ஜெ
வெங்கட் சாமிநாதனின் இறப்பைப்பற்றி தமிழ் இந்து வெளியிட்ட செய்தியை பாராட்டியிருந்தீர்கள். நஞ்சைக்கக்கும் விதத்தில் ஆங்கில இந்து வெளியிட்ட செய்தியைப் பார்த்தீர்களா? அதைப்பற்றிய உங்கள் எண்ணம் என்ன?
ராஜாராம்
அன்புள்ள ராஜாராம்
நான் ஆங்கில இந்து வாசிப்பதில்லை. டைம்ஸ் ஆஃப் இந்தியாதான். [எனக்குச் செய்திகளில் கொஞ்சம் நடுநிலைமை இருப்பது பிடிக்கும்] ஆகவே உங்கள் கடிதம் கண்ட பின்னரே இந்துவின் செய்தியை பார்த்தேன்.
வெங்கட் சாமிநாதன் பற்றிய இந்துவின் செய்திக் குறிப்பில் எந்தப்பிழையும் இருப்பதுபோலத் தெரியவில்லை. தமிழ் இந்து வெளியிட்டது தலையங்கம். அது அவர்களின் தரப்பு. ஆங்கில இந்து வெளியிட்டது செய்தி. அவர்களின் ஒரு நிருபரின் பெயரால் அது வெளியாகியிருக்கிறது. [பி.கோலப்பன்]
தமிழ்க் கருத்துச்சூழலில் உள்ள வேறுபட்ட தரப்புகளைக் கேட்டு வெளியிட்டிருக்கிறார்கள். அது இயல்பானதே. குறிப்பாக கடுமையான விவாதங்களை உருவாக்கிய ஓரு விமர்சகரைப்பற்றி அவ்வாறு பலதரப்பையும் கேட்டு எழுதுவதில் பிழையில்லை. ஏனென்றால் அவர் உருவாக்கிய விவாதங்கள்தான் தொடரவேண்டும்.
வெங்கட் சாமிநாதனின் தரப்பாக சாமிநாதனுக்காக யாத்ரா இதழை நடத்தியவரும் சாமிநாதனால் பாதிப்பு கொண்டு நாட்டாரியலாய்வில் நுழைந்தவருமான அ.கா.பெருமாள், சாமிநாதனின் படைப்புகளை அதிகமாக வெளியிட்ட சொல்வனம் இணையதளத்தின் ஆசிரியரான சேதுபதி அருணாச்சலம் ஆகியோரின் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இதில் சேதுபதி அருணாச்சலத்தால் அவரது இலக்கியப் பங்களிப்பைப்பற்றி குறிப்பாக ஒன்றும் சொல்லமுடியவில்லை. அவரது விமர்சனங்களை அவர் வாசித்திருப்பதாகத் தெரியவில்லை.
மறுதரப்பாக ரவிக்குமாரின் தரப்பு கோரப்பட்டிருக்கிறது. ரவிக்குமார் சாமிநாதன் மேல் முன்வைக்கும் விமர்சனம் இடதுசாரிகளிடம் எப்போதும் உள்ளதுதான்.கைலாசபதி,சிவத்தம்பி, நா.வானமாமலை, நிர்மலா நித்யானந்தம், தோத்தாத்ரி, எம்.ஏ.நுஃமான் என நீளும் ஒரு வலுவான எதிர்த்தரப்பின் குரல் அது
ரவிக்குமார் சாமிநாதனை படித்து எதிர்விமர்சனமும் எழுதிவந்தவர். நான் எழுதி, வெங்கட் சாமிநாதன் இறந்தபோது மறுபிரசுரம் செய்யப்பட்ட கட்டுரையில்கூட ரவிக்குமார் சொல்லும் விமர்சனங்கள் என் கோணத்தில் சுட்டப்பட்டிருக்கின்றன.
