வழக்கமாக தமிழகத்துக்கு வெளியே தமிழ்ச்சங்கங்களே பண்பாட்டுச் செயல்பாடுகளின் மையங்களாக இருக்கும். அவை மாலையுணவு, அரட்டை, சினிமா, சில்லறை கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆகியவற்றையே பண்பாட்டுச் செயல்பாடுகளாகக் கொண்டிருக்கும்.
இலக்கியம் என்றால் அவர்களைப் பொறுத்தவரை பரவலாக உள்ள அரசியல் செயல்பாடுகளின் பகுதியாக ஒலிக்கும் கூக்குரல் உற்பத்தி மட்டுமே. அவற்றுக்கு அப்பால் உள்ள இலக்கியம் சிந்தனை ஏதும் அவர்களுக்கு தெரிந்ததாகவே இருக்காது.
விதிவிலக்காக, மலேசியாவில் நவீனத் தமிழிலக்கியத்தின் ஒரு தொடக்கம் நிகழ்கிறது என்பதை பலவகையாகப் பதிவு செய்திருக்கிறேன். நவீன், யுவராஜ்,பாலமுருகன் என அதை முன்னெடுக்கும் ஊக்கமுள்ள இளைய படைப்பாளிகளை சுட்டிக்காட்டியிருக்கிறேன். அவர்களுடனான சந்திப்புகள் எனக்கு ஊக்கமூட்டுபவையாக இருந்துள்ளன
ஆகவேதான் இம்மாதத்தில் மலேசியாவிலிருந்து வரும் பறை இதழில் நவீன் எழுதியிருக்கும் சிற்றிதழ்களைப் பற்றிய கட்டுரை ஆழமான சோர்வை உருவாக்கியது. தமிழகத்தின் தகரடப்பா அரசியல் கோஷங்களால் நிறைந்துள்ள பறை மேலும் கீழிறங்கும் வாய்ப்புகளையே காட்டியது.
வழக்கமான ‘தமிழ் எழுத்தாளர்’களிடமிருந்து நவீன எழுத்தாளனை வேறுபடுத்தும் அம்சங்கள் சில உண்டு.
அவற்றில் முதன்மையானது அரசியலியக்கங்களின் எளிய வாய்ப்பாடுகளை எதிரொலிக்க பிடிவாதமாக மறுத்துவிடுவது. அரசியலியக்கங்கள் உருவாக்கும் வெறுப்புகளையும் விலக்குகளையும் நிராகரிப்பது
அடுத்தபடியாக எளிமையான சமூகப்புரிதல்களை,ஒற்றைப்படையான வாய்ப்பாடுகளை ஐயப்படுவது. ஒவ்வொன்றையும் தன் அனுபவத்தைக் கொண்டும் வரலாற்றைக் கொண்டும் விரிவாகவும், ஊடுபாவுகளுடனும் புரிந்துகொள்வது.
கடைசியாக பல்வேறு காரணங்களுக்காக வெறுப்பும் கசப்பும் ஊட்டப்பட்டு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் சொற்களை, முத்திரைகளை ஏற்றுக்கொள்ளாமலிருப்பது. அத்தகைய மிகையாவேச வசைகள் மண்டிய மொழியை நிராகரித்து விவாதமொழியை மேற்கொள்வது.
இவ்வியல்புகளை அடைந்த பின்னர்தான் ஒருவன் நவீன இலக்கியவாதியாகவே ஆகிறான். அவ்வியல்புகளை இழக்கையில் நவீன இலக்கியத்திலிருந்து விலகவும் தொடங்குகிறான்.
நவீன் எழுதியிருக்கும் கட்டுரையின் சாரம் இதுதான். தமிழில் முதல் சிற்றிதழ் என்று சி.சு.செல்லப்பாவின் எழுத்து சொல்லப்படுகிறது. ஆனால் எழுத்துக்கு முன்னரே ஏராளமான சிற்றிதழ்கள் வந்துள்ளன. திராவிட இயக்கம் பல சிறு பத்திரிகைகளை நடத்தியிருக்கிறது. தலித்துக்கள் நடத்தியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் காணாமல் எழுத்துவை முதல் சிற்றிதழ் என்று சொல்வதற்கான காரணம் ‘பார்ப்பனியம்’ தான்.
