அன்புள்ள ஜெயமோகன்,
அ.மார்க்ஸ் தீராநதி இதழில் உங்கள் ‘எனது இந்தியா’ கட்டுரைக்கு எழுதியிருக்கும் மறுப்பை படித்தீர்களா?
கீழ்க்கண்ட சுட்டியை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன். ரவிச்ரினிவாஸ் எழுதியது
http://www.ravisrinivas.blogspot.com/
சிவா குமாரசாமி
அன்புள்ள சிவா
அ.மார்க்ஸ் குறித்து பல வருடங்களுக்கு முன் எனக்கொரு எண்ணம் இருந்தது, அவர் நிறைய படிக்கிறார் என்று. இப்போது அவரால் பூசல் சார்ந்த கட்டுரைகளுக்கு அப்பால் ஆழமாக எதையும் படிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாதென்று எண்ணுகிறேன். அவரது இலக்கிய ரசனை பற்றி வேடிக்கையான ஒரு எண்ணம் ஆரம்பம் முதல் இருந்தது. அவரது அரசியல் கட்டுரைகளை சரிபார்க்குமளவுக்கு நான் அரசியலை அலசி ஆராய்ந்து படிப்பவன் அல்ல. ஆனால் நான் அறிந்த இலக்கியக் கோட்பாட்டு விஷயங்களில் அவர் எழுதியிருப்பதைப் பார்க்கையில் அவருக்கு ஏதாவது புரிகிறதா என்றே எனக்கு ஐய்மாக இருக்கிறது.
கடந்த சில வருடங்களாக அ.மார்க்ஸ் செய்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாத ஆதரவு– இந்திய எதிர்ப்பு அரசியல் அப்பட்டமான ஒரு கூலித்தொழில். அதில் எந்த விதமான அடிப்படை நேர்மையையும் அவரிடம் எதிர்பார்க்க இயலாது. அவர் மறைமுகமாகச் சார்ந்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கொடுக்கும் துண்டுப்பிரசுரங்களுக்கும் அவரைப்போன்றவர்கள் எழுதும் ஒருபக்கம் சார்ந்த கட்டுரைகளுக்கும் அப்பால் அவர் எதையுமே படிப்பதில்லை. அவரது கருத்துக்கள் இவற்றிலிருந்து பெறப்பட்டவை. நாளிதழ்களை வாசிப்பவர்களுக்கு சாதாரணமாக இவற்றின் உண்மைநிலை தெரியும். ஆனால் தன் கருத்துக்கள் ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டால் அ.மார்க்ஸ் அதைப்பற்றிக் கவலைப்படப்போவதும் இல்லை. அடுத்த அவதூறை கிளப்புவார். அதற்கு நாம் பதில் சொல்லப்போனால் அடுத்த அவதூறு.
அக்கட்டுரையில் அ.மார்க்ஸ் காஷ்மீர் குறித்தும் பாகிஸ்தானின் வளர்ச்சி, பெண்ணுரிமை, சிறுபான்மையினர் பேணல் குறித்தும் சொல்லியிருப்பவை முழுக்க முழுக்க அப்பட்டமான பொய்கள் என்று மட்டும் சொல்லவிரும்புகிறேன். உங்களுக்கு இணைய பழக்கம் இருந்தால் சும்மா கூகிளில் தேடினாலே அந்தத் தகவல்கள் அனைத்துமே பொய் என்பதை உணர்ந்துகொள்ள முடியும். காஷ்மீரில் பண்டிட்டுகள் கொலைகள் எப்போது ஆரம்பித்தன என்று Hindu நாளிதழின் பழைய் செய்திகளை பார்ப்பவராலேயே உணர்ந்துகொள்ள முடியும். அ.மார்க்ஸ் அவற்றைப் பார்க்கும் வாசகர்களுக்காக எழுதவில்லை. ஒருபோதும் தகவல்களைச் சரி பார்க்க மாட்டார்கள் என்று உறுதியாக தெரிந்த தன் வாசக முட்டாள்களுக்காகவும் அவரை ஆதரிக்கும் அமைப்புகளுக்காகவும் மட்டுமே அவற்றை எழுதியிருக்கிறார். அவருடன் மோதுவது வீண்.
ஆனால் ஒன்று மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன், தேசவிரோதச்செயல்பாடுகளுக்கு மானுட உரிமை என்ற போர்வையைப்போர்த்தும் இவரைப்போன்ற போலி அறிவுஜீவிகள் இந்தியாவில் உண்மையான மானுட உரிமை இயக்கம் உருவாக முடியாமல் தடுத்துவிடுகிறார்கள். கவலைக்குரிய விஷயம் இதுவே
ஜெ