தமிழின் பெருமைமிக்க செவ்வியல் மரபை சாமிநாதன் பொருட்படுத்தவில்லை. சங்க இலக்கியத்தையும் கம்பராமாயணத்தையும் கூட. தமிழ் இலக்கிய- பண்பாட்டுச்சூழலை ஒரு பாலைவனமாகவே அவர் உருவகித்தார். ஆகவே நவீன இலக்கியத்தை அவர் பாரதி என்னும் அந்தரப்புள்ளியிலிருந்து தொடங்குகிறார். பாரதியிலிருந்து தொடங்கி உ.வே.சமிநாதய்யர், மௌனி லா.சரா, தி.ஜானகிராமன் என ஒருசில ‘ஒளிப்புள்ளிகளை’ மட்டுமே சுட்டிக்காட்டுகிறார்.அதை ரவிக்குமார் விமர்சிக்கிறார்
சாமிநாதனின் பார்வை படைப்புகளைச் சார்ந்தது அல்ல. அவர் படைப்பாளியைத்தான் எப்போதுமே பார்க்கிறார். படைப்பாளியின் தனிப்பட்ட நேர்மை முக்கியமானது, அது அவர்களைப்பற்றிய செய்திகள் வழியாக தனக்கு நிறைவூட்டும்படி தெரியவந்திருக்கவேண்டும் என நினைக்கிறார். கணிசமான படைப்பாளிகளை நேர்மைக்குறைவானவர்கள் என அவர் முத்திரையிட்டிருக்கிறார். இது விமர்சன அணுகுமுறை அல்ல என்பது என் எண்ணம்
அவர் படைப்பாளியின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக அவரது புனைவுலகை கருதுபவர்.ஒரு படைப்பாளி அவருக்கு பிடிக்காதவர் என்றால் அவரது எந்தப்படைப்பையும் அவர் பொருட்படுத்துவதில்லை. இதை அவரது விமர்சனங்களில் காணலாம். ஒட்டுமொத்தமான மூர்க்கமான நிராகரிப்பையே மேற்கொள்வார். விவாதங்களை உருவாக்கிய அவரால் எதிர்த்தரப்பை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது.கடும் சினம் கொள்வார்.
உதாரணமாக அசோகமித்திரன் அவருக்கு ஒவ்வாதவர். எப்போதும் எந்நிலையிலும் அசோகமித்திரனை அவர் கேலியாக நிராகரித்தே பேசியிருக்கிறார். அசோகமித்திரனை எனக்குப்பிடிக்கும் என்பதனால் நான் எப்போதெல்லாம் வெங்கட் சாமிநாதனைச் சந்தித்தேனோ அப்போதெல்லாம் முதலிரு சொற்றொடர்களிலேயே அசோகமித்திரனை கடுமையாக நிராகரித்துப்பேசத் தொடங்கிவிடுவார். நான் எதையுமே எதிர்வாதமாக வைக்கமுடியாது. புன்னகையுடன் பேசாமலிருந்து விடுவேன்.
ஞானக்கூத்தன்,சா.கந்தசாமி என அவரால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டவர்கள் எல்லாருமே ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டவர்கள்தான். ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்படும் செய்தியை அவரிடம் சொன்னதே நான் அவரிடம் கடைசியாகப்பேசியது. மிகக்கடுமையாக வெ.சா ஞானக்கூத்தனை நிராகரித்துப்பேசியதை நினைவுறுகிறேன்
வெங்கட் சாமிநாதன் விமர்சனத்துக்குரிய மொழிநடையை இறுதிவரை உருவாக்கிக்கொள்ளவே இல்லை. பலதிசைகளிலாக பிரிந்துசெல்லும் கட்டற்ற தனிப்பேச்சு போலிருக்கும் அவரது கட்டுரைகள் அவ்வப்போது திசைதிரும்பி மிகக்கடுமையாக அவரது கசப்புகளையும் விமர்சனங்களையும் முன்வைப்பவை. அந்த நிதானமின்மை காரணமாக அவரை எதிர்தரப்பினர் வசைபாடுபவர் என அடையாளப்படுத்தினர்.
இவை அவரது குறைபாடுகள். ஆனால் வெங்கட் சாமிநாதனின் சாதனைகள் தமிழுக்கு மிகமுக்கியமானவை. நான் எப்போதுமே அவற்றைச் சுட்டிக்காட்டுபவன்.