நவீன இலக்கியத்தில் எதையும் வாசிக்காமல் பெரும்பாலும் செவிவழிச் செய்திகளை நம்பி சத்தம் போடுபவர்கள் சொல்லும் வாதம் இது. உள்ளே நுழையும் இளைஞர்கள் அதை ‘அட, நெஜம்தானே’ என்று நினைப்பதும் இயல்பே.
ஆனால் ஓரு நவீன இலக்கியவாதி முதலில் செய்யவேண்டியது இதைப் பற்றி முன்னரே ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பதே. அதைத் தெரிந்து கொள்ளாமல் இந்த ஒன்றே முக்காலணா சிந்தனை தன் அரியமூளைக்கு மட்டுமே தட்டுப்பட்டது என்று எண்ணி கூச்சலிடுபவர்களை அவன் ஐயப்படவேண்டும்.
பார்ப்பனன், காஃபிர், மிலேச்சன், துலுக்கன், இழிசினன், வந்தேறி போன்ற வெறுப்பு கக்கும் சொற்களைப் பயன்படுத்துபவர் எவராக இருந்தாலும் அவர் நவீன எழுத்தாளர் இல்லை. அவர் சொல்லும் எதையும் நவீன எழுத்தாளனின் , வாசகனின் குரலாக எடுத்துக்கொள்ள வேண்டியதும் இல்லை. எளிமைப்படுத்துவதன் மூலம் வெறுப்பை பயிரிட்டு லாபம் பார்க்கும் எளிய தெருமுனை அரசியல்வாதி மட்டும்தான் அவர்.
அப்படியே அந்தக்கோணத்தில் நோக்கினாலும்கூட இத்தனை சல்லிசாக ஒரு ‘சதிவேலையை’ செய்யும் அளவுக்கெல்லாம் நவீன இலக்கியத்தில் செயல்படுபவர்கள் மக்குகளாக இருக்கமாட்டார்கள் என்றாவது ஒரு நவீன இலக்கியவாதி யோசிக்கவேண்டும்.
நவீனுக்காக வருத்தப்படுகிறேன். அவர் தமிழ் சூழலின் வெற்றி கொண்டான் ரக மேடைக் கக்கல்களை ரசித்து அவற்றுக்கு நீட்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டார் என்றால் சிந்தனையின் சேற்றுக்குழி ஒன்றை நோக்கிச் செல்கிறார்.
சரி, சிற்றிதழ் என்றால் என்ன? அதன் மனநிலை என்ன? அதன் வரலாற்றுப்புலம் என்ன?
முதல் விஷயம் சிறிய இதழ் வேறு சிற்றிதழ் வேறு என்பதே. பலநூறு முறை சொன்ன இதை மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.
அச்சுமுறை உருவாகியதும் முதலில் நூல்கள் வெளிவந்தன. தொடர்ந்து சிறிய அச்சிதழ்கள் வெளியாகின. அவை அனைத்தும் அமைப்பிலும் அளவிலும் இன்றைய சிற்றிதழ்கள் தான். ஆனால் அன்றுள்ள அச்சுமுறைப்படி அவ்வளவுதான் அச்சிட முடியும். அன்றுள்ள வினியோக முறைப்படி அவ்வளவு பேரையே சென்றடைய முடியும். அவை அனைத்துமே சிறிய இதழ்கள்.
தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் எழுதியவை ஐநூறு பிரதிகள் அச்சிடப்பட்ட இருமாத இதழ்களில்தான். டிக்கன்ஸும் தாக்கரேயும் எழுதியதே கூட சிறிய இதழ்களில்தான். ததாகூரும் காந்தியும் எழுதியவையும்கூட குறைவான பிரதிகள் மட்டுமே வெளியான இதழ்கள்தான். அன்றைய நாளிதழ்களே கூட வாரம் ஒருமுறை வந்தவைதான்.
