர்ந்த பஸ்சிலிருந்து குதித்து ஓடி விட்டதாகச் சொல்கிறார்கள்.
தோழர் ருக்மாங்கதனுக்கு இரண்டு மூத்த சகோதரிகள். அவர்களில் இளையவர்தான் படத்தில் என்னருகே வெள்ளை உடையில் அமர்ந்திருப்பவர். மூத்த சகோதரிக்கு வாசுகி என ஒரு மகள். கார்த்திகேயன் என்றொரு மகன். வாசுகிதான் என்னைப் பற்றிய விவரங்களைச் சேகரித்தவர். என்னிடம் தொடர்ந்து பேசியவர். இரண்டாவது சகோதரிக்கு இரண்டு மகன்கள், பார்த்திபன் மற்றும் குகன்.
தோழர் ருக்மாங்கதன் 1951 தொடக்கத்தில் பிறந்தவர். நான் 1949 இறுதியில் பிறந்தவன். கிட்டத்தட்ட சம வயது. மூன்றாண்டுகளுக்கு முன் நான் இரண்டாம் முறை அவர்கள் வீட்டிற்குச் சென்றபோது ருக்மாங்கதனின் புகைப்படம் ஒன்றைக் காட்டினார்கள். கருப்பு வெள்ளைப் புகைப்படம். அப்போது அவருக்கு வயது சுமார் 20 வயது. அந்த வயதில் நானும் அப்படித்தான், அவரைப் போலத்தான் இருந்தேன்.
நான் அவரில்லை என அவர்களை முழுமையாக அறிய வைப்பதற்கு ரொம்ப நாளாகியது.
இப்போது அவர்கள் அதை உணர்ந்து விட்டனர். இருந்தாலும் அவர்கள் என்னில் அவர்களின் ருக்மாங்கதனைக் காண விரும்புகின்றனர்.
ஆகா, நான் பாக்கியம் செய்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் ருக்மாங்கதன் அளவிற்கு எனக்குத் தகுதியில்லை அம்மா என மனதுக்குள் சொல்லிக் கொள்வேன்.
ஒருமுறை பார்த்திபன் போன் செய்தார். பேசியவர் அம்மாவிடம் பேசுங்கள் என போனைக் கொடுத்தார். “அம்மா, எப்டி இருக்கீங்க?” எனப் பேச்சைத் தொடங்கினேன். “அக்கான்னு சொல்லுப்பா..” என்றார்கள். “அக்கா..” என்றபோது என் நா தழுதழுத்தது. கண்கள் கலங்கின.
அவர்களின் பிள்ளைகள் என்னை மாமா என்றுதான் கூப்பிடுகிறார்கள்.
இன்று இந்தப் புகைப்படங்களை எடுக்கும்போது என் மூத்த சகோதரி புகைப்படம் எடுக்கப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். சொன்ன காரணம் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு அழுகை வந்துவிடுமாம்.
சென்ற வாரம் நான் திருவனந்தபுரத்தில் இருந்தபோது அவர்களிடமிருந்து போன் வந்தது. வாசுகியின் கணவர் மாரடைப்பில் இறந்து போன துயரச் செய்தி கிடைத்தது.
இன்றுதான் அவர்களின் இல்லம் செல்ல வாய்த்தது.என் வருகை அறிந்து எல்லோரும் மூத்த சகோதரியின் வீட்டில் கூடியிருந்தனர்.
கனத்த மனத்துடன் ஊருக்குத் திரும்பும் போது பேருந்துப் பயணத்தின் ஊடே இந்த அன்பு வரலாற்றைப் பதிவு செய்கிறேன்..