1. அவர் நவீனத் தமிழிலக்கியத்திற்கு ஓவியம், சினிமா, நாட்டார்கலைகள் மற்றும் கோயில்மரபுகள் போன்றவற்றுடனான உறவை பேசிப்பேசி உருவாக்கியவர். அவ்வகையில் ஒரு முழுமையான கலைநோக்குக்காக வாதிட்டவர்
2 இலக்கியம் தனிப்பட்ட முறையிலான வளர்ச்சியை அடையமுடியாது. அன்னியத்தூண்டல்கள் மேலான இலக்கியத்தை உருவாக்கமுடியாது, அதற்கு மரபும் சூழலும் முக்கியம் என வாதிட்டவர்.
3 இலக்கியத்தில் தன்னிச்சையான அகஎழுச்சியின் இடத்தை முன்னிறுத்தியவர். டிரான்ஸ் என அவர் குறிப்பிட்ட கட்டற்ற பித்துநிலையே உன்னதமான கலையின் பிறப்பிடம் என்றவர்
4 இலக்கியம் ஒரு கலை என்பதை எப்போதும் வலியுறுத்தியவர். அதற்குக் கருத்தியல்களுடன் உறவில்லை என்று வாதிட்டவர்.
தமிழிலக்கியம் வெறும் அரசியல் பிரச்சாரமாக, கேளிக்கையாக சுருங்கிவிடகூடிய கெடுபிடி நிலை இருந்த ஒரு காலகட்டத்தில் அவர் அதை மீட்டு கலையைநோக்கி செலுத்தினார். அது ஒரு தனிப்பட்ட சாதனையேதான்.
அதேசமயம் அவரது விமர்சன நோக்கின் எல்லைகளும் முக்கியமானவை. அவர் நவீனப் பேரிலக்கியங்களை வாசித்தமைக்கான தடையங்கள் அவரது விமர்சனத்தில் இல்லை. உலகு கொண்டாடிய பேரிலக்கியவாதிகளான தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, ஜாய்ஸ், தாமஸ் மன் போன்றவர்களைப்பற்றியெல்லாம் அவர் பொருட்படுத்தி ஏதும் எழுதவில்லை.
இந்தியப்பேரிலக்கியவாதிகளைக்கூட அவர் வாசித்தமைக்கு ஆதாரங்கள் இல்லை. தாராசங்கர் பானர்ஜி, மாணிக் பந்தியோபாத்யாய, சிவராம காரந்த் போன்றவர்களை அவர் அணுகி அறிந்திருக்கவில்லை. ஆகவேதான் மோகமுள் இந்தியாவின் மிகச்சிறந்த நாவல் என அவரால் எழுதமுடிந்தது.
ரசனை ரீதியாக அவருக்குச் செவ்வியல் பிடிகிடைக்கவில்லை. செவ்வியலின் நிதானமும் சமநிலையும் அவருக்குச் சலிப்பூட்டின. செவ்வியல்கலை என்பது ஒரு தொழில்நுட்பம் மட்டுமே என்னும் எண்ணம் இருந்தது.கற்பனாவாதத்தையே அவர் இலக்கியமாகக் கொண்டார். நாட்டாரியலில் உள்ள கட்டற்ற வேகம் அவரைக் கவர்ந்தது.
வெங்கட் சாமிநாதன் ஒரு விமர்சகர். விவாதங்களை உருவாக்கியவர். அவரை முன்வைத்து விவாதங்களை முன்னெடுப்பதே மிகச்சிறநத அஞ்சலியாக அமையும். விமர்சன அணுகுமுறையே வெங்கட் சாமிநாதன் உருவாக்கிய சிற்றிதழ்சார்ந்த இலக்கியமரபு இதுவரை பேணி முன்னெடுத்த மனநிலையாகும். வெறும் கண்ணீரஞ்சலிகளுக்கு இங்கே இடமில்லை.
தமிழ் ஹிந்து வெளியிட்டது ஓர் அஞ்சலி. ஆங்கில இந்து வெளியிட்டது தமிழில் சாமிநாதன் எப்படிப் பார்க்கப்படுகிறார் என்னும் செய்தி. இரண்டுமே முக்கியமானவைதான்.
ஜெ