இக்காலகட்டத்தில் அச்சு இதழ்கள் என்பவை அறிவுப் பரவலுக்கான ஊடகங்களாக மட்டுமே எண்ணப்பட்டன. அச்சும் வாசிப்பும் தொழிலாக எண்ணப்படவில்லை. கேளிக்கைக்காக பயன்படுத்தப்படவில்லை.
பின்னர் மூன்று மாறுதல்கள் நிகழ்ந்தன. அச்சுமுறை மின்சாரமயமாக்கப்பட்டது. ஆகவே ஏராளமாக அச்சிட முடிந்தது. தபால்முறையும் போக்குவரத்துமுறையும் நவீனமயமாயின. ஆகவே இதழ்களை விரிவாக வினியோகம் செய்ய முடிந்தது.அத்துடன் பொதுக்கல்விமுறை உருவாகி வந்தது. அனைவருக்கும் சீரான எழுத்தறிவு உருவானது. ஆகவே வாசகர்களின் எண்ணிக்கை பெருகியது
இதன்விளைவாக உருவாகி வந்தவைதான் பேரிதழ்கள். மிக விரைவிலேயே அவை அச்சு ஊடகத்துறையை முழுமையாகக் கைப்பற்றிக்கொண்டன. அச்சும் வாசிப்பும் வெகுஜனக் கேளிக்கையாக ஆகும் என்பது கண்டடையப்பட்டது. ஆகவே அவை பெருந்தொழிலாக ஆயின. இதழ்கள் பெருமளவில் அச்சிடப்பட்டு விரிவாக விற்பனை செய்யப்பட்டன.
பெருந்தொழில் என்பதனால் அதற்கு பெரிய அமைப்பு தேவைப்பட்டது. அவ்வமைப்பு லாபம் ஈட்டியாகவேண்டும். ஆகவே மக்கள் விரும்புவதை அளித்தாகவேண்டும். ஒரு தருணத்திலும் விற்பனை குறையவே கூடாது, குறைந்தால் நஷ்டம். ஆகவே புதியனவற்றை சோதனை செய்து பார்ப்பது, கடினமானவற்றை அளிப்பது ஆகியவை தவிர்க்கப்பட்டன.
இவ்வாறு பெருந்தொழிலாக மாறிய பேரிதழ்கள் சூழலை முழுமையாக நிறைத்திருந்தபோது அவற்றுக்கு எதிராக உருவானதே சிற்றிதழ் இயக்கம். அதாவது சிற்றிதழ் என்பது சிறியதாக இருக்கும் இதழ் அல்ல. வளர்ச்சி அடையாத இதழ் அல்ல. சிறியதாக தன்னை பிரகடனம் செய்துகொண்ட இதழ். சிறியதாகவே செயல்பட்டாகவேண்டிய இதழ். ஒரு மாற்று ஊடகம் அது.
முதன்மையாக அமெரிக்காவில் தோன்றிய இயக்கம் இது. ஏனென்றால் அங்குதான் பேரிதழ்கள் சூழலை முழுமையாகக் கைப்பற்றி வைத்திருந்தன. அச்சு ஊடக அரக்கர்களுக்கு எதிராக கருத்தியல் நிலைபாடு தேவைப்பட்டது. வீல்லியம் ஃபிலிப்ஸ், ஃபிலிப் ரெவ் ஆகியோரை ஆசிரியர்களாக கொண்டு 1934 முதல் வெளிவரத்தொடங்கிய “பார்ட்டிஸன் ரிவ்யூ” என்னும் இதழைத்தான் அவ்வகையில் முதல் சிற்றிதழ் என்பது வழக்கம்.
ஸ்டீபன் ஸ்பெண்டர் 1953ல் ஆரம்பித்த என்கவுன்டர் உலகளாவிய கவனத்தைக் கவர்ந்த சிற்றிதழ். 1953ல் ஹெரால்ட் ஹ்யூம் மற்றும் பீட்டர் மாடிசன் ஆரம்பித்த பாரீஸ் ரிவியூ அமெரிக்காவிலும் உலகமெங்கும் குறிப்பிடத்தக்க வாசகர்களைக்கொண்ட முன்னுதாரணமான சிற்றிதழ்.
இவ்விதழ்கள் சில இலக்கணங்களைக் கொண்டிருந்தன. அட்டையிலேயே கட்டுரைகள் தொடங்கிவிடும். அட்டைப்படமே பெரும்பாலும் இருக்காது. கவர்ச்சியான வடிவமைப்பு இருக்காது. பெரும்பாலும் படிப்பதற்கான பக்கங்கள். தனிப்பட்ட சிறிய வினியோக வட்டம் மட்டுமே இருக்கும்.
இவ்விதழ்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்திய மொழிகள் அனைத்திலும் சிற்றிதழ் இயக்கம் 1950களில் உருவானது. தமிழில் அவ்வாறு சிற்றிதழ் என்னும் பிரக்ஞையுடன், திட்டத்துடன் தொடங்கப்பட்ட முதல் சிற்றிதழ் எழுத்துதான். ஆகவே அதை தமிழின் முதல் சிற்றிதழ் என்று சொல்கிறோம்.
இத்தகைய வரலாற்றுச் செய்திகள் பொதுவாக ஒருவகை பொதுப்புரிதல்கள் மட்டுமே. முதல் சிறுகதை முதல் நாவல் என்பதெல்லாம் கூட எப்போதும் விவாதத்திற்குரியவை. பி.எஸ்.ராமையா மணிக்கொடியை முற்றிலும் சிறுகதைக்காகவே கொஞ்சநாள் நடத்தினார். ஆகவே மணிக்கொடியின் பிற்காலத்தையே சிற்றிதழ் மரபின் தொடக்கம் என்று சொல்லும் ஆய்வாளர்கள் உண்டு. எழுத்து இதழில் இருந்த பிரகடனம் அதில் இருக்கவில்லை என்றாலும் அதுவே உத்தேசிக்கப்பட்டது என்பார்கள்.
க.நா.சு தொடங்கிய இலக்கியவட்டம், விஜயபாஸ்கரனின் சரஸ்வதி போன்றவை அதன்பின் வந்தவை. எழுத்து, கசடதபற, வானம்பாடி, கணையாழி, தீபம், காலச்சுவடு போன்றவை சிற்றிதழ் இயக்கத்தின் வெவ்வேறு காலகட்டத்தைப் பிரதிபலிப்பவை
எழுத்துவுக்கு முன்னரே பல சிறிய இதழ்கள் தமிழில் வந்துள்ளன. பாரதியாரின் இந்தியாவும் விஜயாவும் சிறிய இதழ்கள். மணிக்கொடியும் கிராம ஊழியனும் சிறிய இதழ்கள். ஆனால் அவை அன்றைய சூழலால் சிறிய அளவில் நடத்தப்பட்டவை மட்டுமே.
அதேபோல சிறிய அளவிலான பிரசுரங்கள் ஆய்வுக் குழுக்களுக்குள் வெளிவந்தன. பண்பாட்டாய்வு வரலாற்றாய்வு கல்வெட்டு போன்றவற்றுக்காக நடந்தவை அவை. உதாரணம் செந்தமிழ்ச்செல்வி போன்றவை. அவை அறிஞர்களுக்குள் மட்டும் புழங்கியவை. அவற்றை இதழ்கள் என சொல்வதில்லை. அவை தொடர் பிரசுரங்கள் [Chronicles] மட்டுமே.
எழுத்து முதல் இதழிலேயே தன்னை சிற்றிதழ் என்று அறிவித்துக்கொண்டது. ஆயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படமாட்டாது என்று அதன் கொள்கை. அட்டையிலேயே பொருளடக்கம் ஆரம்பித்திருக்கும். அந்த நிலைபாடுகள் தான் பின்னர் சிற்றிதழ்கள் அனைத்துக்கும் இருந்தன. ஆகவேதான் அவை சிற்றிதழ்கள். விற்பனை எண்ணிக்கையைப் பெருக்க முனைபவை சிற்றிதழ்கள் அல்ல.
ஏன்? விற்பனை எண்ணிக்கை பெருகினால் உற்பத்தி- நிர்வாக அமைப்பு உருவாகி வரும். அவ்வாறு உருவாகி வந்தால் அதற்கு ஊதியம் மற்றும் லாபம் தேவைப்படும். ஊதியமும் லாபமும் கட்டாயம் என்றால் அதன்பின் முதன்மைநோக்கம் அதுவாக ஆகிவிடும். புதியனவற்றுக்கு இடமிருக்காது.
சிற்றிதழ் என்பதும் ஓர் அமைப்புதான். ஆனால் அது வரையறுக்கப்பட்ட அமைப்பு. தன் செயல்பாட்டு எல்லையை பங்கேற்பாளர் எல்லையை தெளிவாக முன்னரே வரையறை செய்து கொண்டது அது.
எண்ணிக்கை குறைவான பலவகையான பிரசுரங்கள் உள்ளன. சிலவகை தொழில்நுட்ப இதழ்கள், சில குழுக்களின் தனிச்சுற்று இதழ்கள் . சில அமைப்புகளின் செய்திமடல்கள், சாதி மதக் குழுக்களின் தனிவட்ட இதழ்கள். அவையெல்லாம் சிற்றிதழ்கள் அல்ல. சிற்றிதழ் என்பது மேலே சொன்ன சிற்றிதழ் மனநிலையின் வெளிப்பாடாக அமையும் இதழ் மட்டுமே.
தமிழில் 1920களில்தான் பேரிதழ்கள் வேரூன்றத் தொடங்கின. காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமாக ஆனமை அன்று அரசியலார்வத்தை மக்களிடையே உருவாக்கியது. அது அச்சு ஊடகம் உருவாவதற்கான சூழலை அமைத்தது.
1882ல் தொடங்கப்பட்ட சுதேசமித்திரன் பேரிதழாக மாறியது.1928ல் ஆனந்த விகடன். 1934ல் தினமணி. இவை மின்னச்சு முறையில் ஏராளமாக அச்சிடப்பட்டு அன்று வளர்ச்சி பெற்றிருந்த ரயில்பாதைகள் மூலம் நாடெங்கும் கொண்டுசெல்லப்பட்டன. இருபத்தைந்தாண்டுகளுக்குள் இவை பூதாகரமாக வளர்ந்தன. சுதேசமித்திரன் நின்றது. பல இதழ்கள் புதிதாக வந்தன
இந்த அலை வணிக எழுத்தை நிலைநாட்டியது. அவர்களை மட்டுமெ இலக்கியவாதிகளாக மக்கள் அறிந்தனர். சிந்தனை, கலை அனைத்துமே ‘மக்களுக்குப் பிடித்த’ வகையில் மட்டுமே எழுதப்படும் நிலை வந்தது. இந்த மைய ஓட்டத்திற்கு மாற்றாக எழுந்ததே சிற்றிதழ் இயக்கம். அதன் தொடக்கப்புள்ளியே எழுத்து.
நவீன் இவ்விஷயங்களை little magazines என விக்கிப்பீடியாவில் தேடினாலே தெரிந்துகொண்டிருக்கமுடியும். அவரைத் தடுப்பது எது? பார்ப்பனியம் என்ற அந்தச் சொல். அரசியல் மேடையிலிருந்து பொறுக்கிக்கொண்டது அது. அரசியல் மேடையின் வித்தாரப்பேச்சுக்கு அப்பால் இலக்கியமோ சிந்தனையோ அறியாதவர்களே அதைக் கையாளமுடியும்.
அந்த அறியாமை ஒரு தன்னம்பிக்கையை அளிக்கிறது. பிறர் முட்டாள்கள் என்றும் அவர்கள் அறியாத பல தனக்குத்தெரியும் என்றும் எண்ணச்செய்கிறது. பார்ப்பனச்சதி என்று சொன்னதுமே உள்ளம் கிளுகிளுக்கிறது. தரமான வாசகர் சிலராவது தன்னை வாசிக்கக்கூடும் என்ற எண்ணமே இல்லாமல் பேசச் செய்கிறது. அவர்களின் தரப்பிலிருந்து மறுப்போ திருத்தமோ வந்தால் கூட மூர்க்கமாக எதிர்வாதம் செய்யும் தன்னம்பிக்கையையும் அளிக்கிறது.
தமிழ்ச் சமூகத்தில் எந்த ஒரு விடலையும் வளரும் பருவத்தில் இந்த மொண்ணைப் பேச்சாளர்களிடம் தான் சென்று சேர்கிறான். அவர்களிடமிருந்து ஒற்றை வரிகளை, காழ்ப்புகளைக் கற்றுக்கொள்கிறான். அரசியலையும் பண்பாட்டையும் தெரிந்து கொள்வதாக கற்பனை செய்துகொள்கிறான்.
முதன்முதலாக அவன் ஒரு சிற்றிதழை கையில் எடுக்கும்போது அதற்கு மாற்றான ஓர் உலகத்தைக் சந்திக்கிறான். முதலில் அவனுக்கு புரியாமையும் அது அளிக்கும் எரிச்சலும் ஏற்படுகிறது. கலைச்சொற்கள் மிரளச் செய்கின்றன. நீண்ட விவாதங்களும் விரிவான கட்டுரைகளும் வெறும் பம்மாத்து என்று தோன்றுகின்றன. எல்லாம் எளிமையாக இருக்கும் ஓர் உலகிலிருந்து எல்லாமே சிக்கலாக இருக்கும் ஒர் உலகுக்கு வந்த பதற்றம் அது.
அதில் அவன் பொருந்தும்போது அனைத்தையும் வரலாறாக காண கற்றுக்கொள்கிறான். ஒவ்வொன்றுக்கும் மாற்றுத் தரப்பு உண்டு என அறிகிறான். எதுவுமே எளியவை அல்ல என்றும் பல்வேறு கூறுகள் சிக்கலாகப் பின்னிப் பிணைந்து உருவாகக்கூடியவை என்றும் புரிந்துகொள்கிறான். சிற்றிதழ் மனநிலை என்பது எளிமைப்படுத்தாமலிருப்பது என அறிகிறான். அதன்பின்னர்தான் அவன் சிற்றிதழ் வாசகன்.
சிற்றிதழ் வாசகன் எந்த கருத்தியலைச் சார்ந்தவனாக இருந்தாலும் சரி, எந்த இலக்கியமுறைமையை நம்புபவனாக இருந்தாலும் சரி, அடிப்படையில் அவன் மேலே சொன்ன சில மனநிலைகளைக் கொண்டிருக்கிறான். அது அவனை வெளியே உள்ள பொது அரசியலின் கூச்சல்களில் இருந்து அன்னியப்படுத்துகிறது. வெகுஜன ரசனையில் இருந்து விலக்குகிறது. அவனுடைய மொழியை செறிவாக்குகிறது. அவனுடைய சிந்தனையின் தர்க்கத்தை நுட்பமும் சிக்கலும் கொன்டதாக ஆக்குகிறது. இந்த மனநிலையை உருவாக்கியதே சிற்றிதழ்களின் சாதனை.
இத்தனைக்கும் பின்னர் ஒன்றைச் சொல்லவேண்டும், சிற்றிதழியக்கம் என்பது ஓர் ‘உண்மையான’ அறிவியக்கம் அல்ல. அது ஓர் மாற்று அறிவியக்கம் மட்டும்தான். எவ்வகையிலேனும் பரந்துபட்ட மக்களைச் சென்றடைந்து விரிவான பாதிப்புகளை உருவாக்குபவை மட்டுமே அறிவியக்கம் ஆக முடியும். சிற்றிதழ் இயக்கம் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு அல்லது ஒரு விதைநிலம், அவ்வளவுதான்.
ஆகவே சிற்றிதழ் என்பதை புனிதப்படுத்துவதும் சரி, சிற்றிதழ்கள் மீது கடந்தகால ஏக்கங்களை பூசிக்கொள்வதும் சரி, அதை ஒரு மதமாகக் கொண்டு அதன் மனநிலைகளை நிரந்தரமாக நீட்டிக்க முயல்வதும் சரி அசட்டுத்தனமானவை. சிற்றிதழ்களை அழிந்துவரும் அரிய உயிரினமாக கண்டு பேண நினைப்பதும் சரி, சிற்றிதழ்கள் செய்தவற்றை மீன்டும் அப்படியே செய்யவேண்டுமென நினைப்பதும் சரி, பழைய சிற்றிதழ்களை மீன்டும் நகல் செய்ய முயல்வதும் சரி பொருளற்றவை
சிற்றிதழ் இயக்கம் என்பது இலக்கியவரலாற்றின் ஒரு காலகட்டம் மட்டுமே. அதற்கான தேவை உருவானபோது எழுந்து அத்தேவை நிறைந்தபோது அது மறைந்தது. இன்று நாம் செய்யவேன்டியது சிற்றிதழ் உருவாக்கிய உத்வேகத்தை, அந்த மனநிலைகலை, அந்த அறிவுப் புலத்தை விரிவாக்கி முன்னெடுப்பது மட்டுமே.
அமெரிக்காவின் சிற்றிதழ் இயக்கத்தையே கூர்ந்து நோக்கலாம். ஐம்பதுகளில் வலுவாக எழுச்சிபெற்ற அது முப்பதாண்டுகளில் காலாவதியாகியது. அதில் எழுதியவர்கள் அனைவரும் மாற்று இலக்கிய சக்திகளாக எழுந்து வந்தனர். அடுத்த காலகட்டத்தில் இணையம் சிற்றிதழ் என்பதன் தேவையை இல்லாமலாக்கியது. வலுவான மாற்று ஊடகமாக அது நிலைகொண்டது. பொதுவாக இன்று சிற்றிதழ்களின் தேவை இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
மலையாளத்தில் சமீக்ஷா, வாக்கு, கேரளகவிதா போன்ற சிற்றிதழ்கள் ஐம்பதுகளில் வலுவான மாற்று சக்திகளாக இருந்தன. ஆனால் எழுபதுகளிலேயே அவை நடுவாந்தர இதழ்களை உருவாக்கி அங்கே தங்களை பொருத்திக்கொண்டன. மேலும் விரிவான செல்வாக்கைச் செலுத்தின. மாத்ருபூமி, பாஷாபோஷிணியிலேயே எந்தவகையான எழுத்தும் வெளிவரும் என்ற நிலையில் சிற்றிதழ்களுக்கான தேவை இருக்கவில்லை. இன்று சில தனிக்குழுக்களுக்கான சிற்றிதழ்களே அங்குள்ளன.
தமிழிலும் ஐம்பதுகளில் தொடங்கிய சிற்றிதழ் இயக்கம் எண்பதுகளிலேயே அதன் எல்லையை கண்டடையத் தொடங்கியது. எஸ்.வி ராஜதுரையின் இனி, தமிழவனின் இன்று, வசந்தகுமாரின் புதுயுகம் பிறக்கிறது போன்று அடுத்தகட்ட இதழ்களுக்கான முயற்சிகள் தொடங்கின. சுபமங்களா, தமிழ்மணி, இந்தியா டுடே போன்றவை சிற்றிதழ்களின் உள்ளடக்கத்தை விரிவான தளத்திற்கு கொண்டு சென்றன. அதன்பின்னரே காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, புதியபார்வை, அமிர்தா போன்ற நடுத்தர இதழ்கள் வெளிவந்தன.
இன்று சரியான பொருளில் தமிழில் சிற்றிதழ்களின் தேவை இல்லை. இணையத்தின் வீச்சும் எளிமையும் சிற்றிதழ்களை பொருளற்றதாக்கிவிட்டன.நேற்று என்னென்ன காரணங்களுக்காக சிற்றிதழ்கள் ஆரம்பிக்கப்பட்டனவோ அவை எல்லாமே இணையத்தால் இல்லாமலாக்கப்பட்டுவிட்டன. சிற்றிதழ்களின் எழுத்துக்கள் கூட இணையம் வழியாகவே வாசிக்கப்படுகின்றன. தமிழ்ச்சிற்றிதழ்களின் காலகட்டம் என்பது எழுத்து முதல் நிகழ் வரையிலான நாற்பது வருடங்கள் மட்டுமே.
சிற்றிதழ்களில் எழுதப்படும் அனைத்தையும் வெளியிட சுபமங்களா முன்வந்த போதே அந்த தேவை மறைந்துவிட்டது. சமீபத்தில் ஒரு நண்பர் கடிதத்தில் கேட்டிருந்தார். கல்குதிரையிலும் ஆனந்தவிகடனிலும் ஃபேஸ்புக்கிலும் ஒரே கவிதை வெளியாகுமென்றால் கல்குதிரை எதற்காக என்று.
ஒரு சமீபகால உதாரணம். ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்த போது புகலிட நாடுகளில் ஒரு சிற்றிதழ் இயக்கத்தை உருவாக்கினர். அவை தங்களுக்கென சில தனித்தன்மைகளைக் கொண்டிருந்தன. பத்தாண்டுகளில் இணையம் அந்த இயக்கத்தின் தேவையை இல்லாமலாக்கியது. அவ்விதழ்கள் பெரும்பாலும் அனைத்தும் வரலாறாக மாறி மறைந்தன. இது ஓர் இயல்பான நிகழ்வு.
சிற்றிதழ்களை ஓர் அறிவார்ந்த ‘எதிர்இயக்கம்’ என்றும், அது ஒரு வரலாற்றுக் காலகட்டத்தின் தேவையால் உருவான ஒன்று என்றும், அதற்குரிய மனநிலைகளும் உணர்வு நிலைகளும் அக்காலகட்டத்தால் வரையறை செய்யப்பட்டவை என்றும் புரிந்துகொள்ளுவதே சிறந்ததாகும்.
இன்றைய சூழலில் சிற்றிதழ் இயக்கம் இரு காரணங்களுக்காக முக்கியமாக எண்ணப்பட வேண்டும். ஒன்று, அது நம்முடைய வரலாற்றுப் பின்புலம். இணைய இதழான இந்த தளம் திரும்பத் திரும்ப தமிழ் சிற்றிதழ்மரபின் நீட்சியை நினைவூட்டிக்கொண்டே இருப்பதைக் காணலாம்.
இரண்டு, அது உருவாக்கிய விமர்சன மதிப்பீடுகள். இன்று நாம் இலக்கியத்தில் முன்வைக்கும் மதிப்பீடுகள் அனைத்தும் அந்த பின்புலத்தில் நிகழ்ந்த நீண்ட உரையாடலின் விளைவாக உருவாகி வந்தவை.
இந்தத்தளத்தில் அம்மதிப்பீடுகள் அதே சமரசமின்மையுடன் முன்வைக்கப்படுகின்றன. சொல்லப் போனால் இதில் நிகழும் எல்லா விவாதங்களும் இணையம் மூலம் வந்துசேர்ந்துகொண்டே இருக்கும் பரவலான பொதுவாசகர்களுக்கும் சிற்றிதழ்ச் சூழலில் திரண்டுவந்த விமர்சன அளவுகோல்களுக்கும் இடையேயான முரண்பாடுகளில் இருந்து உருவாகக்கூடியவை.
எது தவிர்க்கப்படவேண்டும் என்றால் சிற்றிதழ்கள் தங்கள் செயல்பாட்டுக்களத்தை குறுகலாக வரையறை செய்து கொண்டமை, தனிப்பட்ட மோதல்களை முன்னெடுத்தமை போன்றவை. சிற்றிதழ்கள் குறைவாகவே வெளியானமையால் குறைவாக எழுதும் பழக்கம் உருவானது. இணையம் அளிக்கும் வாய்ப்பு வந்த பின்னரும் அத்தகைய வழக்கங்களை எல்லாம் மதம் போல போற்றி வர வேண்டியதில்லை.
உண்மையான அறிவியக்கம் என்றால் பிரம்மசமாஜம், நாராயணகுருவின் இயக்கம், இடதுசாரி இயக்கம் போன்றவற்றையே சொல்வேன். தமிழில் அத்தகைய உண்மையான அறிவியக்கம் ஒன்று உருவாவதற்கான வாய்ப்பு இன்னும் இல்லை. ஆனால் இன்று கிடைக்கும் வாய்ப்புகளைக்கொண்டு அப்படி ஒன்றுக்கான அடித்தளத்தை அமைக்கமுடியும். விதைநிலத்தில் இருந்து பிடுங்கி நட்டு வயல்பெருக்க முடியும்.